கலைஞர் கருணாநிதியின் மேடைப் பேச்சு மட்டுமல்ல அவர் பிற படைப்பாளிகளுக்கு வழங்கியிருக்கும் புத்தக வெளியீட்டு உரைகளும் கூட அவரது அபிமானிகளுக்கு எப்போதும் தேன் தடவிய பலாச்சுளைகளே! அபிமானிகள் என்பதை விட அவரது உரையைக் கேட்க வாய்க்கும் ஒவ்வொருவருமே ஒப்புக் கொள்வார்கள் அவரது பகடிச்சுவையும்... வாழைப்பழ ஊசியாகக் குத்திப் பேசி உண்மையை பிட்டு வைக்கும் பேச்சாற்றலும், எழுத்தாற்றலும் வேறெவருக்கும் அத்தனை எளிதில் கை வரப் பெறாதது என்று. இதோ அதற்கொரு சிறந்த உதாரணமாக அமைந்திருக்கிறது இந்த ‘கலைஞர் பேசுகிறார்’ எனும் முன்னுரை. 1996 ஆம் ஆண்டில் பிரபல சமூக சீர்த்திருந்த எழுத்தாளரான சு.சமுத்திரம் ‘என் பார்வையில் கலைஞர்’ எனும் புத்தகத்தை எழுதி அதன் வெளியீட்டு விழாவையும் கலைஞர் தலைமையில் நடத்தினார். அந்த விழாவில் பங்கேற்ற அன்றைய முதல்வர் கலைஞர் ஆற்றிய இந்த கலைஞர் பேசுகிறார் உரை காலம் பல கடந்தும் முதன் முறை வாசிப்பவர்களுக்கு சுவை குன்றாததாகவே இருக்கிறது. ஏனெனில் அந்த காலகட்டத்தில் சு.சமுத்திரம் கலைஞரின் ஆதரவாளராக மாறியிருந்த போதும் அதற்கு முந்தைய காலங்களில் கலைஞரை தீவிரமாக எதிர்ப்பவரும், விமர்சிப்பவருமாகவும் இருந்தார் என்பதையும் இந்தப் புத்தக அறிமுக உரையில் சு.சமுத்திரமே தம் கைப்பட சொல்லியிருக்கிறார். அதனால் இந்த உரை முக்கியத்துவம் பெற்றதாகிறது.