தீபா நிஜமான போட்டியாளரா? அல்லது பேட்டியளவில் ஒதுங்கிக் கொள்வாரா?!
அரசியலில் உங்களைப் போன்றவர்களால் சமாளிக்க முடியும் என நினைக்கிறீர்களா?


நேற்று தனியார் செய்தி தொலைக்காட்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் நேர்காணலை தமிழ்நாட்டில் பல லட்சக் கணக்கான மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கண்டிருக்க வாய்ப்புண்டு.
நேர்காணலில் பேட்டியாளரின் அத்தனை கேள்விகளும் தீபாவை ஏன் ‘ஜெ’ நிராகரித்தார்? ஏன் தவிர்த்தார்? என்பதாகவே இருந்தது. ஆனால் தீபாவின் பதில்கள் அனைத்துமே அத்தை எங்களை நிராகரிக்கவில்லை, அன்பாகவும், எங்கள் குடும்பத்தின் மீதான பொறூப்புணர்வு மிக்கவருமாகவே அவர் எப்போதும் இருந்தார். உடனிருந்தவர்கள் எங்களைப் பற்றிய தவறான செய்திகளை அவரிடம் தெரிவித்திருக்க வாய்ப்பிருக்கிறது என்றே நேர்காணல் நெடுக சொல்லிக் கொண்டிருந்தார்.
இறுதியாக அவர் கேட்டுக் கொண்ட விசயம்.
அத்தையின் கடைசி நிமிடங்களில், அவரைச் சந்திக்க தன் சகோதரனை அனுமதித்தவர்கள், தன்னை ஏன் அனுமதிக்கவில்லை? அத்தை உயிருடன் இருந்தவரை, அவருக்கு என்னைச் சந்திக்க நேரமில்லை... என்று கூறி என்னைக் காக்க வைத்து சந்திக்க விடாமல் திருப்பி அனுப்புவார்கள். ஆனால் அவர் இறந்த அன்று போயஸ் இல்லத்தில் வைத்து அவரது முகத்தைக் கடைசியாகக் காணச் சென்ற போதும் கூட அனுமதி மறுக்கப் பட்டு என்னிடம் ஏன் இத்தனை கடுமை காட்டப் பட்டது? யாருடைய உத்திரவின் பேரில் நான் தடுக்கப்பட்டு திருப்பி அனுப்பப் பட்டேன்?! இதற்கு எனக்குப் பதில் வேண்டும் என்றார்.
பார்த்துக் கொண்டிருந்த லட்சோப லட்சம் பார்வையாளர்களின் மனதிலிருந்த கேள்வியும் அதுவாகவே இருந்திருக்க கூடும்!
பேட்டியாளரின் இறுதிக் கேள்விக்கு தீபாவின் பதில்...
கேள்வி: அரசியலில் உங்களைப் போன்றவர்களால் சமாளிக்க முடியும் என நினைக்கிறீர்களா? சிவாஜி கணேஷன் மாதிரி, கார்த்திக் மாதிரி, ராஜேந்தர் மாதிரி, இன்னும் நிறைய ஆட்கள் சிரஞ்சீவி எல்லோரும் கூட ஒரு கட்சி நடத்த ஆசைப்பட்டு முனைந்து போராடி, நீங்களே சொன்னது போல ஜெயலலிதா சந்தித்தாகச் சொல்லப்பட்ட அவ்வளவு போராட்டங்களையும் நீங்கள் ஃபுல்ஃபில் பண்ண முடியுமா?
தீபாவின் பதில்: “நிச்சயமாக”
இந்த ஒரு இடத்தில் தீபாவிடம் அவரது அத்தையின் திடத்தைக் காண முடிந்தது.
இந்த நேர்காணலை எங்களுடன் சேர்ந்து பார்த்துக் கொண்டிருந்த ஒரு வயதான பெண்மணி நேர்காணல் முடிந்ததும்,
“இவரு கேட்கிறாரே... அந்தம்மா ஏன் உங்கள அரசியல்ல ஈடுபடுத்த ஆர்வம் காட்டல, ஆர்வம் காட்டலன்னு. எப்படிக் காட்டுவாங்க? அந்தம்மாவுக்கு இந்தப் புள்ள மேல மக மாதிரி பாசம் இருந்திருக்கு. இந்த அரசியல்ல இறங்கி தாம் பட்ட கஷ்டத்தையும், அவமானத்தையும் தன் அண்ணன் பொண்ணும் ஏன் படணும்னு கூட யோசிச்சிருக்கலாம். இதையெல்லாம் சொல்ல அந்தம்மா இனி உயிரோட வரப் போறாங்களா என்ன?” என்று போகிற போக்கில் சொல்லிக் கொண்டு போனார்.
அப்படியும் இருந்திருக்கலாமோ என்று ஒரு பக்கம் தோன்றினாலும் கூட; பார்வையாளர்களில் பலரையும் உறுத்திய சில விசயங்களும் அதிலுண்டு;
தீபா பேசியது மொத்தமும் தன் அத்தை சார்ந்த குடும்ப விவகாரங்கள். அதாவது எப்படியெல்லாம் தன் அத்தையிடமிருந்து தாங்கள் விலக்கப் பட்டோம் என்பது சார்ந்த விசயங்கள். ஆனால் பேட்டியாளர் கேட்டுக் கொண்டிருந்த கேள்விகள் அத்தனையுமே ஒரு தலைப் பட்சமாக, எவரையோ விமரிசனங்களில் இருந்து பாதுகாப்பதற்காகவென்றே சாதுரியமாக உருவாக்கப்பட்ட கேள்விகளை, பார்வையாளர்கள் மத்தியில் வைத்து விடை காண முயன்றதாகவே பதிவாகிக் கொண்டிருந்தது என்பது அப்பட்டமான உண்மை. தொலைக்காட்சி நேர்காணல்கள் அனைத்தும் யாருக்காக ஒளிபரப்பாகின்றன? மக்கள் காண வேண்டும் என்பதற்காகவும்... ஏதோ ஒரு வகையில் அவர்கள் சில நிஜங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தானே! அந்த வகையில் பார்த்தால் நேற்றைய நேர்காணல் மக்களுக்கானதல்ல என்றே சொல்ல வேண்டும். இறுதியில் தீபாவின் தீர்மானம் மட்டுமே புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.
அவரது “நிச்சயமாக” எனும் உறுதிக்கு ஆயுள் உண்டா?
தீபா நிஜமான போட்டியாளரா? அல்லது பேட்டியளவில் ஒதுங்கிக் கொண்டவராக கருதப்படுவாரா? என்பதற்கான பதில் காலத்தின் கைகளில் தான் இருக்கிறது.
தீபா ஜெயக்குமார் நேர்காணலைக் காண;

Image courtsy: you tube video
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...