பட்சணம் செய்வது அது ஒரு கலை. சில சமயங்களில் மிகச்சிறந்த ஸ்ட்ரெஸ் பர்ஸ்டரும் கூட என்று சொன்னால் நீங்கள் ஒப்புக் கொள்வீர்களா? நான் கடமைக்காக பட்சணம் செய்பவர்களைப் பற்றிப் பேசவில்லை. உண்மையிலேயே ரசித்துச் சமைப்பவர்கள் பலரை நான் அறிவேன். என் பாட்டிகளும் அவர்களுள் சிலர். அந்நாளில் அவர்களுக்கு ஆயிரம் வேலைப்பளுக்கள் இருந்தன. வயல்வேலைகள் முதல் தோப்பிலிருந்தும், தோட்டங்களில் இருந்தும் வீட்டுக்குத் தேவையான விறகுகள் சேமிப்பது, கடலையும், சூர்யகாந்தியும், எள்ளும் விளைகையில் எண்ணெய்ச் செட்டியிடம் அதைக் கொடுத்து வருடத்திற்குத் தேவையான எண்ணெய் சேமிப்பது, வெயில் காலம் வந்தாலே போதும் வெண்டைக்காய், கொத்தவரங்காய், வெங்காய வடாம், சோற்று வடாம், உப்பு மிளகாய், கத்தரிக்காய் வற்றல்கள் இட்டு சம்புடம், சம்புடமாய் நிரப்பி வைப்பது, நெல் விளைந்து முற்றியதும் ஆண்டு முழுமைக்கும் தேவையான அரிசிக்காக நெல் அவித்து அரைவை மில்லுக்குச் சென்று அரிசியாக்கி மூட்டை கட்டி வருவது. அதோடு கிராமமென்பதால் வருடம் முழுதும் ஏதாவதொரு பண்டிகை வந்து விடும். விதைப்புக்கு ஒரு கொண்டாட்டம், அறுவடைக்கு ஒரு கொண்டாட்டம், சித்திரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா, வைகாசியில் செல்லியரம்மன், முத்தாலம்மன் கோயில் திருவிழாக்கள், ஆடிமாதத்திற்கு ஆடிப் பட்டம் தேடி விதைப்பு, ஆடிக்கூழ், ஆவணியில் கோகுலாஷ்டமி, புரட்டாசி விரதம், ஐப்பசிக்கு தீபாவளி, பிள்ளையார் சதுர்த்தி, கார்த்திகைத் திருநாள், மார்கழியில் பெருமாள் கோயிலுக்கு படையெடுப்பு, தையில் தைப்பொங்கல், மாசி சிவராத்திரி, பங்குனியில் காளியம்மன் திருவிழா, எல்லாவற்றுக்குமே முன்கூட்டியே பட்சணங்கள் செய்து வைப்பது என்று வீடுகள் தோறும் பாட்டிகளும், அத்தைகளும், சித்திகளும் படு பிஸியாகவே இருப்பார்கள். ஒவ்வொரு விழாவுக்குமே விசேஷமாக ஒரு பட்சணம் கிடைக்கும். இந்த எல்லாப் பண்டிகைகளுக்குமே நாங்கள் ஆர்வமாகக் காத்திருப்போம்.