17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கணினியும் எழுத்துலகும்...

இனி கணினி அறிவைப் புறந்தள்ளுபவர்களுக்கோ அதன் அடுத்த கட்டமாக நம்மை நோக்கி வந்துகொண்டிருக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (ஏ.ஐ.) புறந்தள்ளுபவர்களுக்கோ எதிர்காலம் இல்லை!

News image

மாதிரிப் படம்

Updated On :6 ஜூன் 2026, 6:01 am IST

-திருப்பூர் கிருஷ்ணன்

அச்சுத் தொழில் படிப்படியாக வளர்ச்சி கண்டு இன்று நாம் காணும் மேலான நிலைக்கு இப்போது வந்துள்ளது. அச்சுத் தொழில் வளர்ந்த வரலாறு பற்றி அறிஞர் மா.சு. சம்பந்தன் எழுதிய "அச்சுக் கலை' போன்ற புத்தகங்கள் விரிவாக விளக்குகின்றன.

முன்பு அச்சகங்களில் காலால் இயக்கப்படும் டிரெடில் மிஷின்கள் இருந்தன. அதில் பணிபுரியும் தொழிலாளியின் வாழ்வை மையமாக வைத்து "டிரெடில்' என்ற தலைப்பிலேயே ஜெயகாந்தன் ஒரு சிறுகதை எழுதினார். கொஞ்ச காலம் அச்சகத்தில் பணிபுரிந்து டிரெடில் மிஷினை இயக்கிய அவரது சொந்த அனுபவம் அந்தக் கதையை எழுதுவதில் அவருக்குக் கைகொடுத்தது.

இப்படியெல்லாம் வளர்ந்த அச்சுத் தொழிலின் பரிணாம வளர்ச்சியில், அடிப்படையில் வந்த பெரும் மாற்றம், இப்போது பயன்படுத்தப்படும் இன்றைய கணினித் தொழில் நுட்பம்.

இன்று "தினமணி' உள்ளிட்ட நாளிதழ்கள் தம் அலுவலகப் பயன்பாட்டுக்குக் கணினிகளைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டன. கையில் காகிதமும் பேனாவுமாக இருந்த பத்திரிகையாளர்களின் பழைய தலைமுறை இப்போது முழுமையாக மாறிவிட்டது.

இன்று பத்திரிகைகளில் பணிபுரியும் அனைத்து உதவி ஆசிரியர்களும் பிழை திருத்துநர்களும் அவரவர்களின் கணினி முன் அமர்ந்து செய்திகளையும் படைப்பு

களையும் மின்னச்சு செய்யவும் பிழை

திருத்தவும் தொடங்கிவிட்டார்கள்.

இன்று கணினியைப் பயன்படுத்தாத நாளிதழ்களோ வார இதழ்களோ மாத இதழ்களோ இல்லவே இல்லை. பத்திரிகைகளில் கணினி ஊடுருவிய தொடக்க காலத்தில் திடீரென வந்த அந்த அபரிமிதமான அறிவியல் வளர்ச்சியைக் கண்டு மிரட்சி அடைந்து பணியை விட்டு விலகியவர் களும் சிலர் உண்டு.

அப்படி விலகியவர்கள் சென்ற தலைமுறையைச் சேர்ந்த வயதானவர்களில் சிலர் மட்டுமல்ல. சில இளைஞர்கள் கூட, தங்களால் கணினித் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப இயங்க முடியுமா என்ற அச்சத்தில் பத்திரிகைப் பணியிலிருந்து விலகினார்கள். ஆனால், தினமணியில் கணினித் தொழில்நுட்பம் அறிமுகமானபோது, அது குறித்த கேள்விகளைக் கேட்டு அதன் பயன்பாடுகள் என்னென்ன என்று ஆர்வத்தோடு கற்றறிந்தவர் யார் தெரியுமா? அன்று 95 வயதைத் தாண்டியவராக இருந்த தினமணி முன்னாள் ஆசிரியர் ஏ.என். சிவராமன்தான்! (இன்றும் கணினி மூலம் மின்னச்சு செய்து தம் படைப்புகளைப் பத்திரிகைகளுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிவருகிறார் 96 வயது நிறைந்த எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி.) "னை, ணை, லை' ஆகிய எழுத்துகள், அதன் இப்போதைய வடிவத்தில் கணினியில் இடம்பெற்றுள்ளன. பலப்பல ஆண்டுகள் முன்பு இதே வடிவில்தான் இந்த எழுத்துகள் இருந்தன.

ஆனால், அப்படி எழுதும்போது "னை' என்ற இரண்டு சுழி எழுத்துக்கும் "ணை' என்ற மூன்று சுழி எழுத்துக்கும் கையெழுத்தில் அதிக வேறுபாட்டைக் காண இயலவில்லை. எனவே, இடைக்காலத்தில் தெளிவின் பொருட்டாக வீரமாமுனிவர் தும்பிக்கை போன்ற வளைவு ஒன்றை மேலே சேர்த்து எழுதும் பாணியைப் புகுத்தினார். அதுவே எழுத்துச் சீர்திருத்தம்.

இப்போதைய எழுத்து என்பது இந்தத் தும்பிக்கை பாணியைப் புறந்தள்ளிவிட்டு முந்தைய பாணிக்கே சென்றதுதான். இப்படிச் செல்ல முக்கியமான காரணம், கணினியில் தும்பிக்கை பாணி எழுத்துகளைப் பயன்படுத்த வேண்டுமானால் இன்னும் புதிதாக மூன்று எழுத்துப் பொத்தான்களை அமைக்க வேண்டியிருக்கும். இப்போது அந்த மூன்று பொத்தான்கள் தவிர்க்கப்பட்டு, கணினிப் பயன்பாடு மேலும் எளிதாக்கப்பட்டுள்ளது.

தினமணியில் ஐராவதம் மகாதேவன் ஆசிரியராக இருந்த காலத்தில்தான் இப்போதைய (பழைய பாணியிலான) புதிய சீர்திருத்த எழுத்துப் பாணி புகுத்தப்பட்டது. இதை ஆரம்பத்தில் கடுமையாக எதிர்த்தவர்களும் இருந்தார்கள்.

முக்கியமாக பிரபல எழுத்தாளர் தீபம் நா. பார்த்தசாரதி, "செருப்புக்காகக் காலை வெட்டாதீர்!' என்ற தலைப்பில் சோ ஆசிரியராக இருந்த துக்ளக் இதழில் இப்போதைய சீர்திருத்த எழுத்துகளை எதிர்த்து ஒரு கட்டுரை எழுதினார். சோவும் இந்தப் பாணி எழுத்துகளைத் தொடக்கத்தில் எதிர்த்தார்.

ஆனால் பிறகு, இவர்கள் உள்பட எல்லா அறிஞர்களுமே கணினியின் வசதியை உணர்ந்து இன்றைய பாணி எழுத்துகளை ஏற்றுக்கொள்ளத் தொடங்கினார்கள். தமிழறிஞர் கி.ஆ.பெ. விஸ்வநாதம் மட்டும் இறுதிவரை இன்றைய பாணி எழுத்துகளை ஏற்கவில்லை.

சோ தொடக்கத்தில் எதிர்த்தாலும் பின்னர் சீர்திருத்த எழுத்துகளை ஏற்றுக் கொண்டதுடன், தமிழ் எழுத்துகளின் இடையே ஒலித் தேவையின் பொருட்டு எஃப் என்ற ஆங்கில எழுத்தைப் பயன்படுத்தத் தொடங்கினார்.

தமிழ் எழுத்துகளின் இடையே ஆங்கில எழுத்துரு எதற்கு என்று பலரும் வினா எழுப்பத் தொடங்கினார்கள். எஃப் ஒலியைக் குறிக்க ஃ என்ற எழுத்து, பயன்பாட்டில் இருக்கும்போது, ஆங்கில எழுத்துருவைத் தமிழில் இடையே பயன்படுத்துவது சரியல்ல என்ற குரல் எங்கும் எழுந்தது.

அந்தக் குரலில் இருந்த நியாயத்தை உணர்ந்தவரும் எப்போதும் நியாயத்தின் பக்கமே நிற்க விரும்பியவருமான "துக்ளக்' ஆசிரியர் சோ, உடனடியாக ஆங்கில எழுத்துருவான எஃப் எழுத்தைப் பயன்படுத்தும் பாணியைக் கைவிட்டார்.

இன்றும் கணினியைப் பயன்படுத்தாமல் கையெழுத்தில் படைப்பை எழுதும் எழுத்தாளர்கள் ஓரிருவர் ஆங்காங்கே இருக்கக் கூடும். கையெழுத்திலேயே கடைசி வரை எழுதிப் பெரும் சாதனையாளர்களாக விளங்கிய ஜெயகாந்தன், பிரபஞ்சன், இந்திரா சௌந்தரராஜன் போன்ற எழுத்தாளர்கள் இறுதிவரை கணினிப் பயன்பாட்டைக் கற்றுக் கொள்ளவில்லை.

ஆனால், இன்று ஏறக்குறைய எல்லா எழுத்தாளர்களும் கணினியைப் பயன்படுத்தத் தொடங்கி விட்டார்கள். கணினியில் உள்ள காப்பி பேஸ்ட், கட் அண்ட் பேஸ்ட், எதையும் நிரந்தரமாகக் கோப்பில் சேமித்து வைத்துக் கொள்ளும் வசதி போன்றவற்றை இன்றைய எழுத்தாளர்கள் அனுபவிக்கிறார்கள்.

"எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்ப திழுக்கு' என்ற திருக்குறள், இன்றைய எழுத்தாளர்களுக்குப் பொருந்துவதுபோல் வேறு யாருக்கும் அந்த அளவு பொருந்தாது. பத்திரிகைகளிடம் எவ்வளவு வார்த்தைகள் தேவை என்பதைக் கேட்டுக்கொண்டு, கணினி மூலம் அந்த அளவு வார்த்தைகள் வருமாறு எண்ணி எண்ணி எழுதுகிறார்கள் எழுத்தாளர்கள்.

எழுத்தாளர்கள் எழுதிய படைப்பைப் பற்றி வாசகர்கள் அதை வாசித்துவிட்டு என்ன எண்ணுகிறார்கள் என்பது ஒருபுறமிருக்க, எழுத்தாளர்களே வார்த்தைகளை எண்ணியெண்ணித்தான் எழுதுகிறார்கள் என்பதே இன்றைய நிலை!

"வாழ்க்கையில் பேஸ்ட் முதலில். பேஸ்ட்டால் பல் தேய்த்துவிட்டுப் பிறகுதான் காப்பி! ஆனால், கணினியில் காப்பி முதலில். பிறகுதான் பேஸ்ட்!' என்பது போன்ற நகைச்சுவைப் பொன்மொழிகளும் தோன்றத் தொடங்கிவிட்டன!

அந்தக் காலத்தில் மிகப் பிரபலமாக இருந்த கல்கி, சாண்டில்யன், ஜெகசிற்பியன் போன்ற எழுத்தாளர்களுக்கு அவர்கள் படைப்பு வெளிவந்த பிறகுதான் அவர்கள் எழுத்துக்கு "மவுஸ்' வந்தது. இன்றுள்ள எழுத்தாளர்களுக்கு அவர்கள் கணினியில் எழுதிக் கொண்டிருக்கும்போதே "மவுஸ்' வந்துவிடுகிறது!

விநாயகர் சதுர்த்தியின்போது, ஒவ்வோர் ஆண்டும் பல்வேறு நவீன வடிவங்களில் விநாயகர் சிலைகள் அமைத்து வழிபடப்படுகின்றன. அப்படி அண்மையில் தோன்றிய விநாயகர் வடிவம், கணினி விநாயகர்!

விநாயகர் சிலையை உருவாக்கிய கைவினைக் கலைஞர்கள், அந்தச் சிலையின் கையில் கணினியைக் கொடுத்து நம்மை வியப்பிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தினார்கள்.

பிற தெய்வங்கள் கையில் கணினியைக் கொடுப்பதை விடவும் விநாயகர் கையில் கொடுப்பது மிகவும் எளிதுதானே? காரணம் விநாயகரிடம் ஏற்கெனவே "மவுஸ்' இருக்கிறதே!

தெய்வங்களே காலத்துக்குத் தகுந்த மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் போது நாம் எம்மாத்திரம் என்று பல எழுத்தாளர்களும் சிந்திக்கத் தொடங்கினார்கள். இப்போது காகிதத்தில் பேனாவால் கையெழுத்தில் எழுதும் எழுத்தாளர்களை விரல் விட்டுத்தான் எண்ண வேண்டியிருக்கும்.

கணினியை எழுத்துலகுக்கு அறிமுகப்படுத்தி, எழுத்தாளர்கள் கணினிப் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்னோடியாக இருந்தவர் தம் எழுத்துகளால் தற்கால இலக்கியத்தில் முத்திரை பதித்த பிரபல எழுத்தாளர் சுஜாதா. அவரே முன்னோடி இணையப் பத்திரிகையான "அம்பலம்' இதழுக்கு ஒருங்கிணைப்பாளராக இருந்து அதை வழிநடத்தியவர்.

கணினி இவ்வளவு பரவலான பயன்பாட்டுக்கு வருவதற்குப் பற்பல ஆண்டுகள் முன்னரே பிரபல வார இதழ் ஒன்றில் "கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு!' என்ற தலைப்பில் கணினியை மையமாக வைத்து ஒரு கதை எழுதி வாசகர்களை வியக்க வைத்தவர் சுஜாதா!

கம்பரும் வள்ளுவரும் ஓலைச்சுவடியில்தான் படைப்புகளை எழுதினார்கள். இன்று ஓலைச்சுவடியில் எழுதுபவர்கள் உண்டா? ஓலைச்சுவடி போய்க் காகிதம் வந்தது மாதிரி, காகிதம் போய்க் கணினி வந்திருக்கிறது. இதை எல்லா எழுத்தாளர்களும் புரிந்துகொள்ளத் தொடங்கி விட்டார்கள்.

"கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு என்று உற்ற கலைமடந்தை ஓதுகிறாள்'. அந்தக் கலைவாணி, அண்மைக் காலமாக வீணையைச் சற்றே கீழே வைத்துவிட்டு, கணினியை எடுத்து மடியில் வைத்துக் கொண்டிருக்கிறாள் என்பதே உண்மை.

இனி கணினி அறிவைப் புறந்தள்ளுபவர்களுக்கோ அதன் அடுத்த கட்டமாக நம்மை நோக்கி வந்துகொண்டிருக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (ஏ.ஐ.) புறந்தள்ளுபவர்களுக்கோ எதிர்காலம் இல்லை!

கட்டுரையாளர்:

எழுத்தாளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.