/

புத்தகக் கண்காட்சி 2016 வெற்றியா?

ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் நடக்கும் ஒரு முக்கிய திருவிழாவாகவே மாறிவிட்டது புத்தகக் கண்காட்சி

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:30 pm

உமா ஷக்தி.

ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் நடக்கும் முக்கியத் திருவிழாவாகவே மாறிவிட்டது புத்தகக் கண்காட்சி. இந்த வருடப் புத்தகக் கண்காட்சி ஜூன் மாதம் நடைபெற்றதால் சில அசெளகரியங்கள் இருக்கவே செய்தன. வெப்பக் காற்று முதல் நான்கு நாட்கள் தாக்கி விற்பனையாளர்கள் வாசகர்கள் என அனைவரும் கஷ்டப்பட்டனர். அடுத்த இரண்டு நாட்கள் திடீரென்று கோடை மழை வந்து சில புத்தக அரங்கங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. மறுபடியும் அடுத்த நாளே கடும் வெயில். மீண்டும் வெப்பம், வியர்வை என்று இந்த முறை புத்தகக் கண்காட்சி இயற்கையின் பாதிப்பு அதிகமாகவே இருந்தது. அதற்கு ஏற்றவாறு பாதுகாப்பு வசதிகள் இருந்தனவா என்றால் இல்லை என்று தான் வருத்தத்துடன் பதிவு செய்ய வேண்டியிருக்கிறது. பபாசி எனப்படும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் மனது வைத்திருந்தால் நிச்சயம் இந்தக் குறைகள் நீக்கப்பட்டிருக்கலாம். ஆனால் ஏனோ அவர்கள் இதையெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை.  வருடம் ஒரே முறை புத்தக ஆர்வலர்கள் பெரும் அளவு கூடும் ஓரிடத்தில் குளிர்சாதன வசதி செய்திருக்கலாம். புத்தகக் கண்காட்சி நிறைவை ஒட்டி சில பதிப்பாளர்கள் மற்றும் சில வாசகர்களிடம் பேசிய போது அவர்கள் கூறிய கருத்துக்களை பபாசி ஏற்றுக்கொண்டால் இனி வரும் புத்தகக் கண்காட்சிகள் மிகச் சிறப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு பத்திரிகையாளர் கூறியது, ‘யாருக்காக இந்தப் புத்தகக் கண்காட்சி நடத்துகிறார்கள் என்றே தெரியவில்லை. ஜனவரி மாதம் நடத்த முடியவில்லை என்றால் இடியா விழுந்துவிடும்? மக்கள் அடுத்த ஜனவரியில் புத்தகக் காட்சி வைத்தால் போதும் என்ற மனநிலையில் தான் இருந்தார்கள். ஆனால் வலிய இவர்கள் ஜூன் மாதம் வைத்ததில் நிச்சயம் வியாபார நோக்கம் தான் துருத்திக் கொண்டு தெரிகிறது. பபாசிக்கும், புத்தக விற்பனையை வியாபாரமாக பார்க்கும் சில பதிப்பகங்களுக்கும், கடைக்காரர்களுக்கும் தான் இந்தப் புத்தகக் கண்காட்சியே தவிர  மக்களுக்காக இல்லை என்று அடித்துச் சொல்லலாம். காரணம் ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் ஒரு இடத்தில் அடிப்படை வசதிகள் கூட ஏற்படுத்தித் தரவில்லை. அவ்வளவு கவனம் இருந்தால் புத்தகக் கண்காட்சி வாயிலை வைக்கும் திசையை சரியாகத் தீர்மானித்திருப்பார்கள். கடற்கரையை ஒட்டிய ஒரு பகுதியில் காற்று வரும் திசைக்கு நேர் எதிரே அரங்க வாசலை வைத்த காரணம் என்னவென்று யாருக்குத் தெரியும்? அடுத்து குடிநீர். ஏதோ ஒரு மூலையில் பெயருக்கு கேன் வாட்டர் வைத்திருந்தார்கள். அரங்கிற்கு வந்த பலரும் தண்ணீர் இல்லாமல் தவித்து டீ ஹைட்ரேட் ஆகும் நிலைக்கு வந்துவிட்டார்கள். காற்றும் குடிநீரும் இல்லாத ஓரிடத்தில் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் இருக்க நேர்ந்தால் அது யாரையும் எரிச்சல் அடைய வைத்துவிடும். இரண்டு வரிசைக்கு ஓரிடத்தில் நிச்சயம் தண்ணீர் கேன்கள் வைத்திருக்கவேண்டும். அடுத்ததாக டாய்லெட் வசதிகள். சுத்தம் எங்கு முக்கியமாக இருக்க வேண்டுமோ அங்கு இல்லாமல் இருப்பது மிகப்பெரிய சாபக்கேடு. இத்தனை மக்கள் வந்து போகும் இடத்தில் அவசரத்துக்குப் பயன்படுத்த கழிவறைகள் கோர அறைகளாக இருப்பது கொடுமை. இவற்றையெல்லாம் விட அங்கு விற்பனை செய்யப்படும் எல்லா உணவுப் பொருட்களும் இரண்டு மடங்கு விலையில் விற்கப்பட்டன. மக்களின் மனத்தை அதை ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு வியாபாரிகள் பழக்கப்படுத்திவிட்டனர் என்பது காலத்தின் கொடுமைதான். ஒரு இலக்கிய வாசகனான எனக்கு இங்கு விற்கப்படும் புத்தகங்களைப் பார்த்தால் கோபம் தான் வருகிறது. சமையல் புத்தகங்களும், ஜோதிட புத்தகங்களைக் கேட்டும் தான் நிறைய பேர் வருகிறார்கள். இலக்கிய புத்தகங்களுக்கான அரங்குகள் இருபதுக்கும் குறைவு தான். இலக்கியம் எழுத்து என அதற்காக தம் வாழ்வை அர்ப்பணித்தவர்களின் பெயர்களை கூட வந்த கூட்டத்தினரின் பெரும்பான்மையானவர்களுக்குத் தெரியாது. காரணம் அவர்கள் இருட்டடிப்பு செய்யப்படுவதுடன் தகதியே அற்றவர்கள் முன் வரிசையில் நிற்பதும் தான்.  அறிவுலகத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தன்னை நம்பிக் கொண்டிருக்கும் ஒரு சமூகம் எவ்வளவு அறியாமையுடன் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை அறிய இந்தப் புத்தகக் கண்காட்சியே சாட்சி. இதையெல்லாம் சொல்லவும் முடியாது எழுதவும் முடியாது. காரணம் கடைவிரித்துவிட்டாலும் கொள்வார் இல்லை. இதுதான் இன்னமும் தமிழில் எழுதிப் பிழைப்பனின் நிலை.’ என்று ஆதங்கத்துடன் முடித்தார்.

அவருக்கு நேர் மாறான கருத்தை நற்றிணை பதிப்பகம் யுகன் முன் வைத்தார். ’இந்த முறை புத்தகக் கண்காட்சி விற்பனை நன்றாக இருந்தது. பள்ளி விடுமுறை முடிந்து தொடங்கும் மாதம் என்பதால் நாங்கள் ஆரம்பத்திலேயே 60 சதவிகித விற்பனையைத் தான் எதிர்ப்பார்த்தோம். அதையும் தாண்டி மக்கள் ஆர்வத்துடன் வந்தது இரட்டிப்பு மகிழ்ச்சி. புதிய வாசகர்கள் நிறைய பேரை நாங்கள் இந்த முறை பார்த்தோம். நற்றிணை பதிப்பகத்திற்கு விற்பனை தாண்டி பாராட்டுக்களும் கிடைத்தது. கண்காட்சியில் சில குறைகள் இருக்கவே செய்தது.

முதலாவது, முக்கியஸ்தர்கள் அதாவது வி.ஐ.பிக்கள் கண்காட்சிக்கு வருகை தரும் போது அவர்களுடன் ஐம்பது அறுபது பேர் உடன் வருவது, அவர்களுக்காக மக்களை ஒதுங்கச் செய்வது, தவிர அவர்களைப் பார்க்க கூட்டம் அலைமோதுவது போன்றவை புத்தகம் வாங்கும் நோக்கத்துடன் அரங்கிற்கு வருகை தந்திருக்கும் வாசகர்களின் கவனத்தை திசை திருப்புவதாக உள்ளது. வி.ஐ.பிக்களுக்கு எனத் தனியாக ஒரு இடம் அமைத்துத் தர வேண்டும். அல்லது வேறு என்ன செய்யலாம் என்று பபாசி இது குறித்து விவாதித்து ஒரு நல்ல முடிவுக்கு வர வேண்டும். இரண்டாவதாக முக்கியமான விஷயத்தைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். அவை புத்தக வெளியீடுகள். புத்தகக் கண்காட்சியில் புத்தகங்கள் வெளியிடப்படும் நிகழ்வு கிட்டத்தட்ட தினமும் நடந்து கொண்டிருக்கிறது வரவேற்கத்தக்க விஷயம் தான். ஆனால் அது எங்கு நடத்தப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்படவேண்டும். உதாரணமாக என்னுடைய அரங்கத்திக்கு பக்கத்தில் இன்னொரு அரங்கத்தில் புத்தக வெளியீடுகள் நடந்து கொண்டிருக்கும் போது எனது அரங்கமும் அதற்குப் பயன்படுத்தப்படுகிறது. இரண்டு அரங்கு வாசலிலும் கூட்டம் கூடிவிடுகிறது. மக்களை கவன ஈர்ப்பு செய்து வரவழைக்கும் ஒரு வியாபார உத்தியாக இது உள்ளது. ஆனாலும் இது தவிர்க்க முடியாத விஷயம். புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிகளை அவரவர் அரங்கத்திற்குள் வைக்க வேண்டும் அல்லது பபாசி இதற்கென தனியாக ஒரு அரங்கு அமைத்துத் தர வேண்டும்.

மூன்றாவதாக கண்காட்சிக்கு வருகை தரும் முதியோர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஆங்காங்கே இருக்கை வசதிகள் செய்து தரப்படவேண்டும். ஒவ்வொரு வரிசையின் முடிவிலும் சேர்கள் போடப்பட வேண்டும். ஏனென்றால் 700 புத்தக ஸ்டால்கள் உள்ள இடத்தில் எல்லா கடைகளிலும் ஏறி இறங்கும் யாருக்கும் சோர்வாகத் தான் இருக்கும். வயதானவர்கள் அதிகம் சோர்ந்து போய்விடுவார்கள். அவர்களுக்காக இந்த வசதியை நிச்சயம் பபாசி செய்ய வேண்டும்.’ என்றார் யுகன்.

’புத்தகக் கண்காட்சியில் சிற்றரங்கை ஒழுங்கமைத்திருக்கலாம். அரங்குகளைப் பொருத்தவரை இயல்வாகை அரங்கும் அப்துல் கலாம் அரங்கும் நன்றாக வடிவமைக்கப்பட்டு பெரிதும் ஈர்த்தன. பெரிய அரங்குகளில் நியூ ஹாரிசான் மீடியா, உயிர்மை, காலச்சுவடு, ஏதிர் வெளியீடு, மணிமேகலைப் பிரசுரம், மதி நிலையம், ஈஷா மையம் போன்ற அரங்குகள் கவனம் பெற்றன. அப்துல் கலாம் அரங்கில் அவரைப் பற்றிய புத்தகம் வெளியிட்ட அனைத்துப் பதிப்பகத்திலிருந்தும் புத்தகப் பிரதி வைக்கப்பட்டிருந்தது. தவிர அங்கு குழந்தைகளுக்கான இடமும் ஒதுக்கப்பட்டிருந்தது. இயல்வாகையில் நம்மாழ்வாரின் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.தேவையான புத்தகங்கள் வாங்க முடிந்ததில் திருப்தி என்றாலும் அதை இவ்வளவு கஷ்டப்பட்டு வாங்க வேண்டுமா என்று நினைத்தேன். வெளிநாடுகளில் அல்லது வெளியூர்களில் நடைபெறும் கண்காட்சகளில் கூட நல்ல காற்றோட்டமாகவும் புத்தகங்களை அதிக நேரம் பார்வையிட்டு படித்து அதன் பின்னர் வாங்குவதா வேண்டாமா என்று முடிவெடுக்கும் வகையில் வசதியாக இருக்கும். ஆனால் இங்கு நேர் எதிராக இருந்தது. எப்படா வெளியே ஓடலாம் என்று நினைக்கும்படி அரங்கமைப்பு மோசமாக இருந்தது. கடுமையான கோடை தினங்கள் ஆனதால் இங்கு வெக்கையை சமாளிக்க முடியாமல் போனது’ என்றார் திருப்பூரிலிருந்து புத்தகக் கண்காட்சிக்காக வந்திருந்த வாசகர் வீரகுமார்.

என்னைப் பொருத்தவரையில் புத்தகக் கண்காட்சி நிச்சயமாக ஒரு கொண்டாட்டமான திருவிழா தான். அதுவும் சென்னை போன்ற மாநகரில் சினிமா அரசியல் தவிர்த்து புத்தகத்திற்கான பிரம்மாண்ட நிகழ்வுகள் எல்லாம் நடப்பது மிக அபூர்வம். தொடர்ந்து இதை இயக்கமாக 39 ஆண்டுகள் பபாசி நடத்திக் காண்பித்தது பாராட்டத்தக்கது. வசதிகள் வாய்ப்புக்கள் வியாபார நோக்குகள் இவற்றையெல்லாம் மீறி என்னைப் போன்று வருடா வருடம் புத்தகக் கண்காட்சியை எதிர்ப்பார்க்கும் புத்தக ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. 

இந்தப் புத்தகக் கண்காட்சிக்குக் கிட்டத்தட்ட நான் ஓரிரு நாட்கள் தவிர தினமும் சென்றேன். புத்தகம் வாங்க மட்டுமல்லாமல் நண்பர்களை, எழுத்தாளர்களை ஒருசேர ஒரிடத்தில் சந்திக்கும் வாய்ப்பு இங்குதான் கிடைக்கிறது. எழுத்தாளர்கள் பிரபஞ்சன், எஸ்.ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகர், பாஸ்கர் சக்தி, ஷோபா ஷக்தி, சல்மா, கவிஞர் ஞானக்கூத்தன்,  சுகுமாரன், மனுஷ்யபுத்திரன், இயக்குனர்கள் தாமிரா,  சந்திரா, மிஷ்கின், நலன் குமாரசாமி, நவீன்,  ராம செல்லப்பா ஆகியோரையும் புத்தகங்கள் சூழ சந்தித்து உரையாடியது மகிழ்ச்சி.   பதிப்பாளர்களும், புத்தகங்களும், எழுத்தாளர்களும், வாசகர்களும் ஒன்றாக இணைந்த அச்சூழலே மகிழ்வளிக்கக் கூடியதாக இருந்தது. தவிர இந்தப் புத்தகக் கண்காட்சியில் புதிய புத்தகங்கள் நிறைய வந்திருந்தன. புனைவு இலக்கியம் சார்ந்த புத்தகங்கள் தான் எப்போதைக்குமான என்னுடைய விருப்பத் தேர்வு. கவிதை மற்றும் மொழிபெயர்ப்பு நூல்களும் பெரிதும் கவனம் ஈர்த்தன.

நமக்கான புத்தகங்கள் சில சமயம் நம்மைத் தேடி வருவதும் உண்மை. அது அன்பளிப்பாக இருக்கலாம் அல்லது மதிப்புரை எழுத வேண்டியும் வரலாம். ஆனால் ஒரு சராசரி வாசகனுக்கு நிச்சயம் புத்தகத் தேடல் இருக்க வேண்டும். தன்னுடைய ரசனைக்கு ஏற்றவாறு வாசிக்கும் பழக்கத்தை வாழ்வின் ஒரு இன்றிமையாத பகுதியாக வைத்துக் கொண்டால் புத்தகங்கள் நல்வழிப்படுத்துவதுடன் நிச்சயம் உயர்ந்த இடத்திற்கு மறைமுகமாக அழைத்துச் செல்லும். நல்ல எழுத்துக்களை நாம் தான் ஆர்வமுடன் தேடிக் கண்டடைய வேண்டும். நம்முடைய தொன்மங்களை அறியவும், சக மனிதர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவும், மானுடத்தின் கதையை தெரிந்து கொள்ளவும், சமூக நிகழ்வுகளை உள்வாங்கிக் கொள்ளவும் நிச்சயம் ஒவ்வொருக்கும் வாசிப்புத் தேவை. தற்போதைய இளைய தலைமுறையினர் சமூக வலைத்தளங்களில் மூழ்கி புத்தக வாசிப்பின் ருசி அறியாதவர்களாகிவிட்டார்கள். புத்தகம் என்பது நம்மை மீள் உருவாக்கம் செய்ய வல்லமை பெற்றது. நம்முடைய அறிவை விலாசமாக்குவது. சமூக வலைத்தளங்களோ நம்மை எதிலும் ஆழமாக சிந்திக்க விடாமல் ஒரு மேம்போக்கான மனப்பான்மையை வளர்த்தெடுக்கக் கூடியது. ஒரு கருத்தை பதிவு செய்யவோ அல்லது சுய விளம்பரத்திற்காகவோ அவற்றை ஓரளவிற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் அறிவுத் தேடலுக்கும், கருத்தாழங்களுக்கும் புத்தகங்களிடம் தான் சரண் அடையவேண்டும்.

நல்ல புத்தகங்களைத் தேடிக் கண்டடைவதன் மூலம் நம்மை நாமே  தரிசித்துக் கொள்ள முடியும். புத்தகங்கள் நெடிய வாழ்வின் பயணத்தை சற்று இளைப்பாரலுடன் சுகமாக்குகிறது. மக்களிடையே புத்தக வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தவேண்டும். வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு நல்ல இலக்கியங்களை அறிமுகப்படுத்த வேண்டும். இப்படி இதை ஒரு இயக்கமாக மாற்றி நாம் வாழும் இச்சமூகத்தை வளப்படுத்துவோம், அதன் ஆரம்பப் புள்ளியாக புத்தகக் கண்காட்சிகளுக்கு ஆதரவு தருவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.