கிராமத்திலிருந்து கிளம்பி அவளை ஜிப்ஸம் ஃபேக்டரியில் விட்டு விட்டு, தான் பணிபுரியும் தாசில்தார் ஆஃபீஸுக்குச் செல்லும் வரையிலான அந்த 1 மணி நேரத்திற்கும் மேலான பொழுதை பேரின்பமயமாக்கிக் கொள்ள ரவியண்ணா கண்டுபிடித்த மார்க்கம் ராஜாவின் இசை. அதிலும் மூன்றாம் பிறை திரைப்படத்தில் பூங்காற்று புதிதானதும், பன்னீர் புஷ்பங்களின் பூந்தளிராடவும், கேட்டுக் கொண்டே சைக்கிள் மிதிக்கும் போது அவரே கமலாகவும், சுரேஷாகவும் தன்னைக் கற்பனை செய்து கொண்டது கொஞ்சம் ஓவராக இருந்தாலும் அவர் மட்டுமா அப்போது அப்படிக் கற்பனையில் மிதந்தார்! காதலில் விழுந்த எல்லா ஆண்களுக்குள்ளும் ராஜாவின் தயவால் ஒரு ரஜினி இருந்தார், ஒரு கமல் இருந்தார், ஒரு மோகன் இருந்தார், சமயத்தில் அந்நியன் அம்பி, ரெமோ, அந்நியன் ஸ்டைலில் ரஜினி, கமல், மோகன், பிரபு, விஜயகாந்த், சத்யராஜ், சிவக்குமார், ராம்கி எல்லோருமே அவ்வப்போது வந்து போவார்கள். பெண்களுக்குள்ளும் ஸ்ரீதேவிகள், அமலாக்கள், ராதாக்கள், அம்பிகாக்கள், நதியாக்கள் அவ்வப்போது வந்து போவார்கள். எல்லாமும் ராஜாவால்.