நம் நாட்டுக்கு அரணாக மூன்று பக்கங்களிலும் கடல் நீரும், ஒரு பக்கம் மலையும் இருப்பது நமக்குத் தெய்வம் கொடுத்த வரம் என்றே சொல்ல வேண்டும். கூடுதலாக, பலவகைக் காடுகள் வேறு நம் நாட்டுக்கு அரணாக நிற்கின்றன. ஊசிஇலைக் காடுகள், மழைக்காடுகள், சதுப்புநிலக் காடுகள், அலையாத்திக் காடுகள், புதர்க் காடுகள், முள்காடுகள், இலையுதிர்க் காடுகள், வெப்பமண்டலக் காடுகள், பாலைவனக் காடுகள் என்று எல்லாவிதமான காடுகளும் நிறைந்த வன வளம் நிறைந்த நாடு நம் நாடு.
நீர், மலை, மண், காடு ஆகிய நான்கும் ஒன்றோடு ஒன்று நெருங்கிய தொடர்புடையவை. மலை இருக்குமிடமெல்லாம் காடு இருக்கும்; காடு இருக்கும் இடமெல்லாம் மழை பொழிந்து நீர் பெருகும்; நீரோடும் இடமெல்லாம் மண் வளம் செழிக்கும். வனங்கள் நமக்குப் பாதுகாப்பு மட்டுமன்று; நமது வாழ்வின் உயிர்நாடியும் கூட. நாட்டையும் நம்மையும் பாதுகாக்கும் வனங்களை யார் பாதுகாக்கிறார்கள்? யார் பராமரிக்கிறார்கள்? வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதை யார் தடுக்கிறார்கள்? வனங்களுக்குள் அத்துமீறல்கள் இல்லாமல் இருப்பதை யார் கண்காணிக்கிறார்கள்? இது குறித்தெல்லாம் நாம் கவலைப்படுவதில்லை! வனப் பாதுகாப்பைப் பற்றிய புரிதல் நமக்கு இல்லை!
வனங்களைப் பாதுகாப்பதற்கென்றே "வனத் துறை' என்று ஒரு துறை இருக்கிறது. அதில் கீழ் நிலை ஊழியர்களில் இருந்து மேலதிகாரிகள் வரை பல நிலைகளில் பலர் பணியாற்றுகின்றனர். இவர்களில் "வேட்டைத் தடுப்புக் காவலர்கள்' என்பவர்கள் அடி மட்டத்தில் களப் பணியாற்றுபவர்கள். தமிழக அரசு 1983-இல் தினக்கூலி அடிப்படையில் வனப் பாதுகாப்புக்கென வனங்களில் வாழும் ஆதிவாசிகளைக் "கண்காணிப்பாளர்களாக' பணியமர்த்தியது. இவர்கள் காட்டிலேயே பிறந்து வளர்ந்தவர்களாக இருந்ததால் காட்டின் ஒவ்வொரு பகுதியையும், விலங்குக் கூட்டங்களையும் நன்கு அறிந்திருந்தார்கள். அரசு இவர்களை தற்காலிகப் பணியாளர்களாகவே நியமித்தது.
அந்தச் சமயத்தில் வன விலங்குகளைத் திருட்டுத்தனமாகப் பொறிகள் வைத்துப் பிடிப்பது, வேட்டையாடுவது ஆகிய குற்றங்கள் அதிக அளவில் நடந்து கொண்டிருந்தன. 2009}இல் "வனக் கண்காணிப்பாளர்' ( ஃபாரஸ்ட் வாச்சர்) என்ற ஒரு பதவியை உருவாக்கிப் பலரை அரசு ஊழியர்களாக, அரசு ஊதியம் பெறும் பணியாளர்களாக அரசு நியமித்தது. பிறகு "வேட்டைத் தடுப்புக் காவலர்கள்' என்று ஒரு சிறப்புப் பிரிவை உருவாக்கி, வனங்களில் பிறந்து வளர்ந்து, வனங்கள் குறித்து நன்கு அறிந்திருந்தவர்களைப் பணியில் அரசு சேர்த்தது. இந்த வேட்டைத் தடுப்புக் காவலர்கள்தான் காட்டின் முன்களப் பணியாளர்கள்.
வனங்களின் சூழல் மண்டலத்தைப் பாதுகாப்பது, வன விலங்குகளைப் பாதுகாப்பது, வனங்களில் ரோந்து வருவது; தொடர் கண்காணிப்பு செய்வது, அடர்ந்த காடுகளில் நடந்தே சென்று மரம் வெட்டுதல், விலங்குகளை வேட்டையாடுதல் போன்ற வனக் குற்றங்களைத் தடுப்பது, வனவிலங்குகளின் நடமாட்டத்தைக் கண்காணிப்பது; அவை குறித்த தரவுகளைச் சேகரிப்பது, காட்டுத் தீ உண்டாகாமல் பாதுகாப்பது; அப்படி ஏற்படும்போது அதை அணைப்பது, மனித விலங்கு மோதல்கள் ஏற்படாமல் தடுப்பது; அப்படி ஏற்படும்போது மனிதர்கள் இருக்குமிடத்திலிருந்து விலங்குகளை விரட்டுவது, காயம்பட்ட, உடல்நலம் குன்றிய வன விலங்குகளைக் காப்பாற்றுவது போன்றவை இவர்களின் பணிகள்.
2022-இல் இந்த வேட்டைத் தடுப்புக் காவலர்களில், பத்தாண்டுகள் பணியாற்றி முடித்த 78 பேர் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். பணி மூப்பு அடிப்படையில் சிலருக்கு மட்டும் பதவி உயர்வு அளிக்கப்பட்டு, வனக் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
இந்த வேட்டைத் தடுப்புக் காவலர்களின் கல்வித் தகுதி வெவ்வேறாக இருக்கிறது. சிலர் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள்; சிலர் பள்ளிக் கல்வி முடித்தவர்கள்; இன்னும் சிலர் பட்டதாரிகள்; சிலர் வேறு பணியில் இருந்துவிட்டு, காட்டில் பணிபுரிய வேண்டும் என்ற அவாவினால் வேலையை உதறித் தள்ளிவிட்டு இந்தப் பணிக்கு வந்தவர்கள். இவர்கள் எல்லோரிடமும் பொதுவாக இருக்கும் ஒன்று, வனங்களின் மேல் உள்ள நேசம்! வனங்களையும் வன விலங்குகளையும் இவர்கள் மிக ஆழமாக நேசிப்பதால், ஆபத்துகளும் அசெüகரியங்களும் நிறைந்த இந்தப் பணியை, சலித்துக் கொள்ளாமல் அர்ப்பணிப்போடு செய்கிறார்கள்.
இவர்கள் காடுகளுக்குள் வேட்டைத் தடுப்பு முகாம்களில் தங்கிக் கொள்வார்கள். சில இடங்களில் வனத் துறையே கண்காணிப்புக் கோபுரங்களைக் கட்டி வைத்துள்ளது. அதில் ஐந்தாறு வேட்டைத் தடுப்புக் காவலர்கள் இரவு நேரத்திலும் தங்கி, இரவில் வன விலங்குகளின் நடமாட்டம், சந்தேகிக்கும்படியான வாகனப் போக்குவரத்து மற்றும் அந்நியர்களின் நடமாட்டம், காட்டுத்தீ எங்காவது ஏற்பட்டுள்ளதா என்றெல்லாம் கண்காணிப்பார்கள்.
இந்த முகாம்களில் பெரும்பாலும் கழிப்பறை வசதிகள் இருக்காது. அப்படியே இருந்தாலும், தண்ணீர் வசதி இருக்காது. தண்ணீர்த் தொட்டிகள் இருந்தாலும் அவற்றை யானைகள் உடைத்துத் தள்ளியிருக்கும். யானை, புலி, போன்ற விலங்குகள் நடமாடும் பகுதிகளில் இவர்கள் வெளியில் வந்துதான் சிறுநீர் கழிக்க வேண்டும். இப்போது சில வேட்டைத் தடுப்பு முகாம்களைச் சுற்றி அகழி வெட்டி, சூரிய மின்வேலி அமைத்து, பாதுகாப்பு கொடுத்திருக்கிறார்கள். ஆனால், இதெல்லாம் யானைகள் கூட்டமாய் வந்தால் தாங்காது. புலி, சிறுத்தை போன்ற விலங்குகளுக்கு இவையெல்லாம் ஒரு பொருட்டே அல்ல.
இரவு நேரம் ஊருக்குள் யானைகள் வரும்போது யானைகளை விரட்டுவது இவர்களது வேலை. இருட்டில் யானை இருப்பதே தெரியாது. ஒளி தரும் டார்ச் லைட்டுகளை அடிப்பார்கள். யானை கொஞ்சம்கூட அலட்டிக் கொள்ளாமல் பயிரைச் சுவைத்துச் சாப்பிட்டுக் கொண்டு நிற்கும். ஊதல்களைக் கொண்டு தொடர்ந்து ஒலி எழுப்புவார்கள். யானை மெல்ல நகரும். அடுத்து பட்டாசுகளை வெடிப்பார்கள். அவ்வளவுதான்! பயமும் கோபமும் தலைக்கேற ஓடும். இவர்கள் துரத்துவார்கள். திடீரென்று திரும்பி இவர்களைத் துரத்தும். ஆளுக்கொரு பக்கம் சிதறி ஓடுவார்கள். சிக்கினால் மரணம்தான்!
இங்கொரு யானையை விரட்டி முடிப்பதற்குள், வேறொரு இடத்தில் யானைகள் புகுந்துவிட்டதாக அழைப்பு வரும். அங்கு ஓடி அவற்றை விரட்டி முடிக்கையில் முதலில் விரட்டப்பட்ட யானை மீண்டும் வந்து சாவதானமாகப் பயிரை மேய்ந்து கொண்டிருக்கும். இப்படி இரவு முழுவதும் இவர்கள் வேலை செய்துவிட்டு வந்தாலும், காலையில் மறுபடி பணிக்குச் செல்ல வேண்டும். இவர்களுக்கு விடுமுறை என்பது கிடையாது.
காட்டில் திடீரென்று யானை சேற்றில் மாட்டிக் கொள்ளலாம்; சிறுத்தை பொறியில் மாட்டிக் கொள்ளலாம்; கழுதைப் புலி கம்பி வேலியில் சிக்கிக் கொள்ளலாம். அந்த விலங்குகளைக் காப்பாற்றும் வேலையைச் செய்பவர்கள் இவர்கள்தான். ஒரு விலங்கு செத்துக் கிடந்தால், கால்நடை மருத்துவரும் மற்ற அதிகாரிகளும் வருவதற்கு முன்பாக அங்கு சென்று நிற்பது இவர்கள்தான். துர்நாற்றம் தாங்காது. அந்த விலங்கைக் கிழிப்பதும், உடல்கூறாய்வு முடிந்த பிறகு புதைப்பதும் இவர்கள்தான்.
இவ்வாறு, இரவு, பகல், பனி, மழை, வெயில் என்றெல்லாம் பார்க்காமல், உயிரைப் பணயம் வைத்து, வனம் சார்ந்த பணிகளை ஈடுபாட்டுடன் செய்யும் இவர்களுக்கு அரசு, அநீதி செய்ய முற்பட்டிருக்கிறது.
இதுவரை வேட்டைத் தடுப்புக் காவலர்கள் வனத் துறை மூலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டார்கள். சொற்ப ஊதியம், குறைந்த வசதிகள், அதிக பணிச்சுமை என்றிருந்தாலும், அரசு ஊழியர்கள் என்ற பெருமிதம் இவர்களுக்கு இருந்தது. இப்போது இவர்களைப் பணியமர்த்துவதையும் ஊதியம் தருவதையும் ஒப்பந்ததாரர்களிடம் அரசு கொடுத்துவிட்டது. இதுநாள் வரை நடைமுறையில் இருந்த, பத்தாண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த வேட்டைத் தடுப்புக் காவலர்களுக்கு வனக் கண்காணிப்பாளர்களாகப் பதவி உயர்வு அளித்த வழக்கத்தையும் நிறுத்திவிட்டது. வனக் கண்காணிப்பாளர்களை நேரடியாக தேர்வு மூலம் மட்டுமே தேர்ந்தெடுப்பது என்று அரசு முடிவு செய்திருக்கிறது. வேட்டைத் தடுப்புக் காவலர்கள் என்ற பிரிவையே நீக்கிவிட்டு நேரடியாக வனக் கண்காணிப்பாளர்கள், வனக் காவலர்கள் என்று நியமிக்க அரசு உத்தேசித்துள்ளது. தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் இவர்களைப்போல் வனங்களை நேசிப்பவர்களோ, அறிந்திருப்பவர்களோ அல்ல. அவர்களுக்கு இது ஒரு அரசுப் பணி. அவ்வளவுதான். வேறு நல்ல அரசுப் பணி கிடைத்தால் போய்விடுவார்கள்.
வேட்டைத் தடுப்புக் காவலர்களுக்கு, "வனத் துறை ஊழியர்கள் என்ற பெருமிதமும் இல்லை; பதவி உயர்வுக்கு வழியும் இல்லை' என்பதால் வேதனையும் கோபமும் உண்டாகியுள்ளது. "பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காப்பீடு தர வேண்டும், பதவி உயர்வு வேண்டும்' போன்ற சில நியாயமான கோரிக்கைகளை இவர்கள் அரசிடம் வைத்துள்ளார்கள்.
இவர்கள் இல்லை என்றால் வனப் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும். மனித விலங்கு மோதல் பன்மடங்கு அதிகரிக்கும். தரவுகள் சேகரிப்பது நின்று போகும். மிகவும் பின்தங்கிய வகுப்புகளிலிருந்து வரும் இவர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுவது சமூக அநீதியாகும்.
காட்டின் காவலர்களான இவர்களுக்கு அரசு நியாயம் வழங்க வேண்டும் என்பதே கானுயிர் ஆர்வலர்களின் வேண்டுகோளாகும்.
கட்டுரையாளர்:
சுற்றுச்சூழல் ஆர்வலர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










