நவீன உலகப் பொருளாதாரத்தில் ஓர் அடிப்படை உண்மை உள்ளது. உலக மக்கள்தொகையான 800 கோடிக்கும் மேற்பட்டோரின் வாழ்க்கைத் தரத்தை நிர்ணயிக்கும் ரூ.3,250 லட்சம் கோடி (சுமார் 35 டிரில்லியன் டாலர்) மதிப்புள்ள சர்வதேச வர்த்தக வழித்தடம், புவியியல் ரீதியாக மாற்ற முடியாத, நீண்ட காலம் பாதுகாப்பாக வைத்திருக்க முடியாத சில குறுகிய கடல் வழித்தடங்களையே அது நம்பியுள்ளது.
அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக நடத்திவரும் போரின் காரணமாக ஹோர்முஸ் நீரிணை கடந்த ஒரு மாதமாக பெரும்பாலும் மூடப்பட்ட நிலையில் உள்ளது. இதனால், உலகளாவிய எரிபொருள் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்பையும், அதன் மோசமான விளைவுகளையும் நாம் நாள்தோறும் பார்த்தும், அனுபவித்தும் வருகிறோம். இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளும், பதற்றத்தின் அதிர்வுகளும் எவ்விதப் பாகுபாடுமின்றி உலகம் முழுவதும் பரவத் தொடங்கியுள்ளன.
பாரசீக வளைகுடாவிலிருந்து ஓமன் வளைகுடா வரை சுமார் 167 கி.மீ. தொலைவுக்கு விரிந்துள்ளது ஹோர்முஸ் நீரிணை. அதன் குறுகிய பகுதி 33 கி.மீ. அகலம்தான். இந்த வழித்தடம் மூலம் தினமும் சுமார் 2 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய், பல்வேறு வகை எரிவாயுக்கள் மற்றும் பெட்ரோலிய பொருள்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன.
உலக கடல் வழி எண்ணெய் வர்த்தகத்தில் ஐந்தில் ஒரு பங்கும், உலகின் திரவ இயற்கை எரிவாயு வர்த்தகத்தில் சுமார் 19 சதவீதமும் இந்தப் பகுதி வழியாகவே நடைபெற்று வந்தன. வளைகுடா நாடுகளுக்கு இதைத் தவிர வேறு பெரிய மாற்று வழி எதுவும் இல்லை. சவூதி அரேபியாவின் கிழக்கு-மேற்கு குழாய் அமைப்பு, அபுதாபி கச்சா எண்ணெய்க் குழாய் போன்றவை மூலம் ஹோர்முஸ் வழியாகச் செல்லும் அளவுக்கு கச்சா எண்ணெய்யை எடுத்துச் செல்ல முடியாது. அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்கள் என்பது துல்லியமாகவும் எந்தவிதமான பக்க விளைவுகளுமின்றியும் நமது ராணுவ பலத்தை ஈரான் மீது பயன்படுத்தி விடலாம் என்ற மாயை மீது கட்டமைக்கப்பட்டது.
அவர்களின் தாக்குதல்கள் உலக வர்த்தகத்தையே அதிரவைக்கும் ஒரு கண்ணுக்குத் தெரியாமல் இருந்த வெடிகுண்டைப் பற்ற வைத்துவிட்டது. இதுதான் ஈரான் நடத்திய ஹோர்முஸ் முடக்கம். ஹோர்முஸ் நெருக்கடி நமக்கு மிகப் பெரிய பொருள் செலவில் ஓர் உண்மையைக் கற்றுக் கொடுத்துள்ளது. எந்த ஒரு நாடும், எவ்வளவு வலிமையானதாக இருந்தாலும், உலக நாடுகள் பரஸ்பரம் சார்ந்திருக்கும் நிலையைத் தாக்க முயன்றால், அதன் விளைவு அனைவரையுமே காயப்படுத்தும் என்பதுதான்.
இப்போதைய தாக்குதல்களின் விளைவு சர்வதேச கச்சா எண்ணெய் விநியோகத்தில் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிட்டது. தென் கொரியா தனது எரிசக்தி தேவையில் 97 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது; அதன் பெரும்பகுதி ஹோர்முஸ் வழியாகவே வருகிறது. தென் கொரியாவின் சாம்சங் மற்றும் எஸ்கே ஹைனிக்ஸ் ஆகிய நிறுவனங்கள் உலகளாவிய "ரேம்' (கணினியின் குறுகியகால நினைவகம்) உற்பத்தியின் 67 சதவீதத்தையும், உயர்தர கணினி நினைவக கருவிகள் உற்பத்தியின் சுமார் 80 சதவீதத்தையும் தன்வசம் வைத்துள்ளன. இவைதான் சர்வதேச ஏ.ஐ. (செயற்கை நுண்ணறிவு) வளர்ச்சியின் அடித்தளம்.
எனவே, தென் கொரியாவின் எரிபொருள் விநியோகத்தைப் பாதிப்பது, உலகம் முழுவதும் உள்ள ஏ.ஐ. தரவு மையங்களின் செயல்பாட்டையே பாதிப்பதாகும். இதேபோல, கத்தாரில் உள்ள திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (எல்என்ஜி) உற்பத்தி ஆலையில் ஈரான் நடத்திய தாக்குதலால் ஆண்டுக்கு சுமார் 12.8 மில்லியன் டன் உற்பத்தித் திறனைப் பாதித்துள்ளது. இதனால், ஆண்டுக்கு 20 பில்லியன் டாலருக்கு மேற்பட்ட வருவாய் இழப்பு ஏற்படும். இதைச் சரிசெய்ய 3 முதல் 5 ஆண்டுகள் ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், உலக ஹீலியம் உற்பத்தியின் மூன்றில் ஒரு பகுதியை கத்தார் வழங்குகிறது. இது செமிகண்டக்டர் உற்பத்திக்கு இன்றியமையாதது. ஹீலியம் விலை ஏற்கெனவே இருமடங்கு உயர்ந்துவிட்டது. உலக விநியோகக் கட்டமைப்பு ஒன்றுடன் மற்றொன்று பிணைந்துள்ளது. அவை அனைத்துக்கும் மேலே ஹோர்முஸ் நீரிணைப் பகுதி உள்ளது. இந்த நெருக்கடியை ஹோர்முஸ் பிரச்னையாக மட்டும் அணுகுவது தவறு. உலக வர்த்தக அமைப்பு குறிப்பிட்ட சில முக்கிய கடல்சார் வர்த்தக வழிகள் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது.
ஹோர்முஸ், சூயஸ் கால்வாய், பாப் எல்-மந்தெப் நீரிணை, மலாக்கா நீரிணை மற்றும் பனாமா கால்வாய். இவற்றில் ஏதேனும் ஒன்றில் பிரச்னை ஏற்பட்டாலும் மற்ற அனைத்திலும் உடனடியாக அழுத்தம் உருவாகும். ஹோர்முஸ் மூடப்பட்டதால் ஹூதி இயக்கம் மீண்டும் களத்தில் இறங்கியுள்ளது. பாப் எல்-மந்தெப் பகுதியில் கப்பல்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தப் போவதாக அந்த அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
இது ஆசிய-ஐரோப்பிய வர்த்தக வழித்தடத்தை துண்டிக்கும் அபாயத்துக்கு வழிவகுத்துள்ளது. இதுவும் ஹோர்முஸ் நெருக்கடியுடன் சேர்ந்தால் அனைத்துக் கப்பல்களும் நன்னம்பிக்கை முனைப் பாதை வழியாகச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். இதனால், பயணக் காலம் 10 முதல் 14 நாள்கள் அதிகரிக்கும்; போக்குவரத்துச் செலவும் அதிக அளவில் உயரும்.
கிழக்குப் பகுதியில் மலாக்கா நீரிணை வழியாக தினமும் சுமார் 1.6 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் போக்குவரத்து உள்ளது. இது உலக வர்த்தகத்தில் நான்கில் ஒரு பங்கு ஆகும். இதன் குறுகிய பகுதி 2 முதல் 3 கி.மீ. அகலம் மட்டுமே கொண்டுள்ளது. இதன் வழியாக ஆண்டுதோறும் 80,000 முதல் 1,00,000 கப்பல்கள் கடந்து செல்கின்றன.
இதைத்தான் சீன முன்னாள் அதிபர் ஹூ ஜிண்டாவோ “மலாக்கா இடர்ப்பாடு” என்று அழைத்தார். சீனாவின் எண்ணெய் இறக்குமதியின் 80 சதவீதம் இந்த வழியாக வருகிறது. இதைத் தவிர்க்க பல முயற்சிகள் செய்யப்பட்டாலும் உரிய பலன் கிடைக்கவில்லை. துருக்கியின் போஸ்பரஸ் மற்றும் டார்டனெல்லஸ் நீரிணைகள் மற்றொரு மாறுபட்ட வழியைக் காட்டுகின்றன. உலக வர்த்தகத்தில் அவற்றின் பங்கு குறைவாக இருந்தாலும், உலக கோதுமை ஏற்றுமதியின் 20 சதவீதம் இந்த வழியாக மேற்கொள்ளப்படுகிறது. ரஷியாவின் கடற்படையும் இதைச் சார்ந்தே உள்ளது. பனாமா கால்வாய் உலக வர்த்தகத்தில் சுமார் 2.5 சதவீதத்தை மட்டுமே கையாள்கிறது; ஆனால், அமெரிக்காவின் 40 சதவீத கண்டெய்னர் வர்த்தகம் இதன் வழியே செல்கிறது.
2023-24 காலகட்டத்தில் வறட்சியால் இதன் செயல் திறன் குறைந்தது. இப்போது எழுந்துள்ள ஹோர்முஸ் நெருக்கடி மீண்டும் ஒருமுறை நமக்கு உணர்த்துவது என்னவெனில், கடல்சார் வழித்தடங்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று இணைந்து, உலக வர்த்தக வரை படத்தில் பரவிக் கிடக்கின்றன.
அவற்றில் ஒரு முக்கிய இடம் மூடப்பட்டாலே, உலகமே பிணைக் கைதி நிலைக்குத் தள்ளப்படுகிறது. ஏனெனில், கடல் வழி சரக்குப் போக்குவரத்து என்பது, உலகப் பொருளாதாரத்தை இயக்கும் மையச் சக்கரமாக திகழ்கிறது. கப்பல் போக்குவரத்துதான் சர்வதேச வர்த்தகத்தின் முதுகெலும்பு. இதில் ஏற்படும் சிக்கல் உலக அளவில் எத்தகைய பாதிப்புகளை உருவாக்கும் என்பதை நாம் கடந்த ஒரு மாதமாக நேரடியாக உணர்ந்து வருகிறோம்.
எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் எழுந்த பிரச்னை நாட்டில் உள்ள அனைத்து வீடுகளின் சமையலறை வரை எதிரொலித்தது. வர்த்தக எரிவாயு விலை உயர்வு சாமானிய மக்கள் அன்றாடம் பருகும் எளிய பானமான தேநீரின் விலை உயர்வுக்கு வழிவகுத்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் தட்டுப்பாடு வதந்தி பரவி, பெட்ரோல் நிலையங்களை மக்கள் முற்றுகையிட்டதையும் காண நேர்ந்தது. பல நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்தது.
எரிவாயுவைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் நாடுகளின் மின் கட்டணமும் அதிகரித்தது. கரோனா காலத்தைப்போல பகுதி நேர பொதுமுடக்கத்தையும் சில நாடுகள் கையில் எடுக்க வேண்டிய நிலை உருவானது. இப்போது வெளியாகியுள்ள 2 வாரகால போர் நிறுத்தம் என்பது சர்வதேச அளவில் ஒருவித நிம்மதியைப் பரவச் செய்துள்ளது.
எனினும், கடந்த ஒரு மாத நிகழ்வுகளில் இருந்து பெற வேண்டிய முக்கிய பாடம் தெளிவானது; எந்த நாடும் ஒரு கடல்சார் வர்த்தக வழியை ஆபத்துக்குள்ளாக்கினால், அது அந்த நாட்டையும் உலக பொருளாதாரத்தையும் பாதிக்கும். மேலும், உலகில் உள்ள மக்களின் பெரும்பாலானோர் மீது ஏதோ ஒருவகையில் நெருக்கடியை அளிக்கும். இது போன்ற சூழல்களைத் தவிர்ப்பது நாடுகளின் தலைவர்களின் முடிவையே சார்ந்துள்ளது.
அதுவும் பொருளாதார பலம், ராணுவ பலமிக்க நாடுகளின் தலைவர்கள் எடுக்கும் முடிவுகள் உலகம் முழுவதும் எதிரொலித்து, பல கோடி மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் நிலை உள்ளது. உலகமயமாக்கல் என்பது நமக்குப் பல்வேறு நன்மைகளை வாரித்தந்துள்ளது.
அதுவும் இந்தியா போன்ற அதிக மக்கள்தொகை கொண்ட நாட்டின் உலகமயமாக்கல் நடவடிக்கையே வேலைவாய்ப்பையும், பணப்புழக்கம், புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தந்துள்ளன. இது நாடுகள் பிணைப்பை உருவாக்க வேண்டுமே தவிர, பிணக்குகளை உருவாக்கக் கூடாது என்பதை நாடுகளின் தலைவர்கள் புரிந்து நடந்துகொள்ள வேண்டும்.
உலகமயமாக்கல் உருவாக்கிய வர்த்தக இணைப்பு ஒரு பலவீனம் அல்ல; அது ஒரு பரஸ்பர பிணைப்பு நிலை. ஒரு நாடு உலக கடல் வழிகளை ஒருதலைபட்சமாக கட்டுப்படுத்த முடியும் என்ற எண்ணம் தவறு. உலகமயமான அமைப்பு முறையில் உள்ள எந்தப் பிரச்னையும் உள்நாட்டு அல்லது இருநாடுகள் சார்ந்த பிரச்னையாக இருக்க முடியாது; அது உலகளாவிய நெருக்கடியாக உருமாறும்.
கட்டுரையாளர்: முன்னாள் மத்திய அமைச்சர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

மாற்று ஆற்றல் அவசியம்!

போரை விரும்பும் வல்லரசுகள்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

