ஒரு வீட்டில் முதியவர் ஒருவர், தன் மகனது குடும்பத்துடன் வசித்து வந்தார். அங்கு மகன், மருமகள் இருவரும் வேலைக்குச் செல்லக் கூடியவர்கள். தாத்தாவுக்கு மூன்று பேரக் குழந்தைகள் இருந்தனர். தினமும் வேலைக்கு கிளம்பும் அவசரத்தில் மருமகள், மாமானாருக்கு சாப்பாட்டைப் பரிமாற நேரமின்றி பீங்கான் கிண்ணங்களில் போட்டு மூடி வைத்து விட்டுச் செல்வது வழக்கம். வயோதிகத்தால் ஓரிருமுறை தாத்தா, தான் உணவுண்ணும் பீங்கான் தட்டுகளை கை தவறி கீழே போட்டு உடைத்து விடுகிறார். மாலை வீடு திரும்பும் மகன், மனைவி வந்தால் என்ன சொல்வாளோ? என்ற சஞ்சலத்தில்; அப்பா, வயதானால் உணவு இருக்கும் தட்டைக் கூடவா உங்களால் சரியாகப் பிடித்து உண்ண முடியாமல் போய் விடும்? இனிமேல் உங்களுக்குப் பீங்கான் தட்டு வேண்டாம், இந்தாருங்கள் இனிமேல் இந்த மரக்கோப்பையில் உண்ணுங்கள் என்று புதிதாக ஒரு மரக்கோப்பையை வாங்கி வந்து கொடுத்து விட்டுப் போய் விடுகிறார். மகனது உதாசீனத்தை தாங்க முடியாத தாத்தா அதற்குப் பின்பு அந்தக் குடும்பத்தில் எவரிடமும் பேசக் கூடப் பயந்து போய்... வாய் மூடி மெளனியாகி தனியறைக்குள் தஞ்சமடைந்து விடுகிறார். இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் தாத்தாவின் பேரன்கள். சில நாட்களுக்குப் பின், தந்தை அலுவலகத்திலிருந்து வீட்டுக்குள் நுழையும் போது, அவரது கடைக்குட்டிப் பையன் வாசலில் அமர்ந்து ஒரு மரக்கோப்பையை செதுக்கிக் கொண்டிருக்கும் காட்சியைக் காண்கிறார். வீட்டுப் பாடம் செய்யும் நேரத்தில் இந்தக் குழந்தைக்கு எதற்கு இந்த வீண் வேலை? என்று யோசித்துக் கொண்டே சிறுவனை அழைத்து; இப்போது ஏன் இந்த மரக்கோப்பையை செதுக்கிக் கொண்டிருக்கிறாய்? என்று கேட்கிறார். அதற்கு அந்தப் பையன் வயதான பிறகு தேவைப்படும் அப்பா என்கிறான். தந்தையோ அவன் தனது தாத்தாவைப் பற்றித் தான் கூறுகிறான் என்ற நினைப்பில், தாத்தாவுக்குத் தான் ஏற்கனவே ஒரு மரக்கோப்பை இருக்கிறதே, பிறகு இது வேறு எதற்கு என்கிறார். அப்போது அப்பாவின் முகத்தை ஏறிட்டு நோக்கும் அந்தச் சிறுவன்.... நான் இதை தாத்தாவிற்காக செய்யவில்லை... உங்களுக்காகத் தான் செய்து கொண்டிருக்கிறேன். நீங்களும் நாளை தாத்தா போல ஆகும் போது உங்களுக்கும் இது தேவைப்படுமில்லையா? என்கிறான். மகனின் பதிலில் விக்கித்துப் போன தந்தை, பேச வகையின்றி திகைத்து நிற்கிறார்.