காத்திருக்கும் பொறியியல் மாணவர்கள்
ஒருவழியாக அண்ணா பல்கலைக்கழகத்தின் இறுதிப் பருவ தேர்வு முடிவுகள் வெளிவந்து விட்டன. இந்த முடிவுகளுக்காக காத்திருந்த மாணவர்களுக்கு, முடிவுகள் அதிர்ச்சியளித்தன என்று கூறுவது மிகையில்லை.


ஒருவழியாக அண்ணா பல்கலைக்கழகத்தின் இறுதிப் பருவ தேர்வு முடிவுகள் வெளிவந்து விட்டன. இந்த முடிவுகளுக்காக காத்திருந்த மாணவர்களுக்கு, முடிவுகள் அதிர்ச்சியளித்தன என்று கூறுவது மிகையில்லை.
தமிழகத்தின் பொறியியல் கல்லூரிகளை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது அண்ணா பல்கலைக்கழகம். புகழ் மிக்க இப்பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழகத்தில் சுமார் 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. ஒவ்வோராண்டும் சுமார் ஒரு லட்சம் மாணவர்கள் பொறியாளர்களாக வெளிவருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக, பொறியியல் கல்லூரிகளைத் தேர்வு செய்யும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதனால் பல பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டு கலை, அறிவியல் கல்லூரிகளாக மாற்றப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு பொதுப் பிரிவு கலந்தாய்வு முடிவுக்குப்பின், சுமார் 20-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் மாணவர் ஒருவர் கூடச் சேரவில்லை. பல கல்லூரிகளில் மிகக் குறைந்த மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். இந்தக் கல்லூரிகளின் நிர்வாகம் எப்படி ஊழியர்களுக்கு ஊதியம் தந்து கல்லூரியை நடத்த முடியும்?
கடந்த மார்ச் மாதத்திலிருந்து கரோனா தீநுண்மி பரவலால் உலகமே ஸ்தம்பித்து விட்டது. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு விட்டன. பொதுவாக இந்தியாவில் கல்வியாண்டு என்பது பள்ளிகளில் ஜூன் அல்லது ஜூலையில் தொடங்கி ஏப்ரல் மாதத்தில் முடிவடையும். கல்லூரிகளில் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இறுதிப் பருவத் தேர்வுகள் முடிந்து அடுத்த மாதத்தில் தேர்ச்சி முடிவுகள் வெளியாகும்.
இந்த ஆண்டு கரோனா தொற்றின் காரணமாக தமிழகத்தில் அனைத்துத் தேர்வுகளையும் ரத்து செய்யலாம் என்று முதல்வர் அறிவித்தார். இதற்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலும், பல்கலைக்கழக மானியக் குழுவும் முதலில் ஒப்புதல் அளித்து பின்னர் இறுதிப் பருவத் தேர்வுகளை மட்டும் நடத்தியே ஆக வேண்டும் என்று நீதிமன்றத்தில் தெரிவித்தன.
பொதுவாக இறுதிப் பருவத் தேர்வு எழுதும் மாணவர்கள் புராஜெக்ட், எலெக்டிவ் பாடங்களில் மட்டுமே தேர்வு எழுதுவார்கள். பல கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் இறுதிப் பருவத் தேர்வே கிடையாது. ஆனால், அண்ணா பல்கலைக்கழகமோ இறுதிப் பருவத் தேர்வு நடத்தாமல் பட்டம் வழங்க முடியாது என்று நீதிமன்றத்தில் தெரிவித்தது.
அதையடுத்து இறுதிப் பருவத் தேர்வுகள் நடைபெற்றன. ஒவ்வொரு மாணவரும் படிக்கும் பொறியியல் பாடத்தின் முக்கிய பிரிவுகள் இரண்டாம், மூன்றாம் ஆண்டுகளில் இடம் பெறும். ஆனால், அவர்களுக்கெல்லாம் தேர்வு நடத்தப்படவில்லை. மாறாக, தேவையேயில்லாமல் இறுதிப் பருவத் தேர்வை மாணவர்கள் எழுதியாக வேண்டும் என்று கூறப்பட்டது.
இதற்கு அவர்கள் சொன்ன காரணம், நேர்முகத்தேர்வு. வேலைக்குச் செல்லும் மாணவர்களுக்கு நேர்முகத் தேர்வில் பாடம் தொடர்பாகத்தான் கேள்வி கேட்பார்கள் என்று நீதிமன்றம்கூட உணரவில்லை. இதுபோன்ற வழக்குகளை நீதிமன்றம் தானாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை.
ஆன்லைன் முறையில் தேர்வு நடத்தியதிலும் பல்வேறு குளறுபடிகள். பலருக்கு இணையதள இணைப்பு கிடைக்கவில்லை. கிடைத்த பலருக்கும் சிறிது நேரத்தில் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்த அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் எப்போது தேர்வு என்பதை அறிவிக்கவில்லை.
இந்த நிலையில்தான் அண்மையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. முடிவுகளைப் பார்த்த மாணவர்களுக்கு அதிர்ச்சி. பல மாணவர்களுக்கான முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. பலருக்கு மறு தேர்வு நடக்கும் என அறிவிக்கப்பட்டது. நன்றாகப் படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.
இப்போது மீண்டும் மறுதேர்வு நடத்தப்படுமானால் அதற்கும் பணம் கட்ட வேண்டுமா என்பது தெரியவில்லை.
மாணவர்கள் தங்கள் கல்லூரியில் கேட்டால், பல்கலைக்கழகத்தில் இருந்து தகவல் வந்தால் சொல்கிறோம் என்கிறார்கள். பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகத்தில் கேட்டால், இணையதளத்தில் பாருங்கள் என்கிறார்கள். இணையதளத்தில் சாமானியமானவர்களால் ஒன்றுமே புரிந்து கொள்ள முடியவில்லை.
இப்போதைய சூழ்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்ட இறுதிப் பருவ மாணவர்களின் முடிவுகள் எப்போது வெளியிடப்படும்? அவர்களில் பலருக்கும் வேலை கிடைத்தும் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டதால் பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மறு தேர்வு என்றால் எப்போது நடக்கும்? அம்முடிவுகள் எப்போது வெளியிடப்படும்? அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்வு நடக்குமா? இறுதிப் பருவத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று பிற பருவங்களில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு எப்போது தேர்வு?
மாணவர்களுக்குத் தேர்வு வைக்க வேண்டும். அல்லது தேர்ச்சியளிக்க வேண்டும். பல்கலைக்கழக நிர்வாகம் ஏதாவது ஒரு முடிவை அறிவிக்க வேண்டும். அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராகச் செயல்படலாமா அண்ணா பல்கலைக்கழகம்? உடனடியாக ஒரு சுமுகத் தீர்வு காண வேண்டும்.
இப்போது பொறியியல் கலந்தாய்வு நடக்கிறது. இந்த ஆண்டும் வெளி மாநிலத்தில் பிளஸ் டூ படித்த பலருக்கு, தமிழகத்தில் மிகச் சிறந்த கல்லூரிகளில் படிக்க வாய்ப்பு கிடைக்கப் போகிறது. இது எப்படி சாத்தியம்? கடந்த சில ஆண்டுகளாகவே இது தொடர்பான பிரச்னை புகைந்து கொண்டிருக்கிறது. இதற்கு எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று தெரியவில்லை.
ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் நுழைவுத் தேர்வு மூலம் தேர்ச்சி பெற்று சேரும் மாணவர்களுக்கு பிரச்னையில்லை. ஆனால், மதிப்பெண் அடிப்படையில் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கும் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்குவது சரியா?
பிற மாநில அரசு பல்கலைக்கழகங்களிலோ கல்லூரிகளிலோ தமிழக மாணவர்கள் சேர முடியாது. அதே நிலையை ஏன் இங்கும் எடுக்கக் கூடாது?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...