தமிழகத்தை ஆள்வது சசிகலா குடும்பத்தார் தான் எடப்பாடியார் அவர்களது கைபொம்மை, என்ற ரீதியில் ஊடகங்களில் பல்வேறு கட்சிகளைச் சார்ந்த அரசியல்வாதிகளும், நடுநிலையாளர்களும், சமூகப் போராளிகளும் இந்த அரசியல் மாற்றத்தை விமரிசித்தனர். இந்நிலையில் சென்னை ஆர்.கே நகரில் இடைத்தேர்தல் வந்தது. அப்போது அதிமுக; எடப்பாடி தலைமையில் அதிமுக அம்மா அணி எனவும், ஓ.பி.எஸ் தலைமையில் புரட்சித் தலைவி அம்மா அணி என இரண்டாகப் பிளவுபட்டிருந்தது. கட்சி பிளவு பட்டதும் இரட்டை இலைச் சின்னத்துக்கு இரு அணிகளும் உரிமை கோரவே தேர்தல் ஆணையம்; சசிகலா பொதுச் செயலாளராக நியமிக்கப் பட்டதற்கான நியமன ஆணையை ரத்து செய்ததோடு, கட்சியின் சின்னத்தையும், பெயரையும் முடக்கியது. இதனிடையில் ஆர்.கே நகர் தேர்தல் அறிவிக்கப் படவே; போதாக்குறைக்கு எடப்பாடி, சசிகலா எதிர்ப்பாளர்களும், ஓ.பி.எஸ் எதிர்ப்பாளர்களும் ஒன்றிணைந்து அதிமுகவிலேயே கணிசமான தொண்டர்கள் ஜெ வின் அண்ணன் மகள் தீபாவின் ஜெ தீபா பேரவைக்கு ஆதரவு அளித்து ஒன்று திரண்டனர். இப்படி ஒரே கட்சியின் அடையாளங்களாகக் கருதப் படும் எம்.ஜி.ஆர், ஜெ வை முன்னிறுத்தி மூன்று அணிகள் தோன்றி அந்த மூன்று அணிகளும் ஒருவருக்கொருவர் போட்டியாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தாங்கள் தான் உண்மையான அதிமுக என தங்களைத் தாங்களே பிரகடனப் படுத்திக் கொண்டதும் மக்களிடையே அப்போது மிகப்பெரிய கேலிக்கூத்துக்களாகின.