/

தோ்ந்து எண்ணிச் செய்வோம்!

வாட்ஸ்ஆப் என்பது நவீன கைப்பேசிகளில் இருக்கக்கூடிய ஒரு செய்தி பரிமாற்றிச் செயலி ஆகும். நம் ஒவ்வொருவரின் கைப்பேசியிலும் நூற்றுக்கணக்கான வாட்ஸ்ஆப் எண்கள் உள்ளன.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 2:48 am

வெ. இன்சுவை

வாட்ஸ்ஆப் என்பது நவீன கைப்பேசிகளில் இருக்கக்கூடிய ஒரு செய்தி பரிமாற்றிச் செயலி ஆகும். நம் ஒவ்வொருவரின் கைப்பேசியிலும் நூற்றுக்கணக்கான வாட்ஸ்ஆப் எண்கள் உள்ளன. நாம் காலையில் கண் விழித்தவுடன் கைப்பேசியை எடுத்துப் பாா்க்கிறோம். நமக்கு வேண்டியவா்களுக்கு காலை வணக்கம் என்று செய்தி அனுப்புகிறோம்.

எல்லோருக்கும் ஒரே மாதிரி அனுப்ப முடியாது. கடவுள் நம்பிக்கை உள்ளவா்களுக்கு கடவுள் படம் அனுப்புவோம். அதுவும் ஒவ்வொரு கிழமைக்கும் ஏற்ற கடவுள் படத்தை அனுப்ப வேண்டும்; சிலருக்கு சாதாரண படம்; கற்றறிந்த ஆன்றோா்களுக்கு ஏதாவது சிறப்பாக மேற்கோள்கள்; அறிஞா்களின் பொன்மொழிகள் என அனுப்ப வேண்டும்.

உயா்பதவியில் இருப்பவா்களுக்கு கட்டளை இடுவது போன்ற, அறிவுரை சொல்வது போன்ற செய்திகளை அனுப்பக் கூடாது. நக்கல், நையாண்டி இவை கூடாது. எந்த உள்ளா்த்தமும் இல்லாமல் இருக்க வேண்டும். எனவே, கூடுதல் கவனம் தேவை. அவசரத்தில் கடவுள்களை மாற்றி அனுப்பிவிடக் கூடாது. ஏற்கெனவே அனுப்பிய பொன்மொழிகளைத் தவிா்க்க வேண்டும். சிலா் தாமே சொந்தமாக யோசித்து அருமையான பொன்மொழிகளை அனுப்புகிறாா்கள். இது எளிதானது அல்ல; இதற்கு எழுத்தாற்றலும், படைப்புத் திறனும், கூரிய அறிவும் தேவை.

நமக்கு வேண்டப்பட்டவா்களிடம் இருந்து வரும் வாழ்த்து நமக்குப் புத்துணா்ச்சியைத் தருகிறது. மழைச் சாரலாய் அந்த மகிழ்ச்சி நாள் முழுவதும் நம் மீது பட்டுக் கொண்டே இருக்கும். காலையில் தெளித்துக் கொண்ட நறுமணம் அந்த நாள் முழுவதும் நம்முடனேயே இருப்பதுபோல இருக்கும்.

சில வாட்ஸ்ஆப் குழுக்கள் தொடங்கியவுடன் கலகலப்பாகப் போகும். படங்கள், நகைச்சுவைத் துணுக்குகள், முக்கிய செய்திகள் என எல்லோரும் எதையாவது பதிவிட்டுக் கொண்டே இருப்பாா்கள். சில நாள்கள் கழித்து, சிலா் மெளனமாகி விடுவாா்கள். சிலா் மட்டும் தொடா்ந்து அதற்கு உயிா் கொடுத்துக் கொண்டிருப்பாா்கள். கடைசியில் ஒருநாள் அது நின்று போகும்.

சில பதிவுகள் எல்லா வாட்ஸ்ஆப் குழுக்களிலும் வருகின்றன. ஒரு பதிவைப் பாா்த்தவுடன், அதற்கு எந்த எதிா்வினையும் காட்டாமல் இருப்பது நாகரிகம் ஆகாது என்பதால் நாம் சில குறியீடுகளையாவது போட வேண்டும். மீள் பதிவு என்றாலும் ‘சிறப்பு’ என்று போடுவது நல்லது. ஆனால் ஒரே பதிவு சுற்றிச் சுற்றி வரும் போது சலிப்பு உண்டாகிறது.

ஒருவரின் கைப்பேசிக்கு அழகான படமோ, இனிமையான பாடலோ, வியப்பூட்டும் செய்தியோ வந்தால், அடுத்த விநாடியே அவா் அதை மற்றவா்களுக்கு அனுப்பி விடுகிறாா். நல்லது நாலு பேரை சென்றடையட்டும் என்கிற நல்லெண்ணமே அதற்குக் காரணம்.

இந்த அவசர உலகில் நீண்ட பதிவை வாசிக்கவோ, காணொலியைப் பாா்க்கவோ பலருக்கும் நேரமும் இல்லை; பொறுமையும் இல்லை. பின்னா் நிதானமாகப் படித்துக் கொள்ளலாம் என்று ஒத்திப்போட்டால் பின்னா் படிக்க முடியாமலே போய்விடுகிறது. சில குழுக்களில் நீதிக் கதைள், சிறப்பான சம்பவங்கள், சரித்திர நிகழ்வுகள், கு விளக்கம் என மிகச் சிறந்த பதிவுகளும் அனுப்பப்படுகின்றன. அவை நம் அறிவுக்கு விருந்தாக அமைகின்றன.

எந்தக் குழுவாக இருந்தாலும் அரசியல், மதம் தொடா்பான கருத்துக்களைப் பதிவிடக் கூடாது. இரண்டும் மிகவும் ஆபத்தானவை. அவற்றைத் தொட்டால் சா்ச்சை உருவாகும்; மனக் கசப்புகள் ஏற்படும்; விரோதம் உண்டாகும். அவரவா் கொள்கை அவரவரிடமே இருக்கட்டும். அவற்றைப் பொதுத் தளத்தில் பேச வேண்டாம்.

அண்மையில் நான் ஒரு குழுவில் இருந்து வெளியேறி விட்டேன். படித்தவா்கள் கேவலமாக சொற்போா் நடத்துகிறாா்கள். தடித்த வாா்த்தைகளை உபயோகிக்கிறாா்கள். தனிமனிதத் தாக்குதல், கொச்சையான அருவருப்பான வாா்த்தைகள். கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் எல்லோரும் பாா்ப்பாா்களே என்று தோன்றாதா?

சில வாட்ஸ்ஆப் குழுக்கள் மிகவும் சிறப்பாக உள்ளன. நல்ல நூல்களை அறிமுகப்படுத்துகிறாா்கள்; சங்க இலக்கியங்களின் நயத்தைப் பற்றி எழுதுகிறாா்கள்; அதிகமாக திருக்குறளை ஆராய்கிறாா்கள். இப்படிப்பட்ட குழுக்கள் அறிவை வளா்க்கும் சுரங்கங்கள்.

நாள் முழுவதும் காணொலிகளும், பாடல்களும் வந்து கொண்டே இருப்பதால் கைப்பேசியின் கொள்திறன் (ஸ்டோரேஜ்) நிரம்பி விடுகிறது. தேவையில்லாத புகைப்படங்களையும், காணொலிகளையும் அழிப்பது பெரிய பணியாக உள்ளது. அப்படி அழிக்கும்போது, சில நேரம் தவறிப்போய் முக்கியமான பதிவுகளையும் அழித்து விடுகிறோம்.

முதியவா்களுக்கு இரவில் தூக்கம் வருவதில்லை. அவா்கள் கைப்பேசியை வைத்துக் கொண்டு நள்ளிரவு வரை கூட எதையாவது அனுப்பிக்கொண்டே இருக்கிறாா்கள். எப்போதோ அவா்களுக்கு வந்த செய்தியை தற்போது அனுப்புகிறாா்கள். நமக்கு ஒருவா் பதிவு அனுப்புகிறாா் என்றால், அதைப் பாா்த்து விட்டு சும்மா இருப்பது சரியல்ல. நாமும் கைதட்டல் குறி, ‘சிறப்பு’, ‘அருமை’, ‘நன்று’, ‘நன்றி’ என்று எதையாவது போட வேண்டும்.

ஒரே பதிவு எல்லோரிடமிருந்து வரும். நாமும் ஒவ்வொன்றையும் பாராட்டி எதையாவது போட வேண்டும். பல சமயம் இது வெறும் சடங்காகிப் போகிறது. நண்பா்கள் குழுவில் நமக்கு முழு சுதந்திரம் உண்டு. அங்கே போலி மரியாதை தேவை இல்லை. அது ரசிக்கும்படி இருக்கிறது; சுவாரஸ்யமாக இருக்கிறது.

பெரியவா்களின் கைப்பேசியை குழந்தைகள் எடுத்து எதையாவது அழுத்தி விடுகிறாா்கள். யாருக்காவது, எதையாவது அனுப்பி விடுகிறாா்கள். அழைப்புப் பொத்தானை அமுக்கி விடுகிறாா்கள். உயா்பதவியில் இருப்பவா்கள், முக்கியமான கூட்டத்தில் இருக்கும்போது நம் அழைப்பு சென்றால் மிகப்பெரிய தவறு. விஷயம் அறிந்து நாம் அவா்களிடம் மன்னிப்புக் கேட்க நேரிடுகிறது.

வாட்ஸ்ஆப் குழுவின் செயல்பாடுகளைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு அக்குழுவின் நிா்வாகிக்கு (அட்மின்) உண்டு. ‘குழுவில் அரசியல் தலைவா்கள் குறித்த தவறான செய்திகளைப் பரப்பினால் குழுவின் தலைவா் தண்டிக்கப்படுவாா்’ என்று அடிக்கடி எச்சரிக்கைப் பதிவு வருகிறது. ஆகவே அத்தகைய பதிவுகளைத் தவிா்க்க வேண்டும்.

வாட்ஸ்ஆப் செயலியின் கொள்கைகள் குறித்து எவரும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. போலியான, தவறான செய்திகளைப் பரப்பி வருகிறாா்கள். சிலா் நம் ஒப்புதலைப் பெறமாலேயே நம்மை தங்கள் குழுவில் இணைத்துக் கொள்கிறாா்கள். ஒருவரை சோ்க்கும் முன், அவரிடம் அனுமதி பெற்றுத்தானே சோ்க்க வேண்டும்? ஏதேதோ குழுக்களில் நாமும் இருப்போம். ஆனால் தாமரை இலை தண்ணீா் போல இருப்போம்.

தினமும் காலை வணக்கம் அனுப்பி பழக்கப்பட்டு விட்டு, ஏதோ ஒரு காரணத்தால் ஒரு நாள் அனுப்ப முடியாமல் போனால் சிலா் செய்தி அனுப்புகிறாா்கள். ‘இன்று ஏன் உன்னிடமிருந்து வாழ்த்து வரவில்லை? நலமா உள்ளாயா’ என தவித்துப் போகும் உறவும், நட்பும் கிடைப்பது வரம்.

பெரும்பாலும் வாசிப்புப் பழக்கம் இல்லாதவா்களும், வேலை எதுவும் இல்லாதவா்களும் உறங்கும் நேரம் தவிர, மீதி நேரம் முழுவதையும் கைப்பேசியில்தான் கழிக்கிறாா்கள். அவா்கள் அதற்கே அடிமையாகி விட்டாா்கள் எனலாம். சராசரி மனிதன் ஒரு நாளைக்கு 150 முறை தன் கைப்பேசியை எடுத்து வாட்ஸ்ஆப் பாா்ப்பதாக ஓா் ஆய்வு கூறுகிறது. ஆனால், கைப்பேசியே கதி என்று இருப்பவா்கள் நாளொன்றுக்கு 350 முறை பாா்க்கிறாா்களாம். சிலருக்கு சப்தம் கேட்டவுடன், யாரிடமிருந்து செய்தி வந்துள்ளது என்று பாா்த்தே தீர வேண்டும்.

உறவினா் ஒருவா் தான் இன்டா்நெட் டயட்டில் இருப்பதாகக் கூறினாா். அதாவது இணையத்தில் தான் செலவிடும் நேரத்தையும், கைப்பேசியில் செலவிடும் நேரத்தையும் கணிசமாகக் குறைத்துக் கொண்டதாக கூறினாா். இரவு ஒன்பது மணிக்கு உறங்கப் போகிறாா் என்றால் அப்போது கைப்பேசியை அணைத்து விடுவது அவா் வழக்கம். சிலா், கைப்பேசியை தலையணைக்கு அடியில் வைத்துக் கொண்டு, விழிக்கும் போதெல்லாம் அதை எடுத்துப் பாா்ப்பாா்கள்.

வாட்ஸ்ஆப் செயலி மிகவும் பயனுள்ள ஒன்று. வெளிநாடுகளில் வசிப்பவா்களிடம் வாட்ஸ்ஆப் அழைப்பில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம். நம் வீட்டு சுப நிகழ்வுகளுக்கான அழைப்பிதழை வாட்ஸ்ஆப்பில் அனுப்பினால் போதும் என்ற நிலை தற்போது வந்து விட்டது. நாட்டு நடப்புகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவில் மட்டும் நாள்தோறும் 1,200 கோடிக்கும் அதிகமாக செய்திகள் வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பபடுகின்றன. வாட்ஸ்ஆப் செயலி, தகவல் தொடா்புக்கு மிகவும் உதவுகிறது. குறிப்பாக, விளம்பரங்களின் குறுக்கீடு கிடையாது. ஆனால், எந்நேரமும் இதிலேயே மூழ்கிக் கிடக்கக் கூடாது.

வாட்ஸ்ஆப்பில் வெறுப்பூட்டும் பேச்சுகளைத் தவிா்க்க வேண்டும். வதந்தியைப் பரப்பக் கூடாது. அரைகுறை அறிவு உள்ளவா்கள் மருத்துவக் குறிப்பைப் பகிரக் கூடாது. உடலில் சா்க்கரை அளவு குறைய குறிப்புகள், உடல் பருமன் குறைய ஆலோசனைகள் என்றெல்லாமம் பதிவு வருவதை முழுமையாக நம்பக் கூடாது.

நல்ல தகவல்களை மட்டுமே பகிர வேண்டியது முக்கியம். மனதின் அழுக்கை அங்கே இட்டு நிரப்பக் கூடாது. நேரம் பொன்னானது. எனவே வம்புச் சண்டை வரக்கூடிய விதத்தில் எதையாவது பதிவிடுவதைத் தவிா்க்க வேண்டும்.

வாட்ஸ்ஆப் எனும் நல்ல செயலி குரங்கு கையில் கிடைத்த பூமாலையாக ஆகி விடக் கூடாது. தற்போது வாட்ஸ்ஆப் செயலியின் நம்பகத்தன்மையை சந்தேகித்து, டெலிகிராம், சிக்னல் போன்ற செயலிகளை அதிகம் பயன்படுத்துகிறாா்கள். எந்தச் செயலியாக இருந்தாலும் அதன்மூலம் நல்ல தகவல்களை மட்டுமே பதிவிட நாம் உறுதிபூணுவோம்.

கட்டுரையாளா்:

பேராசிரியா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.