ஆயுதப் பயிற்சி அளிக்கும் மாவோயிஸ்டுகள் தமிழக சிறுவர்களும் பங்கேற்பா?
கேரள வனப் பகுதியில் மாவோயிஸ்டுகள் சிறுவர்களுக்கு அளிக்கும் ஆயுதப் பயிற்சியில் தமிழக சிறுவர்கள் பங்கேற்றுள்ளனரா என்பது குறித்து போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.


கேரள வனப் பகுதியில் மாவோயிஸ்டுகள் சிறுவர்களுக்கு அளிக்கும் ஆயுதப் பயிற்சியில் தமிழக சிறுவர்கள் பங்கேற்றுள்ளனரா என்பது குறித்து போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
கோவை மாவட்டத்தை ஒட்டியுள்ள தமிழக - கேரள எல்லைப் பகுதிகளில், தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தினரின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால், தமிழக எல்லைப் பகுதிகளில் உள்ள மலைவாழ், பழங்குடியின கிராமங்களில் போலீஸார், சிறப்பு அதிரடிப் படையினர் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர்.
அதேவேளையில், இரு மாநில போலீஸார், வனத் துறையினர் கூட்டுக் கண்காணிப்பில் வனப் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், அண்மைக் காலமாக தமிழகத்தை ஒட்டிய கேரள எல்லைப் பகுதிகளான அட்டப்பாடி, முள்ளி, வயநாடு ஆகிய இடங்களில் உள்ள அடர் வனப் பகுதிகளில் மாவோயிஸ்டுகள் முகாமிட்டு அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதனால், கேரள மாநில சிறப்பு அதிரடிப் படையான தண்டர்போல்ட் போலீஸாருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே அடிக்கடி வனப் பகுதிகளில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, கேரள மாநிலம், படுக்கா வனப் பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கும், கேரள மாநில அதிரடிப் படையினருக்கும் இடையே கடந்த நவம்பர் 22-ஆம் தேதி துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில், கேரள காவல் துறையினரால் புகைப்படம் அச்சிட்டு தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த குப்பு தேவராஜ், அஜிதா ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
குப்பு தேவராஜின் ஐபேடில் முக்கியத் தடயம் சிக்கியது:
இதன் பிறகு, குப்பு தேவராஜ் சுட்டுக் கொல்லப்பட்ட வனப் பகுதியில் அதிரடிப் படையினர் நடத்திய சோதனையில் அவரது ஐபேட் கண்டுபிடிக்கப்பட்டது. அதில், பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் இடம் பெற்றிருந்ததாகத் தெரிகிறது. முக்கியமாக தமிழகம், கேரளம், கர்நாடகம் ஆகியவற்றின் மும்முனைச் சந்திப்பில் உள்ள படுக்கா வனப் பகுதியில் உள்ள குருளாயி என்ற மலைக் கிராமத்தில் சிறுவர்கள், மாணவர்களுக்கு மாவோயிஸ்டுகள் ஆயுதப் பயிற்சி அளிக்கும் விடியோ பதிவு இடம் பெற்றிருந்தது. இதில், சுமார் 12 முதல் 18 வயது வரை உள்ள சிறுவர்கள், இளைஞர்களும் இடம் பெற்றுள்ளனர்.
மேலும், அதில் கர்நாடக மாவோயிஸ்ட் இயக்கத் தலைவர் விக்ரம் கௌடா பங்கேற்றிருப்பது போன்ற காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
மாவோயிஸ்ட் இயக்கம் தீவிரவாதக் குழு அல்ல:
"மாவோயிஸ்ட் இயக்கம் என்பது தீவிரவாதக்குழு அல்ல. அது மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டதாகும். வன்முறையைத் தூண்டும் எண்ணம் எங்களுக்கு இல்லை' என்பது போன்ற வசனங்களும் அந்த ஐபேடில் இடம் பெற்றிருந்தன.
இதைத்தொடர்ந்து, மாவோயிஸ்டுகள் ஆயுதப் பயிற்சி அளிக்கும் விடியோ பதிவுகளை கேரள போலீஸார் கட்செவி அஞ்சலில் (வாட்ஸ் அப்) கடந்த டிசம்பர் மாதம் வெளியிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்தப் பதிவுகளை தமிழக காவல் துறை உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, உஷாரான தமிழக போலீஸார், சிறப்பு அதிரடிப் படையினர் தமிழக எல்லைப் பகுதிகளில் உள்ள வனப் பகுதியை ஒட்டிய கிராமங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அந்த விடியோவில் தமிழக சிறுவர்கள் இடம் பெற்றுள்ளனரா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, சிறப்பு அதிரடிப் படை அதிகாரி ஒருவர் கூறுகையில், "கேரளத்தில் மாவோயிஸ்டுகள் சிறுவர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிப்பதாக அதிகாரப்பூர்வ விடியோ பதிவு வெளியிட்டுள்ளது உண்மைதான். அந்தச் சம்பவங்களை வைத்துப் பார்க்கும்போது, மாவோயிஸ்ட் இயக்கத்தினர் ஆயுதச் சண்டைக்குத் தயாராவது போன்று தெரிகிறது.
தமிழகப் பகுதிகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் குறைவாகவே உள்ளது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த சிறுவர்கள் இடம் பெற்றிருப்பதற்கான வாய்ப்பு குறைவு. எனினும், ஆனைகட்டி, முள்ளி, பட்டிசாலை, பில்லூர் அணை உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட போலீஸாரும், சிறப்பு அதிரடிப் படையினரும் இணைந்து தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்' என்றார்.
மஞ்சூர் காவல் நிலையத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
நீலகிரி மாவட்டம், மஞ்சூர் அருகே, தமிழக எல்லையை ஒட்டியுள்ள அட்டப்பாடி, அகளி, முக்காலி உள்ளிட்ட கேரள வனப் பகுதிகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. மாவோயிஸ்டுகளின் நடமாட்டத்தை ஒழிக்க கேரள போலீஸார் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், மாவோயிஸ்டுகள் தமிழகத்துக்குள் ஊடுருவும் வாய்ப்பு அதிக அளவில் உள்ளது. மேலும், தமிழகப் பகுதிகளிலும் மாவோயிஸ்டுகள் தாக்குதலில் ஈடுபடக்கூடும் என கருதப்படுகிறது.
எனவே, தமிழக எல்லைப் பகுதிகளில் போலீஸார் தீவிரக் கண்காணிப்பு மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், எல்லைப் பகுதியில் உள்ள அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மஞ்சூர் காவல் நிலையத்தைச் சுற்றி நான்கு பக்கங்களிலும் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டுள்ளன. மேலும், காவல் நிலையத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள 4 கேமராக்கள் மூலமாக போலீஸார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...