/

கிருங்கை சேதுபதி

'இந்தியாவில் எத்தனையோ மதங்கள் இருக்கின்றன. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மதம் உண்டு. ஆனாலும் எல்லாராலும் கடைப்பிடிக்கப்படுகிற மதம் ஒன்றே ஒன்றுதான், அதுதான் தாமதம்' என்று சொன்னவர் கவியரசு கண்ணதாசன்.
 அது தவிர்க்க இயலாத தனிமதமாக, இன்றளவும் எல்லாருக்குமான பொதுமதமாக இருந்து வருகிறது. திருமணத்தின் முகூர்த்த நேரம் ஒன்றுதான் முறைப்படி அப்படியே கடைப்பிடிக்கிற ஒழுங்குக்கு உள்ளடங்கியிருக்கிறது. மற்றபடி, பொது அரங்க நிகழ்வுகள் பெரும்பாலும் காலங்கடந்தே தொடங்கப்படுகின்றன; கால நீட்சிபெற்றே முடிவுறுகின்றன.
 அப்போதெல்லாம் தப்பாமல் சொல்லப்படுகிற வாசகம், "காலத்தின் அருமை கருதி'. இது ஒப்புக்குச் சொல்லப்படுகிறதா? உணர்ந்து மொழியப்படுகிறதா என்று தெரியாது. அதன் அருமை தெரியாமலேயே பெரும்பாலான நிகழ்வுகள் நடந்துகொண்டே இருக்கின்றன.
 ஒரு நிகழ்வுக்காக, பல மணி நேரங்கள் பயணம் செய்து வருகை தரும் சிறப்புப் பேச்சாளருக்கு, சில மணித்துளிகள் தந்து, "காலம் கடந்துவிட்டபடியால், விரைந்து முடித்து விடுமாறு வேண்டுதல் விடுப்பதுண்டு. அவரும், "இன்னும் ஒரு கருத்தைச் சொல்லி, என் உரையை நிறைவுசெய்வேன்' என்று இன்னும் இன்னும் சில சொல்லி முடிப்பதற்குள் அமைப்பாளர் கைபிசைந்து நிற்பார்; நாகரிகமாகத் தண்ணீர்க் குடுவையை முன்கொண்டுவந்து நீட்டுவதுண்டு; அதையும் கடந்து அவர் பேசிக்கொண்டு போனால், "இத்துடன் முடித்துக் கொள்ளவும்' என்று துண்டுச் சீட்டெழுதி வைப்பதும் உண்டு; அப்போதும், "காலத்தின் அருமை கருதி' இன்னும் ஒரே ஒரு கருத்தைச் சொல்லி..' என்று நீட்டத் தொடங்கும்போது, இடைவிடாது கரவொலி எழுப்பி, அவையினர் அவரை விடைபெற வைப்பதும் உண்டு.
 அவர் என்ன செய்வார்? நிகழ்ச்சி உறுதி செய்த நாளில் இருந்து தலைப்புக் குறித்துச் சிந்தித்துத் தயார் செய்து வைத்திருப்பாரே. பல பேச்சாளர்கள் தாங்கள் தயாரித்துக் கொண்டுவந்த அனைத்தையும் சொல்லியே தீர்வது என்று பேசுவதும் உண்டு; அல்லது அந்த நேரத்தில் ஒலிபெருக்கி முன் வந்து நின்று என்ன தலைப்பு என்று கேட்டு, சிந்தையில் உதித்தவற்றையெல்லாம் சொல்லி முடித்து, "இன்னும் எவ்வளவோ சொல்லத் தோன்றுகிறது. ஆனாலும், காலத்தின் அருமை கருதி' எனச் சொல்லி விடைபெற்றுக் கொள்வதும் உண்டு.
 சிறப்புப் பேச்சாளருக்குச் சரிவாய்ப்பும், ஏனைய பேச்சாளர்களுக்குச் சமவாய்ப்பும் தரவேண்டும் என்று என்னதான் திட்டமிட்டிருந்தாலும், இடைச்செருகலாகச் சிலரைச் சேர்ப்பதும், கூடுதலாக, மரியாதை செய்தல், அறிவித்தல் எனச் சேர்த்துக் காலநீட்டிப்புச் செய்வதும் தவிர்க்கமுடியாமல் போய்விடுவதுண்டு.
 மாலை நிகழ்வு ஆறுமணிக்குத் தொடங்கும் என்று அழைப்பிதழில் போட்டிருந்தால், "மெதுவாகத்தானே தொடங்குவார்கள்' என்று பார்வையாளர்கள் ஏழு மணிக்கு வருவார்கள். பார்வையாளர்கள், தாமதமாய்த்தான் வருவார்கள் என்பதனால், ஆறு மணிக்குப் பதிலாக ஐந்து மணிக்கு என்று போட்டுவிட்டு, இன்னும் கூட்டம் வரவில்லை என்று நிகழ்வைத் தாமதமாகத் தொடங்குவதும் இயல்பாய்ப் போய்விட்டது.
 முன்பெல்லாம் பேச்சாளர்கள் எப்பொழுது வருவார்கள் என்று கூட்டம் காத்திருக்கும்; இப்பொழுதோ, கூட்டம் வரட்டும் என்று பேச்சாளர்களும் அமைப்பாளர்களும் காத்திருக்க நேர்கிறது.
 பேச்சின் தரம் அப்படியா, கேட்போர் தரம் மாறியிருக்கிறதா என்று தெரியவில்லை. காட்சி ஊடகங்களைக் காணுகிறவர்கள் பெருகியிருக்கிறார்கள். அவற்றில் தோன்றுகிறவர்களை அழைத்து நிகழ்ச்சிகள் நடத்தினால் கூட்டம் வரும் என்று கருதவும் செய்கிறார்கள். படாடோபமான விளம்பரங்கள், அறிவிப்புகள் என எத்தனை செய்தாலும் வருகிற கூட்டமே வருகிறது என்றும் சொல்கிறார்கள்.
 "முன்னிலையாளர்களாக இத்தனைபேர் எதற்கு' எனக் கேட்டால், "பிறகு எப்படிக் கூட்டம் வரும்' என்று கேட்கிற அமைப்பாளர்கள் இருக்கிறார்கள். நிகழ்வுக்கு முன்னால் வந்து அமர்கிறவர்களின் பெயர்ப்பட்டியல் அது என்று பின்னால்தான் தெரிந்துகொள்ள முடியும். முன்பெல்லாம் பேச்சாளர், பேசிவிட்டு, அவசரமாகப் பயணம் செய்யவேண்டி, மன்னிப்புக் கேட்டுக்கொண்டு இடையில் விடைபெறுவதுண்டு. இப்போது, மரியாதை நிமித்தம் வந்து அமர்ந்து முகம் காட்டிவிட்டு இடையிலேயே எழுந்து போகிற பார்வையாளர்கள் அதிகம்.
 இரண்டு அல்லது மூன்று மணிநேர நிகழ்வுக்கு, பத்துப் பதினைந்து பேர் பேச அழைக்கப்படுவார்கள். "ரத்தினச் சுருக்கமாய்ப் பேசுமாறு' விண்ணப்பமும் விடுக்கப்படும். புரவலர்களையெல்லாம் முன்னிலையாளர்களாக்குவதும், அவர்களை, "சில மணித்துளிகள் பேசுமாறு' அழைப்பதும் ஒரு சடங்கு. அவர்களும் ஒலிபெருக்கி முன் வந்து, தன் கையிலுள்ள அழைப்பிதழை வைத்துக்கொண்டு, அதில் இடம்பெற்றுள்ள பெயர்களையெல்லாம் தவறாமல் விளித்து, "அவர்களே, அவர்களே' என்று சொல்வதும், அதைக் கேட்கும் பெயராளர்கள் புன்னகை பூப்பதும், மெல்லக் கைகுவித்து வணங்குவதும் ஒத்திகையில்லாத அரங்கேற்றமாகும்.
 பேச்சு, சுவாரசியமாக இல்லையென்றால், அவையினர் பேசத் தொடங்குவதும், அறிவிப்பாளரோ, தலைவரோ, "அமைதி காக்கும்படி' வேண்டுகோள் விடுப்பதும் அடிக்கடி நிகழும். அதற்கென்றே சில மணித்துளிகள் செலவிடவும் நேரும்.
 முன்னிலையாளர்கள் எல்லாம், சொல்லியும் சொல்லாமலும் விடைபெற்றுக் கொண்ட பின்னர் மேடையிலும், அரங்கிலும் காலியான நாற்காலிகளே மிகுந்திருக்க, "காலத்தின் அருமை கருதிச் சிறப்புப் பேச்சாளர் பேசத் தொடங்கும்போது அவையின் தலைவர், நன்றி நவில்பவர், அமைப்பாளர், ஒலிபெருக்கி அமைப்பாளர் உள்ளிட்ட சிலர் மட்டும் பொறுமை காத்திருப்பர், முன்பெல்லாம் தலைமையுரைக்கும், சிறப்புரைக்கும்தான் தனி முக்கியத்துவம் இருக்கும். இப்போதோ, இணைப்புரையாளர்கள்தாம் அதிகநேரம் எடுத்துக் கொள்கிறார்கள். பேச்சுக்கு முன், பேச்சுக்குப் பின் என்று அவர்கள் நீட்டிமுழக்கத் தயாரித்துக் கொண்டுவரும் குறிப்புகள் பலநாள் தயாரிப்பாக இருக்கும்; இதற்கென்றே தனியேடு போட்டு எழுதி வைத்திருப்பதும் உண்டாம்.
 காலத்தின் அருமையும் தேவையும் கருதி, நிகழ்த்தப்பெற்ற பொழிவுகளால் எழுச்சி பெற்ற தலைமுறைகளே இன்றும் நிகழ்வுகளில் பங்கேற்கிறார்கள். செவியுணவின் சுவையறிந்த தலைமுறை அது; அதன்வழி, தமிழுணர்வைத் தக்கவைத்துக் கொண்ட தலைமுறையும்கூட.
 கற்றுப் பெற்ற அறிவைவிடவும் கேட்டுப்பெற்ற ஞானத்தால் தம்மைச் செழுமைப்படுத்திக் கொண்ட தலைமுறையைத் தொடர்ந்து வருவோரைக் காணோம்.
 அன்பர் ஒருவர் என்னிடம் ஆயாசப்பட்டுச் சொன்ன செய்தி நினைவுக்கு வருகிறது. "இன்னும் இந்த விழாக்கள் யாருக்காக நடத்தப்படுகின்றன? திரும்பத் திரும்ப வந்தவர்களே வருகிறார்கள்; அழைக்கப்படுபவர்களே மீளவும் அழைக்கப்படுகிறார்கள்; தலைப்புகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான். நவரசம் ததும்ப உரையாற்றும் பேச்சாளர்கள் அருகிப்போய் நகைச்சுவைத் துணுக்குகளை மட்டுமே உதிர்ப்பவர்கள் மிகுந்துவிட்டார்கள். அதிலும் கூறியது கூறலே அதிகம். ஏதேனும் ஒரு புதிய செய்தியை, சிந்தனையைச் செவிமடுக்கலாம் என்கிற எண்ணத்திற்கே இடமில்லாமல் போய்விட்டது..'
 முறையான உச்சரிப்பு, குரலில் ஏற்ற இறக்கம், கவிதைக்கும் உரைநடைக்கும் வேறுபாடறியச் சொல்லும் பாங்கு எல்லாம் போய், பெருங்குரல் எடுத்துப் பேசுவதும், "இந்த இடத்தில் நீங்கள் கைத்தட்ட வேண்டும்' என்று அடிக்கடி சொல்லிக் கைத்தட்டல் வாங்குவதும் இப்போது, வழக்கமாகிவிட்டது. மரபுசார் வட்டார வழக்குகள் குறைந்து, சிறிய, பெரிய திரைசார் மொழிநடையே ஆதிக்கம் செலுத்திவருகிறது.
 சிந்தனையைக் கிளர்த்தும் செய்திகளை முன்வைத்து, யாரேனும் பேசிவிடுவார்களேயானால், அடுத்து வருகிறவர் அள்ளித் தெளிக்கிற சிரிப்புத் துணுக்குகளுக்கு முன்னால் அவர்களின் சிந்தனைத் தெறிப்புகள் அடையாளம் தெரியாமல் கரைந்துபோய்விடுகின்றன. அந்த ரசனைக்குரிய மனநிலையிலேயே அவையினரை வைத்திருப்பதில் அநேகர் கண்ணும் கருத்துமாய் இருக்கிறார்கள்.
 கரோனா தீநுண்மிப் பரவலைத் தடுக்குமுகமாக, நடைமுறைப்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தால், பல அரங்க நிகழ்வுகள் நடைபெறாமலேயே நின்றுவிட்டன. தளர்வுகளுடன் கூடிய நிகழ்வுகள் தற்போது பழையபடி தொடங்கப்படுகின்றன. ஆனாலும், முன்புமாதிரி கூட்டம் வரவில்லை. வந்தவர்களில் பலர் அரங்கில் இருந்தாலும், அவர்களின் கவனங்கள் அவரவர் கரங்களில் இருக்கின்ற கைப்பேசிகளில் பதிந்திருக்கின்றன. ஈர்த்து வசப்படுத்தும் ஆற்றல் பேச்சாளர்களுக்கு எவ்வளவு இருக்கும் என்று தெரியவில்லை.
 அரங்கம் அமைக்க, அழைப்பிதழ் தயாரித்து அளிக்க, அழைக்க, நடத்தி முடிக்க என எத்தனையோ செலவுகள் செய்து நிகழ்வுகள் அமைக்கப்படுகின்றன. நிதிச்செலவைவிடவும், நிர்வகிப்பதற்கான உடல் உழைப்புப் பெரிது. இவ்வளவு செலவிட்டு நிகழ்த்தப்படும் விழாக்களினால் விளையும் பயன் யாது? பொழுதுபோக்கு என்ற பொதுச்சொல்லுக்குள் அரங்க நிகழ்வுகளை அடக்கி அமைதி கொள்வது சரிதானா?
 பேசுகிறவர் ஒருவர்; கேட்போர் பலர். பேச்சாளருக்கு வழங்கப்படுகிற காலம், பத்துமணித்துளிகள் என்றால், அரங்கில் இருப்பவர்கள் ஐநூற்றுவர் எனில், ஐயாயிரம் மணித்துளிகள் அங்கே செலவிடப்படுகின்றன என்பது கணக்கு. அதனால் ஏற்படும் வரவு யாது என்பதை இருதரப்பாரும் எண்ணிப்பார்க்க வேண்டியது இன்றியமையாதது.
 மற்ற கணக்குகள் இருக்கட்டும், மனித வாழ்வின் மகத்தான பொழுதுகளைச் செலவிட்டுச் செய்யும் இந்த ஒற்றைக் கணக்கையேனும் தயவுகூர்ந்து நினைவில் கொள்ளுங்கள் என்று உரத்துக் கூறவேண்டியிருக்கிறது.
 
 கட்டுரையாளர்:
 எழுத்தாளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.