வழக்குரைஞர் கா. கணேசன்
அமெரிக்காவின் ஜார்ஜ் ஃப்ளாயிட் மரணம் உலகையே உலுக்கியது. மூச்சுக்காக கெஞ்சிய குரல் உலகின் மனசாட்சியை எழுப்பியது. அநீதியின் முழங்கால் நெஞ்சை நெரித்தபோது, நீதியின் குரல் தெருக்களில் எழுந்தது. இந்தச் சம்பவம் மக்களின் மனசாட்சியை எழுப்பி, காவல் வன்முறைக்கெதிராக பெரும் சமூக எழுச்சியை அங்கு உருவாக்கியது.
ஆனால், இங்கு பல நூறு சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. கண்ணுக்கு எட்டிய தொலைவுவரை மாற்றங்கள் தென்படவில்லை.
கரோனா பெருந்தொற்றின் அச்சம் நிலைகொண்ட நேரத்தில் சாத்தான்குளம் காவல் நிலையத்தின் சுவர்களுக்குள் ஒரு மௌனக் கொடூரமாய் ஜெயராஜும் - பென்னிக்ஸும் கொடூர சித்திரவதையை எதிர்கொண்டு தாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டனர். இந்தக் காவல் மரணத்துக்கு எதிராக மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் வழக்குரைஞர்களும் கொந்தளித்தனர்; அவர்கள் எழுப்பிய நீதிக்கான குரல் முழக்கமாகப் பரவியது.
பல இயக்கங்கள் இணைந்த காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் உருவானது. காவல் துறையின் தாக்குதலால்தான் தந்தை-மகன் இருவரும் உயிரிழந்தனர் என்ற சமூகத்தின் சாட்சி, வெள்ளம்போல பீறிட்டு எழுந்தது. ஆனால், உண்மையின் ஒளியை மூடிமறைக்க உடல்நலக் குறைவு, மாரடைப்பு, மூச்சுத்திணறல் எனத் தெரிவிக்கப்பட்டது.
தரையில் உருண்டதில் காயம், வாகனத்தில் ஏறும்போது தவறி விழுந்ததில் பாதிப்பு என்ற கட்டுக்கதைகள் பரவின. "இது காவல் நிலைய மரணமே அல்ல' என்ற வாதம் உண்மையை அடக்க முயன்ற அதிகாரத்தின் குரலாக வெளிப்பட்டது. ஆனால், இந்த அவதூறுகளும் முகமூடிகளும் ஒருநாள் கிழித்தெறியப்படும் என்பதே பாதிக்கப்பட்டோரின் மெüனக் குரலாய் இருந்தது.
அநீதியின் இருள் அடர்ந்திருந்த வேளையில், உயர்நீதிமன்றம் தானாக களத்தில் இறங்கியது; அதன்பிறகு நடைபெற்ற ஒவ்வொரு நகர்வும், இந்த வழக்கின் திசையையே மாற்றியது. சி.பி.ஐ. விசாரணை, சாத்தான்குளம் 10 காவலர்கள் மீதும் கொலை வழக்குப் பதிவு, அனைவரும் சிறையிலடைப்பு, மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தொடர் விசாரணைகள், 2,000-க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல், 100-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை என தொடர் நகர்வுகள் நம்பிக்கை அளித்தன.
கோவில்பட்டி நீதித் துறை நடுவர் பாரதிதாசனின் நேர்மைமிகு முதல்கட்ட விசாரணையும், அஞ்சாமல் சாட்சியம் அளித்த தலைமைக் காவலர் ரேவதியின் துணிச்சலும் இந்த வழக்கில் முன்னுதாரணமாகப் பதியத்தக்கவை.
நீதிபதி முத்துக்குமரன் எழுதிய இந்தத் தீர்ப்பு, இந்திய நீதித் துறையின் வரலாற்றுப் பதிவுகளில் என்றும் அழியாத வைரக்கற்களாய் ஒளிர்ந்து நிற்கும். காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 9 காவலர்களும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு, அனைவருக்கும் இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்ட அந்த விநாடி பாதிக்கப்பட்டோரின் கண்களில் நம்பிக்கை தென்பட்டது.
ஒரு காவல் மரண வழக்கில் முதல்முறையாக பாதிக்கப்பட்டோரின் மாண்பை போற்றும் வகையில் ரூ.1.04 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட்டது பாராட்டத்தக்கது. இந்த வழக்கு அரிதினும் அரிதானது, இதை சாதாரண குற்றமாக கருத இயலாது; பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல் துறையே தங்கள் அதிகாரத்தை கொடூரமாக மீறியது இவ்வழக்கில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்குக்கு மரண தண்டனை அவசியமென தோற்றமளித்தாலும், அது நீதியின் பெயரில் மாற்றமற்ற உயிர் பறிப்பே. உயிர் காக்கும் அரசு அதைப் பறிப்பது மனிதநேயத்துக்கும் அடிப்படை உரிமைகளுக்கும் முரணானது.
சாத்தான்குளம் சம்பவம் ஒரு தந்தை-மகன் மரணம் மட்டுமல்ல; அது அதிகாரத்தின் அரிவாளில் அறுந்த மனிதத்துவத்தின் ரத்தச் சுவடாகும். அரசமைப்புச் சட்டம் அளித்த உயிர் வாழ்வுரிமை, சுதந்திரம், மனித மாண்பு அனைத்தும் காவல் நிலையத்தின் சுவர்களுக்குள் சிதைந்தபோது, சட்டம் மட்டுமல்ல, சமூகத்தின் மனசாட்சியும் நொறுங்கிப் போனது.
கொடூர சித்திரவதையின் ரத்தத்தை சுமந்த ஜெயராஜும், பென்னிக்ஸும் நீதியின் வாசலை அடையும் முன்பே வலியின் நிழலாக மங்கியபோது, அவர்களை நேரில் காணாது காவலுக்கு ஒப்படைத்த அலட்சியம், உடல்நிலையை மறைத்து பொய்ச் சான்றளித்த மருத்துவத் துறை, ஆய்வின்றி சிறைக் கதவுகளைத் திறந்த சிறைத் துறை என அதிகார வர்க்கத்தின் கூட்டுச் சதி வெளிப்பட்டது.
மரண தண்டனை குறித்த விவாதங்கள் நீடித்தாலும், தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே பனையேறும் தொழிலாளி மணிகண்டன் மீது நடந்த துப்பாக்கிச்சூடு, காவல் துறையின் மனப்போக்கில் எந்த மாற்றமும் நிகழவில்லை என்பதையே வெளிப்படுத்துகிறது. காவல்
சித்திரவதைகளைத் தடுக்கும் தனிச் சட்டம் இந்தியாவில் இன்னும் இல்லாதது ஒரு தீவிரமான குறைபாடாகும்.
சித்திரவதைக்கு எதிரான சட்ட இயலின் முதல் தீர்ப்பு எனக் கருதப்படும் இந்நேரத்தில், மத்திய அரசு உடனடியாக சட்டமியற்ற வேண்டும்; தவறினால் தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும்.
கடுமையான சட்டமும், உறுதியான அமலாக்கமும், காவலர்களிடம் மனமாற்றமும் இல்லாதவரை, காவல் நிலையங்களின் இருண்ட அறைகளில் நிகழும் சித்திரவதைகளும், மரணங்களும், போலி மோதல் மரணங்களும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சாத்தான்குளம் கொலை வழக்கு: காவலர்கள் 9 பேருக்கும் மரண தண்டனை!

சித்திரவதைக்கு ஜே!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: குற்றவாளிகளான காவலா்களுக்கு மரண தண்டனை வழங்க நீதிமன்றத்தில் சிபிஐ முறையீடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

