சொந்தக் குழந்தைகளிடத்தில் பாலியல் வன்கொடுமைகளை நிறைவேற்ற யத்தனிக்கும் தகப்பன்மார்கள் எவரேனுமிருந்தால் அவர்களுக்கு அவர்களை அம்மாக்களும் ,அம்கள்களுமே தண்டித்து விட்டு பாதுகாப்பாக மீள் நமது சட்டத்தில் மேலே சொல்லப் பட்ட மதுரை சம்பவம் போன்ற முன்னுதாரணங்கள் இருக்கின்றன. ஆகவே பெண்கள், தமக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளின் போது எதிராளியை எப்படித் தாக்குவது? என்பது குறித்து அச்சப் படவோ, யோசிக்கவோ தேவையில்லை. இதில் குறிப்பிடத் தக்க மற்றொரு விசயமும் உண்டு; இந்தியாவையே உலுக்கிய டெல்லி, நிர்பயா வழக்கில்; அந்தப் பெண்ணுக்கு நிகழ்த்தப் பட்ட உச்சகட்ட வன்முறைக்கு காரணமாக கொலையாளிகள் கூறிய பதில்; கூட்டு வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்ட பெண்; அத்தகைய வன்முறையின் போது... அதைத் தாங்கிக் கொண்டு ஒத்துழைக்க வேண்டுமாம், அப்படியல்லாமல் எதிர்த்துப் போராடியதால் தான் அவளை சாகும் அளவுக்குத் தாக்கினோம் என்று வன்முறை நிகழ்த்தியவர்களில் ஒருவன் சொன்னான். இது எத்தனை இரக்கமற்ற பதில்?! ஒரு இளம் பெண்ணை ஓடும் பேருந்துக்குள் வைத்து கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்து விட்டு... மீட்கப் பட்ட அவள் மரணவாயிலில் காத்திருக்கையில் நாடே கொந்தளித்துக் கொண்டிருந்த போது குற்றவாளிகளில் ஒருவன் ஊடகப் பேட்டியில் இப்படிச் சொல்கிறான் எனில்; இந்த நாட்டில் குற்றவாளிகளுக்கு இருக்கும் சுதந்திரம் தான் அவர்களை மேலும், மேலும் குற்றங்களைச் செய்யத் தூண்டுகிறது என்பதைத் தவிர சொல்வதற்கு வேறொன்றும் இல்லை.