/

மகளிர் உரிமைத் தொகை: ஒரு பார்வை!

கடந்த (2021) சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றிக்கோட்டைத் தொடுவதற்கு முக்கியக் காரணமாக இருந்த திட்டம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் என்கிற திட்டம்தான்.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 12:54 pm

முனைவா் வைகைச்செல்வன்

கடந்த (2021) சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றிக்கோட்டைத் தொடுவதற்கு முக்கியக் காரணமாக இருந்த திட்டம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தரப்படும் என்கிற மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்தான். ஆனால், ஆட்சி அமைந்ததற்குப் பிறகு இது குறித்து அதிகாரபூர்வமான முன்னெடுப்பு எதுவும் இல்லாமல் இருந்தது. இதனால், இந்தத் திட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் இரண்டு ஆண்டுகளாக தி.மு.க. அரசாங்கத்தை கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்தன.

இதற்கு நேரடியாக பதில் கூறாமல், "பந்தியில் பாயசம் கடைசியில்தான் வரும்' என்று தொழில்துறை அமைச்சரும், "எந்தத் தேதி முதல் தருவோம் என்று சொன்னோமா' என்று நிதியமைச்சரும் பேச, ஏனைய அமைச்சர்கள் எதுவும் பேசாமல் இருந்தனர். இதனால்,  மகளிர் உரிமைத் தொகையான ஆயிரம் ரூபாய் விஷயத்தில் தி.மு.க. அரசு ஏமாற்றுகிறதோ என்ற ஐயம் மக்களிடையே எழுந்தது. 

தமிழக சட்டப்பேரவையில் தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்தபோது (மார்ச் 20)  மாநில நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதாவது, "செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகையான ஆயிரம் ரூபாய் மாதாமாதம் வழங்கப்படும்' என்று அறிவித்தார். இதனால் மீண்டும் சர்ச்சை தொடங்கியது. தேர்தல் அறிக்கையில் சொன்னது வேறு, இப்போது செய்திருப்பது வேறு என்று மாநிலம் முழுவதும் குரல்கள் எழுந்தன. 

தகுதியான குடும்பத்தலைவி, தகுதியற்ற குடும்பத்தலைவி என்று இருகூறாக தாய்க்குலங்களைப் பிரிப்பதன் மூலம் பிரச்னையை அரசே தொடங்கி வைத்து விட்டது. அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், சொந்த வீடு வைத்திருப்பவர்கள் ஆகியோருக்கு இந்த மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படாது என்றெல்லாம் பல்வேறு வரைமுறைகளை வகுத்து விட்டார்கள். 
வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், குடும்ப அட்டை மூலம்  அரிசி உள்பட அனைத்து பொருள்களும் வாங்குபவர்கள், முன்னுரிமை இல்லாதவர்கள் போன்றவர்களுக்கு மட்டுமே இந்த உரிமைத்தொகை வழங்கப்படும் வாய்ப்பு உள்ளது என்று தெரிய வருகிறது. புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் உயர்கல்வி பயிலும் மாணவிகள் மாதம் ஆயிரம் ரூபாய் வாங்கினாலும், அவர்களின் அம்மாக்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும். முதியோர் உதவித்தொகை பெறும் பெண்களுக்கும் மாதந்தோறும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்றெல்லாம் வரையறுக்கப்பட்டுள்ளது. 

சுமார் 2.2 லட்சம் கோடி பெண்களுக்குக் கொடுக்கப்படும் என்று சொன்ன இந்த உரிமைத்தொகை தற்போது ஒரு கோடி பெண்கள் என்ற அளவிற்கு சுருங்கி விட்டது.  ஒரு வீட்டில் அரசுப் பணியாளர் இருந்தால் அவ்வீட்டில் உள்ள மகளிருக்கு உரிமைத்தொகை கிடையாது என்கிறார்கள். அப்படியானால், அரசுப் பணியாளர்களின் ஊதியம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை அரசு தெரிவிக்க வேண்டுமா, இல்லையா? 

சொந்த வீடு வைத்திருப்பவர்களுக்கு கிடையாது என்கிறார்கள். சொந்த வீட்டில் வசிப்பவர்களுக்கிடையே சொத்து தகராறு ஏற்பட்டு பிரச்னை இருக்கிறது. அதோடு ,கூரை வீட்டில் வசிக்கின்ற பெண்களுக்கு  இந்தத் திட்டம் பொருந்துமா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். இப்படி தனித்தனி நிபந்தனைகளை விதித்து,  தகுதியை முடிவு செய்வதை விட குறிப்பிட்ட வருவாய் வரம்பை நிர்ணயித்து, அதற்கு மேல் வருவாய் உள்ளவர்கள் மகளிர் உரிமைத் தொகைத் திட்டதால் பயன்பெற முடியாது என்று அறிவிக்கலாமே. அரசின் அடுத்தகட்ட நகர்வு அப்படி அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

வருமானவரி செலுத்தும் குடும்பங்களில் கூட சுயமான பொருளதார சுதந்திரமற்ற பெண்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். அப்படி இருப்பவர்களுக்கும் நன்மை பயக்குமா இந்தத் திட்டம் என்பதை அறிய ஆவலாக உள்ளது. இது சலுகையோ, உதவியோ அல்ல என்றும் பெண்களுக்கான உரிமைத் தொகை என்றும் அரசு பெருமைப்பட்டுக்கொண்டாலும், பெண்களுடைய உரிமையைப் பெறுவதில் பல சிக்கல்கள் உள்ளன என்பதே உண்மை.  

தகுதி உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் இந்த உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அரசு கூறுகிறது. அப்படியென்றால், அந்தத் தகுதிகள் குறித்து  மக்களின் கருத்தையும் கேட்டறிய வேண்டும். அதன் பிறகு தேவைப்பட்டால் தகுதிகளில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியது இவ்வரசின் தலையாய கடமையாக இருக்க வேண்டும். இல்லையெனில், தி.மு.க. அரசு வாக்குக்காக பெண்களின் பெயரில் ஒரு  திட்டத்தை அறிவித்து மக்களை ஏமாற்றி விட்டார்கள் என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு வலு சேர்ந்துவிடும். 

இத்திட்டத்திற்காக ரூ. 7,000 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் மட்டுமல்ல,  எரிவாயு மானியம், பெட்ரோல்- டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்துத்தான் தி.மு.க. அரசு ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளது. இவற்றில் எந்தெந்த திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப் போகிறது என்பதும் மிக முக்கியமான ஒன்றாகும்.

தி.மு.க. அரசு பதவியேற்றவுடன், ஆவின் பால் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைப்பு, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், கரோனா காலகட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண நிதியாக குடும்பத்துக்கு 2,000 ரூபாய் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது. ஆனால், ஆட்சியமைத்து இரண்டாண்டுகளைக் கடந்துவிட்ட இன்றைய நிலையில், ஆரஞ்சு பால் பாக்கெட் விலை உயர்வு, பால் கொள்முதலில் குளறுபடி, தினசரி பால் விநியோகம் செய்வதில் தட்டுப்பாடு என்று பல்வேறு பிரச்னைகள் எழுந்துள்ளன. 

2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு நடந்த உள்ளாட்சி தேர்தலில் எதிர்க்கட்சிகள், தங்களது பிரசாரத்தின்போது, மிக முக்கியமான குற்றச்சாட்டாக தி.மு.க. அரசு மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவதாக வாக்குறுதி அளித்ததையே குறிப்பிட்டன. 

இப்போது தி.மு.க. அரசு செப்டம்பர் மாதம் முதல், இந்தத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. முதல் தவணையில் 28 மாத நிலுவைத் தொகையும் சேர்த்து 29 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோருகின்றன. தி.மு.க. ஆட்சியில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் ஜி.எஸ்.டி., கலால் வரி, பத்திரப்பதிவு, பெட்ரோல்-டீசல் வரி உயர்ந்துள்ளன. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை பூஜ்ஜியமாக இருந்திருக்க வேண்டும். 

ஆனால், தி.மு.க. ஆட்சியில் வரிவருவாய் அதிகரித்த போதும் வருவாய் பற்றாக்குறை வெறும் 30 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே குறைந்தது. மேலும் பட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறையைக் குறைக்க எந்தத் திட்டமும் வகுக்கப்படவில்லை. இந்த மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 7,000 கோடி ரூபாயில், ஒரு கோடி பேருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தரமுடியுமா என்று தெரியவில்லை. அரசு முதியோருக்கு வழங்கிவந்த உதவித்தொகையான மாதம் ஆயிரம் ரூபாயை தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நிறுத்திவிட்டது. அப்படியிருக்க, தற்போது மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் எப்படி வழங்க முடியும் என்று கேள்வி எழுந்துள்ளது. 

தமிழ்நாட்டில் அரசு சார்பில் வயது முதிர்ந்தவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது. வயது முதிர்வின் காரணமாக உழைத்து வருவாய் ஈட்டி வாழ முடியாமலும் ஆதரவற்ற நிலையிலும் உணவுக்கு வழியில்லாமல் துயரப்படும் முதியோர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு உதவிடும் நோக்கில், 1962-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு முதியோர் உதவித்தொகை திட்டம் என்ற ஒரு திட்டத்தினை வகுத்தது. இத்திட்டம் தொடங்கப்பட்ட போது மாதம் 20 ரூபாய் முதியோர் ஓய்வூதியமாக வழங்கப்பட்டது. இந்த உதவித்தொகை படிப்படியாக உயர்த்தி ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. 
இந்த உதவித்தொகை, தி.மு.க. ஆட்சி அமைத்தால் 1,500 ரூபாயாக உயர்த்தப்படும் என்று சொன்னார்கள். ஆனால், பல இடங்களில் இந்த உதவித்தொகையை தி.மு.க. அரசு நிறுத்தி இருக்கிறது. முதியோர், கணவனை இழந்தோருக்கு உதவித்தொகை நிறுத்தப்பட்டது வருத்தமளிக்கக் கூடிய ஒன்றாகும். தமிழ்நாட்டில் முதியோர் ஓய்வூதியம் பெற்ற பயனாளிகளில் 1,82,000 பேருக்கு ஓய்வூதியத்தை அரசு ரத்து செய்துள்ளது. இது ஏழை எளிய, வருவாய் இல்லாத முதியவர்களைக் கடும் பாதிப்புக்கு உள்ளாக்கியது. 
மகளிர் மேம்பாட்டுக்கழகம், ஊரக வளாச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் கீழ் உள்ள அமைப்புகளின் மூலம் தமிழகத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைகள் எத்தனை பேர்  என்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு மட்டுமே உரிமைத்தொகை பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது. ஏற்கெனவே, கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் இருந்தால், நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் அதனை த் தள்ளுபடி செய்வோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த தி.மு.க., பின்னர், தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி என்று அறிவித்தது. தி.மு.க.  தனது வாக்குறுதியில் இருந்து பின்வாங்கி விட்டது. தற்போது வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு மட்டும்தான் மகளிர் உரிமைத்தொகை என்று அறிவித்து மீண்டும் வாக்குறுதியிலிருந்து பின்வாங்கிவிடுமா தி.மு.க. என்று மக்கள் ஐயுறுகின்றனர்.

கட்டுரையாளர்: முன்னாள் அமைச்சர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.