ஜல்லிக்கட்டு: தடை நீங்க இது வரை எந்த உறுதியும் இல்லை!
தமிழ் இலக்கியத்தில் ‘ஏறு தழுவுதல்’ என்பது ஒரு வீர விளையாட்டு. மாடுகளுக்கும், அதன் எஜமானர்களுக்குமான பந்தம் சொல்லில் அளத்தற்குரியது அல்ல.


தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நெருங்கிக் கொண்டிருக்கிறது...
இதுவரை மாட்டுப் பொங்கலை அணி செய்யும் ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்க எந்த வித உத்திரவாதமும் கிடைத்தபாடில்லை.
இதற்கிடையில்;

ஜல்லிக்கட்டு தடை நீங்கவில்லை எனில் அரிய இனமான ‘காங்கேயம் காளை’ இனம் அழிந்து விடும் என காளை உரிமையாளர்கள் கவலை கொண்டுள்ளனர் என்கின்றன நாளிதழ் செய்திகள். அதனால் ஜல்லிக்கட்டுக்கும், ரேக்ளா ரேஸுக்கும் அனுமதி வழங்கப் பட வேண்டும் என்பது காளை உரிமையாளர்களது ஏகோபித்த கோரிக்கை. கடந்த மூன்றாண்டுகளாக நிலவி வரும் ஜல்லிக்கட்டு தடை விவகாரத்தில் மத்திய அரசு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகத் தான் செயல்படுகிறது. எப்படியாவது மீண்டும் ஜல்லிக்கட்டை கொண்டு வருவது தான் மத்திய அரசின் நோக்கம். ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் சட்ட ரீதியாக தங்களது போராட்டங்களை நீதிமன்றங்களுக்கு எடுத்துச் சென்று திறமையாக தங்களது தரப்பு நியாயத்தை வாதிட்டால் மட்டுமே இவ்விசயத்தில் சாதகமான தீர்ப்பு கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்கிறார் பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்திர ராஜன்.
இவர் மட்டுமல்ல மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனோ செல்லுமிடமெல்லாம் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டை கொண்டு வந்தே தீருவோம் என்று கூறி வருகிறார்.
இப்படியான சூழலில் தனியார் தொலைக்காட்சியில் ‘கேள்விக்கென்ன பதில்’ எனும் நிகழ்வில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு ‘ ஜல்லிக்கட்டை தடை செய்தது உச்ச நீதிமன்றம், இவ்விசயத்தில் மத்திய அரசு எப்படி பொறுப்பேற்கும்’ என விட்டேத்தியாகப் பதில் சொல்லி இருக்கிறார்.
ஒரே கட்சியைச் சேர்ந்த இரு வேறு மாநிலத் தலைவர்களின் கருத்துகளில் நிலவும் இந்த முரண்பாடுகள் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களை கவலை கொள்ளச் செய்வதாக இருக்கிறது. மேலும் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சேடபட்டி முத்தையா ‘உண்மையில் பாஜக வினரும், மத்திய அரசும் ஜல்லிக்கட்டு தடை நீக்க விசயத்தில் பொறுப்பற்று நடந்து கொள்கிறார்கள்’ எனக் குற்றம் சாட்டியிருக்கிறார்.
இதெல்லாம் ஒருபுறமிருக்க;
ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வலியுறுத்தி அலங்காநல்லூரில் வியாழக்கிழமை நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வந்தது. உச்சநீதிமன்றத் தடை காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.
பொங்கல் பண்டிகைக்கு 20 நாள்களே உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உறுதியான அறிவிப்பு வரவில்லை. இதையடுத்து இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வலியுறுத்தி ஜல்லிக்கட்டு மீட்பு மற்றும் ஒருங்கிணைப்பு குழு சார்பில், அலங்காநல்லூர் வாடிவாசல் அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது, இதில் அனைத்து அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள், வாகன ஓட்டுநர்கள், கிராம பொதுமக்கள், பாலமேடு ஜல்லிகட்டு கமிட்டி அமைப்பாளர்கள், காளை வளர்ப்போர், மாடுபிடி வீரர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் உள்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மதுரை கிழக்குத் தொகுதி சட்டபேரவை உறுப்பினர் பி.மூர்த்தி தலைமையில் திமுகவினர், காங்கிரஸ், தமாகா, விடுதலைச்சிறுத்தைகள், நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர். என்றொரு செய்தி;
இன்று காலை தினமணியில் இந்தச் செய்தியை வாசித்தது முதல் சில விலங்குகள் நல அமைப்புகள் தமிழர் பாரம்பரிய பண்டிகை விளையாட்டுகளைப் பற்றியெல்லாம் தீர ஆலோசிக்காமல் வேண்டுமென்றே முனைந்து ஜல்லிக்கட்டுக்கு அனாவசியமாய் தடை வாங்கி விட்டார்களோ என்று தோன்றிக் கொண்டே இருக்கிறது.
மிருகவதை என்று ஜல்லிக்கட்டுக்கு தடை வாங்கியவர்கள், ஆடு, கோழி, மீன், முயல், பன்றி, மாடு, இன்ன பிற அசைவ உணவாகக் கூடிய விலங்குகளைப் பற்றியெல்லாம் என்ன விதமான தீர்மானங்கள் கொண்டிருக்கிறார்கள். மாடு பிடித்தலையே மிருக வதை என்று சொல்லித் தடை வாங்க முடியுமெனில் அடுத்து இந்தியாவில் யாரும் இறைச்சியே உண்ணக் கூடாது என நீதிமன்றங்களில் தடை வாங்குவார்களா?
ஏனெனில் மறைந்த முதல்வர் ஜெ 13 வருடங்களுக்கு முன்பு ஒரு புது சட்டம் கொண்டு வந்து அதை மக்களிடையே செல்லுபடியாகச் செய்ய முடியாமல் மீண்டும் அடுத்த ஆண்டில் திரும்பப் பெற்றார். அதைப் போலவே இந்த ஜல்லிக்கட்டு விவகாரமும் தமிழ் மக்களின் விருப்பத்துக்குச் சாதகமாக முடிவுற்றால் அலங்காநல்லூரில் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதுமே மாட்டுப் பொங்கல் மந்தகாசமாக நடைபெறும்.
ஜெ திரும்பப் பெற்றுக் கொண்ட ‘ஆலயங்களில் ஆடு, கோழி பலியிட தடைச் சட்டம் குறித்து ...
மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில், 2003 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் தமிழக அரசு அவசரச் சட்டம் ஒன்றைப் பிறப்பித்தது. அதன்படி, கோவில்களில் ஆடு, கோழிகளைப் பலியிட தடைவிதிக்கப்பட்டது. இந்த சட்டம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக கிராமப்புறங்களில் அரசுக்கு கடும் எதிர்ப்புதெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக ஆடு,கோழி பலியிட இருந்த தடையை தமிழக அரசு நீக்கியது. இதன் தொடர்ச்சியாகஅரசு பிறப்பித்த அவசரச் சட்டத்தை நீக்கும் வகையில் 2004 ஜூலை மாதம் சட்டசபையில் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதையடுத்து ஆடு, கோழி பலி தடைச் சட்டத்தின் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், வழக்குகள்ஆகியவை காலாவதியாகி விட்டது எனவும் அன்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சட்டம் போலவே ஜல்லிக்கட்டு தடைச் சட்டமும் தடை செய்யப் பட்டால் அதை தமிழர் பண்பாடாக நினைக்கும் சமூகம் மகிழ்வெய்தும்.
தமிழ் இலக்கியத்தில் ஏறு தழுவுதல் என்பது ஒரு வீர விளையாட்டு. மாடுகளுக்கும், அதன் எஜமானர்களுக்குமான பந்தம் சொல்லில் அளத்தற்குரியது அல்ல. குறிப்பாக ஓங்கி உலகளக்கும் கூர்நிறை திமிலுடன் காண்போரை எல்லாம் அஞ்சித் தெறித்தோடச் செய்யும் வகையிலான பூணிடப்பட்ட கொம்புகளுடனான காளைகள் அதன் எஜமானர்கள்/எஜமானிகளுடன் காண்பிக்கும் அந்நியோன்யம் என்பது குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்குமிடையிலான செல்லக் கொஞ்சலைப் போன்றது.

மாடுகளை மாடென்று குறிப்பிடாமல்... பெயரிட்டு அழைத்த சமூகம் இது.

வருடா வருடம் தமிழகத்தில் மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெற்றதை பதிவு செய்யும் வகையில் தமிழின் புகழ்பெற்ற படைப்பாளி சி.சு.செல்லப்பா ‘வாடிவாசல்’ என்றொரு நாவல் எழுதினார். நேரடியாக ஜல்லிக்கட்டு பார்க்க வாய்க்காதவர்களுக்கு அந்த நாவல் ஒரு வரப்பிரசாதம். அத்துணை அற்புதமாக ஜல்லிக்கட்டை அவர் மொழியில் சொல்வதென்றால் மாடு பிடித்தலை விவரித்திருப்பார். அவரது நாவலில் விவரிக்கப் பட்டதின் அடிப்படையில் ‘ஜல்லிக்கட்டு’ மாடுகளை மிருக வதை செய்வதற்காக கண்டுபிடிக்கப் பட்டதில்லை. சொல்லப் போனால் அதில் கலந்து கொள்ளும் வீரர்கள் முடிவில் மிகுந்த வதை பட்டு விடுகிறார்கள்.
ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் வீரன் மாட்டை அடித்து துன்புறுத்துவதெல்லாம் கிடையாது. திட்டி வாசலில் இருந்து திமிறிக் கொண்டு அச்சமூட்டும் வகையில் ஓடி வரும் காளை மாட்டின் உயர்ந்த திமிலை கெட்டியாகப் பற்றிக் கொண்டு மூன்று முறை கீழே நழுவாமல் சாதிக்க வேண்டும். அப்படிச் செய்தாலே போதும் அந்த வீரன் மாட்டை அடக்கியவனாக ஏற்றுக் கொள்ளப் பட்டு கூட்டத்தில் அறிவிக்கப்படுவான். ஆனால் இதனால் ஆபத்து மாட்டுக்கு அல்ல. வீரனுக்குத் தான் மரணாவஸ்தை. இதையெல்லாம் தெரிந்து கொள்ளாமலோ அல்லது தெரிந்து கொள்ள விரும்பாமலோ தான் இவர்கள் ஜல்லிக்கட்டுக்கு தடை கொண்டு வந்தார்களா?! என்று ஆச்சரியமாக இருக்கிறது.
எது எப்படியோ ஜல்லிக்கட்டு தடை நீக்கப் படுமா? என காத்திருப்பவர்களுக்கு உசிதமான பதில் கிடைக்கக் கூடிய அறிகுறி இதுவரையிலும் இல்லை என்பதே நிஜம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...