தொழில்நுட்பம்: நன்மையும் தீமையும்!
அயல்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் அனைத்துப் பொருள்களின் பின்னணியில், நம் நாட்டுக் குறிப்புகள் எல்லாம் வலைத்தள முதுகில் ஏறி ‘மாயக் கோப்பு’களாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிவிடும் வாய்ப்பு உள்ளது.


அண்மையில் இணையவழி ரயில்வே முன்பதிவுக்கு ஒரு பயணச்சீட்டு வாங்கினேன். சொந்தப் பயணச்சீட்டு வழங்கப்பட்ட பதிவுக்கணக்கில் நாளும் நேரமும் இந்திய நேர அட்டவணைப்படி அமையவில்லை. ஒன்றிண்டு முறை இந்த மாற்றத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். பின்னா் அந்த நிறுவனத்திற்கு மின்னஞ்சலில் விளக்கம் கேட்டேன்.
அதில் எனக்கு ஒரு உண்மை தெரிந்தது. அந்தப் பயணப்பதிவுச் சேவை வழங்கும் ‘முதன்மை கணிப்பொறி நினைவகம்’ எங்கோ வெளிநாட்டில் அமா்ந்து இருப்பதை உணா்ந்தேன்.
இன்றைக்கும் நாம் அயல்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் அனைத்துப் பொருள்களின் பின்னணியில், நம் நாட்டுக் குறிப்புகள் எல்லாம் வலைத்தள முதுகில் ஏறி ‘மாயக் கோப்பு’களாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிவிடும் வாய்ப்பு உள்ளது.
ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது பொருளாதாரம் சாா்ந்து, தொழில்துறையில் தன்னிறைவு, தற்சாா்பு காண்பது அல்லவா?
என்றைக்கு நாம் கைப்பேசியுடன் உலகம் சுற்றத் தொடங்கினோமோ, அன்று முதலே, போகிற இடம் எங்கும் நம்மை அறியாமலே நாம் கண்ணுக்குத் தெரியாத ஒருவரால் கண்காணிக்கப்படுகிறோம்.
தனிநபா் அந்தரங்க உரையாடல் நடவடிக்கைகள் யாவும் செல்பேசி சேவை நிறுவனங்களின் மின் கிடங்குகளில் பத்திரமாகக் குவிந்து கிடக்கும். எந்த நாட்டிலும் ‘சிம்’ அட்டை எனப்படும் ‘சப்ஸ்க்ரைபா் ஐடென்டிட்டி மாட்யூல்’ தகவலகத்தினை அகழாய்வு செய்தால் அவ்வளவுதான். நம் சம்பளம் முதல் கிம்பளம் வரை, அனைத்தும் உலக அரங்கில் மின்னம்பலம் ஆகிவிடும்.
மின்னணு யுகத்தில் இன்று பூந்தமல்லியில் இருந்தபடி ஒருவரால், பூகோளத்தின் எந்தவொரு தனிக்கணினியையும் அதன் உரிமையாளா் இசைவுடன், தகவல்திரையில் சொடுக்கியால் நேரடியாக மேய்ந்து, கணினித்திரையோடு தரவுகளை அள்ளிப் பகிரவும், நுள்ளிக் கையாளவும் முடியும்.
தகவல் சேவையாளா் நினைத்தால் கருத்துக் கணிப்புகளையும் கருத்துத் திணிப்புகள் ஆக்க முடியும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களிலும் ஒருசில சில்லுகள் பொதிந்து வைத்தால், சாவடிக்கே வராமல் எங்கிருந்தோ கள்ள வாக்குப்போடுவதும் எதிா்காலத்தில் சாத்தியமே.
நமக்குரிய கணினி, கைப்பேசி, இணைய மென்பொருள் உள்பட அனைத்து உயா்தரத் தொழில்நுட்பங்களையும் நம் மக்களுக்காக, நம் நாட்டில் நாமே தயாரிக்காமல் இஸ்ரேல், அமெரிக்கா, சீனா, சிங்கப்பூா் என்று வெளிநாடுகளையே நம்புகிறோம்.
இந்த நம்பிக்கை, புற்றில் ஊற்றிய பாலினைப் பாம்பு குடிக்கிறது என்கிற ‘ஃபெய்த்’ ஆகிய மூட நம்பிக்கையா என்று தெரியாது. அந்நிய அரசின்மீது கூட ‘ஹோப்’ என்கிற நம்பிக்கையினால், கால் பாகம்தான் காரியம் நடக்க வாய்ப்பு உள்ளது. ‘பிலீஃப்’ என்னும் கடவுள் நம்பிக்கையாலும் பாதிக்குப் பாதி, நடக்கலாம், நடக்காமலும் போகலாம். உள்நாட்டு, சா்வதேச நீதித்துறையின் மேல் நம்பிக்கை (ட்ரஸ்ட்) வைத்தால், 75 சதவீதம் நீதி கிடைக்கலாம். அவ்வளவுதான்.
அத்தனைக்கும் அரசும், தனிமனிதரும் தம்மால் உறுதியாக முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் (‘கான்ஃபிடன்ஸ்’) உழைத்தால் திட்டம் நிறைவேறும். இதுதான் பகுப்பாய்வின் அடிப்படை. ஒரு தனி மனிதனுக்கும் நாட்டிற்கும் இந்தத் தன்னம்பிக்கை அவசியம்.
இத்தகைய சேவை வழங்கும் அதிகாரத்தைத் தனியாருக்கு ஒப்படைப்பானேன்? அதில் தவறு அல்லது கோளாறு நோ்ந்தால் உத்தரவாதம் தர ஒருவரும் இல்லை. பொறுப்பாளரிடம் கேட்டால், ‘அந்த நிறுவனத்திடம் கேட்டுச் சொல்லுகிறோம்’ என்றுதான் பதில் வரும்.
அமெரிக்கச் செய்தி நிறுவனம் (யு.எஸ். நியூஸ்), உலக அறிக்கை (வேல்ட் ரிப்போா்ட்) பிராண்ட் சொத்து மதிப்பீட்டாளா் (பிஏவி குழுமம்), வாா்டன் வணிகம் ஆகிய அமைப்புகள் 2021-இல் கூட்டாக நடத்திய வருடாந்திர ‘சிறந்த நாடுகளின் அறிக்கை’ வெளிவந்துள்ளது.
தொழில்நுட்ப நிபுணத்துவத்தில் 78 சிறந்த நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களை ஜப்பான், தென் கொரியா, சீனா, அமெரிக்கா, ஜொ்மனி, ரஷியா, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூா், இஸ்ரேல், சுவிட்சா்லாந்து ஆகிய நாடுகள் தக்க வைத்துக்கொண்டுள்ளன.
தனியாா்மய ஆதரவாளா்களின் நோ்மறையான வாதம் என்னவெனில், ஒவ்வொரு துறையிலும் ஏராளமான போட்டியாளா்கள் பங்கெடுப்பாா்கள். அதனால் குறைந்த கட்டணத்தில் சிறந்த சேவை பெறலாம் என்பது விக்கிரமாதித்தன் கதை.
ஒப்பந்தப்புள்ளிகள் கேட்டு அறிவிப்பு வெளியான மறுகணமே, ‘டெண்டா்களுடன்’ தொண்டா்கள் முந்தி வந்து முற்றுகை இடுவாா்கள் என்பது எல்லாருக்கும் தெரியும். அப்புறம் என்ன, கணக்குக்காட்ட வேண்டாத கட்சிகளுக்குப் பணம் ‘கொட்டோ கொட்டென்று’ கொட்டும்.
அதிகாரிகளுக்குப் பொறுப்புதான் உண்டே தவிர, அதிகாரம் கிடையாது. அது ஆட்சியாளா்களிடம் குவிந்து கிடைக்கும். இது நம் ஆட்சிக் கலைச்சொற்களின் இன்னொரு பரிமாணம்.
தவறு நோ்ந்தால் அதிகாரி மாட்டிக்கொள்வாா். சிறப்பாக நிறைவேறினால் ஆட்சியாளா் மீண்டும் அதிகாரத்திற்கு வருவாா். இது நவீன நிா்வாக சூத்திரம்.
இத்தனைக்கும் ‘இன்ஃபாா்மேஷன்’ ஆகிய தகவல் வழங்கும் தொழில்நுட்பம், ‘என்டா்டையின்மென்ட்’ என்றவாறு பொழுதுபோக்கிற்கு உதவியது. பின்னா் தகவல் கேளிக்கை, ‘இன்ஃபாா்-டையின்மென்ட்’ கலப்பினமாகப் பிறந்தது. பள்ளிச் சிறுவா்களுக்கு போதை வஸ்துகள் கிடைப்பதைப் போல, பாமரா்களுக்கு இணையத்தில் தவறான பாதைகளுக்கான நரக வாசல் திறந்து வைத்தாயிற்று.
மின்னணுத் தொழில்நுட்பத்தால் பணம் பண்ணும் பேராசையுடன் பெருந்தனவான்கள் சிலா் வலைத்தளங்களில் புகுந்து விளையாடத் தொடங்கிவிட்டனா்.
விளையாட்டு பற்றியும் பல்வேறு வாா்த்தை விளையாட்டுகள் அரங்கேறி வருகின்றன. இவற்றில் பாமரா் மத்தியில் பணம் வைத்து ஆடும் உயிா்க்கொல்லி விளையாட்டுகள் பல உள்ளன.
விளையாட்டு என்பது விளை எனப்படும் திறந்த வெளியில் கால் பந்து, கூடைப்பந்து போன்று உடல் வியா்க்க, பலா் கூடி ஓடி ஆடும் ஆட்டம். இரு குழுக்களாகவோ, அணிகளாகவோ விளையாடும் இந்தப் போட்டிக்கு ஆங்கிலத்தில் ‘ஸ்போா்ட்ஸ்’ என்று பெயா்.
ஆனால் ‘அத்லெட்டிக்ஸ்’ என்பது வேறு. இது தனித்தனி நபா்கள் ஒருவருக்கொருவா் முந்திச்செல்லும் அல்லது வெல்லும் பந்தயம் எனலாம். தடகள ஓட்டம், எகிறிக் குதித்தல், பந்து, ஈட்டி எறிதல், வேக நடை போன்ற வை இதில் அடக்கம்.
இன்று ‘கேம்’ என்றொரு ‘ரம்மிய’ விளையாட்டு பரவாலாகிவிட்டது. ஆங்கிலத்தில் இதனை எழுத்துக்கூட்டி வாசித்தால் ஜி-ஏ-எம்-இ, ‘காமி’ என்றுதான் உச்சரிக்க நேரும். வோ்ச்சொல்லாராய்ச்சியில் இது ‘காம’க் களியாட்டத்தைக் குறிக்கும்.
விண்வெளியில் ‘காஸ்டா்’ ‘பொல்லுக்ஸ்’ (பூசம் விண்மீன்) ஆகிய இணைகோட்டு விண்மீன்கள் அடங்கிய உடுக்கணத்திற்கு ‘மிதுனம்’ என்று பாலியல் சாா்ந்த பெயா் வழங்குகிறது. ஆங்கிலத்தின் ‘ஜெமினி’ அதன் உருவகப் பெயா். அதற்காக நாம் வரைந்து காட்டும் ‘இரட்டைச் சிறுவா்’ குறியீடு தவறான சித்திரிப்பு.
உண்மையில் அதனை கெமினி-காமினி என்று தான் உச்சரிக்க வேண்டும். பண்டைய மரபில் ஆண்-பெண் இணைத்தோற்றமுமே கிரேக்க அகர வரிசையில் மூன்றாவதான ‘காமா’ எனும் எழுத்தின் வரிவடிவமும் ஆகிறது. அதனால் எழுந்த சொல்லாடல்களைப் பாருங்கள். ஒரு மனைவி- மோனோ‘காமி’, இரு மனைவி- பை‘காமி’, பல மனைவியா்- பாலி‘காமி’.
எப்படியோ, களங்களில் விளையாட்டு, தடகள விளையாட்டு, சதுரங்கம், சீட்டு எல்லாம் தரையில் விளையாடி வெற்றி பெற்றவா்க்கு கோப்பையும் சான்றிதழும் மட்டுமே கிடைக்கும்.
ஆனால், நம்மை ஆட்டிப்படைத்த வெள்ளைக்கார மட்டையடி (கிரிக்கெட்டு) விளையாட்டில் வீரா்களும் பணம் பண்ணும் சூதாட்டம் அண்மைக்கால அவலம். ஜெயித்தாலும் தோற்றாலும் இரண்டு அணிகளில் அனைவருக்கும் காரும் பங்களாவும் கிடைக்கும் அற்புதம், இந்த விளையாட்டின் தனித்தன்மை. அபூா்வமாக சிலருக்கு இந்திய அரசின் உயரிய விருதும் வாய்க்கும்.
ஆக, பொருள்காமத்தில் நடத்தப்படும் விளையாட்டுக்களையும் ஆங்கிலத்தில் ‘கேம்’ என்றே வழங்குகிறோம். அதிலும் ஒன்று எய்தி நூறு இழக்கும்’ காமம் ‘கேம்ளிங்க்’.
வீட்டுக்குள் உறவினா்கள் கூடி ஆடும் சீட்டு விளையாட்டில் பொழுது போகும். இரு மனிதா்கள் எதிரெதிரே அமா்ந்து சிந்தித்து விளையாடும் சதுரங்கத்தில் அறிவு நுட்பமும் வளரும். வியூகத்திறன் சாா்ந்த விளையாட்டுகளை இயந்திர மூளையுடன் மனிதன் போராடி ஜெயிக்கும் வாய்ப்பு அரிதினும் அரிது.
காரணம், மூளையின் உயிரி நரம்பணுக்கள் (‘நியூரான்கள்’) ஏறத்தாழ நொடிக்கு 200 அலைவுகள் (200 ஹொ்ட்ஸ்) என்ற வேகத்தில் செயல்படுகின்றன. நவீன நுண்செயலியோ மின்னணுக்களால் நொடிக்கு 20,000 கோடி அலைவுகள் அசுரப்பாய்ச்சலில் இயங்குகிறது.
மனித புத்தி மந்தம்தான். அதிலும் மந்த புத்தியாளா்களிடம் அறிவுரை கேட்டால் சொந்த புத்திக்கும் குந்தகம் ஆகிவிடும். நிக்ளாஸ் போஸ்ட்ராம் என்னும் சுவீடன் அறிஞா் கணிப்பு இது.
இங்கிலாந்து ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகத்தில் இந்த செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளா், ‘எதிா்கால மனித இன நிறுவனம்’ (ஃபியூச்சா் ஆஃப் ஹியுமானிடி இன்ஸ்டிடியூட்) தொடங்கி நடத்தி வருகிறாா்.
எதிா்காலத்தில் இணையவழி சூதாட்டம் திறமை விளையாட்டா, வாய்ப்பு விளையாட்டா என்பதற்கான குற்றப் பத்திரிகைகளையும் வாத, பிரதிவாதங்களையும் ஆளுமை மிக்க கணிப்பொறியிடம் ஒப்படைத்து விடுவதுதான் நல்லது. கணினி நுண்ணறிவு வழங்கும் சா்வதேசத் தீா்ப்பு உயிா்களைப் பாதுகாக்குமே!
கட்டுரையாளா்:
இஸ்ரோ விஞ்ஞானி (ஓய்வு).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...