வனம் காக்கும் முன்களப் பணியாளர்கள்!

வனங்களைப் பாதுகாப்பதற்கென்றே "வனத் துறை' என்று ஒரு துறை இருக்கிறது. அதில் கீழ் நிலை ஊழியர்களில் இருந்து மேலதிகாரிகள் வரை பல நிலைகளில் பலர் பணியாற்றுகின்றனர். இவர்களில் "வேட்டைத் தடுப்புக் காவலர்கள்' என்பவர்கள் அடி மட்டத்தில் களப் பணியாற்றுபவர்கள்.

தமிழக அரசு 1983-இல் தினக்கூலி அடிப்படையில் வனப் பாதுகாப்புக்கென வனங்களில் வாழும் ஆதிவாசிகளைக் "கண்காணிப்பாளர்களாக' பணியமர்த்தியது. இவர்கள் காட்டிலேயே பிறந்து வளர்ந்தவர்களாக இருந்ததால் காட்டின் ஒவ்வொரு பகுதியையும், விலங்குக் கூட்டங்களையும் நன்கு அறிந்திருந்தார்கள். அரசு இவர்களை தற்காலிகப் பணியாளர்களாகவே நியமித்தது.

அந்தச் சமயத்தில் வன விலங்குகளைத் திருட்டுத்தனமாகப் பொறிகள் வைத்துப் பிடிப்பது, வேட்டையாடுவது ஆகிய குற்றங்கள் அதிக அளவில் நடந்து கொண்டிருந்தன. 2009}இல் "வனக் கண்காணிப்பாளர்' ( ஃபாரஸ்ட் வாச்சர்) என்ற ஒரு பதவியை உருவாக்கிப் பலரை அரசு ஊழியர்களாக, அரசு ஊதியம் பெறும் பணியாளர்களாக அரசு நியமித்தது.

பிறகு "வேட்டைத் தடுப்புக் காவலர்கள்' என்று ஒரு சிறப்புப் பிரிவை உருவாக்கி, வனங்களில் பிறந்து வளர்ந்து, வனங்கள் குறித்து நன்கு அறிந்திருந்தவர்களைப் பணியில் அரசு சேர்த்தது. இந்த வேட்டைத் தடுப்புக் காவலர்கள்தான் காட்டின் முன்களப் பணியாளர்கள்.

இந்த வேட்டைத் தடுப்புக் காவலர்களின் கல்வித் தகுதி வெவ்வேறாக இருக்கிறது. சிலர் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள்; சிலர் பள்ளிக் கல்வி முடித்தவர்கள்; இன்னும் சிலர் பட்டதாரிகள்; சிலர் வேறு பணியில் இருந்துவிட்டு, காட்டில் பணிபுரிய வேண்டும் என்ற அவாவினால் வேலையை உதறித் தள்ளிவிட்டு இந்தப் பணிக்கு வந்தவர்கள். இவர்கள் எல்லோரிடமும் பொதுவாக இருக்கும் ஒன்று, வனங்களின் மேல் உள்ள நேசம்!

இவர்கள் காடுகளுக்குள் வேட்டைத் தடுப்பு முகாம்களில் தங்கிக் கொள்வார்கள். சில இடங்களில் வனத் துறையே கண்காணிப்புக் கோபுரங்களைக் கட்டி வைத்துள்ளது. அதில் ஐந்தாறு வேட்டைத் தடுப்புக் காவலர்கள் இரவு நேரத்திலும் தங்கி, இரவில் வன விலங்குகளின் நடமாட்டம், சந்தேகிக்கும்படியான வாகனப் போக்குவரத்து மற்றும் அந்நியர்களின் நடமாட்டம், காட்டுத்தீ எங்காவது ஏற்பட்டுள்ளதா என்றெல்லாம் கண்காணிப்பார்கள்.

இந்த முகாம்களில் பெரும்பாலும் கழிப்பறை வசதிகள் இருக்காது. அப்படியே இருந்தாலும், தண்ணீர் வசதி இருக்காது. தண்ணீர்த் தொட்டிகள் இருந்தாலும் அவற்றை யானைகள் உடைத்துத் தள்ளியிருக்கும். யானை, புலி, போன்ற விலங்குகள் நடமாடும் பகுதிகளில் இவர்கள் வெளியில் வந்துதான் சிறுநீர் கழிக்க வேண்டும்.

இரவு நேரம் ஊருக்குள் யானைகள் வரும்போது யானைகளை விரட்டுவது இவர்களது வேலை. இருட்டில் யானை இருப்பதே தெரியாது. ஒளி தரும் டார்ச் லைட்டுகளை அடிப்பார்கள். யானை கொஞ்சம்கூட அலட்டிக் கொள்ளாமல் பயிரைச் சுவைத்துச் சாப்பிட்டுக் கொண்டு நிற்கும்.

இப்படி இரவு முழுவதும் இவர்கள் வேலை செய்துவிட்டு வந்தாலும், காலையில் மறுபடி பணிக்குச் செல்ல வேண்டும். இவர்களுக்கு விடுமுறை என்பது கிடையாது. இரவு, பகல், பனி, மழை, வெயில் என்றெல்லாம் பார்க்காமல், உயிரைப் பணயம் வைத்து, வனம் சார்ந்த பணிகளை ஈடுபாட்டுடன் செய்யும் இவர்களுக்கு அரசு, அநீதி செய்ய முற்பட்டிருக்கிறது.

வேட்டைத் தடுப்புக் காவலர்கள் என்ற பிரிவையே நீக்கிவிட்டு நேரடியாக வனக் கண்காணிப்பாளர்கள், வனக் காவலர்கள் என்று நியமிக்க அரசு உத்தேசித்துள்ளது. வேட்டைத் தடுப்புக் காவலர்களுக்கு, "வனத் துறை ஊழியர்கள் என்ற பெருமிதமும் இல்லை; பதவி உயர்வுக்கு வழியும் இல்லை' என்பதால் வேதனையும் கோபமும் உண்டாகியுள்ளது. "பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காப்பீடு தர வேண்டும், பதவி உயர்வு வேண்டும்' போன்ற சில நியாயமான கோரிக்கைகளை இவர்கள் அரசிடம் வைத்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...