/

காசநோய் இல்லா இந்தியா காண்போம்

பல்லாயிரம் ஆண்டுகளாக மனித இனத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் நோய்களில் ஒன்றான காசநோய்...

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 7:18 pm

பொ. ஜெயசந்திரன்

பல்லாயிரம் ஆண்டுகளாக மனித இனத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் நோய்களில் ஒன்றான காசநோய், முன் ஜென்மத்தில் செய்த பாவத்தின் பலன் என்றும் கண்ணுக்கு புலப்படாத கொடிய உயிரினங்களால் ஏற்படுவது என்றும் முன்னோரின் தீய ஆவி குடும்பத்தில் பரவுகிறது என்றும் நம்பப்பட்டது. 
இக்கருத்துகளை கிரேக்க, ரோமனிய, எகிப்திய, ஐரோப்பிய நாடுகளில் இருந்தவர்கள் நம்பவும் செய்தனர். காசநோய், தைசிஸ், டேப்ஸ், ஒயிட் பிளேக் என வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டது. 
டியூபர்குளோசிஸ் (டி.பி) என்ற காசநோய் ஏற்படுத்திய இறப்பு விகிதம் காரணமாக நோய்களின் தலைவன் என்று கூறப்பட்டது. பிறகு காசநோய் நாம் செய்யும் பாவத்தால் ஏற்படுவதல்ல, காற்றில் பரவும் பாக்டீரியாவால் ஏற்படுவது என்று டாக்டர் ராபர்ட் காக் என்ற ஜெர்மானிய மருத்துவ விஞ்ஞானி நிரூபித்தார். அதன் பிறகுதான் மேலை நாட்டினரின் நம்பிக்கைகள் மாறத் தொடங்கின. 
மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ் என்ற பாக்டீரியாதான் காசநோய் ஏற்படக் காரணம் என்பதை உறுதி செய்த ராபர்ட் காக், 1882-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24-ஆம் தேதி அதை உலகிற்கு அறிவித்தார். அந்த நாளைத்தான் உலக காசநோய் விழிப்புணர்வு நாளாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. அதை அனைத்து நாடுகளும் கடைப்பிடித்து வருகின்றன. 
காச நோயாளி ஒவ்வொருமுறை இருமும்போதும், அவரது சளியிலிருந்து ஏறத்தாழ 5,000 மைக்கோபாக்டீரியம் கிருமிகள் வெளியேறும். பெண்களைவிட ஆண்களை அதிகமாக பாதிக்கும் இந்த நோய்க்கு வயது ஒரு பொருட்டில்லை. ஆனாலும் வளர்ந்த நாடுகளில் வயதானவர்களைத்தான் இது அதிகம் பாதித்திருக்கிறது. வளரும் நாடுகளில்  வறுமையினால் ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்களையும் குழந்தைகளையும் பதின்பருவத்தினரையும் அதிகம் பாதிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 
14 நாட்களுக்கு மேல் தொடர்ந்து இருக்கக்கூடிய இருமல், காய்ச்சல், உடல் எடை குறைதல், பசியின்மை, மூச்சுத்திணறல், மார்பு வலி, இரவு நேரத்தில் வியர்த்தல், இரத்தம் கலந்த சளி வெளியேறுதல், சோர்வு, மயக்கம், மந்தநிலை ஆகியவை காசநோய்க்கான அறிகுறிகள். இந்த நோயைக் கண்டறிய பரிசோதனை ஊசி போட்டுக்கொள்ள வேண்டும். 
72மணிநேரம் கழித்து ஊசி போட்ட இடத்தை ஆய்வு செய்யும்போது அவ்விடம் சிவந்தும் தடித்தும் இருந்து அதன் அளவு 10 எம்.எம்.அல்லது அதற்கு அதிகமாக இருந்தால் காசநோய் தாக்கம் உள்ளது என்பது உறுதியாகும். 
6 முதல் 9 எம்.எம் வரை தடிப்பு இருந்தால் காசநோயின் தாக்கம் இருக்க வாய்ப்பு உள்ளது. 5 எம்.எம்.-க்குக் குறைவாக இருந்தால் காசநோய் இல்லை எனலாம். ஆனால் இந்நோய் உறுதி செய்யப்பட்டால் மருத்துவரின் நேரடி மேற்பார்வையில் குறுகிய கால முறையில் சிகிச்சை வழங்கப்பட வேண்டும். ஆறு மாதங்களுக்கு நலப்பணியாளர் அல்லது அதற்காக பயிற்சி அளிக்கப்பட்ட பயிற்சியாளர் மூலமாக மருந்துகள் வழங்கப்படுகின்றன. 
புகை பிடிப்பவர்களுக்கு காசநோய் வரும் வாய்ப்பு அதிகம் என்றாலும், இந்நோய் புகை பிடிப்பதால் மட்டும் வருவதில்லை. யாருக்கும் வரலாம். கிருமியால் இது பரவக்கூடியது. சிகிச்சை பெற வரும் நோயாளிகளுடன் அதிக நேரம் செலவிடும் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோரையும் காசநோய் பாதிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. 

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களை காசநோய் எளிதில் பாதிக்கும். குறிப்பாக எச்.ஐ.வி., உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு அதன் தொடர்ச்சியாக மருந்து, மாத்திரை சாப்பிடுவர்களை காசநோய் உடனே பாதிக்கும். எச்.ஐ.வி.யும் காசநோயும் நெருக்கமான தொடர்புடையவை. 

இந்த நோய் சாதாரண மானவர்களைவிட எச்.ஐ.வி. பாதித்த நோயாளிகளை 8 முதல் 10 மடங்கு அதிகமாக தாக்கும். ஏற்கெனவே சிறுநீரகம் செயல் இழந்து சிகிச்சை பெறுபவர்களையும் இந்த நோய் கடுமையாக தாக்கும் திறன் படைத்தது. இவை தவிர உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளையும் தாக்கும். 

காசநோயால் ஏற்படும் உயிரிழப்புகளோடு, இது சமூகத்தில் ஏற்படுத்தும் களங்கத்தால் தற்கொலைகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதால் தற்போது தற்கொலை எண்ணிக்கை குறைந்துள்ளது.

காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள், முறையான சிகிச்சை மேற்கொண்டால் 90 % உயிரிழப்புகளையும், 70 % நோய்த்தொற்றுகளையும் தவிர்த்துவிட முடியும் என்கிறது உலக சுகாதார நிறுவனம். 

தலைமுடி, நகம் தவிர உடலின் எந்த உறுப்பிலும் காசநோய் பாதிப்பு ஏற்படக்கூடும். இந்நோய் 60 % முதல் 70 % வரை நுரையீரலைத் தாக்குகிறது. மற்ற உறுப்புகளை 30 % முதல் 40 % வரை பாதிக்கும. காசநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்க வேண்டியது மிகவும் முக்கியம். அப்படிக் கண்டுப்பிடித்து விட்டால் ஆறே மாதத்தில் நோயாளியை குணப்படுத்திவிடலாம். 

காசநோயால் மரணம் ஏற்படுவது "மல்டி டிரக் ரெசிஸ்டன்ஸ்' என்கிற நோய் முற்றிய நிலையில்தான். காசநோய் பாதித்தும், சரியாக மருந்து, மாத்திரைகள் சாப்பிடாமல் இருப்பது, தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளாதது போன்ற காரணங்களால் நோய் முற்றிய நிலைக்குச் செல்பவர்கள் உண்டு. 

உலகம் முழுவதும் நாள்தோறும் 28,500 பேர் காசநோய் கிருமிகளால் பாதிக்கப்படுகின்றனர். தினமும் 4,700 பேர் காசநோயால் உயிரிழிக்கிறார்கள். இந்தியா, இந்தோனேசியா, சீனா, பிலிப்பின்ஸ், பாகிஸ்தான், வங்கதேசம், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் காசநோய் பாதிப்பில் முன்னணியில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.  

இந்தியா முழுவதும் ஏற்பட்டுள்ள காசநோய் பாதிப்பில் 5 % தமிழகத்தில் காணப்படுகிறது. இந்தியாவில் அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 20 % பாதிப்பு உள்ளது. 2030-ஆம் ஆண்டிற்குள் காசநோயை இந்தியாவை விட்டு விரட்ட மருத்துவத் துறையினர் இலக்கு நிர்ணயித்துள்ளனர். அந்த இலக்கு எட்டப்படும் என்று நம்புவோம்.  

இன்று (மார்ச் 24) உலக காசநோய் விழிப்புணர்வு நாள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.