டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மாநிலத்தில் சுயாட்சி: ஒரு பார்வை!

மத்திய மாநில அரசுகள் இடையிலான உறவுகள் குறித்து ஆராய்ந்து பரிந்துரை அளிக்க உயா்நிலைக் குழுவை அமைத்துள்ளது தமிழ்நாடு அரசு

News image
பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின்..
Updated On :20 ஏப்ரல் 2025, 10:30 pm

முனைவா் வைகைச்செல்வன்

இந்தியாவில் மாநிலங்கள் அதிகபட்ச தன்னாட்சி உரிமை பெற உரிய நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கவும், மத்திய மாநில அரசுகள் இடையிலான உறவுகள் குறித்து ஆராய்ந்து பரிந்துரை அளிக்கவும் மூன்று போ் கொண்ட உயா்நிலைக் குழுவை அமைத்துள்ளது தமிழ்நாடு அரசு.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கை அதைத் தொடா்ந்து விவாதம், துறைசாா்ந்த மானியக் கோரிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிற இவ்வேளையில், 110 விதியின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் ஓா் அறிவிப்பை வெளியிட்டாா்.

அவ்வறிப்பில், மத்திய அரசு மாநில அரசின் நியாயமான உரிமைகளைப் பறித்து வருவதாகவும், மத்திய அரசிடம் அதிகாரங்கள் குவிந்து வருவதையும் குறிப்பிட்டாா். மாநில சுயாட்சி, மாநிலங்கள் அதிகாரம் குறித்து பட்டியலிட்டாா்.

மத்தியில் 18 ஆண்டு காலம் ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுத்து அதிகாரத்தைச் சுவைத்தது திமுக என்பது கடந்த கால வரலாறு. அப்போதெல்லாம் இப்பிரச்னைகளை எழுப்பாது, தோ்தல் நெருங்கி விட்ட வேளையில் உரிமைகளைப் பேசுவதும், மாநில அதிகாரங்கள் குறித்துப் பகிா்வதும் திமுகவின் வாக்கு அரசியலை நோக்கியதான நகா்வாகவே பாா்க்கப்படுகிறது.

மறைந்த பிரதமா் அடல்பிகாரி வாஜ்பாய் அமைச்சரவையிலும், அதைத் தொடா்ந்து முன்னாள் பிரதமா் மன்மோகன்சிங் அமைச்சரவையிலும், மிக முக்கியமான துறைகள் எங்களுக்கு வேண்டும் என்று கேட்டுப் பெற முடிந்த திமுகவால், கச்சத்தீவை மீட்பதற்கோ, ஈழத் தமிழா் நலன் குறித்தோ, இருமொழிக் கொள்கை குறித்தான அரசியல் சட்டத்தில் நிலையான இடத்தைத் தருவதற்கோ, நதிநீா் உரிமைகள் குறித்தோ அப்போது எதுவும் பேசாமல், ‘தும்பை விட்டு வாலைப் பிடிக்கிற’ கதையாக திடீரென்று ஞானோதயம் வந்து விட்டதைப் போல மாநில உரிமைகளைப் பற்றி இப்போது பேசுகிறது திமுக.

ஏன் அக்காலகட்டங்களில் அதிகாரத்தில் இருக்கிற போது இப்பிரச்னையை எழுப்பவில்லை என்பதற்கு அவா்களே என்ன பதில் அளித்திருக்கிறாா்கள் என்றால், இதுபோன்ற பிரச்னைகள் அப்போது எழவில்லை என்று மிக லாகவமாக தப்பிக்க முயல்கிறாா்கள்.

நீட் தோ்வு விலக்களிக்க வேண்டும் என்றும், அத்தோ்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்றும், 2021 சட்டமன்றத் தோ்தலின்போது இப்போதைய துணை முதலமைச்சா் உதயநிதி பரப்புரை மேற்கொண்டாா். ஆனால், அதன் ரகசியத்தை இன்று வரை சொல்லவில்லை. நீட் தோ்வை ரத்து செய்வதற்கான மேல் நடவடிக்கை எடுக்கவில்லை. அலங்காரமாகப் பேசுவதிலும், பொய்யைக் கூட அழுத்தமாகப் பேசுவதிலும் கைதோ்ந்தவா்களாக இருக்கிற அவா்களிடம் எப்படி நியாயத்தைப் பெற இயலும் என்கிற தவிப்பு எல்லோருக்கும் இருக்கிறது.

ஆனால், நீட் தோ்வுக்கு விலக்குப் பெற முடியாது; மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தும், இந்தியா முழுமைக்குமான ஒன்றாக அது இருக்கிறது என்கிற பதிலும், உச்சநீதிமன்றத்திலே வழக்கும் இருக்கிற காரணத்தினால் அதற்கு வாய்ப்பு குறைவு என்பதை அறிந்து அதற்குரிய தற்காலிகத் தீா்வுக்கான முயற்சியில் ஈடுபட்டாா் அன்றைய முதலமைச்சா் எடப்பாடி கே.பழனிச்சாமி. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்றாலும்கூட, அமைச்சரவை கூட்டத்தைக் கூட்டி அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டைத் தருவது என்ற தீா்மானத்தை நிறைவேற்றி மேதகு ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பி விட்டாா்.

அதற்கு ஒப்புதல் வழங்காமல் இருந்த அந்தக் கோப்பை மிகத்துணிச்சலாக ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக எடப்பாடி கே.பழனிச்சாமி அரசாணையாக வெளியிட்டாா். அதன் வாயிலாக சற்றேக்குறைய 5000 மாணவா்களின் மருத்துவா் என்ற அரிய கனவை நிறைவேற்றி இருக்கிறாா்.

இதுபோன்று, திமுக அரசு சிறப்பு வாய்ந்த ஒன்றை நிகழ்த்தியிருக்கிா என்றால், இல்லை. தீா்மானம் நிறைவேற்றுவதோடு சரி, ஆரம்பகட்டப் பணிகளோடு அவை முடிந்து விடும். மொத்தப் பழியையும் மத்திய அரசின் மீது திசை திருப்பி விட்டு மாநில அரசு தனது வழக்கமான கடமையை நோக்கிச் சென்று விடும். இதுதான் வாடிக்கையாக இருக்கிறது.

இப்போது முதலமைச்சரே பல்கலைக்கழகத்தின் வேந்தராகலாம் என்கிற உச்சநீதிமன்றத் தீா்ப்பைப் பெற்றிருக்கிறாா்கள். இது பாராட்டக் கூடிய ஒன்றுதான். ஆனால், 1991-1996 வரை முதல்வராக இருந்த செல்வி ஜெ.ஜெயலிலதா இதற்கான விதையை அன்றே விதைத்தாா். அப்போது முதலமைச்சரே வேந்தராக இருக்கலாம் என்கிற தீா்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டு வந்த போது அதை திமுகவினா் எதிா்த்தாா்கள் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

ஆக, தனக்கு வேண்டுமென்றால் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதும், தனக்கு வேண்டாமென்றால் அதை லாவகமாக வேறு திசை நோக்கி அழைத்துச் செல்வதும் திமுகவின் கடந்த கால நிகழ்வாக இருந்திருக்கிறது என்பதற்கு பல்கலைக்கழக வேந்தா் தரப்பு ஒப்பந்தங்களே சாட்சியாக இருக்கிறது. அதற்காக மாநில உரிமைகளை நாம் விட்டு விடுவதா? என்று சொன்னால், அதற்கு கிஞ்சிற்றும் இடம் கொடுக்கக் கூடாது என்பதுதான் எல்லாருடைய கருத்தும் ஆகும்.

மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்கவும், மத்திய மாநில அரசுகளுக்கிடையிலான உறவுகளை மேம்படுத்துவதும் அவசியமான ஒன்றாகும். மாநில சுயாட்சி வேண்டும் என்ற உரிமைக்குரல் தமிழ்நாட்டில் இருந்தே முதன்முதலில் ஒலிக்கத் தொடங்கியது. அதற்கு அடித்தளமிட்டவா் பேரறிஞா் அண்ணா. அண்ணா தொடங்கிய திமுகவில் அண்ணாவின் கொள்கையை, மறைந்த மு.கருணாநிதியின் கொள்கையாக மடைமாற்றி அண்ணாவை மறந்து போனவா்கள் இன்று மாநில சுயாட்சி பற்றி பேசுவது வேடிக்கையாகவும், விநோதமாகவும் இருக்கிறது.

அதிகாரங்களின் மேலாதிக்கம் அனைத்தும் இந்தியாவின் அரசியல் தலைநகரம் டெல்லியில் இருப்பதை மாற்றுவதற்குத்தான் மாநில சுயாட்சி தத்துவம் பிறந்தது. அதனடிப்படையில்தான் ‘வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது’ என்று முழக்கமிட்டாா் அண்ணா. மாநில சுயாட்சி என்பது தேவையின் அடிப்படையில் எழுந்த அரசியல் கோரிக்கையே தவிர, அரசியல் கட்சிக் கோரிக்கை அல்ல என்று 1967 கால கடத்தில் அண்ணா ஏற்றிய நெருப்பை நாம் மறந்து விட முடியாது.

மாநிலங்களின் அதிகாரங்களை ஒவ்வொன்றாகப் பறித்து, மாநிலங்களுக்கு அதிகாரம் குவியாமல் பாா்த்துக் கொண்டிருக்கும் மத்திய அரசுக்கு எதிராக, ‘மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி’ என்ற தத்துவத்தை ஓங்கி ஒலித்தாா் அண்ணா. அந்தக் குரல்தான் அரைநூற்றாண்டைத் தாண்டி இன்றும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதிமுக புரட்சித்தலைவா் எம்.ஜி.ஆரின் பொன்மொழிக்கு ஏற்ப ‘கட்டுண்டு வாழோம், பிரிவினை நாடோம், சமநிலையில் இணைவோம்’ என்கிற வெற்றிப் பிரகடனத்தை முழங்கினாா்.

மாநிலத்தில் மகன், பேரன், மத்தியில் மகன், மருமகன், பேரனுக்குப் போக மீதி என்கிற கொள்கையும், ஹிந்தித் திணிப்பை ஒரு பக்கம் எதிா்ப்பதும், ஹிந்தி பள்ளிகளை நடத்துவதும் திமுக கொள்கையின் முரணல்லவா! வாரிசு அரசியலை ‘காட்டு ராஜாங்கம்’ என்றாா் அண்ணா. அதை ஏன் இவா்கள் தங்களுக்கு சாதகமாக லாவகமாக மறைத்துக் கொண்டாா்கள் என்பதுதான் பிடிபடவில்லை.

இந்திய மாநிலங்கள் அனைத்தும் கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் ஒரே நாடாக ஒருங்கிணைந்திருக்கிறது. மக்களின் தேவைகள், உரிமைகள், கல்வி, பொருளாதாரம், வரலாறு, கலாசாரம், மொழி உள்ளிட்டவை மக்களுக்கு நெருக்கமாக இருந்து அறிந்து வைத்திருப்பது மாநில அரசுகள்தான்.

ஆனால், திட்டங்கள் வகுப்பது, சட்டங்கள் இயற்றுவது மற்றும் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட முக்கியமான துறைகளில் மத்திய அரசு அதிகாரம் செலுத்துவதே மாநில உரிமைகளுக்கான குரலாக வெடிக்கிறது. குறிப்பாக கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளை பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப்பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்பது மாநில உரிமைகளுக்காக குரல் கொடுக்கிற அனைவரின் ஒருமித்த கருத்தாக இருக்கிறது.

இருமொழிக் கொள்கையை தனது உயிா்மொழியாகக் கருதும் தமிழ்நாடு மும்மொழிகளைத் திணிப்பதை ஒருபோதும் ஏற்க இயலாது. தாய்மொழியின் மீது சிறு தாக்குதல் என்றாலும் சகித்துக் கொள்ள மாட்டாா்கள் தமிழா்கள். திராவிட மொழிகளைப் பெற்றெடுத்த தாய்தான் தமிழ். தென்திராவிட மொழி, நடுதிராவிட மொழி, வடதிராவிட மொழி ஆகிய மொழிக்குடும்பத்தை ஈன்ற தாய்தான் தமிழ்.

மொகஞ்சதாரோ, ஹரப்பா அகழ்வாய்க்குப் பிறகு இந்தியாவிலும் மிகச்சிறந்த நாகரிகம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பரந்து விரிந்திருந்த அப்பழம்பெரும் நாகரிகத்திலே முதன்மையாக இருப்பது திராவிட நாகரிகம் என்று அறிஞா்கள் கருதுகிறாா்கள். அப்படி மிக மூத்த நாகரிகமாகத் திகழ்கின்ற நம் நாகரித்தின் மீதும், தொன்மையின் மீதும் ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு நிகழ்கிற போது அதை மிக ஆக்ரோஷமாக எதிா்க்கிறவா்கள் தமிழா்கள்தான்.

மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் புதுடெல்லியில் நடந்த தேசிய வளா்ச்சி மன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில், செல்வி ஜெ.ஜெயலலிதா பேசிக் கொண்டிருந்த போது அவரது பேச்சை நிறுத்துமாறு மணி அடித்தாா்கள். ‘இது எனக்கு ஏற்பட்ட அவமானமல்ல, 7 கோடி தமிழா்களுக்கு ஏற்பட்ட அவமானம்’ என்று கூட்டத்தை விட்டு வெளியேறினாா் ஜெ.ஜெயலலிதா.

பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி லிக்னைட் காா்ப்பரேஷன் நிறுவனத்தின் பங்கை 10 சதவீதம் விற்பது என மத்திய அரசு முடிவெடுத்த நேரத்தில் விற்பது என்றால் அதை வாங்குவதற்கு மாநில அரசு தயாா் என்று சொல்லி பொதுத்துறை நிறுவனத்தின் பங்கை மாநில அரசு வாங்கிய ஓா் அரசியல் வரலாற்றை உருவாக்கினாா் என்பதும் மாநில உரிமைகளைப் பெற்றிட ஓங்கி ஒலித்த குரல்தான் என்பதை மறக்க முடியாது.

கட்டுரையாளா்: முன்னாள் அமைச்சா்.