"தீபாவளி பரிசு' கிடைக்க...
சரக்கு, சேவை வரி தொடர்பாக பல முக்கிய அறிவிப்புகளை மத்திய நிதித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.


சரக்கு, சேவை வரி தொடர்பாக பல முக்கிய அறிவிப்புகளை மத்திய நிதித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இவற்றில் இரண்டடுக்கு சரக்கு சேவை விகித முறை ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. 12 %, 28 % அடுக்குகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. 5%, 18% என இரண்டு புதிய விகிதங்கள் நீண்ட நாள் ஒரு முடிவை எட்டப்படாமல் இருந்த நிலையில், ஒருமித்த கருத்து ஏற்பட்டிருக்கிறது. இவற்றில் சில வரவேற்புகளும், இந்த மாற்றத்தினால் ஏதோ அரசியல் இருப்பதாக எதிர் முகாமும் மாறி மாறி தங்கள் விவாதங்களை வைத்திருக்கிறது.
ஜிஎஸ்டி சீர்திருத்தம் மற்றும் பொருள்கள் மீதான வரிக் குறைப்பு வரவேற்கத்தக்கது என்றும் ஒருசாராரும், சீர்திருத்தம் செய்வதற்கு 8 ஆண்டுகள் தேவைப்பட்டதா என்றும் எதிர்க்கட்சிகளும் கேள்விகளை எழுப்பியிருக்கின்றன. ஜிஎஸ்டி வரியில் மாற்றத்தைக் கொண்டு வர மத்திய அரசைத் தூண்டியது எது? மந்தமான பொருளாதார வளர்ச்சியா?, வீட்டுக் கடன் அதிகரிப்பா?, வீட்டுச் சேமிப்பு குறைவதா?, பிகார் தேர்தலா?, டிரம்ப்பின் வரி விதிப்பா அல்லது இவை அனைத்துமா என்று காங்கிரஸ் கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
ஜிஎஸ்டி கவுன்சிலின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை முழுமனதுடன் வரவேற்கின்றனர் மத்திய அரசின் ஆதரவுத் தரப்பினர். இருந்த போதிலும் மாநில வருவாய், மாநில நிதி சுயாட்சி பாதுகாப்பு குறித்து மத்திய அரசு எதுவும் செய்யவில்லை என்று குறைபட்டுக் கொண்டிருக்கிறது தமிழக அரசு. இப்படி எதிரும், புதிருமான இந்தச் சீர்திருத்தத்தால் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களின் மீதான வரிகளைக் குறைத்திருப்பதன் மூலம் ஏழை எளியவர்களின் பணச்சுமை குறைந்திருக்கிறது என்பதை நாம் மறந்து விட முடியாது.
தனி நபர் காப்பீடு, மருத்துவக் காப்பீட்டுக்கு வரியில் இருந்து விலக்கு, பால், பனீர், பீட்சா, ரொட்டிக்கு வரி விலக்கு, 33 உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் புற்றுநோய் மருந்துகளுக்கு ஜிஎஸ்டி முற்றிலுமாக தவிர்ப்பு, மாணவர்களுக்கான நோட்டு புத்தகம், பென்சில், அழிப்பான் இவற்றுக்கு முற்றிலுமாக வரி தவிர்ப்பு, தேங்காய் எண்ணெய், சோப்பு, ஷாம்பு, மிதிவண்டி மற்றும் டிராக்டர் முறையே 18-இல் இருந்து 5% வரி, பார்வையைச் சரி செய்யும் கண்ணாடிகளுக்கு 12-இல் இருந்து 5 சதவீதமாகக் குறைப்பு, இதைப்போலவே பாதாம், பிஸ்தா, முந்திரி, திராட்சை போன்ற உலர் பழங்களுக்கு வரி 12-இல் இருந்து 5 சதவீதமாகக் குறைப்பு, 43 அங்குல தொலைக்காட்சிப் பெட்டி ரூ.2,000-மும், 73 அங்குல தொலைக்காட்சிப் பெட்டி ரூ.23,000 வரை குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. சிறிய ரக கார் 18% விலை குறைக்கப்பட்டிருப்பதால், ஏறக்குறைய ரூ.62,000 குறைய வாய்ப்பு, 1200 சிசி, 1500 சிசி மற்றும் அதற்குக் குறைந்த திறன் கொண்ட பெட்ரோல், டீசல் கார்களின் விலை குறைவதற்கான வாய்ப்பு-இவையெல்லாம் சுமார் 8 ஆண்டுகளுக்குப் பின்னர் பெரும் வரிச்சுமை குறைக்கப்பட்டிருப்பதால் நடுத்தர மக்கள் பெரிதும் பயனுள்ளவர்களாக மாறியிருக்கிறார்கள்.
கூந்தல் எண்ணெய், பற்பசை, சோப்பு கட்டி, பல்துலக்கும் பிரஷ், ஷேவிங் கிரீம், வெண்ணெய், பேக்கரியில் செய்யப்பட்ட தின்பண்டங்கள், குழந்தைகளுக்குப் பாலூட்ட பயன்படுத்தும் புட்டிகள், நாப்கின்கள், டையபர்கள், தையல் இயந்திரங்கள் மற்றும் அதன் பாகங்கள், தெர்மாமீட்டர் முதல் மருத்துவத் தர ஆக்சிஜன், நோய் அறிதல் கருவி, குளுக்கோ மீட்டர் போன்றவற்றுக்கும் வரி விலக்கு என்பது வரவேற்கத்தக்க ஒன்றாக அமைந்திருக்கிறது. கல்வி மற்றும் விவசாயத் துறையிலும் பல்வேறு மாற்றங்கள் செய்திருப்பதன் மூலம் மாணவ சமுதாயமும், விவசாயிகளும் பயன்பெறத்தக்க வகையில் இவை அமைந்திருக்கின்றன.
உயிர்பூச்சிக் கொல்லிகள், நுண்ணூட்டச் சத்துகள், சொட்டுநீர் பாசன அமைப்புகள், தெளிப்பான்கள் இவற்றுக்கு 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக வரி குறைக்கப்பட்டிருக்கிறது. விவசாயிகளுக்குப் பெரும் வரப்பிரசாதமாக இவை அமைந்திருக்கின்றன. போட்டி நிறைந்த உலகில் விவசாயிகளின் உற்பத்தியில் சரக்கு இருந்தும் சந்தை இல்லாத காரணத்தினாலும் மிகுந்த தடுமாற்றத்தில் இருந்தார்கள். இன்றைய வரிக் குறைப்பின் மூலமாக விவசாயத் துறைக்கு பெரும் மாற்றத்துக்கான வாசலைத் திறந்து வைத்திருக்கிறது.
மின்னணுப் பொருள்கள் மலிவாவதற்கு வாய்ப்புகள் நிறைந்திருக்கின்றன. பாத்திரம் கழுவும் இயந்திரங்கள், மோட்டார் பொருத்தப்பட்ட மின்விசிறிகள், ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்தும் கூறுகள், குளிர்சாதன இயந்திரங்கள் மீதான ஜிஎஸ்டி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. அதைப்போலவே, டி.வி, மானிட்டர்கள், புரொஜக்டர்கள், செட் டாப் பாக்ஸ்கள் மீதான 28 சதவீத வரி 18-ஆகக் குறைந்திருக்கிறது.
ஆடம்பர ஜிஎஸ்டி வரி 40 சதவீதமும், பான்மசாலா, சிகரெட், குட்கா போன்றவற்றுக்கு வரி அதிகரிப்பு செய்யப்பட்டிருக்கிறது. வட்டி விகிதக் குறைப்பால் அரசுக்கு ரூ.93 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும். ஜிஎஸ்டி கவுன்சில் இரண்டடுக்கு விகிதங்களுக்கு ஒப்புதல் அளித்து இவை முறையே 5 மற்றும் 18 சதவீதம் குறைக்கப்பட்டிருக்கிறது. இவை தவிர, 40 சதவீத அடுக்கில் இருந்து அரசுக்கு சுமார் ரூ.45 ஆயிரம் கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டிருக்கிறது; வாக்கெடுப்பு தேவைப்படவில்லை.
மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை எவ்வாறு ஈடுகட்டுவது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இவை விரைந்து முடிவு செய்யப்பட்டால்தான் மாநிலத்தின் வருவாய் இழப்பீட்டை ஈடுகட்ட முடியும். ஏற்கெனவே, மாநில அரசு வருவாய் பற்றாக்குறையால் தடுமாறிக் கொண்டிருக்கிற நிலையிலும், பல்வேறு இலவசப் பொருள்கள் வழங்கப்படுவதன் மூலமாக பெரும் நிதி செலவிடப்பட்டுக் கொண்டும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஊதியமும், தொடர் செலவினமாக இருப்பதால் தமிழ்நாடு அரசு நிதித் துறை தள்ளாடிக் கொண்டிருக்கிறது.
2025-26-ஆம் ஆண்டில் தமிழக அரசு அதன் வருவாய் வரவுகளை ரூ.3 லட்சத்து 31 ஆயிரத்து 569 கோடியாகக் கணித்துள்ளது. மாநிலத்தின் சொந்த வருவாய், மொத்த வருவாய் வரவுகளில் 75.3 சதவீதமாகும். மீதமுள்ள 24.7% மத்திய வரிகள் மற்றும் மத்திய அரசின் மாநில உதவிகளில் இருந்து வருகிறது. மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 2025-26-ஆம் ஆண்டில் அரசின் வருவாய் 14.6% அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் வணிக வரித் துறை 74.2 சதவீதமும், பத்திரப் பதிவுத் துறையில் இருந்து 11.8 சதவீதமும், மாநில வரியில் இருந்து 5.9 சதவீதமும், வாகன வரிகள் 6.1 சதவீதமும் மற்றும் இதரப் பிரிவில் இருந்து 2 சதவீதமும் என்ற அடிப்படையில் கணக்கிடப்பட்டு மாநில அரசு தனது நிதிப் பராமரிப்பை செய்து வருகிறது.
பெண்களுக்கு ரூ.9,682 கோடி கட்டணமில்லா பேருந்து சேவை, மாணவர்களுக்கு இலவசம் மற்றும் சலுகை பேருந்து பயண அட்டை, டீசல் மானியம், நம்பகத்தன்மை இடைவெளி நிதி, பங்கு மூலதன உதவி மற்றும் கடன்கள் வகை என்கிற இலவச திட்டங்களின் மூலமாக பெரும் தொகை செலவிடப்பட்டு வருகிறது. தமிழகத்தின் மொத்தக் கடன் ரூ.15.5 லட்சம் கோடியாக இருக்கும் என்று உத்தேசப் பொருளாதார ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. 2025-26-ஆம் நிதியாண்டில் ரூ.1,218 கோடி வருவாய் உபரி எட்டப்படும் என்று திமுக அரசு உத்தரவாதம் அளித்திருந்தது. ஆனால், அதற்கு வாய்ப்பில்லை. வருவாய் பற்றாக்குறை ரூ.50ஆயிரம் கோடிக்கு கூடுதலாக இருக்கிறது.
நிதிப் பற்றாக்குறை ரூ.1.20 லட்சம் கோடியை எட்ட வாய்ப்புள்ளது. வரும் 2025-26-ஆம் ஆண்டில் தமிழக அரசு வாங்கும் மொத்த கடன் அளவு ரூ.1.62 லட்சம் கோடியாக இருக்கும். தமிழக அரசு செலுத்தும் வட்டி ரூ.75 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும். வரும் 2026 மார்ச் 31-இல் தமிழக அரசின் கடன் நிலுவை ரூ.9.30 லட்சம் கோடியாக இருக்கும். மின் வாரியம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்கள் சார்பில் வாங்கப்பட்ட கடனின் அளவு ரூ.5.50 லட்சம் கோடியாக உயரும். இதனால், தமிழகத்தின் மொத்தக் கடன் வரும் நிதியாண்டின் முடிவில் ரூ.15.05 லட்சம் கோடியாக இருக்கும். வரும் 2030-இல் ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர் என்ற அடிப்படையில், அதாவது ரூ. 88 லட்சம் கோடி என்ற அளவுக்கு பொருளாதாரக் கடன் சுமை அதிகரிக்கக் கூடும்.
ஆகவே, மத்திய அரசிடம் இருந்து மாநில அரசு அதிக நிதியை எதிர்பார்க்கிறது. இந்த நிலையில், ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து தமிழ்நாடு அரசு தனது பெரும் ஆதரவை வெளிப்படுத்தவில்லை. இந்தப் புதிய அறிவிப்பின்படி, அன்றாடம் பயன்படுத்தப்படும் மளிகைப் பொருள்கள் பலவற்றுக்கும் வரிகள் குறைக்கப்பட்டிருப்பது சாதாரண மக்களுக்கு தீபாவளிப் பரிசு என்று மத்திய அரசு கூறியிருப்பது முற்றிலும் உண்மையா?
உண்மையிலேயே, நம்முடைய மாதாந்திர பட்ஜெட் செலவு குறையக் கூடும். உதாரணமாக, ஒரு பற்பசை ஜிஎஸ்டி வரியுடன் ரூ.100-க்கு விற்கப்பட்டு வருகிறது. புதிய வரிவிதிப்பின்படி, ரூ.13 விலை குறைய வேண்டும். அப்போதுதான் ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலன் 100% பொதுமக்களுக்கு வந்து சேர்ந்ததாக அமையும். சந்தைப் பொருளாதாரத்தில் அவை எப்போதும் நடப்பதில்லை. ஏனென்றால், லாபத்தின் அடிப்படையில் நிறுவனங்கள் இயங்குகின்றன. இவை அரசுக்கும் தெரியும்.
10% வரி குறைத்தால், அதை முழுவதுமாக நிறுவனங்கள் தங்கள் லாபத்துக்கு எடுத்துக் கொள்கிறார்களா அல்லது 8% குறைத்து விட்டு, 2% மட்டும் தங்கள் லாபத்துக்கு எடுத்துக் கொள்கிறார்களா என்கிற அடிப்படையில்தான், அதன் உண்மையான பலன்கள் அடித்தட்டு மக்களுக்கு வந்து சேரும். எனவேதான், வரி குறைப்பின் மூலம் பெரும்பாலான மக்களைச் சென்றடையும் விலைகள் நிர்ணயிக்கப்படுவதை வகையில் அரசுகள் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். இல்லையென்றால், அடித்தட்டு மக்களுக்கு தீபாவளிப் பரிசு கிடைக்காமலே போய்விடும்.
கட்டுரையாளர்:
முன்னாள் அமைச்சர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...