மாணவர் இடைநிற்றல் தவிர்ப்போம்!
அண்மைக்காலமாக, கல்விக் கூடங்களில் பயிலும் மாணவர்கள் பற்றி வெளிவரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கக்கூடியவையாக உள்ளன.


அண்மைக்காலமாக, கல்விக் கூடங்களில் பயிலும் மாணவர்கள் பற்றி வெளிவரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கக்கூடியவையாக உள்ளன. அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி எல்லாவற்றிலும் கவலை தரும் செய்திகளே உலா வருகின்றன. அரசும், கல்வித்துறையும் எடுக்கும் எல்லா முயற்சிகளும் விழலுக்கு இறைத்த நீராக வீணாகிப் போனது ஏன்?
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுவதற்காகப் பதிவு செய்திருந்த மாணவ - மாணவிகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் செய்முறைத் தேர்வில் பங்கேற்கவில்லை என்பது அண்மையில் தெரிய வந்துள்ளது. அவர்களைக் கண்டறிந்து தேர்வில் பங்கேற்கச் செய்வதற்கான பணிகளை பள்ளிக் கல்வித்துறை முடுக்கி விட்டுள்ளது.
இது குறித்து அக்கறை காட்டாத தலைமையாசிரியர்கள், அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை என்ன பலனைத் தரும் என்பது தெரியவில்லை. இருந்தாலும் இந்த அலட்சியத்துக்கு என்ன காரணம் எனக் கண்டறிந்து அதனைக் களைய வேண்டியது அவசர அவசியமாகும்.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13-இல் தொடங்கி நடந்து வருகிறது. இத்தேர்வை சுமார் 16 லட்சம் மாணவ - மாணவியர் எழுதுகின்றனர். இதைத் தொடர்ந்து 10 -ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு இன்று (ஏப்ரல் 6) தொடங்கி ஏப்ரல் 20 வரை நடக்கவுள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத 9.38 லட்சம் மாணவ - மாணவியர் பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே பொதுத்தேர்வு எழுதவுள்ள பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வு அந்தந்த பள்ளிகளில் மார்ச் 20 முதல் 28 வரை நடத்தி முடிக்க வேண்டும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது.
ஆனால், பின்னர் செய்முறைத் தேர்வுக்கான அவகாசம் மார்ச் 31-ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டது.
செய்முறைத் தேர்வில் பங்கேற்காத மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தேர்வுத் துறை அறிவித்தது. செய்முறைத் தேர்வில் பங்கேற்காத மாணவர்கள் இடைநின்ற மாணவர்களாக இருப்பதால், செய்முறைத் தேர்வுக்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டது. செய்முறைத் தேர்வுக்கு வராத மாணவர்களைக் கண்டறிந்து அவர்களை பொதுத்தேர்வில் பங்கேற்க வைப்பதற்காக விரைவான நடவடிக்கைகளை எடுக்க பள்ளித் தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே இதைவிட அதிர்ச்சிதரும் செய்தியாக, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வில் சுமார் 62 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்காமல் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் இடைநின்ற மாணவர்கள் ஆவர். இந்நிலையில் பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்விலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கவில்லை.
மாணவர்களிடையே இந்த மெத்தனப் போக்கு எப்படி ஏற்பட்டது? பெற்றோர், ஆசிரியர்களுக்குத் தெரியாமலா இது நடந்தது? கல்வித்துறை கண்டு கொள்ளாமல் இருந்தது ஏன்? இந்த மாணவர்களின் அலட்சியப் ஹபோக்கு ஒரே நாளில் ஏற்பட்டதாகத் தெரியவில்லையே!
இந்நிலையில் தமிழக பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்காக மாதம் தோறும் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாதத்துக்கான அலுவல் ஆய்வுக் கூட்டம் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் கடந்த மார்ச் 29 அன்று தொடங்கியது.
இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், செயலர் சாகர்லா உஷா, ஆணையர் க. நந்தகுமார் உள்ளிட்ட துறை சார்ந்த இயக்குநர்கள், முதன்மை அதிகாரிகள், மாவட்டக் கல்வி அதிகாரிகள் என்று பலரும் கலந்து கொண்டனர். பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வு உள்ளிட்ட பொதுத் தேர்வுகளில் பங்கேற்காத மாணவர்களைக் கண்டறிந்து பொதுத் தேர்வு எழுத வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.
இந்தப் பணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையின் உதவிகளைப் பெற்றுக் கொள்ளவும் அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களும் வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர். கல்வியறிவில் முன்னேறிய மாநிலம் என்று கூறப்படும் தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதுவதில் ஏன் இந்த பின்னடைவு? எங்கோ, ஏதோ தவறு இருக்கிறது என்பது தெரியவில்லையா?
2020 முதல் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் கரோனா என்னும் பெருந்தொற்றின் காரணமாக இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கிப் போனது. பல்வேறு துறைகளும் பெரும் பாதிப்புக்கு உள்ளாயின. எல்லாவற்றையும் விட, பள்ளிக் கல்வி மிகப் பெரும் பாதிக்கு உள்ளாகிப் போனது. மாணவரும், பெற்றோரும் திசை தெரியாமல் திக்குமுடிக்காடிப் போய் விட்டனர்.
பள்ளிகளைத் திறக்க முடியவில்லை. மாணவர்களுக்கு நேரடியாக வகுப்புகளை நடத்த முடியவில்லை. இணையவழி வகுப்புகளும் எதிர்பார்த்த பயனைத் தரவில்லை. இதனால் தேர்வுகள் நடத்தப்படவில்லை. தொடர்ந்து நேரடிப் படிப்பு இல்லாமையால் தேர்வு பற்றிய அச்சம் மாணவர் மத்தியில் ஏற்படத் தொடங்கியது.
இப்போது பிளஸ் 2 என்னும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 62 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதவில்லை.
பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வில் 25 ஆயிரம் மாணவ - மாணவியர் பங்கேற்கவில்லை. இது எவ்வளவு பெரிய சமுதாயச் சீர்கேடு. இதற்குக் காரணம் இல்லாமல் இருக்குமா?
முதலில் தேர்வு எழுதாத மாணவர்கள் குறித்த முழுத் தகவல்களும் திரட்டப்பட வேண்டும். அவர்களின் சமூகப் பின்னணி, குடும்பச் சூழல், பெற்றோருக்கு நேர்ந்த பொருளாதார நெருக்கடிகள், பெருந்தொற்றின் பாதிப்புகள் ஆகியவை பற்றி விரிவாக ஆராயப்பட வேண்டும். மாணவர்களின் மனச் சோர்வுக்கு நியாயமான காரணம் ஏதாவது இருந்தால் அது குறித்துப் பரிசீலிக்க வேண்டும்.
எதற்கெடுத்தாலும் தேர்வு என்னும் போக்கு மாணவர்களைச் சோர்வடையச் செய்திருக்கிறது. அதனை எளிமைப்படுத்துவது நல்லது. பள்ளிகளில் மாணவர்களின் பன்முகத் தன்மையை வளர்க்காமல் மதிப்பெண் என்ற ஒற்றைத் தன்மையே கல்வி என்கிற சிந்தனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
பள்ளியில் அரும்பாடுபட்டுப் படித்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் இன்றைய நிலை என்ன? பன்னிரண்டு ஆண்டுகள் படித்துப் பள்ளியிலும், மாநிலத்திலும் முதல் மதிப்பெண் பெற்றதற்கு ஏதாவது மதிப்போ மரியாதையோ இருக்கிறதா? தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரால் இதுவரை இருந்துவந்த மரியாதையும் பறிக்கப்பட்டு விட்டது.
பிளஸ் 2 இறுதித் தேர்வில் தேர்ச்சி என்பது கல்லூரியில் சேர்வதற்கான தகுதியாக இதுவரைஅங்கீகரிக்கப்பட்டிருந்தது. இனிமேல் அதுவும் இல்லை. கலைக்கல்லூரியில் சேர வேண்டுமானால் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். மருத்துவக் கல்லூரியில் சேர வேண்டுமானால் "நீட்' தேர்வு எழுத வேண்டும்.
ஆசிரியர் பயிற்சிக்கான படிப்பைப் படித்துத் தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்றவர்கள், மறுபடியும் "டெட்' என்கிற தேர்வு எழுதித் தேர்ச்சி பெற வேண்டும். ஏதாவது ஒரு துறையைத் தேர்ந்தெடுத்துப் படித்துத் தேர்ச்சி பெற்றவர்கள் மறுபடியும் தேர்வு எழுத வேண்டும் என்பது என்ன நியாயம்? இப்படிச் செய்தால் ஒழுங்காகப் படித்துத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்குச் சோர்வு ஏற்படாதா?
இவ்வாறு படித்து தேர்வுக்கு மேல் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பாவது ஒழுங்காகக் கிடைக்கிறதா? எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்றால் என்ன செய்வது? தகுதி, திறமை பற்றிப் பேசி நடத்தப்படும் இந்தப் போட்டித் தேர்வுகளாவது நேர்மையாக நடைபெறுகிறதா? நீட் தேர்வு மற்றும் சர்வீஸ் கமிஷன் தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் தினந்தோறும் ஊடகங்களில் பேசு பொருளாக இருக்கின்றன.
இந்த முறைகேடுகள் பற்றி ஆய்வு செய்ய விசாரணைக் குழுக்கள் அமைக்கப்படுவதும், வழக்குகள் பதிவு செய்வதும் வாடிக்கையாகி விட்டன. ஆனால் அவற்றின் முடிவு மட்டும் பொதுவெளிக்கு வராமல் மர்மமாகவே இருந்து வருகிறது.
பெருந்தொற்றுக்குப் பிறகு நடுத்தரக் குடும்பங்களில் வருமானம் இல்லாமல் வறுமை சூழ்ந்து கொண்டது. பெரியவர்கள் மட்டுமல்லாமல் பிள்ளைகளும் வேலைக்குப் போய் பணம் ஈட்ட வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. பெருமளவிலான மாணவர்கள் பள்ளிப் படிப்பைத் துறந்து குழந்தைத் தொழிலாளராயினர். பத்தாம் வகுப்புக்கும், பன்னிரண்டாம் வகுப்புக்கும் இடைப்பட்ட நிலையில் பெண் பிள்ளைகளின் இளவயதுத் திருமணங்களும் கல்வியின் இடைநிற்றலுக்குக் காரணமாக இருக்கலாம். இவை பற்றியெல்லாம் அரசும், கல்வித் துறையும் ஆராய்ந்து உண்மைகளை வெளியிடல் வேண்டும்.
பள்ளிக் கல்வியே எல்லாக் கல்விக்கும் அடிப்படையாகும். அடிப்படை உறுதியாக இருந்தால்தான் கட்டப்படும் மாளிகையும் உறுதியாக நிற்கும். புதிய சமுதாயம் காணப் புறப்படுவோர் இதனைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
ஒருவரிடமுள்ள சிறந்த திறமையை வெளிப்படுத்துவதே உண்மையான கல்வி. "மனித வர்க்கமாகிய புத்தகத்தை விடச் சிறந்த புத்தகம் வேறு என்ன இருக்க முடியும்' என்று கேட்டார் மகாத்மா காந்தி.
புதிய தலைமுறையை உருவாக்குவது கல்வியாகும். அந்தக் கல்வியை மாணவர்கள் புறக்கணிக்கும் காரணத்தைக் கண்டறிய வேண்டும். முன்பே, அரசும், கல்வித்துறையும் இணைந்து கண்காணித்திருந்தால் இந்த இடைநிற்றல் ஏற்பட்டிருக்காது. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.
கட்டுரையாளர்: எழுத்தாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...