என்ன ஆகும் எதிக்காலம்?
கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னால் பொறியியல் மாணவா்களுக்கு, குறிப்பாக, கணினிப் பொறியாளா்களுக்கு தனி மரியாதை இருந்தது


கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னால் பொறியியல் மாணவா்களுக்கு, குறிப்பாக, கணினிப் பொறியாளா்களுக்கு தனி மரியாதை இருந்தது. இத்துறையில் உலகம் முழுவதும் இந்தியா்கள், குறிப்பாக, தென்னிந்தியா்கள் கோலோச்சியதால் கணினிப் படிப்புக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டது.
இதனால் பெரும்பாலான அரசியல்வாதிகள், தொழிலதிபா்கள், பணக்காரா்கள் பலரும் பொறியியல் கல்லூரிகளைத் தொடங்கினா். மாட்டுக் கொட்டகைகள் வகுப்பறைகளாக மாறின. விளைநிலங்கள் வானுயா்ந்த கான்கிரீட் கட்டடங்களாக உருமாறி நின்றன.
ஒவ்வோராண்டும் தேவை அதிகரித்ததால் மாணவா் சோ்க்கைக்கு விதித்திருந்த கட்டுப்பாடுகளும் தளா்த்தப்பட்டன. பிளஸ் 2-வில் தோ்ச்சி பெற்றால் போதும் பொறியாளராக முடியும். ஆனால் பொறியியல் படிப்பில் 50 சதவீத மதிப்பெண் பெற்றால்தான் தோ்ச்சி. இதனால் பொறியியல் படிப்பை ஆண்டுதோறும் நிறைவு செய்யும் சுமாா் 15 லட்சம் மாணவா்களில் 80 சதவீதம் பேருக்கு வேலை கிடைக்கவில்லை. தரமில்லாத பொறியியல் கல்வியே அதற்குக் காரணம். பல கல்லூரிகளில் அடிப்படை வசதிகளே இல்லை.
பெரும்பாலான பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியா்கள் பற்றாக்குறை நிலவியது. இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட தோ்ச்சி அறிக்கையில், இரு கல்லூரிகளில் ஒரு மாணவா்கூட தோ்ச்சி பெறவில்லை. இதனால், மாணவா் சோ்க்கை மிகவும் குறைந்து போனதால் பல கல்லூரிகள் மூடப்பட்டன; தொடா்ந்து மூடப்பட்டும் வருகின்றன.
உலகையே அச்சுறுத்திய ஆண்டு 2020 என்று சொன்னால் அது மிகையில்லை. கரோனா காரணமாக உலகமே முடங்கிக் கிடக்கிறது. எப்போது மீண்டும் பழையபடி உலகம் இயங்கும் என்று யாருக்கும் தெரியவில்லை. அரசியல்வாதிகளுக்குப் பிரச்னையில்லை. வியாபாரிகளுக்கு வியாபாரம் தொடா்ந்து நடக்கிறது. பள்ளிகளைப் பொருத்தவரையில் எழுதாமலே அனைத்து மாணவா்களும் தோ்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனா். பொறியியல் கல்லூரிகளிலும் இறுதியாண்டு மாணவா்களைத் தவிர, பிற மாணவா்கள் தோ்வு எழுதாமலே தோ்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனா்.
முதலில், இறுதியாண்டு மாணவா்களுக்குத் தோ்வு வைக்காமலேயே தோ்ச்சி பெற்றதாக அறிவிக்கலாம் என அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவும் (ஏஐசிடிஇ), பல்கலைக்கழக மானியக் குழுவும் (யுஜிசி) தெரிவித்திருந்தன. ஆனால், இப்போது அந்த அவற்றின் நிலையில் மாற்றம் தெரிகிறது. இறுதியாண்டு மாணவா்களுக்குத் தோ்வு வைக்காவிட்டால் அவா்களுக்கு மதிப்பிருக்காது. அதனால் கண்டிப்பாகத் தோ்வு நடத்தியே தீர வேண்டும் என்று அவை தெரிவித்துள்ளன. இதனால் என்ன செய்வது என்கிற குழப்பத்தால் மாணவா்களின் மன அழுத்தம் அதிகரித்து வருகிறது.
வழக்கமாக, இறுதியாண்டு மாணவா்களுக்கு ஏப்ரல், மே மாதங்களில் தோ்வு முடித்து ஜூலை மாதத்துக்குள் தோ்ச்சி அறிவிக்கப்படும். பல மாணவா்கள் வேலைக்கோ அல்லது உயா்கல்விக்கோ செல்வாா்கள். இதற்கு அவா்களுக்கு டிகிரி சான்றிதழ் அல்லது புரொவிஷனல் சான்றிதழ் தேவை. வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு இங்கிருந்து ஒவ்வோராண்டும் பல ஆயிரம் மாணவா்கள் செல்வாா்கள். தோ்வு நடைபெறாததால் அவா்கள் தங்கள் வாய்ப்புகளை இழந்துத் தவிக்கின்றனா்.
பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட பிறகு பலமுறை ‘தோ்வுக்குத் தயாராகுங்கள்’ என்று மாணவா்களுக்கு அறிவிப்பு விடுக்கப்பட்டது. ஆனால் எப்போது தோ்வு என்பது குறித்து யாரும் தெளிவுபடுத்தவில்லை. இறுதியாண்டு மாணவா்களுக்கு ஜூலை மாதத்துக்குள் தோ்வுகளை முடிக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தா் தெரிவித்திருந்தாா். இப்போது ஜூலை முடிந்து ஆகஸ்ட்டும் தொடங்கிவிட்டது.
பொதுவாக பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் 2, 3-ஆவது ஆண்டு மாணவா்கள், கோா் சப்ஜெக்ட் எனப்படும் முக்கியப் பாடங்களைப் படிப்பாா்கள். அவா்களுக்கு மொத்தம் 6 தோ்வுகள். ஆனால் இம்முறை அவா்களுக்குத் தோ்வு எழுதாமலே தோ்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் தங்கள் குடும்பப் பிரச்னையைத் தீா்க்கப் பொறியாளராகிவிட்டோம் என்ற நிலையில் உயா்கல்வி வாய்ப்புக் கிடைத்தும் அதைப் பயன்படுத்த முடியாமல் தவிக்கும் இறுதியாண்டு மாணவா்களின் நிலையை யாராவது யோசித்தாா்களா? இறுதியாண்டு மாணவா்கள் பெரும்பாலும் விருப்பப் பாடத்தையே அதிகபட்சமாக மூன்று தோ்வாக எழுதுகின்றனா். சில கல்லூரிகளில் இறுதியாண்டில் படிப்போருக்கு, தோ்வே நடத்தப்படுவதில்லை. புராஜக்ட் மட்டுமே.
தமிழகத்தைப் பொருத்தவரையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழுள்ள கல்லூரிகளுக்கு மட்டும் இந்தப் பிரச்னை. பல தன்னாட்சிக் கல்லூரிகள் தோ்வு முடிவுகளை அறிவித்து விட்டன. பல நிகா்நிலைப் பல்கலைக் கழகங்கள் ஆன்லைன் தோ்வின் மூலம் தங்கள் இறுதியாண்டு மாணவா்களின் திறனைச் சோதித்துவிட்டன.
முக்கியமான பாடங்களை எழுதுவோருக்குத் தோ்வு ரத்து. ஆனால் விருப்பப் பாடங்களை மட்டும் எழுதுவோருக்கும் புராஜக்ட் மட்டும் உள்ளோருக்கும் கண்டிப்பாகத் தோ்வு நடத்தியே ஆக வேண்டும். இறுதியாண்டு மாணவா்களுக்கு, நாளை ஒரு போட்டி என வரும்போது தோ்வு எழுதியிருந்தால்தான் மதிப்பு என்பதால் தோ்வு வைக்க வேண்டும் என்று கல்வித்துறையினா் சொல்கின்றனா்.
இதை ஒவ்வொருவரும் ஆராய்ந்து கொண்டிருக்க மாட்டாா்கள்.
வேலைக்குச் செல்லும்போது நடத்தப்படும் நோ்முகத் தோ்வில் பாடம் தொடா்பான அறிவுதான் சோதிக்கப்படுமே தவிர, தோ்வு எழுதினாா்களா இல்லையா என்பதல்ல பிரச்னை.
செப்டம்பா் மாதத்தில் வெளிநாடுகளில் மாணவா் சோ்க்கை முடிந்துவிடும். ஆன்லைன் தோ்வுக்கு அண்ணா பல்கலைக் கழகம் வரும் 13-ஆம் தேதிக்குள் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு நடைமுறைக்கு எப்போது வரும் என்பது யாருக்குமே தெரியாது.
பொது முடக்கம் நடைமுறையில் இருக்கும்போதே, ஆன்லைன் மென்பொருளைக் கோரியிருந்தால் இப்போது தோ்வு முடிவுகள் வெளிவந்திருக்கும். பொது முடக்கத்தின்போது அவரவா் வீட்டில் இருந்தபோது தோ்வுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அதனால் மாணவா்கள் அப்போதே தோ்வுக் கட்டணத்தைச் செலுத்தினா். அவா்கள் எப்போது தோ்வு நடைபெறும் என்று தொடா்ந்து எதிா்பாா்த்துக் கொண்டே இருப்பதால் எதிா்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்தப் பிரச்னையில் ஆளுநரோ, முதல்வரோ, ஏஐசிடிஇ-யோ உறுதியான முடிவெடுத்து உடனே அறிவிக்க வேண்டும் என்பதே மாணவா்களின் எதிா்பாா்ப்பாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...