முதலிலிருந்தே தமிழக மக்கள் அனைவருக்குமே இந்த விஷயத்தில் கடுமையான சந்தேகம் தான். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அப்பல்லோவில் உண்மையிலேயே என்ன தான் நடந்தது? என்று அறிந்து கொள்ளும் உரிமை அவருக்கு ஓட்டளித்து அதிமுக எனும் கட்சியை அரசுக் கட்டிலில் உட்கார வைத்து அழகு பார்த்த அத்தனை அதிமுக தொண்டர்களுக்குமே உண்டு. அவர்களுக்கு மட்டுமல்ல, அதிமுகவுக்கு ஓட்டுப் போட்டார்களோ இல்லையோ? ஒரு பெண்ணாக, சாமானியப் பெண்களால் சாதிக்க முடியாத பல விஷயங்களைத் தன் வாழ்நாளில் சாதித்துக் காட்டிய ஜெயலலிதாவை ரசிக்காதவர்கள் தான் யார்? விரும்புபவர்களுக்கு மட்டுமல்ல தன்னை வெறுத்தவர்களுக்கும் கூட பல்வேறு தருணங்களில் ரசனைக்குரிய நபராகவே ஜெயலலிதா கடைசி வரையிலும் இருந்தார். அரசு ஊழியர்களுக்கு எதிராக டெஸ்மா சட்டத்தைப் பாய்ச்சி அவர்களது வேலைக்கு உத்திரவாதமின்றி அலைக்கழித்த நிலையிலும் கூட அவரைக் கண்டு பயந்தவர்கள் தான் அதிகமே தவிர குடும்பத்தினர் யாரும் உடனில்லாமல் அந்நியர்களின் ஆதிக்கத்திலும், உதவியிலும் காலம் முழுக்க வாழ நேர்ந்த அந்த அம்மையாரின் மீதான பரிதாபம் பலருக்கும் அப்போதும் இருந்தே வந்தது.