“சசிகலா சிறைச்சாலைக்குள் நுழைவதற்கு முன்பாகவே, தான் உடல்நிலை சரியில்லாதவர் என்பதால் தனக்கு சமைத்துக் கொள்ளவோ, அல்லது சிறப்பு சாப்பாடு வெளியில் இருந்து பெற்றுக் கொள்வதற்கோ எனக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். ஆனால் அதை அனுமதிக்க முடியாது என்று இதே டிஜிபி சத்யநாராயண ராவ் தான் மறுத்து விட்டார். அதற்குப் பிறகு சசிகலா தன்னை ஒரு சிறப்புக் கைதியாக (A கிளாஸ்) அங்கீகாரம் கொடுத்து நடத்த வேண்டும் என நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார். ஆனால் நீதிமன்றம் அதை மறுத்து விட்டது. ஆகவே இவருக்கு எந்தவிதமான சிறப்புத் தகுதியும் வழங்கப்படவில்லை. சில கைதிகளுக்கு அப்படியான சிறப்புச் சலுகைகள் வழங்கப் பட்டால், அந்தச் சலுகைகள் என்னவாக இருக்குமென்றால், அவர்களது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு கொஞ்சம் பருப்பு அதிகமாகப் போட்டு சமைத்துக் கொடுங்கள், அல்லது சர்க்கரை குறைவாகப் போட்டு சமைத்துத் தாருங்கள், மருந்து மாத்திரைகள் வழங்கலாம், அத்தகையோர் அவரவர் சொந்த உடைகளையே அணிந்து கொள்ளலாம் என்பது மாதிரியான சலுகைகள் தான் வழங்கப் படக் கூடுமே தவிர; வேறு விதமான சலுகைகளெல்லாம் சிறைச்சாலையில் வழங்கப் படமாட்டாது. சசிகலா இத்தகைய குறைந்தபட்ச சலுகைகளுக்கு கூட தகுதியற்றவர் என நீதிமன்றம் அறிவித்த நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட சிறப்புச் சலுகைகளென வீடியோ ஆதாரங்களுடன் வெளியிடப்பட்ட விஷயங்கள் மிக மிக அதிர்ச்சிகரமானவை. இதைப் பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாமல் இங்கே தமிழ்நாட்டில் நமது அரசியல்வாதிகளும், அறிவாளிகளும் யானையைப் பார்த்த ஐந்து குருடர்களைப் போல அவரவர் கட்சி சார்ந்த நியாயங்களைப் பேசிக் குவித்துக் கொண்டிருக்கின்றனர். கர்நாடகாவின் பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் முறைகேடாக சலுகைகள் வழங்கப்பட்டது சசிகலாவுக்கு மட்டுமில்லை முத்திரைத்தாள் மோசடி தெல்கிக்கும் தான். இந்த மோசடிகளை, முறைகேடுகளை எல்லாம் நிரூபிக்கத் தான் ஆதரங்களைச் சேகரித்து உயரதிகாரிகளுக்கு அனுப்பினார் ரூபா. ஆனால் நாம் தமிழ்நாட்டில் இதென்னவோ சசிகலாவுக்கு மட்டுமே எதிரான விவகாரம் என்று கருதிக் கொண்டு, அவரது பெயரை மட்டுமே மந்திர உச்சாடனம் போல உச்சரித்து தேவையில்லாமல் அவரை பெரிய மனுஷியாக்கிக் கொண்டிருக்கிறோம்.