தேர்தல் நடத்தி, வாக்கெடுப்பின் மூலம் மக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து, தங்களுக்கான ஆட்சியை அமைத்துக் கொள்வது ஜனநாயக ஆட்சிமுறையாகும். உலகிலுள்ள 195 நாடுகளில் 70 முதல் 75 நாடுகளில் ஜனநாயக ஆட்சி நடைபெறுவதாகவும், உலகிலுள்ள மொத்த மக்கள்தொகையில் 50 சதவீதத்தினர் தங்களின் நாட்டை ஆட்சி செய்யும் பிரதிநிதிகளைத் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கின்றனர் என்பதும் சமீபத்திய ஆய்வுகளில் இருந்து தெரியவருகின்றன.
ஜனநாயக ஆட்சிமுறை என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில், ஒரு குறிப்பிட்ட நாட்டில், ஒரு குறிப்பிட்ட நபரால் ஏற்படுத்தப்பட்டது அல்ல. பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, பல நாடுகளில் வாழ்ந்த சிந்தனையாளர்கள் பலரால் வடிவமைக்கப்பட்ட ஜனநாயகத்தின் வேர்கள் மிகவும் தொன்மையானவை.
பண்டைய சமுதாயத்தில் மன்னர்கள் முழு அதிகாரத்துடன் மக்களை ஆட்சி செய்துவந்தனர். இத்தகைய ஆட்சிமுறையானது பொதுமக்கள் மீதான பல்வேறு அடக்குமுறைகளுக்கும், அநீதிகளுக்கும் வழிவகுத்தது. கருத்து, பேச்சு, மதம் போன்றவற்றில் சுதந்திரம் இன்றி, ஆட்சியாளர்களின் கருத்துகளுக்கு பொதுமக்கள் உட்பட்டு செயல்படும் நிலை நிலவிவந்தது. மக்களில் ஒருசாராருக்கு கட்டாய உழைப்பு நிர்ப்பந்திக்கப்பட்டது. வரி விதிப்பில் விருப்பு -வெறுப்பும், ஏற்றத்தாழ்வும் நிலவின.
காலப்போக்கில் அறிவியல் மற்றும் பகுத்தறிவு தொடர்பான சிந்தனைகள் சமுதாயத்தில் முக்கியத்துவம் பெற்றன. அதைத் தொடர்ந்து, அரசு எடுக்கும் முடிவுகளில் பொதுமக்கள் பங்கு பெற வேண்டும்; மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் விதத்தில் ஆட்சிமுறை அமைக்கப்பட வேண்டும் போன்ற கருத்துகள் சமுதாயத்தில் வெளிப்படத் தொடங்கின.
18 -ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நிகழ்ந்த அமெரிக்கப் புரட்சியின் விளைவாக, நாட்டை ஆட்சி செய்யும் அதிகாரம் மக்களிடமே இருக்க வேண்டும்; மக்களின் ஒப்புதலுடன் அரசு இயங்க வேண்டும் என்ற ஜனநாயகத்தின் அடிப்படைக் கருத்து உருவானது. "தேர்தல் ஜனநாயகம்' என்றழைக்கப்படும் புதிய அரசமைப்பின் தொடக்கத்துக்கு அமெரிக்கப் புரட்சி வித்திட்டது.
அதைத் தொடர்ந்து, 18 -ஆம் நூற்றாண்டின் இறுதியில் நிகழ்ந்த பிரெஞ்சுப் புரட்சியானது மன்னர் ஆட்சிக்கும், நிலப்பிரபுத்துவ முறைக்கும் முடிவுகட்டியது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட குடியரசு அமையவும், உலக அளவில் ஜனநாயகச் சிந்தனைகள் பரவவும் பிரெஞ்சுப் புரட்சி வழிவகுத்தன.
முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களைத் தொடர்ந்து, பல பேரரசுகள் வீழ்ந்தன. பின்னர், பல புதிய ஜனநாயக நாடுகள் உருவாகின. ஆசியா மற்றும் ஆப்பிரிக்க கண்டங்களில் பிரிட்டன் மற்றும் பிரெஞ்சு காலனி நாடுகளாக இருந்த பல நாடுகள் சுதந்திரம் பெற்று, ஜனநாயக நாடுகளாக மாறின. குறிப்பாக, பிரிட்டிஷ் காலனி நாடாக இருந்த இந்தியா 1947 -ஆம் ஆண்டில் விடுதலை பெற்று, 1950 -ஆம் ஆண்டில் உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடாக மாறியது.
இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து, முதலாளித்துவத்தை முன்னிலைப்படுத்தும் அமெரிக்கா மற்றும் பொதுவுடைமைக் கொள்கைகளை முன்னிலைப்படுத்தும் சோவியத் ஒன்றியம் ஆகிய இரு பெரும் வல்லரசுகளுக்கு இடையே அணு ஆயுதப் போட்டி, விண்வெளிப் போட்டி உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்னிலைப்படுத்தி நடைபெற்ற "பனிப்போர்' 20 -ஆம் நூற்றாண்டின்
இறுதியில் முடிவுக்கு வந்தது. இதன் விளைவாக சோவியத் ஒன்றியம் வீழ்ச்சி அடைந்ததும், உலக அளவில் பல நாடுகள் ஜனநாயக நாடுகளாக மாறியதும் குறிப்பிடத்தக்கவை.
ஜனநாயக ஆட்சிமுறை உலக நாடுகளிடையே வேகமாகப் பரவிவந்த சூழலில், 21 -ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் - குறிப்பாக 2010 -ஆம் ஆண்டுமுதல் பல உலக நாடுகளில் ஜனநாயக ஆட்சிமுறை பின்னடைவை எதிர்கொள்ளத் தொடங்கியது. குறிப்பாக, தேர்தல் முறைகேடுகள், ஊடகச் சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடு, நீதித் துறை பலவீனம் போன்றவை பல நாடுகளில் வெளிப்பட்டன.
ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் 2010 -ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் விக்டர் ஓர்பான் என்பவர் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் பிரதமராக வெற்றி பெற்றார். அவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் எதிர்க்கட்சிகளின் பங்களிப்பு இன்றி அரசமைப்பைத் திருத்தினார்.
நீதித் துறை, ஊடகங்கள் மற்றும் இதர அரசு நிறுவனங்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். இதன் விளைவாக, ஜனநாயக நாடாக இருந்த ஹங்கேரி "தேர்தல் சர்வாதிகார' நாடாக மாறியது. ஐந்து முறை தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்ற விக்டர் ஓர்பான், 2026 -ஆம் ஆண்டு ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.
ஹங்கேரியைத் தொடர்ந்து, போலந்து நாட்டிலும் நீதித் துறையில் அரசியல் தலையீடு, ஊடகச் சுதந்திரத்தின் மீது அரசின் கட்டுப்பாடு, குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகள் பாதிப்பு, சட்டத்தின் ஆட்சி சிதைவு போன்ற ஜனநாயக மாண்புகளின் வீழ்ச்சி நிகழ்ந்தன.
துருக்கி நாட்டில் நீதித் துறையின் சுயாதீனம் பாதிப்பு, ஊடகச் சுதந்திரத்தில் தலையீடு, எதிர்க்கட்சிகள் மீதான அடக்குமுறை, நாட்டின் அதிகாரத்தை மையப்படுத்தும் விதத்தில் அரசமைப்பை நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இருந்து அதிபர் முறைக்கு மாற்றி அமைத்தல் போன்ற ஜனநாயகப் பின்னடைவுகள் நிகழ்ந்தன.
தென் அமெரிக்காவிலுள்ள வெனிசுலா நாட்டில் தேர்தல் முறைகேடுகள், எதிர்க்கட்சிகள் ஒடுக்கப்படுதல், ஊடகச் சுதந்திரம் பறிப்பு, அரசு நிர்வாகத்தில் அரசியல் தலையீடு, ஆட்சி அதிகாரத்தை நிலைநிறுத்திக்கொள்ளும் விதத்தில் புதிய சட்ட விதிகள் உருவாக்குதல் போன்ற கடுமையான ஜனநாயகச் சரிவுகள் நிகழ்ந்தன.
சர்வதேச அளவில் ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், தேர்தல் முறைகளை மேம்படுத்தவும், உலக நாடுகளிடையே நிலவிவரும் ஜனநாயகப் பின்னடைவு குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளவும் "சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் உதவி நிறுவனம்' என்ற அமைப்பு 1995 -ஆம் ஆண்டு முதல், ஸ்வீடன் ஸ்டாக்ஹோம் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. 35 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டுள்ள இந்த அமைப்புக்கு 2026 -ஆம் ஆண்டுக்கான தலைமைப் பொறுப்பை இந்தியாவின் சார்பில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஏற்றுள்ளார்.
ஜனநாயகத்தின் உலகளாவிய நிலை குறித்து சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் உதவி நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொண்ட தொடர் ஆய்வுகள் வெளிப்படுத்திய கருத்துகள் குறித்துப் பார்ப்போம்: மூன்றில் ஒரு வாக்காளர் "தேர்தல் தரம்' குறைந்துவரும் நாடுகளில் வசித்து வருகிறார். ஜனநாயகத்தின் முக்கியத் தூண்களான நீதித் துறை, தேர்தல் ஆணையம், ஊடகங்கள் ஆகியவற்றின் சுதந்திரம் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் பிரசாரங்களும், ஒழுங்குபடுத்தப்படாத எண்ம (டிஜிட்டல்) தளங்களும் தேர்தல் நேர்மையைச் சீர்குலைக்கின்றன. ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளில் உள்ள நாடுகளில் ஜனநாயகம் கடுமையான அழுத்தத்துக்கு உள்ளாகி உள்ளது.
பழம்பெரும் ஜனநாயக நாடான அமெரிக்காவில் ஜனநாயகத்தின் தரம் குறைந்து வருகிறது. தேர்தல் நேர்மை மீதான அதிகரித்துவரும் அவநம்பிக்கை, தேர்தல் முடிவுகளுக்கு எதிரான வன்முறைகள், அதிபர் பதவிக்கு அதிகமான நிர்வாக அதிகாரங்கள் குவிப்பு, அரசுப் பணியை அரசியல்மயமாக்கும் முயற்சி போன்ற காரணங்களால் அமெரிக்க ஜனநாயகம் பின்னடைவைச் சந்தித்து வருகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு எனப் பெயர் பெற்ற இந்தியாவில் தேர்தல்கள் சுதந்திரமான முறையில் நடைபெற்றாலும், இந்திய ஜனநாயகத்தின் தரம் குறைந்து வருகிறது என்ற கருத்தை சமீபத்திய ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.
ஊடகங்கள் மீதான அழுத்தம், அரசுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் மீது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களைப் பயன்படுத்துவது, அரசியல் எதிர்ப்பாளர்களைக் குறிவைக்க புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்துவது, இந்திய ஜனநாயகத்தின் முக்கிய அம்சமான மதச்சார்பற்ற தன்மையைப் புறக்கணிப்பது போன்ற அண்மைக்கால செயல்பாடுகளால் இந்தியாவின் ஜனநாயகத் தர மதிப்பீடு குறைந்து வருகிறது என சர்வதேச ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.
இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில் அதிகமான வாக்காளர்கள் பங்கெடுப்பதன்மூலம் மத்திய, மாநில அரசுகள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், வாக்காளர்களுக்கு பணம் அல்லது அன்பளிப்புகளைக் கொடுத்து, வாக்குகளைப் பெறுவது என்ற தேர்தல் நடைமுறை இந்திய ஜனநாயகத்தின் பின்னடைவை உணர்த்துகிறது.
ஜனநாயக நாடுகளாகச் செயல்பட்டுவரும் 71 நாடுகளில் 46 நாடுகள் கடந்த 15 ஆண்டுகளில் "குறைபாடுள்ள ஜனநாயக நாடுகள்' என்ற நிலைக்கு மாறியுள்ளன என்பதையும், இந்தியா போன்ற நாடுகளில் மதம், இனம், மொழி அடிப்படையிலான அரசியல் பாகுபாடுகள் அதிகரித்து, தேசத்தின் ஒருமைப்பாடு சீர்குலைய ஜனநாயகப் பின்னடைவு காரணமாக அமைந்துவிடும் என்பதையும் சர்வதேச ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தொடரும் ஜனநாயகப் பின்னடைவு!

வெற்றிக்கு வித்திடும் தேர்தல் அறிக்கைகள்!

மத்திய அரசு பிளவுபடுத்தும் அரசியலை செய்கிறது: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு!

ஜனநாயகம் தடுமாறும்போது...
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


