/

முனைவர் பவித்ரா நந்தகுமார்

 முன்பெல்லாம் இரண்டு தெருவுக்கு ஒரு இட்லி கடை இருக்கும். ஆவி பறக்க இட்லியும் தொட்டுக்கொள்ள சாம்பாரும் சட்னியுமாக காலை வேளைகளில் கிடைக்கும். வீட்டில் பெண்கள் உடல் நலம் குன்றி இருந்தால் அந்த ஆயா கடைகளில் விற்கும் இட்லியைத்தான் காலை உணவுக்கு வாங்கித் தருவார்கள். இன்று அந்த இட்லி கடைகளைத் தாண்டி தெருவுக்குத் தெரு துரித உணவுக் கடைகள் முளைத்திருக்கின்றன. என்றோ ஒரு நாள் தானே என வாங்கத் தொடங்கிய பழக்கம் வாரத்துக்கு இரண்டு மூன்று நாட்கள் என நீண்டு பின் கணக்கு வழக்கின்றி வாங்கிக்கொண்டிருக்கிறோம்.
 மாதம் ஒருநாள் குடும்பத்துடன் உணவகத்திற்கு சென்று சாப்பிடுவது என்று ஆரம்பித்தார்கள். இன்று அது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வாரம் ஒருநாள் என அதிகரித்து பின் இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறை வெளி உணவு என்னும் நிலை உருவாகி விட்டது. வெளியே செல்ல முடியாத நிலையில் கைப்பேசி வழியே பேசி உணவுகளை வீட்டிற்கே வரவழைக்கும் நிலைக்கு வந்துவிட்டோம்.
 இப்படி வெளியிலிருந்து தருவிக்கும் உணவுகளில் பெருவாரியான மக்களை கவர்ந்து இழுப்பது துரித உணவுகளே. இன்று தமிழ்நாட்டில் சாலையோரங்களில் மட்டுமல்லாது மூலை முடுக்கெங்கும் நீக்கமற நிறைந்திருப்பது இந்த துரித உணவகங்கள். உணவு பற்றிய புரிதல் ஏதுமின்றி வியாபாரத்தை மட்டுமே முன்னிறுத்தி உணவு தயாரிப்பவர்களே இப்படிப்பட்ட உணவகங்களை நடத்துகிறார்கள். இந்த உணவுப் பொருளுக்கு இவ்வளவுதான் நிறமிகள் சேர்க்க வேண்டும் என்ற அளவு இருக்கிறது. ஆனால் அதைப் பற்றிய எந்தப் புரிதலும் இன்றி வரைமுறைகளைக் கடந்து நிறமிகளை சேர்க்கிறார்கள்.
 சுவைக்காக அவர்கள் சேர்க்கும் ரசாயனங்கள் பிள்ளைகளின் கண்களைக் கவர்கின்றன. அவை அப்படியே வயிற்றையும் பதம் பார்க்கிறது. இப்படி சேர்க்கப்படும் செயற்கை நிறமிகள் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். இருப்பினும் வாடிக்கையாளர்கள் வண்ணமயமான உணவைத்தான் அதிகம் விரும்பி வாங்குகிறார்கள் என அவற்றைத் தயாரிப்பவர்கள் சொல்கிறார்கள்.
 வசதி படைத்தவர்கள் தரமான உணவகங்களை தேடிச்சென்று உண்கிறார்கள். ஆனால் வசதியற்றவர்கள் சாதாரண கடைகளை நம்பி இருக்க வேண்டிய துர்பாக்கிய நிலைமை. வேலைக்குச் செல்லும் இளைஞர்கள் இதுபோன்ற கடைகளை நம்பி நுழைந்து இன்று பல்வேறு நோய்களை வரவழைத்துக் கொண்டிருக்கிறார்கள். நல்ல உடல் நலமே சிறந்த மனபலத்தை கொடுக்கும். இளவயதில் உடல்நலம் பாதிக்கப்பட்டால் வாழ்வு நரகமாகிவிடும். பட்டு திருந்துவதைவிட வரும் முன்பே எச்சரிக்கையாக இருத்தல் நலம்.
 இளைஞர்களின் வாழ்க்கை முறையிலிருந்து துரித உணவைப் பிரிக்க வேண்டும். கரோனா ஊரடங்கு காலத்தில் அனைவரும் தங்கள் வீட்டில் தயாரித்த உணவு வகைகளையே சாப்பிட்டு வந்ததால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய தேவையே ஏற்படவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அந்த சில மாதங்களுக்கு அஜீரணம், பித்தம், வாந்தி, தலைவலி, வயிற்று வலி போன்ற தொல்லைகளிலிருந்து நமக்கு விடுதலை கிடைத்தது.
 இன்று வாழ்க்கைச் சக்கரம் பழையபடி உருளத் தொடங்கியதால் பழைய வேகம் துளிர் விடத் தொடங்கி விட்டது. உணவு நேரத்தைத் தாண்டி நடுநிசி நேரங்களில் உண்ணப்படும் துரித உணவுகளால் நம் கணையம் கதறுகிறது. இது போன்ற உணவுகளைத் தொடர்ந்து எடுத்துக்கொண்டால், பெண்களின் தாய்மை தடுக்கப்படுவதோடு ஆண்களின் ஆண்மை அழியக்கூடிய அபாயமும் இருக்கிறது. மரபு மாறிய உணவு முறையால்தான் பல பெண்களின் கருத்தரிப்பு இன்று கேள்விக்குறியாகி இருக்கிறது.
 காய்கறி, கீரைகளைக் கூட ரசாயனம் கலந்த நீரில் முக்கி எடுத்து விற்பனைக்கு வைக்கிறார்கள் என்பதை அறியும்போது எதைத்தான் நம்பி சாப்பிடுவது என்ற அச்சம் ஏற்படுகிறது. சமீபத்தில் கேரளத்தில் ஓர் இளம்பெண் துரித உணவு மோகத்தால் தன் இன்னுயிரை இழந்தார். கெட்டுப்போன சைவ உணவுகளை விட கெட்டுப்போன அசைவ உணவுகள் நம் உயிரைப் பறிக்கும் அபாயம் மிக்கவை.
 சென்ற மாதம் இரண்டு நாட்கள் வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. ரயிலில் சாப்பாடு சரிவர இருக்காது என இரண்டு வேளைக்கு கட்டுச்சோறு எடுத்துக்கொண்டோம். உறவினர் இருவரிடமிருந்து இருவேளை உணவுகள் அந்தந்த ஊர் நிறுத்தங்களில் ரயிலிலேயே கிடைக்கப் பெற்றோம். இந்த சுட்டெரிக்கும் கோடையில் கையோடு கொண்டு போயிருந்த எலுமிச்சம்பழத்தை சாறாக்கி உப்புப் போட்டு நீர் கலந்து குடித்தோம். அந்த இரண்டு நாள் பயணத்திலும் உடல்நலம் மிகச் சிறப்பாக இருந்தது. வீட்டு சாப்பாடு எடுத்துக்கொண்டதால் பயணக் களைப்பு ஏதுமின்றி மனம் குதூகலித்தது.
 ஆனால் எங்களுடன் பயணித்த பலர் உணவுக்காக பெரிதும் திண்டாடினார்கள். கிடைத்த உணவை வாங்கி உண்டு பெரும் சிரமத்துக்கு ஆளானார்கள். சிலருக்கு வாந்தி, வயிற்றுவலி என வேதனைகளும் வந்து சேர்ந்ததால் வழியெங்கும் புலம்பிக் கொண்டே வந்தார்கள்.
 முன்பெல்லாம் பயணம் என்றாலே உணவு பற்றிய திட்டமிடுதல் இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் உணவகங்கள் பெருகிப் போனதால் ஆங்காங்கே கிடைத்ததை சாப்பிட்டு கொள்ளலாம் என்ற எண்ணம் உள்ளது. சிலர், வீட்டிலிருந்து கிளம்பும் போது தண்ணீர் கூட எடுத்துச் செல்வதில்லை. வழியில் காசுகொடுத்து ஒரு லிட்டர் தண்ணீர் போத்தலை வாங்குகின்றனர்.
 சிலருக்கு உணவை எடுத்துச் செல்ல சோம்பேறித்தனம். இந்த மனோபாவம்தான் வாழ்க்கை முறையையே மாற்றி அமைக்கிறது. இளவயது மாரடைப்புகளுக்குக் காரணம் பெரும்பாலும் துரித உணவு பழக்கமே. நம்முடைய உடல் நலன் குறித்து கவலைப்படாமல், நாம் வேறு எது குறித்து கவலைப்படப் போகிறோம்? சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்?
 வாழை இலையில் வைத்து சாப்பிட நேரமில்லை, இடவசதியும் இல்லை என்பதால் கைக்கு அடக்கமாய் மடித்து காகிதத்தில் சுற்றிக் கொடுக்கப்படும் உணவை அப்படியே வாங்கி உண்கிறார்கள். வெளியே கிளம்புவதற்கு அரைமணி நேரம் முன்னதாக சற்று மெனக்கெட்டால் நமக்கான உணவை நாமே தயார் செய்து கொள்ளலாம்.
 அண்மையில், நண்பர் ஒருவர் "எங்களுக்கு உணவு தயாரிப்பதையே என் மனைவி புலம்பிக்கொண்டேதான் செய்வாள். அதனால் என் நண்பர்களையோ உறவினர்களையோ என் வீட்டுக்கு நான் அழைப்பது இல்லை' என்று மனம் கனத்துப் போய் சொன்னார். வீட்டில் உள்ளவர்களுக்கு சமைப்பதையே பெரிய தொந்தரவாக நினைக்கும் பெண்கள், விருந்தினர்கள் வந்தால் அவர்களை எப்படி கவனிப்பார்கள்? வழிப்போக்கர் அமர்ந்து இளைப்பாறிச் செல்ல வாசலில் திண்ணை வைத்து வீடு கட்டிய மரபு நம்முடையது. காலத்திற்கேற்ப மாற்றங்கள் ஏற்படுவது இயல்புதான். ஆனால் அடிப்படையே ஆட்டம் காணும்போது நிச்சயம் அதில் கவனம் செலுத்த வேண்டும்.
 விருந்தினர் வருகையைக் கொண்டாடிய நம் தமிழ் மரபு தற்போது அவர்களின் வருகையை தொல்லையாக எண்ணுகிறது. தற்போது விருந்தினர்களையும் உணவகங்களில் வரவேற்று துரித உணவுகளை உண்ணச் செய்து வழியனுப்பும் கலாசாரம் உருவாகி விட்டது. இதனால் பணம் செலவானாலும் பரவாயில்லை. உடல் அலட்டிக்கொள்ளாமல் இருக்கவேண்டும் என பெரும்பாலோர் நினைக்கின்றனர்.
 விருந்தோம்பல் நமது பண்பாட்டின் உச்சமாகும். ஆனால் அடுத்த தலைமுறையினருக்கு யாரெல்லாம் நம் உறவினர் என்பதுகூட தெரியாது. பெரும்பாலோர் ஒற்றைப் பிள்ளையாக வளர்வதால் அவர்களிடம் விட்டுக் கொடுத்தல் என்னும் பண்பே இருப்பதில்லை. சில வீடுகளில் உறவினர்கள் வரவே கூடாது எனும் அடக்குமுறை நிலவுகிறது.
 மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
 நோக்கக் குழையும் விருந்து
 என்கிறார் வள்ளுவர். அத்துடன் விருந்தினர்களை மனதார வரவேற்று உபசரிப்பது பெரும் பாக்கியம் என்றும் கூறுகிறார்.
 நாம் எந்த மனநிலையில் சமைக்கிறோம் என்பதும் முக்கியம் என்கிறார்கள் உளவியல் அறிஞர்கள். அதை விளக்கும் ஒரு குறுங்கதை. மன்னர் ஒருவரிடம் பணியாற்றி வந்த சமையல்காரர் பணி ஓய்வு பெற்றுவிட, மன்னருக்கு சமைத்துப் போட புது சமையல்காரர் நியமிக்கப்பட்டார். அவர் சமைத்த உணவின் மணமும் சுவையும் அலாதியாக இருந்தது. இரண்டு வாரங்கள் சென்றபின், மன்னருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது .
 ஏன் மன்னருக்கு திடீரென உடல் நலக்குறைவு என்று ஆராயத் தொடங்கினார் அமைச்சர். தரமான உணவு பொருள், சுத்தமான முறையில் தயார் செய்யப்பட்டு மன்னருக்குத் தரப்படுகிறது. இருப்பினும் ஏன் இந்த நிலை என விசாரித்ததில் புதிதாக நியமிக்கப்பட்ட சமையல்காரர், "இந்த மன்னனுக்கு என்ன இவ்வளவு வகைகள் சமைக்க வேண்டியிருக்கிறதே' என நொந்துகொண்டே சமையல் செய்தாராம். அந்த எண்ணத்தின் பிரதிபலிப்பால்தான் மன்னனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது என்ற உண்மை விளங்கியதாம்.
 வீட்டில் சமைப்போர் அதனை ஒரு சுமையாகக் கருதுவதால்தான் இப்படி ஓர் எண்ணம் மனதில் எழுகிறது. நம் குடும்பத்தினருக்கான அமிருதத்தை நாம் தயாரிக்கிறோம் என்ற உணர்வு ஏற்பட்டால் மனம் குதூகலிக்கும். என்றோ ஒருநாள் சலிப்பு வந்தால் தவறில்லை. நாள்தோறும் சலித்துக்கொண்டும் வெறுத்துக் கொண்டும் உணவை தயார் செய்தால் நம் உணவே நமக்கு நஞ்சாக மாறிவிடும். நமக்குப் பிடித்தவர்களுக்கு அமிருதத்தைப் பரிமாறப் போகிறோமா? நஞ்சைப் பரிமாறப் போகிறோமா? முடிவு நம் கைகளில்.
 
 கட்டுரையாளர்:
 எழுத்தாளர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.