தமிழ் சினிமாக்களில் ஜல்லிக்கட்டு சித்தரிக்கப்பட்ட விதத்தில் எப்போதும் ஒரு காவியத் தன்மை இருக்கும். அதாவது மிகப் பெரும் பணக்காரர் ஒருவர் தன் மகளையோ, தங்கையயோ ஜல்லிக்கட்டில் பரிசுப் பொருளாக அறிவிப்பார். காளையை அடக்கும் வீரனுக்கு மங்கையை மணக்கும் அதிர்ஷ்டம் காத்திருக்கும். இப்படித்தான் பால்யத்தில் நமக்கு ஜல்லிக்கட்டு அறிமுகமாகியிருக்கிறது. ஆனால் ஜல்லிக்கட்டின் நோக்கம் அது மட்டும் அல்ல; ஜல்லிக்கட்டு என்பது மாட்டுக்கு தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் ஆநிரைகளுக்கு நன்றி செலுத்தும் ஒரு சடங்காக நமது ஆரிய, திராவிடப் பாரம்பரியங்களில் பன்னெடுங்காலமாகப் பின்பற்றப் பட்டு வந்த ஒரு வழக்கம். இதற்குச் சான்றாக சிந்து வெளி நாகரிக காலத்திலும் அடுத்து வந்த வேத கால நாகரிகத்திலும் பல்வேறு குறிப்புகளும், ஆதாரங்களும் இருக்கின்றன.
மக்களில் பேதம் பிரிக்க நினைப்பவர்களுக்கு தான் ஆரிய, திராவிட வேறுபாடுகள் பிரச்சினைக்குரியதாக இருக்க முடியும். ஆனால் ஜல்லிக்கட்டில் ஆரியப் பாரம்பரியமும், திராவிடப் பாரம்பரியமும் இணைந்து தான் மிளிர்கின்றன. ஏனெனில் ஜல்லிக்கட்டு இரு பிரிவினருக்கும் பொதுவான ஒரு விசயமாகவே இருந்திருக்கிறது. மகாபாரதத்தில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தனது எட்டு மனைவிகளில் ஒருவரான கோசல ராஜ்ஜியத்தைச் சேர்ந்த இளவரசியை காளைகளை அடக்கிப் போட்டியில் வென்று மணந்ததாக வியாஸர் கூறுகிறார். ஆக அப்போதிருந்தே ஜல்லிக்கட்டு வழக்கத்தில் இருந்திருக்கிறது. ஸ்ரீகிருஷ்ணரையும், மகாபாரதத்தையும் ஆரியப் பண்பாடு என எவரேனும் ஒதுக்கினால் அவர்களுக்குச் சொல்லிக் கொள்ள திராவிட உதாரணங்களும் புறநானுற்றிலும், சங்க இலக்கியங்களிலும் எக்கச்சக்கமாக கொட்டிக் கிடக்கின்றனவே!