80 கள் தொட்டு இன்று வரை ராமாயணக் கதைகள் நெடுந்தொடர்கள் ஆக்கப்பட்டாலும் சரி, திரைப்படங்கள் ஆக்கப்பட்டாலும் சரி, சீதை என்பவள் மிகவும் பணிவான பெண், கணவன் மனமறிந்து நடக்கும் மென்மையான பெண், அவன் தீக்குளிக்கச் சொன்னால் உடனே தீயில் இறங்கும் பெண் என்பதாகத் தான் அவளைப் பற்றிய சித்தரிப்புகள் உருவாக்கப் பட்டுள்ளன. மக்களும் சீதையை மென்மைக்கு மாற்று உருவமாகவே கற்பனை செய்து வருகின்றனர். ஆனால் அவள் அப்படியல்ல. கிடைத்துள்ள புராண இதிகாசச் சான்றுகளின் அடிப்படையில் சொல்வதென்றால் சீதை மிக வலிமையான பெண். அவள் மிதிலாவின் இளவரசியாக இருக்கும் போது, மூத்த ராவணனைக் கொல்வதாக வால்மீகி எழுதியதாகக் கூறப்படும் பிறிதொரு ராமாயணக் கதையில் சொல்லப்பட்டுள்ளது.