/

என்று முடியும் இந்த விளையாட்டு?

இந்தியா முழுவதும் ஆன்லைன் ரம்மி சூதாட்டம் மூலம் ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கில் பணம் புரளுகிறது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 7:18 pm

முனைவா் வைகைச்செல்வன்

இந்தியா முழுவதும் ஆன்லைன் ரம்மி சூதாட்டம் மூலம் ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கில் பணம் புரளுகிறது. சாமானியர்கள் முதல் படித்தவர்கள் வரை இந்த விளையாட்டுக்கு அடிமையாகி உள்ளனர். ரம்மி விளையாட்டு பொழுதுபோக்குவதற்காக என்று இருந்தவரை பிரச்னை இல்லை. ஆனால், அது எப்போது பணம் வைத்து விளையாடும் சூதாட்டமானதோ அப்போதிலிருந்து பிரச்னைக்குதரியதாகி விட்டது. எளிதில் பணம் சம்பாதிக்கும் ஆசையில் ஏராளமானோர் பணம் கட்டி ஆன்லைனில் இந்த விளையாட்டை விளையாடுகின்றனர். 
தொடக்கத்தில் நாம் ஜெயிப்பது போல் தெரிந்தாலும், கடைசியில் கணக்குப் பார்த்தால் நாம் வென்றதைவிட பலமடங்கு பணத்தை இழந்திருப்போம். பலரும், விட்டதைப் பிடித்து விட வேண்டும் என்கிற வெறியில், கடன் வாங்கியும், வீட்டில் உள்ள நகைகளையும், பொருள்களையும் அடகு வைத்தும் இந்த விளையாட்டை விளையாடி வருகிறார்கள். பலர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து, அதனால் நிம்மதியை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. 
இந்தியாவில் கிட்டத்தட்ட 130-க்கும் மேற்பட்ட ஆன்லைன் விளையாட்டுச் செயலிகள் செயல்பாட்டில் உள்ளன. இந்த செயலிகளை சர்வதேச கார்பரேட் நிறுவனங்கள் இயக்குகின்றன. இந்த செயலிகள் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் கார்பரேட் நிறுவனங்களுக்கு வருவாய் கிடைக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை நீண்டு கொண்டே சென்றதால், தமிழக அரசு 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்ய அவசர சட்டம் கொண்டு வந்தது. 
இதனை எதிர்த்து ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. வழக்கு விசாரணை முடிவில், "ஆன்லைன் விளையாட்டு திறமை சார்ந்த விளையாட்டு, சூதாட்டம் அல்ல என்று உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பு அளித்துள்ளது. சட்ட ஆணையமும் இதே கருத்தைத் தெரிவித்துள்ளது. எனவே, ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடை செய்ய முடியாது; முறைப்படுத்த மட்டுமே முடியும். எனவே, ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் செல்லாது' என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் செல்லாது என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. மேலும், ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஏற்படக்கூடிய பண இழப்பு, உயிரிழப்பு போன்றவை குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதியரசர் கே. சந்துரு தலைமையில் ஒரு குழுவயும் அமைத்தது. இவற்றை ஆராய்ந்த நீதியரசர் சந்துரு தலைமையிலான குழு, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டியது அவசியம்' பரிந்துரைத்திருந்தது. 
இதனைத் தொடர்ந்து தமிழக அரசு, ஆன்லைன் சூதாட்ட அவசர தடை சட்டத்தை கடந்த ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி கொண்டு வந்தது. இதற்கான சட்ட மசோதா,சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆளுநரின் நீண்ட நெடிய பரிசீலனைக்குப் பிறகு, அது திருப்பி அனுப்பப்பட்டது. 
தமிழக அரசு மீண்டும் அக்டோபர் 28-ஆம் தேதியன்று ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு, மேதகு ஆளுநர் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு அரசிடம் விளக்கம் கோரி கடிதம் எழுதினார். 
இந்த நிலையில், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை நடத்தும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் சிலர் ஆளுநரை சந்தித்தனர். ஆளுநர் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் ஐந்து மாதம் கடந்து விட்டது. மார்ச் 8-ஆம் தேதி இந்த மசோதா மீது சில கேள்விகளை எழுப்பி அதனை அரசுக்குத் திருப்பி அனுப்பியிருக்கிறார். 
ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளையாட்டின்  பாதிப்பால் தமிழ்நாட்டில் மட்டும் 47 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதனால் அதனைத் தடைசெய்ய வேண்டும் என்பதே அனைத்துக் கட்சிகளின் நிலைப்பாடாகவும் உள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய சட்டம் இயற்றுவதற்கு தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று ஆளுநர் தெரிவித்திருக்கிறார். இது மக்களாட்சியின் மகத்துவத்தை கேள்விக்குரியதாக்கியுள்ளது.  
மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறையின் கட்டுப்பாட்டில் இந்த விவகாரம் வருவதால்  இந்த மசோதா சட்டமாவது எப்படி சாத்தியமாகும் என்றும் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார் மேதகு ஆளுநர். 
ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு, மாநில அரசின் சட்ட மசோதாவை திருப்பி அனுப்ப ஆளுநருக்கு உரிமை இல்லை என்றும், ஒரு சட்டம் செல்லுமா, செல்லாதா என்று முடிவெடுக்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு மட்டுமே உண்டு என்றும் தெரிவித்திருக்கிறார். 
கொள்ளை நோய்த்தொற்றுப் பரவல் அச்சம் காரணமாக கடந்த மூன்றுஆண்டுகளாக  மக்கள் வீட்டுக்குள்ளே முடங்கியிருந்ததால் ஆன்லைன் சூதாட்டம் பிரபலமாகி விட்டது. தொடர்ந்து விளையாடியவர்கள், ஒரு கட்டத்திற்குப் பிறகு ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி விட்டனர். போதைப்பொருள் பயன்பாடு போல் சூதாட்டம் மாறி விட்டதால் பல விபரீதங்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு எது உந்து சக்தியாக இருக்கிறது? ஒருமுறை பணம் கட்டி விளையாடுகிறபோது, எப்படியாவது வென்று விடலாம் என்கிற ஆசையே உந்துசக்தியாக மாறி விடுகிறது. 
ஒருமுறை இரண்டுமுறை வென்றும் விடுவார்கள். இரண்டு முறை வென்றால், நான்கு முறை தோற்று விடுவார்கள். தொடர்ந்து தோற்றுக் கொண்டேயிருக்கிறோமே என்று வெளியேறி விடுவது நல்லது. விட்டதைப் பிடித்து விடலாம் என்கிற விபரீதமான ஆசைதான் பணத்தையும், நிம்மதியையும் இழக்கச் செய்கிறது; மீண்டும் எழ முடியாத பள்ளத்தில் விழ வைக்கிறது. 
பொதுவாக ஆன்லைன் விளையாட்டுகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று ஆன்லைன் திறன் விளையாட்டு, இரண்டு வாய்ப்பு அடிப்படையிலான விளையாட்டு. தன்னுடைய திறமையை வெளிப்படுத்தும் ஆன்லைன் விளையாட்டுகளால் எந்த பிரச்னையும் இல்லை. வாய்ப்பு அடிப்படையிலான ஆன்லைன் விளையாட்டுதான், சூதாட்டத்திற்கு இட்டுச் செல்கிறது. ஆன்லைன் விளையாட்டின் ஆபத்தை உணர்ந்ததால்தான், மத்திய அரசு உடனடியாக ஆன்லைன் சூதாட்டத்தை நிறுத்த வேண்டும் என்று மாநில முதல்வர்கள் கடிதம் எழுதினார்கள். 
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் சமூகத்திற்கு ஆபத்தானவை. இந்த நிலையில் மத்திய அரசும், மேதகு ஆளுநரும் பிடிவாதமாக இருக்கிறதைப் பார்க்கிறபோது வேதனையாக இருக்கிறது. 
ஆன்லைன் விளையாட்டுகளைப் பலரும் வீடுகளில் இருந்தபடியேதான் விளையாடுகிறார்கள். எனவே இந்த விளையாட்டுகளை "கூகுள் பிளே ஸ்டோர்' மற்றும் "ஆப்பிள் ஆப் ஸ்டோர்' ஆகியவற்றின் மூலமே கண்டறிய முடியும். ஆனால், மாநில அரசு சட்டம் இயற்றியதும் "கூகுள் பிளே ஸ்டோர்' மற்றும் "ஆப்பிள் ஆப் ஸ்டோர்' ஆகியவை இந்த விளையாட்டுகளை நீக்க மாட்டார்கள். அவர்களுக்கு இதற்கான உத்தரவு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திலிருந்து வந்தால் மட்டுமே செய்வார்கள். இதற்கு முன்னதாக சீன செயலிகளை அப்படி தான் மத்திய அரசு தடை செய்தது. 
அப்படிப் பார்த்தால் மத்திய அரசு தான், "கூகுள் பிளே ஸ்டோர்' மற்றும் "ஆப்பிள் ஆப் ஸ்டோர்'-க்கு உத்தரவு வழங்க வேண்டும். மத்திய அரசால் ஏன் இதை செய்ய முடியவில்லை? ஏற்கெனவே உச்சநீதிமன்றம் விளையாட்டுகளை இரண்டு விதமாக வரையறுத்துள்ளது. இதன்படி இந்த விளையாட்டுகளைத் தடைசெய்ய முடியாது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி நாட்டில் சட்டவிரோதம் என்று அறிவிக்கப்படாத தொழிலை யார் வேண்டுமானாலும் செய்யலாம். 
அப்படி இருக்கும்போது சட்டவிரோதம் என்று சொல்லப்படாத விஷயத்தை நீங்கள் எப்படித் தடைசெய்ய முடியும்? இதன்படிதான் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தரப்பில் வழக்கு தொடரப்படுகிறது. எனவே இதற்கு நிரந்தத் தீர்வு எப்படி ஏற்படுத்துவது என்ற கேள்வி எழுகிறது. அதற்கு முதலில் சம்பந்தப்பட்ட விளையாட்டுக்களுக்கு சில கட்டுப்பாடுகளை அரசு கொண்டுவர வேண்டும்.
இதற்கு சீனாவை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். அங்கு விளையாட்டு செயலிகளுக்கென அனுமதி இருக்கின்றபோதிலும், சில நேரக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருக்கின்றன. அதன்படி, சம்பந்தப்பட்ட செயலியை (ஆப்) பதிவிறக்கம் செய்யலாம், விளையாடலாம். ஆனால் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே விளையாட முடியும். அதாவது பகலில் மட்டுமே விளையாட முடியும். மேலும் ஒரு நாளைக்கு 10 டாலர் மட்டுமே இந்த விளையாட்டுக்காக செலவு செய்ய முடியும் இது போன்ற கட்டுப்பாடுகள் அங்கு விதிக்கப்பட்டுள்ளன. 
குழந்தைகளுக்கு வாரத்திற்கு 3 மணி நேரம் மட்டுமே விளையாட அனுமதி. வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தினமும் ஒரு மணி நேரம் மட்டுமே விளையாட முடியும். இந்த கட்டுப்பாடுகளை உருவாக்கி அவற்றைக் கண்காணிக்கும் பொறுப்பை சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் கொடுத்து விட்டனர். 
இந்த கட்டுப்பாடுகளை மீறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதுபோல் இங்கும் முதலில் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட வேண்டும். அவற்றை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். விரைவில் மத்திய - மாநில அரசுகள் ஆன்லைன் சூதாட்ட விவகாரத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். 

கட்டுரையாளர்: முன்னாள் அமைச்சர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.