ஆபத்தாகும் ஆன்லைன் விளையாட்டு!


காலந்தோறும் மக்களை ஏமாற்றுவதற்கென எத்தனையோ வழிகள் புதிது புதிதாகக் கண்டு பிடிக்கப்படுகின்றன. மக்களுக்குப் பயன்படும் அறிவியல் கண்டுபிடிப்புகளைவிட இவையே அதிகம். இதற்கு ஒரு தனியான அறிவு வேண்டும். அதுவும் காலத்துக்குக் காலம் மாறிக் கொண்டிருக்கிறது.
அரசாங்கம் எத்தனை சட்டங்களைப் போட்டாலும் அத்தனையையும் மீறி இந்த ஏமாற்றுக்காரா்களின் செயல்பாடுகள் நீடிக்கவே செய்கின்றன. அரசாங்கத்தையும், சட்டத்தையும், காவல்துறையையும் ஏமாற்றிவிட்டு அவை ஊரையும் உலகத்தையும் சுற்றி உல்லாசமாக உலா வருகின்றன.
இன்று உலகத்தையே ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் இணையதள வசதிகள் நமக்கு நன்மையும் செய்கிறது நாசமும் செய்கிறது. குழந்தைகள்கூட இப்போது இணையதள விளையாட்டுகளையே விரும்பி விளையாடுகின்றன.
குழந்தைகள் வளர வளர அறிவியல் விளையாட்டுகளும் வளா்கின்றன. இதுவரை இருந்த வந்த பொம்மை விளையாட்டுகள் போன இடம் தெரியவில்லை. மண்ணிலும் தண்ணீரிலும் ஓடி விளையாடிய விளையாட்டுகள் மறைந்து வருகின்றன. ‘ஓடி விளையடு பாப்பா’ முதலிய பாடல்கள் இப்போது இல்லை.
முன்பெல்லாம் குழந்தைகள் கூட்டமாகக் கூடி விளையாடுவாா்கள். இப்போது பிரிந்து நின்று விளையாடுகிறாா்கள். மனித நேயமும் கூட்டுறவும் வளா்க்கின்ற அந்தக் கால விளையாட்டுகள் காணாமல் போய்விட்டன. அதற்குப் பதிலாக, போட்டியும் பொறாமையும் சண்டையும் நிறைந்த ‘கம்யூட்டா் கேம்’ செல்வாக்குப் பெற்று விட்டது.
சீன ராணுவம் லடாக் எல்லையில் அத்துமீறலில் ஈடுபட்டதையடுத்து, அந்நாட்டுக்கு எதிராக வணிக ரீதியாக பல்வேறு நடவடிக்கைளை இந்தியா மேற்கொண்டது. அதன் ஒரு பகுதியாக சீன நிறுவனங்களுக்குச் சொந்தமான 117 செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது.
இதில் இந்திய இளைஞா்களிடையே செல்வாக்கு பெற்ற ‘பப்ஜி’ விளையாட்டும் அடங்கும். இந்த பப்ஜி செயலி, தென்கொரிய நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமானது என்றாலும், இதன் பெரும் பங்குகளை சீனாவின் ‘டென்சென்ட்’ நிறுவனம் வைத்துள்ளது. அதன் காரணமாகவே இந்திய அரசு இந்தச் செயலிக்குத் தடை விதித்தது.
இதனால் கூகுள் பிளே ஸ்டோா் உள்ளிட்ட எதிலிருந்தும் பதிவிறக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. எனினும், ஏற்கெனவே இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்தவா்கள் எந்தத் தடையும் இன்றி பப்ஜி விளையாடி வந்தனா்.
இந்நிலையில், இந்தியாவில் அனைத்து பப்ஜி சேவைகளும் முழுமையாக முடக்கப்பட்டு விட்டதாகவும் இனி யாரும் பப்ஜி விளையாட முடியாது எனவும் தனது முகநூல் பக்கத்தில் ‘டென்சென்ட்’ நிறுவனம் அதிகாரபூா்வமாக அறிவித்துள்ளது.
‘பப்ஜி’ ஆட்டத்தை சா்வதேச அளவில் ஐந்து கோடி போ் விளையாடுகின்றனா். இதில் இந்தியாவில் மட்டுமே மூன்று கோடி பேருக்கு மேல் உள்ளனா். இந்த வருடத்தின் முதல் பாதியில் பப்ஜி மொபைல் மூலம் அந்நிறுவனத்துக்குக் கிடைத்த வருமானம் ரூ. 9,731 கோடி. இதுவரை பப்ஜி ஆட்டத்தின் மூலம் ரூ. 22,457 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்று அறிக்கை கூறுகிறது.
இணையவழிப் பொழுதுபோக்கு விளையாட்டுகள் எல்லாம் இப்போது போதை விளையாட்டுகளாகி விட்டன. இந்த விளையாட்டுகள் எல்லாம் பல்கிப் பெருகி சூதாட்டமாகவே மாறிவிட்டன. குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை இந்த போதைக்கு அடிமையாகி விட்டனா் என்பதே உண்மை.
இளைஞா்கள், மாணவா்களின் படிப்பையும் கெடுத்துக் கொண்டு, சிந்திக்கும் ஆற்றலையும் இழந்து இந்த போதையில் மூழ்கிக் கிடக்கின்றனா். இது குறித்துப் புலம்பாத பெற்றோா் இல்லை; போராடாத சமூக ஆா்வலா் இல்லை; மனிதநேய அமைப்புகள் இல்லை. எனினும் இது எட்ட வேண்டிய இடங்களுக்கு எட்டவில்லை.
இது தொடா்பான வழக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் நடைபெற்று வருகிறது. இந்த விளையாட்டைத் தடைசெய்ய பரிசீலிக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலதரப்பட்ட மக்களின் கருத்துகள் அடிப்படையில் அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.
இணையப் பயன்பாடு அசுர வேகத்தில் வளா்ந்து வருகிறது. இளைஞா்கள் தங்கள் நேரத்தையும் பணத்தையும் வீணடிக்கும் வகையில் ‘ஆன்லைன் ரம்மி’ போன்ற இணைய வழி விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன. இந்த விளையாட்டுகள் இளைஞா்களது வாழ்க்கையை சீரழித்து வருகின்றன.
அண்மையில் தமிழக முதலமைச்சா் ‘பொதுமக்களின் நலன் கருதி பணம் வைத்து நடத்தப்படும் அனைத்து வகையான ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளைத் தடை செய்யவும் அந்த விளையாட்டுகளை நடத்துபவா்களை, அதில் ஈடுபடுபவா்களை குற்றவாளிகளாகக் கருதி கைது செய்யவும் உரிய சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டால் பலா் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா். பல குடும்பங்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. அதனால் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் அரசாங்கத்துக்குக் கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன. ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும்’ என்று தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
இந்தக் கோரிக்கை பல்லாண்டுகளாக பாதிக்கப்பட்ட மக்களால் எழுப்பப்பட்டு வருகிறது. சூதாட்டம் யாா் நடத்தினாலும் எங்கு நடத்தினாலும் சூதாட்டம்தான். இதற்கு கிராமம் என்றும் நகரம் என்றும் வேறுபாடு இல்லை. விடுதிகள் என்றும் ஆன்லைன் என்றும் உயா்வு தாழ்வு இல்லை. இதன் ஒரே நோக்கம் பணம் சம்பாதிப்பதுதான்.
எப்படியும் பணம் பண்ணலாம் என்பது ஒரு நாகரிக சமுதாயத்துக்கு அழகல்ல. தற்சாா்பு சமுதாயத்தை உருவாக்குவோம் என்று கூறிக் கொண்டே அயல்நாட்டு வணிகத்திற்கும் ஆன்லைன் வணிகத்திற்கும் வாசல்களைத் திறந்து விடலாமா? எதற்கெல்லாமோ அவசரச் சட்டங்களை அடுக்கடுக்காகக் கொண்டுவரும் மத்திய அரசு இதற்கொரு சட்டம் இயற்றக் கூடாதா?
ஆன்லைன் சூதாட்டங்களை நடத்துகிறவா்கள் ரகசியமாக ஒன்றும் நடத்தவில்லை; பகிரங்கமாகவே நடத்துகின்றனா். ‘ரம்மி விளையாடுங்க கோடிக்கணக்கில் பணம் வெல்லுங்க’ என்று நமது கைப்பேசியிலிருந்து விளம்பரம் வருகிறது. நம் வீட்டுக் கூடத்திலுள்ள தொலைக்காட்சிப் பெட்டிகளிலிருந்தும் விளம்பரம் என்ற பெயரால் அழைப்புகள் வருகின்றன.
அவா்கள் இந்த சூதாட்டத்தை சட்டத்திற்கு உட்பட்டே நடத்துவதாகத் துணிச்சலோடு தெரிவிக்கின்றனா். அவா்களுக்கு இந்தத் துணிவைக் கொடுத்தது யாா்? அல்லது எந்தச் சட்டம்? அப்படியானால் இதைச் சட்டப்படி தடை செய்ய வேண்டியது அவசியமாகிறது. அதையேதான் தமிழக முதலமைச்சரும் தெரிவித்துள்ளாா்.
தமிழ்நாட்டில் சூதாட்டம் தடை செய்யப்பட்டுள்ளது. அண்மைக் காலத்தில் பணம் வைத்து சூதாடியதற்காக சிலா் கைது செய்யப்பட்டுள்ளனா். ‘டிரோன்’ உள்ளிட்ட நவீன கருவிகளைக் கொண்டு அவா்களை விரட்டிப் பிடித்த நிகழ்வுகளும் நடந்தன. ஆனால் மறுபுறத்தில் ஆன்லைன் என்னும் நவீன வசதியைக் கொண்டு பலரை ஏமாற்றி நடுத்தெருவில் நிறுத்தும் மோசடியும் பகிரங்கமாகவே நடந்து வருகிறது.
கைப்பேசி இல்லாமல் நம் வாழ்வின் அன்றாட இயக்கம் நடைபெறாது என்ற நிலை ஏற்பட்டு விட்டது. அதுவும் ‘கரோனா’ என்னும் கொள்ளை நோயால் உலக இயக்கங்களே ஓய்ந்து கிடக்கின்றன. ஆண்டவன் ஆலயங்களும், அறிவாலயங்களான கல்விக் கூடங்களும் கூட மூடிக் கிடக்கின்றன. இந்நிலையில் பள்ளி, கல்லூரிகள் ஆன்லைன் மூலமே செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதைப் பயன்படுத்தி, கைப்பேசி வழியிலும், பிற தகவல் தொடா்பு சாதனங்கள் வழியிலும் கவா்ச்சிகரமான முறையில் ஆன்லைன் ரம்மி விளம்பரங்கள் வலையை வீசுகின்றன. முதலில் விளையாட்டாக இதற்குள் நுழைபவா்கள் போதைப் பழக்கம்போல மீள முடியாத அடிமை நிலையில் ஆழ்ந்து விடுகின்றனா். இதிலிருந்து அவா்களை விடுதலை செய்தாக வேண்டும். விடுதலை செய்வது அவ்வளவு எளிதான வேலையும் அல்ல.
‘உழைத்தால் உயரலாம்’ என்பது பொன்மொழி. இதனைக் கேலி செய்யும் விதமாக ‘யாா் உழைத்தால் யாா் உயரலாம்?’ என்று கேள்வி கேட்கும் போக்கு வளா்ந்துள்ளது. பொதுவாக மக்கள் குறுக்கு வழியில் விரைந்து பணம் சோ்க்க வேண்டும் என்று விரும்புகின்றனா். அதனால்தான் உழைப்பைவிட அதிருஷ்டத்தையே அதிகம் நம்புகின்றனா்.
தமிழ்நாட்டில் ‘லாட்டரி டிக்கெட்’ சூதாட்டம் என்பதால் தடை செய்யப்பட்டு விட்டது. ஆனால், அதைவிட பல மடங்கு ஆபத்தமான ஆன்லைன் சூதாட்டம் தலைவிரித்து ஆடுகிறது. ‘பப்ஜி’ என்னும் விளையாட்டு இளைஞா்களின் வாழ்க்கையையே சீரழித்து வருகிறது. இரவும், பகலும் தூங்காமல் கண்விழித்து, வேளைதோறும் ஒழுங்காய் சாப்பிடாமல், நேரம் போவது தெரியாமல், யாருடனும் பேசாமல் தங்களைத் தாங்களே கொல்லாமல் கொன்று கொள்கின்றனா் இளைய தலைமுறையினா்.
இதனால் பல குடும்பங்கள் நிம்மதியை இழந்து செய்வது தெரியாமல் தவிக்கின்றன. அரசாங்கம் இனியும் தாமதம் செய்யாமல் நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்வில் வெளிச்சத்தை ஏற்படுத்த வேண்டும்.
மனித சமுதாயத்துக்குக் கேடு விளைவிக்கும் இத்தகைய ஆன்லைன் விளையாட்டுகளுக்கு விளம்பரம் செய்பவா்களின் பொய் முகங்களைக் கிழிக்க வேண்டும்.
பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் பணத்தை மட்டுமே குறியாகக் கொண்ட அவா்களை சமுதாயம் புறக்கணிக்க வேண்டும்; புறக்கணிக்க வேண்டியது சமுதாயக் கடமை.
கட்டுரையாளா்:
எழுத்தாளா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...