சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

தேம்பாவணி தந்த திருமகனார்!

2019-ஆம் ஆண்டில் முனைவர் டொமினிக் ராஜ், தேம்பாவணி முழுவதையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.

News image
கோப்புப்படம்
Updated On :8 நவம்பர் 2025, 2:14 am

முனைவா் ஒளவை அருள்

இத்தாலி நாட்டிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து அருந்தமிழ்த் தொண்டு செய்த அருட் குருக்களில் சிறந்ததொரு பெருமகனார் வீரமாமுனிவர் (1680-1747). அகிலம் போற்றும் பெருங்கவிஞரான வெர்ஜில் பிறந்த நகருக்கு அருகிலுள்ள காஸ்திக்கிளியோனே என்பது இவர் பிறந்த ஊராகும். இவர் பிறந்தது 1680-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி. இவர்தம் தந்தை பெயர் கண்டால்போ பெஸ்கி; தாயார் எலிசபெத் பெஸ்கி; இவர்தம் பிள்ளை ஜோசப் கான்ஸ்டன்டைன் பெஸ்கி என்பதாம்.

தாய் மொழியாகிய இத்தாலிய மொழியுடன் எபிரேயம், கிரேக்கம், லத்தீன், போர்த்துகீசியம் ஆகிய மொழிகளில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார். வீரமாமுனிவர் தனது 18-ஆம் வயதில் கத்தோலிக்கக் குருவாக அழைப்புப் பெற்றார். இவரது பணியார்வத்தால் கவரப்பட்ட ஆயர்கள் வெளிநாடுகளில் மறைப்பணி ஆற்றுவதற்காக இவரைத் தேர்ந்தெடுத்து 1710-ஆம் ஆண்டு இத்தாலியிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பினர்.

சுவாமி பெஸ்கியர் இந்தியாவுக்கு வந்தது 1710-ஆம் ஆண்டில் கோவையில் சில நாள்கள் தங்கி போதக சேவையைத் தொடங்கினார். அம்பலக்காடு, மணப்பாடு, தூத்துக்குடி ஆகிய இடங்களிலும் சில காலம் தங்கினார்.

தூத்துக்குடியில் பெஸ்கியர் தமிழ் மொழியை ஆர்வத்துடன் கற்றுத் தேர்ந்த பின்னர் புதுப்பட்டிக்குச் சென்றார்; தெலுங்கு, கன்னடம் ஆகிய திராவிட மொழிகளையும் கற்றதுடன், வடமொழி இந்துஸ்தானி, பாரசீகம் ஆகிய மொழிகளிலும் பயிற்சி பெற்றார். பழநியில் வசித்த சுப்பிர தீபக் கவிராயர் என்பவர் பெஸ்கியரின் தமிழாசிரியராவார்.

தம் இயற்பெயராகிய கான்ஸ்டான்ஷியுஸ் என்ற பெயரை தைரியநாதன் என்ற தமிழ்ப் பெயராக்கி, பின்னர் பொதுமக்களும் இவரை வீரமாமுனிவர் என்று புகழத் தலைப்பட்டனர்.

மேனாட்டு மொழிகளில் அமைந்தது போன்ற அகராதியைத் தமிழ் மொழியில் தொகுத்துத் தந்தார். ஒரு பெயருக்குப் பல பொருள் உள்ளதைத் தொகுத்துப் 'பெயரகராதி' என்றும், ஒரு பொருளுக்குப் பல பெயருள்ளதைத் தொகுத்துப் 'பொருளகராதி' என்றும், இரண்டு முதல் அநேகம் சேர்த்து ஒரு சொல்லாக வழங்குவதெல்லாம் 'தொகை அகராதி' என்றும், ககர முதல் னகர வீறாக உள்ள பதினெட்டெழுத்தும் குறிலும் நெடிலுமாய் எதுகைப் பற்றிவரும் பதங்களெல்லாம் தொகுத்துத் 'தொடையகராதி' என்றும், நான்கு வகை கொண்டதாய் தொகுத்ததே 'சதுரகராதி' (1732) என்றும் பெயர் கொண்டு விளங்குகின்றன.

இஃதன்றி அவரியற்றிய வேறு இரண்டு அகராதிகள் குறிப்பிடத் தகுந்தவை. ஒன்று தமிழ் - லத்தீன் அகராதி, மற்றொன்று போர்த்துக்கீசியம் தமிழ் - லத்தீன் அகராதி. முன்னையது, 9,000 தமிழ்ச் சொற்களுக்கு லத்தீன் மொழியில் பொருள் விளக்கம் கொண்டது. பின்னையது, 4,400 போர்த்துகீசிய மொழிகளுக்கு தமிழிலும், லத்தீனிலும் பொருளினைக் கொண்டுள்ளது.

வீரமாமுனிவர் தமிழ் மொழிக்கு இயற்றிய இலக்கண நூல்கள் நான்கு. அவை, கொடுந்தமிழ் இலக்கணம் (1,728), செந்தமிழ் இலக்கணம் (1,730), தொன்னூல் விளக்கம் (1,730) மற்றும் திறவுகோல் என்பதாம். முதல் மூன்றையும் லத்தீன் மொழியில் எழுதியுள்ளார். இவற்றில் செந்தமிழ் இலக்கணத்தின் லத்தீன் மூலத்தோடு பாபிங்டன் துரையின் ஆங்கில மொழிபெயர்ப்பு 1917-இல் திருச்சி ஜோசப் இண்டஸ்ட்ரியல் அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப் பெற்றுள்ளது.

திருக்குறளின் அறத்துப்பாலையும் பொருட்பாலையும் லத்தீன் மொழியில் மொழிபெயர்த்து உரையும் எழுதி உள்ளார். ரோம் நாட்டு தத்துவ ஞானியான செனக்காவின் ஒழுக்க இயல் நூல்களுடன் திருக்குறளை ஒப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வீரமாமுனிவர் இயற்றிய 'தேம்பாவணி' (1726) என்ற இனிய செந்தமிழ்க் காப்பியம். 3,615 விருத்தப் பாக்களைக் கொண்டதாக யேசுநாதரின் வளர்த்த தந்தை சூசையப்பரின் வரலாற்றை விரித்துக் கூறுகிறது. மதுரை தமிழ்ச் சங்கத்தில் தமிழ் அறிஞர்களால் தேம்பாவணி வெகு சிறப்பாக அரங்கேற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தமிழர் மரபோடு ஒன்றி தீந்தமிழ்க் காப்பியம் என கிறிஸ்தவர்களால் போற்றப்படும் புனித நூலான தேம்பாவணி, கீர்த்தனை, சிந்து, வசன காவியம், விருத்தியுரை, உரைநடை, சுருக்கம் ஆகிய பல்வேறு வடிவங்களைக் கொண்டதுடன், 'அன்பை விதைப்போருக்கு அன்பே கிட்டும்' என்ற உயர்ந்த சிந்தனையை ஊட்டுகிறது.

வீரமாமுனிவர் இயற்றிய திருக்காவலூர்க் கலம்பகமும் (1727), கித்தேரியம்மாள் அம்மானையும் (1723) அறிஞர்க்கு நவில்தொறும் அறிவின்பம் பயப்பன.

தமிழில் வரலாற்று நூல்கள் வருவதற்கு அடித்தளமிட்டவர் வீரமாமுனிவர். அவர் எழுதிய 'வாமன் சரித்திரம்' அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. நிறுத்தப்புள்ளி, முற்றுப்புள்ளி போன்ற குறியீடுகளைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தி எளிமையாக்கிய பெருமையும் இவரையே சாரும்.

வீரமாமுனிவரது உரை நடையில் மிகுதியாகப் பயிலப் பெறுவது பரமார்த்த குருவின் கதையாகும் (1744). இது பல ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வீரமாமுனிவருடைய உரைநடை மாட்சிக்கு எடுத்துக்காட்டாக 'வேதியர் ஒழுக்கத்தை தமிழ் உரை நடை பயிலும் மாணவர்க்குரிய மேல் வரிச் சட்டமாக யான் கருதுவேன்' என்பார் டாக்டர் ஜி. யு. போப்.

2019-ஆம் ஆண்டில் முனைவர் டொமினிக் ராஜ், தேம்பாவணி முழுவதையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.

வீரமாமுனிவரின் பிறந்த நாளான நவம்பர் 8-ஆம் தேதி தமிழ் வளர்ச்சித் துறை அகராதி நாளாக, அரசு விழாவாக ஆண்டு தோறும் கொண்டாடுவதுடன், அவரின் பெயரிலான விருதினையும் தமிழ் அறிஞர்களுக்கு வழங்கிப் பெருமை கொள்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.