/

கோதை ஜோதிலட்சுமி

மகாகவி பாரதியார் "வேதம் நிறைந்த தமிழ்நாடு' என்று பாடுகிறார். நமக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், நாம் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், வேதம் என்பது இந்திய தத்துவ மரபின் அடிப்படை. எல்லாரும் இங்கே வேதங்களை வாழ்வில் அன்றாடம் கடைப்பிடித்து வந்தவர்கள். இந்தச் செயல்பாடே பாரத தேசத்தின் கலாசார செழுமைக்குக் காரணம்.
 நம்மை அடக்கியாள விரும்பிய ஆங்கிலேயர்கள், நம்முடைய பெருமைகளும் நாம் நம்பும் தத்துவங்களும் தவறானவை அல்லது சாதாரணமானவை என்று நம்மிடமே நிறுவுவதற்கு முயற்சி மேற்கொண்டனர். அதில் வெற்றியும் கண்டனர். அதற்கு உறுதுணையாக நின்றவர்களுள் மாக்ஸ்முல்லர் எனும் ஜெர்மானியரும் ஒருவர்.
 கலாசார செழுமை மிக்க ஒரு தேசத்தில், அதன் வரலாறு அந்த கலாசாரத்தோடு பின்னிப் பிணைந்தது. இதனை முழுமையாகப் புரிந்து கொள்ள அந்தக் கலாசாரத்தோடு ஒன்றி வாழ்வது அவசியம். உலக வரைபடத்தில் மட்டுமே கண்டு ஒரு தேசத்தின் வரலாற்றை அதன் கலாசாரத்தை ஆராய்ச்சி செய்வதென்பது நகைப்புக்குரியது.
 ஒரு தேசத்தை கைப்பற்றி அடிமைப்படுத்த முற்படுவோரின் தூண்டுதலோடும் உதவியோடும் ஒருவர் மேற்கொள்ளும் ஆராய்ச்சி எதன்பாற்பட்டதாக இருக்கும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. சம்பளம் பெறும் வேலையாள் ஊதியம் தருவோருக்கு சாதகமாக நடந்து கொள்ள வேண்டியது கட்டாயம். மாக்ஸ்முல்லர், தன் கண்ணாலும் இந்தியாவைக் கண்டதில்லை. அவர், இந்திய தேசத்தின் பழமை மிக்க இலக்கியங்களை, தத்துவங்களை வேதங்களை ஆராய்ச்சி செய்தார்.
 எதன் மீது நமக்கு ஆர்வம் அதிகம் இருக்கிறதோ அதைக் காண வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதுதானே இயல்பு? ஆனால் மாக்ஸ்முல்லர் இந்தியாவுக்கு வரவில்லை.
 பல ஆண்டுகள் முயன்று வேதங்களை மொழிபெயர்த்தார். பாரத தேசத்தின் வரலாற்றை எழுதினார். ஒரு தேசத்தின் வரலாறு மற்றும் கலாசாரத்தின் மீது இத்தனை ஆர்வம் கொண்டு தன் வாழ்நாளில் ஒரு பகுதியை அர்ப்பணித்ததாகக் கூறுபவர், அந்த தேசத்தைக் காண வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் இருந்திருக்கிறார்.
 நான்கு வேதங்களில் ரிக் வேதமே அதிக ஸ்லோகங்களைக் கொண்டது. அதனை மாக்ஸ்முல்லர் ஒரு குழுவின் துணையோடு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மொழிபெயர்த்தார். இந்த முயற்சிக்கு ஆங்கில அரசுதான் பண உதவி செய்தது. தான் அடக்கி ஆள விரும்பும் ஒரு தேசத்தின் பொக்கிஷமாகக் கருதப்படும் வேதங்களை சிதைப்பதும் அவற்றின் கருத்துச் செறிவை நீர்த்துப்போகச் செய்வதும் அவர்களின் கட்டாயமாகிறது. இதையே மாக்ஸ்முல்லர் திறம்படச் செய்து முடித்தார்.
 ஞானத்தை போதிக்கும் ரிக் வேதத்தை "ஆரியப் படையெடுப்பு' என்று ஒரு சித்திரிப்பு வேலையை முல்லரின் குழு செய்தது. அது "மொழி ஆராய்ச்சி' என்று சொல்லப்பட்டாலும் அதற்குள் அவர்களது மதத்தைப் பரப்புவதற்குத் தேவையான வேலைகளும் இருந்தன. பல்லாயிரம் ஆண்டு பெருமை மிக்க வரலாற்றில் அதுவரை சொல்லப்படாத ஆரிய-திராவிடப் பாகுபாட்டை முன்வைத்தார்கள்.
 ஆரியர்கள் என்று ஒரு குழுவினர் ஐரோப்பிய நாடுகளில் இருந்து நாடோடிகளாக இந்தியா வந்து சேர்ந்ததாகவும், வந்து சேர்ந்த இடத்தில் அங்கு வாழ்ந்த திராவிடர்களை விரட்டிவிட்டு அதுவரை நாடோடிகளாக மட்டுமே வாழ்ந்தவர்கள் கங்கைக் கரையில் நிரந்தரமாகத் தங்கி விட்டதாகவும் பெரிய அளவில் புனைவுகளை முன்வைத்தார்கள். அதற்கு வலிந்து காரணங்களையும் கற்பித்து எழுதினார்கள்.
 ஜெர்மனியைச் சேர்ந்த முல்லர் அங்கிருந்தே ஆரியர்கள் புறப்பட்டு வந்ததைப் போல முதலில் சொன்னார். பின்னர், சம்பளம் தரும் பிரிட்டிஷ் அரசைக் குளிர்விப்பதற்காக சில அபத்தமான கதைகளையும் புனையத் தொடங்கினார்.
 அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள பெர்க் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராக இருந்த பேராசிரியர் க்ளாட் லெவி ஸ்ட்ராஸ், ஆரிய இனம் என்ற ஒன்றே இல்லை என்கிற முல்லரின் கருத்தை மறுத்தார். அதற்கு நியாயமான மறுப்புகளை முன்வைக்க முடியாத முல்லர், அதுவரை ஆரிய இனம் என்றும், அவர்கள் ஜெர்மனியில் இருந்து புறப்பட்ட குழு என்றும் சாதித்த அவரது வார்த்தைகளிலிருந்து அவரே முரண்பட்டார். "ஆரிய இனம்' என்பதை விடுத்து "ஆரிய மொழி' என்று பேசலானார்.
 ஐரோப்பிய மொழிகளுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் ஒற்றுமை இருப்பதாகவும், அது ஐரோப்பிய ஆரிய குடும்ப மொழி என்றார். ஆரியம் என்பது இன அடையாளம் அல்ல, மொழி அடையாளம் என்று தன் கருத்தில் இருந்து புரண்டார். இந்தியா புராதன வரலாறு கொண்ட தேசம் அல்ல, அதன் வரலாறு ஐரோப்பியர்களுக்கு சற்றே பின்தங்கியது என்று நிறுவுவதாகவே இவரது முடிவுகள் அமைந்திருந்தன.
 ராமகிருஷ்ண வேதாந்த மடத்தின் ஸ்தாபகர் சுவாமி அபேதானந்தா, மாக்ஸ்முல்லர் பற்றி பதிவு செய்திருக்கிறார். 1896-இல் ஐரோப்பிய நாடுகளில் பயணம் செய்து கொண்டிருந்த சுவாமி விவேகானந்தர், தன்னை உதவிக்கு அழைத்ததால் லண்டனுக்குப் பயணம் ஆனவர் அவர். ஞான யோக, ராஜயோக வகுப்புகளை லண்டனில் நிகழ்த்தியிருக்கிறார். அப்போது மாக்ஸ்முல்லரையும், அறுபது உபநிஷத்துக்களை ஜெர்மனியில் மொழிபெயர்த்த பால்டஷனயும் சந்தித்ததாகக் கூறுகிறார்.
 மாக்ஸ்முல்லருக்கு சம்ஸ்கிருதம் பேசவும் தெரியாது; பேசினால் புரிந்து கொள்ளவும் முடியாது என்றும், தனது நாக்கும் காதுகளும் சம்ஸ்கிருத உச்சரிப்புகளுக்குப் பழக்கப்படவில்லை என்று மாக்ஸ்முல்லரே ஒப்புக் கொண்டார் எனவும் அபேதானந்தா கூறுகிறார்.
 இப்படி சம்ஸ்கிருதம் அறியாதவர்தான் ரிக் வேதத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார். அதாவது ஆங்கிலேயர்கள் தந்த பொருளுதவியைக் கொண்டு தனது குழுவினரை வைத்து உண்மைக்குப் புறம்பான தகவல்களை ஆவணப்படுத்தினார். வேதத்திற்கு காலத்தையும் நிர்ணயித்தார். வேதத்திற்கு அவர் காலம் சொன்ன விதம் நகைப்புக்குரியது.
 பால கங்காதர திலகர், ரிக் வேதத்தில் காணப்படும் வானியல் கருத்துகளை முன்வைத்து, புனர்பூச நட்சத்திரம் பற்றி உள்ள ரிக்வேதக் குறிப்பை சுட்டிக்காட்டி, வேதத்தின் காலத்தை கி.மு 6500 என்று குறிப்பிட்டார். சரஸ்வதி நதி கடலில் கலக்கும் நதி என்று ரிக் வேதம் கூறுகிறது. கி.மு 1900 வாக்கில் ஏற்பட்ட பூகம்பம் காரணமாக சரஸ்வதி நதி தடம் மாறியது. ரிக் வேதத்தின் காலம் அதற்கும் முற்பட்டது என்று சிலர் கணிக்கின்றனர்.
 இருநூறு ஆண்டு காலத்துக்கு ஒருமுறை ஒரு மொழி தன்னுடைய நடை அல்லது பாணியில் மாற்றத்தை கொள்ளும் என்று மாக்ஸ்முல்லர் வரையறுத்து கொண்டார். அதன்படி, வேதங்கள், வேதத்தின் பகுதிகள், வேதாந்தமான உபநிஷத்துக்கள் அனைத்தையும் 200 ஆண்டு கால இடைவெளிக்குள் திணித்தார். ராமாயணம், மகாபாரதம் என அனைத்தும் நிகழ்ந்தது 600 ஆண்டுகளுக்குள்தான் என்றும் தீர்மானித்தார். அதிகபட்சம் கிமு 1200 ஆண்டுகள் தான் பழமை வாய்ந்தது ரிக் வேதம் என்றார்.
 அப்பொழுதே மேலைநாட்டு ஆராய்ச்சியாளர்கள் இப்படி நிகழ்வதற்கு வாய்ப்பு இல்லை என்று இந்தக் கருத்தை உதாரணங்களோடு மறுத்தார்கள். அப்போதும் தன் வாக்கிலிருந்து தானே தடுமாறினார். "எப்படிப் பார்த்தாலும் கி.மு. 1200 என்பதற்குக் கீழே வர முடியாது என்பதுதான் என்னுடைய கணிப்பு. அதற்கு மேல் எவ்வளவு ஆண்டுகள் பழமையானதாகவும் இருக்கக்கூடும்' என்று தன் கருத்தில் இருந்து நழுவினார்.
 மக்களுடைய அன்றாடப் பேச்சு வழக்கில் இருக்கும் மொழி, காலப்போக்கில் மாற்றமடைவது சாத்தியமாகலாம். ஆனால், "பேச்சு வழக்கில் இல்லாமல் தேர்ந்த குரு சொல்லி மாணவன் திருப்பிச் சொல்லி எந்தப் பிழையும் இல்லாமல் பல தலைமுறைகளைக் கடந்து வரும் பொழுது அந்த மொழியில் எளிதாக மாறுபாடுகள் ஏற்படுவது சாத்தியமில்லை' என்று வேதம் உணர்ந்த மகானான காஞ்சி மகா சுவாமிகள் குறிப்பிடுகிறார்.
 "இருநூறு ஆண்டுகளுக்குள் வேதத்தில் புதுமைகள் தோன்றிவிடும் என்ற மாக்ஸ்முல்லர் கருத்து ஏற்புடையதல்ல' என்று புறம் தள்ளுகிறார். பாரத தேசத்தில் வேதத்துக்குக் காலம் கணக்கிடவே முடியாது அது எப்போதுமே இருப்பது என்பதுதான் நம்பிக்கை.
 வேதம் வாய்மொழியாக மட்டுமே சொல்லப்பட்டு வந்தது. குருவின் நேரடிப் பார்வையில் மாணவர்கள் சொல்ல மீண்டும் மீண்டும் உச்சரிக்கப்பட்டு மிகத் திருத்தமாக மனனம் செய்து அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்தப்பட்டது. எனவே, மாக்ஸ்முல்லர் கூறுவதைப் போல அது 200 ஆண்டு காலத்தில் மாற்றங்களை சந்திக்க வாய்ப்பில்லை. ஆனால், இரண்டு ஆண்டுகளில் மாக்ஸ்முல்லர் பெரும் மாற்றங்களைத் தன் வாழ்க்கையில் சந்தித்திருக்கிறார்.
 1845-ஆம் ஆண்டு அவர் தன்னுடைய நாட்குறிப்பில் தன்னுடைய கடினமான பொருளாதார வாழ்க்கையைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். அதே மாக்ஸ்முல்லர், இரண்டே ஆண்டுக்குப் பின், 1847ஆம் ஆண்டில் தன் தாயாருக்கு எழுதிய கடிதத்தில் தான் எழுதும் கட்டுரைகளுக்காக ஆங்கிலேய அரசு பெரும் பணம் தந்து வருவதைக் குறிப்பிட்டிருக்கிறார்.
 பெரும் பணம் ஒரு தேசத்தின் வரலாற்றை, கலாசாரத்தை, பெருமைகளை நீர்த்துப்போகச் செய்வதற்காக பிரிட்டிஷ் அரசால் வழங்கப்பட்டிருக்கிறது என்பதற்கு அவரது கடிதமே சாட்சியாக நிற்கிறது. இப்படித் தத்துவங்கள் தொடங்கி கல்வி, சமயம், ஆன்மிகம், வரலாறு என அனைத்து நிலைகளிலும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப கருத்துகளைப் பதிவு செய்து அவற்றையே உண்மை என சாதித்தது பிரிட்டிஷ் அரசு. அதனை இன்றும் எவ்வித கேள்வியும் இல்லாமல் ஆராய்ச்சிக்கு உட்படுத்தாமல் ஏற்பது நாம் இன்னும் விழித்துக் கொள்ளவில்லை என்பதற்கான அடையாளமே.
 
 கட்டுரையாளர்:
 ஊடகவியலாளர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.