இந்திய கூட்டாட்சியின் இன்றைய நிலை குறித்து விவாதிக்க அகில இந்திய அளவில் ஒரு கருத்தரங்கை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் மாணவர்களை கருத்துரையாற்ற வைக்க வேண்டும் என்று முடிவு செய்து, மாணவர்கள் இந்தத் தலைப்பில் என்ன சிந்திக்கிறார்கள் என்பதற்காக அவர்களுக்கு வழிகாட்டி, கருத்துரையாற்ற வைத்தது ஒரு தனித்துவ நிகழ்வு.
இந்த நிகழ்வை தொடங்கிவைக்க ஒரு துணைவேந்தரை அழைத்திருந்தனர். அவர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருப்பவர். கிராமத்துக்காரர்; விஞ்ஞானி. அவர் அந்த நிகழ்வில் தலைமை வகித்துப் பேசினார். அந்தப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராகப் பணியாற்றியவர். அவர் பேசியபோது, "கூட்டாட்சித் தத்துவம் குறித்து விளக்கப் போகிறீர்கள்; ஆய்வு செய்து முடிவுகள் கொண்டு வந்திருப்பீர்கள். எனக்குத் தத்துவம் தெரியாது; ஆனால், கூட்டாட்சி என்பது ஓர் ஆட்சி முறை என எனக்குத் தெரியும். இந்த ஆட்சியால் கிராமத்தில் வாழும் சாதாரண மனிதரின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டதா?, அதற்கு கூட்டாட்சி உதவியதா அல்லது ஏமாற்றியதா என்பதுதான் என் கேள்வி.
காரணம், சுதந்திரம் அடைந்து முக்கால் நூற்றாண்டைக் கடந்த நிலையில் கிராமத்து மக்களின் வாழ்க்கையைப் பார்க்கும்போது இந்தக் கேள்வி எனக்குள் எழுகிறது.
கிராமத்தில் பிறந்து, வளர்ந்தவன். இன்றும் 27 பேர் அடங்கிய கூட்டுக் குடும்பத்தில் வாழ்பவன். கிராம வாழ்க்கை எவ்வளவு சவாலானது என்று எனக்குத் தெரியும். எனது மாணவர்களுக்கு நான் கூறுவது சமூகத்தை சமூகத்துடன் உறவாடி படியுங்கள். புத்தகத்தில் வகுப்புக்குள் கிராமத்தைப் படிக்காதீர்கள். சமூகத்தைப் படியுங்கள், சமூகப் பிரச்னைகளுக்கு தீர்வைக் காணுங்கள். எனவே, மக்களின் வாழ்க்கைத்தரம் உயர வேண்டும். அதற்கு கூட்டாட்சி உதவினால் அதுவே நல்லாட்சி' என்றார்.
அடுத்து, கூட்டாட்சி முறை குறித்து ஆய்வு செய்து பல ஆய்வறிக்கைகள் புத்தகங்களை எழுதிய ஒருவர் இந்த நிகழ்வைத் தொடங்கிவைத்தார். அவரும் மத்திய பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர். அவர் உலகில் கூட்டாட்சி முறை உருவாகி வளர்ந்த வரலாறு, இந்தியா இறக்குமதி செய்து நடத்தி வரும் கூட்டாட்சி, அதிலுள்ள சிக்கல்கள் குறித்து மிக விரிவாக ஓர் ஆய்வு அறிக்கையை வாசித்தார்.
உலகம் முழுவதும் கூட்டாட்சி முறை சிக்கலில் சிக்கி இருப்பதை அவரது உரையில் படம் பிடித்துக் காண்பித்தார்.
அடுத்து என்னை முக்கிய கருத்துரையாற்ற கேட்டுக் கொண்டனர். நான் ஒரு முக்கியமான, கூட்டாட்சி முறை விவாதத்தில் விடுபட்ட ஒரு கருத்து குறித்து விளக்கப் போகிறேன் என்று கூறிவிட்டு, கூட்டாட்சி என்பது என்ன? என்பதை முதலில் விளக்கினேன். நாட்டில் பரந்த நிலப்பரப்பில் உள்ள மக்களுக்கு அரசை அடுக்குகளாகக் கட்டி அவை ஒன்றுடன் ஒன்று இணைந்து மக்களுக்குப் பணிகள் செய்ய வேண்டும். அது ஓர் ஆட்சி முறை; அப்படிப் பார்த்தால், அரசமைப்புச் சாசனப்படி இன்று மூன்று அரசுகள் இந்தியாவில் இருக்கின்றன. மத்திய, மாநில, உள்ளாட்சி அரசுகள். இந்த மூன்றும் இணைந்து அந்தந்த அரசுக்கு அரசமைப்புச் சாசனம் தந்த அதிகாரங்களைப் பயன்படுத்தி செயல்பட்டு மக்களுக்குப் பணி செய்ய வேண்டும்.
இந்தியாவில் கூட்டாட்சி என்றாலே பொதுப் புத்தியில் நாம் நுழைத்து வைத்திருப்பது மத்திய, மாநில உறவுகள் என்றுதான். மூன்றாவது அரசு ஒன்று அரசமைப்புச் சாசனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை யாரும் புரிந்து விவாதிப்பது இல்லை. அது மட்டுமல்ல, புரிந்தாலும் புரியாததுபோல் உள்ளாட்சியை அரசாகப் பார்த்து அதை வலுப்படுத்தி விடாமல் செயல்படுவது என்ற உளவியல் ஒன்று உள்ளது.
அரசமைப்புச் சாசனத்தின் அடிப்படைகள் என்று ஒருசில கூறுகள் உள்ளன. அவற்றை மாற்ற முடியாது. அதில் ஒன்று கூட்டாட்சி முறை. அப்படி இருக்கும்போது மூன்று அரசுகளின் உறவு முறைகள் குறித்துப் பேசாமல் மத்திய, மாநில அரசு உறவுகளை மட்டும் பேசுவது ஓர் அரசியல் அறியாமை அல்லது அது உள்ளாட்சி அரசுக்கு எதிரான சதி என்றே நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
காரணம், உள்ளாட்சியை அரசாகப் பார்க்க மக்களுக்கு விழிப்புணர்வைத் தந்து விட்டால் இன்றைய ஒட்டுமொத்த அரசியல் சூழலும் மாறிவிடும் என்ற புரிதல் கொண்டு சந்தை அரசியலில் பயணிக்கும் அனைத்துக் கட்சிகளும் உள்ளாட்சிக்கு எதிராகவே செயல்பட்டு வருகின்றன. அரசியல் கட்சிகள் மட்டுமே அல்ல; இன்றைய அரசியலில் பயன்பெற்று சுகபோக வாழ்க்கை வாழும் அனைத்துத் தரப்பினரும் அவ்வாறே செயல்படுகின்றனர்.
அடுத்து, உள்ளாட்சியும் ஓர் அரசே, கிராம சபையும் லோக்சபை போல் அரசமைப்புச் சாசனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, மூன்று அரசுகளும் அதற்கான அதிகாரங்களை ஒரே அரசமைப்புச் சாசனத்திலிருந்துதான் பெறுகின்றன என்பதை உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலமாக தெளிவுபடுத்தியுள்ளது.
ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்ட பிறகு, மாநில அரசின் சில அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன. அன்று மாநில கட்சிகள் இணைந்து நடத்திய மத்திய அரசில் மாநிலங்களுக்கான உரிமையைப் பெறுவதில் கவனம் செலுத்தாத நிலையில், மாநில அரசுகள் இழந்தது அதன் பங்கை அதிகாரத்தை மட்டும் அல்ல, உள்ளாட்சிக்குக் கிடைக்க வேண்டிய நிதியையே இழந்து விட்டது. காரணம், உள்ளாட்சியின் சார்பில் பேச எந்த தேசிய மற்றம் மாநிலக் கட்சிகளும் முன்வராத நிலையில் உள்ளாட்சிகளும் தன் பங்கை இழந்தன.
மத்திய அரசு வசூலிக்கும் வரி, அதாவது மூன்று சர்-சார்ஜ், எட்டு செஸ் என 11 இனங்களில் ஆண்டுக்கு ரூ. 6 லட்சம் கோடி வசூல் செய்கிறது. ஆனால், இது மாநில அரசுடன் பகிர்ந்து கொள்ளாத நிதியாக வைக்கப்பட்டு, மத்திய அரசே வைத்துள்ளது.
இந்தியாவின் பன்முகத் தன்மை, ஏற்றத்தாழ்வுகள், மக்களின் தனித்துவ வாழ்க்கை முறை தேவைகளை மத்திய, மாநில அரசுகளால் தீர்க்க முடியாது என்பதை நாடாளுமன்றத்தில் ஆய்வறிக்கைகள் மூலமாக விவாதத்தை வைத்துத்தான் உள்ளாட்சியை அரசாக உருவாக்கியுள்ளனர். ஆனால், அப்படிபட்ட புதிய உள்ளாட்சி அரசை திரை போட்டு மூடி வைத்துள்ளன நம் மாநில அரசுகள்.இவற்றையும்விட பல்வேறுவித உரிமைச் சட்டங்கள் இந்திய நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்டுள்ளன.
தகவல் உரிமைச் சட்டம், கல்வி உரிமைச் சட்டம், வன உரிமைச் சட்டம் எனப் பல்வேறு உரிமைச் சட்டங்கள் வந்துள்ளன. ஆதிவாசிகள் அதிகம் வாழும் பகுதிகளுக்கென "பெசா' என்ற சட்டம் கொண்டு வந்து வலுவான உள்ளாட்சியை ஆதிவாசிகளுக்கு உருவாக்கித் தந்தனர். இவை அனைத்தையும் அரசமைப்புச் சாசனத்துடன் இணைத்துப் பார்த்தால் நம் நாட்டு சாதாரண மக்களுக்கு எவ்வளவு பெரிய பலம் பொருந்திய ஆயுதங்களை சட்டங்களின் மூலமாக உருவாக்கித் தந்துள்ளனர் என்பது புரியும்.
இவை அனைத்தும் காகிதத்தில்தான் இருக்கின்றன. இவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்க இருந்த குடிமைச் சமூக அமைப்புகளும் வலுவிழந்து விட்டன. இந்தச் சூழலில் நாம் மக்களுக்கான ஒரு கூட்டாட்சியை உருவாக்க மக்கள் கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் கூட்டாட்சியை வலுவாக கட்ட உள்ளாட்சியை வலுப்படுத்துவதைத் தவிர வேறு வழி இல்லை. உள்ளாட்சியை வலுப்படுத்தும் முயற்சியில்தான் மாநிலத்துக்கான அதிகாரங்களையும் பெற முடியும். அதற்கு மக்களை இணைத்து விழிப்புணர்வை உருவாக்கி போராடுவதைத் தவிர வேறு வழியே இல்லை என்று கூறி என் உரையை நிறைவு செய்தேன்.
இதைத் தொடர்ந்து பேராசிரியர்களும், ஆய்வாளர்களும் குறிப்பாக மாணவர்களும் தங்கள் கருத்துகளை எடுத்து வைத்து விவாதித்தனர். மாணவர்கள் முன்வைத்த கேள்விகளில் சில: உண்மையிலேயே நாம் பிரதிநிதித்துவ மக்களாட்சியில் இருக்கி
றோமா? ஒரு மக்கள் பிரதிநிதி நாடாளுமன்றத்தில் எத்தனை லட்சம் மக்களுக்குப் பிரதிநிதியாக இருக்கிறார்? மேம்பாட்டு அரசியல் நடத்த இயலாமல் வாக்கு வங்கி அரசியலைச் செய்து, பெரும்பான்மை மக்களை இன்றும் இந்த நாட்டில் ஏழையாகத்தானே வைத்துள்ளனர்? கடந்த காலத்தில் நம் மக்களாட்சியை நம் கட்சிகள் மாண்புறச் செய்ததா? மாண்பை இழக்கச் செய்ததா?
கடந்த காலத்தில் நம் தாராளமய மக்களாட்சியை முறையாக உபயோகப்படுத்தியிருந்தால் அது அனைவருக்கும் பலன் கிட்டியிருக்குமே. ஆனால், கிட்டவில்லையே, ஏன்? எனவே இதை வைத்துப் பார்க்கும்போது நம் மக்களாட்சியைப் பாழ்படுத்தித்தான் இருக்கிறோம். இதன் விளைவுதான் மக்களாட்சியில் ஆட்சியாளர்கள் எதேச்சதிகாரம் பெற்றவர்களாக நடந்து கொள்கிறார்கள்? ஒரு சந்தைச் சூழல் அரசையும், ஆட்சியையும், சமூகத்தையும் ஆட்டி வைக்கிறது.
மக்களின் குரல் ஒலிக்கவில்லை. எனவே, இதற்குத் தீர்வு நம் அரசியல் கட்சிகளிடம் இல்லை. மாறாக, மக்களிடம்தான் இருக்கிறது. காரணம், அவர்களிடமிருந்துதான் அரசு அதிகாரத்தைப் பெறுகிறது. எனவே, அவர்களைச் சரி செய்வதுதான் முதல் பணியாக இருக்க முடியும். எங்கு பார்த்தாலும் சிக்கல், ஒரு தேக்கநிலை, நம்பிக்கையற்ற நிலை இருக்கும்போது, புது நம்பிக்கை என்பது மாற்றுப் பாதையில் உள்ளதாகத்தான் பலர் விவாதிக்கின்றனர்.
ஒரு மாற்றுத் தேடும் மனநிலையில்தான் அனைவரும் விவாதித்தனர். மாணவர்கள் விவாதித்தபோது ஏதோ ஒரு இனம்புரியாத கோபம் ஆட்சியின் மீது } அரசின் மீது அவர்களுக்கு இருப்பதை உணர முடிந்தது. நம் அரசியல் கட்சிகள் விவாதிக்கும் கூட்டாட்சி என்பது மாநிலம் வரை அதிகாரம் வந்தால் போதும்; ஆனால், ஆய்வாளர்கள் அது மக்கள் வரை வர வேண்டும் என்று பேசி நிறைவு செய்தனர்.
கட்டுரையாளர்:
பேராசிரியர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கூட்டாட்சி முறையை சீா்குலைக்கும் மத்திய அரசின் சதி முறியடிப்பு: பிரியங்கா
இன்றைய கூட்டாட்சியின் செயல்பாடுகள்

ஈரமான இதயங்களே உலகின் அழகு!

நிதானமே பிரதானம்...
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


