டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

சாமானியர்களே இலக்கு

நீண்டகாலமாக உள்நாட்டுச் சண்டை நடந்துவரும் இராக், ஆப்கானிஸ்தான், சிரியா உள்ளிட்ட நாடுகள் பெற்ற சர்வதேச கவனத்தை யேமன் பெற்றதில்லை.

News image
Updated On :31 ஜனவரி 2024, 10:12 am

எஸ். ராஜாராம்


நீண்டகாலமாக உள்நாட்டுச் சண்டை நடந்துவரும் இராக், ஆப்கானிஸ்தான், சிரியா உள்ளிட்ட நாடுகள் பெற்ற சர்வதேச கவனத்தை யேமன் பெற்றதில்லை. இத்தனைக்கும் மேற்கண்ட நாடுகளைவிட யேமனில் மிக மோசமான நிலை நிலவுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர், சவூதி அரேபியாவில் உள்ள எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் ஆளில்லா சிறுரக விமானங்கள் மூலம் தாக்கப்பட்டன. யேமனில் செயல்பட்டுவரும் ஹூதி அமைப்பினர் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்தே தீவிரமான கவனத்தை  யேமன் பெறத் தொடங்கியிருக்கிறது.

மேற்கு ஆசியாவில் அரேபிய தீபகற்பத்தின் தெற்கு எல்லையில் உள்ள ஏழ்மையான நாடான யேமனில் என்னதான் நடக்கிறது? அரபு வசந்தம் எனப்படும் அரசுக்கு எதிரான போராட்டத்தின் இறுதியாக, யேமனில் 33 ஆண்டுகள் அதிபராக இருந்த அலி அப்துல்லா சலே, 2011-இல் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார். அவரைத் தொடர்ந்து, துணை அதிபராக இருந்த அப்தரப் மன்சூர் ஹாதி அதிபராகப் பொறுப்பேற்றார். ஆனால், நாட்டில் ஊழல், வேலைவாய்ப்பின்மை, பொருளாதார முடக்கம் என ஒரே நேரத்தில் பூதம்போல கிளம்பிய பல்வேறு பிரச்னைகளைச் சமாளிக்க முடியாமல் அவர் திணறத் தொடங்கினார். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சிறிது சிறிதாக வலுப்பெறத் தொடங்கியது ஹூதி இயக்கம்.

ஷியா முஸ்லிம் பிரிவினரைக் கொண்ட இந்த இயக்கத்துக்கு பிராந்தியத்தில் வலுவான சக்தியாக உள்ள ஈரான் உதவுவதாகக் குற்றச்சாட்டு உள்ளது. சவூதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் மீதான தாக்குதலில்கூட ஹூதி இயக்கத்துக்கு ஏவுகணைத் தொழில்நுட்பத்தையும், ஆளில்லா சிறுரக விமானங்களான டிரோன்களையும் வழங்கியது ஈரான்தான் என சவூதி அரேபியா குற்றஞ்சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஹூதி இயக்கப் படைகள் 2015-இல் தலைநகர் சனாவை கைப்பற்றியதுவரை யேமனில் நடந்தது உள்நாட்டுப் போராகத்தான் இருந்தது. அதன்பிறகு அதிபர் ஹாதி வேண்டுகோளின்படி ஹூதி படைகளை ஒடுக்குவதற்காக சவூதி அரேபியா தலைமையிலான நாடுகள் தலையிட்டதைத் தொடர்ந்து யேமனில் ஒரு சர்வதேசப் போரே நடைபெற்று வருகிறது. ஹூதி படைகள் மூலமாக யேமனில் ஈரான் ஆதிக்கம் செலுத்திவிடக் கூடாது என்கிற நோக்கமும் சவூதி அரேபியாவுக்கு உண்டு. சவூதி தலைமையிலான கூட்டணிக்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளும் ஆதரவு தெரிவித்து உதவி வருகின்றன. 

அப்போதுமுதல் இன்றுவரை யேமன் தொடர்ந்து போர்க்களமாகத்தான் காட்சியளிக்கிறது. இந்தக் காலகட்டத்தில் பொதுமக்கள் 7 ஆயிரம் பேர் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. இதில் 80 சதவீதம் பேர் சவூதியின் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், பலியானவர்களின் எண்ணிக்கை இதைவிட மிக அதிகமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

போரால் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவால் வேலைவாய்ப்பின்மை, உணவு, தண்ணீர்ப் பற்றாக்குறை, மருத்துவ வசதி கிடைக்காமை என மோசமான சூழலை யேமன் மக்கள் எதிர்கொண்டுள்ளனர். நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 80 சதவீதம் பேர், அதாவது 2.4 கோடி பேர் உயிர் வாழவே உதவி தேவைப்படும் சூழ்நிலையில் உள்ளனர். "குழந்தைகளுக்கான பூலோக நரகம் யேமன்' என ஐ.நா. சபையின் குழந்தைகள் அமைப்பான யுனிசெஃப் வேதனை தெரிவித்துள்ளது. 20 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதும், 2015-18 காலகட்டத்தில் இக்குறைபாட்டால் 85 ஆயிரம் குழந்தைகள் இறந்திருக்கலாம் எனக் கூறப்படுவதுமே இதற்குக் காரணம்.

நீண்டகாலத்துக்குப் பின்னர் அண்மையில் ஐ.நா. பாதுகாப்பு சபை முன்வைத்த அமைதித் திட்டமும் செயல்படுத்த முடியாத வகையில் உள்ளது. ஏனெனில், யேமனில் அரசுப் படைகள், ஹூதி படைகள், முன்னாள் அதிபர் சலேயின் விசுவாசப் படைகள், தெற்கு யேமன் பிரிவினைவாத அமைப்பு, ஐ.எஸ்., அல்-காய்தா என பலமுனைத் தாக்குதல் நடைபெற்று வருகிறது. அமைதிப் பேச்சுவார்த்தையின் அம்சங்களை அனைத்துத் தரப்பினரையும் ஏற்கவைப்பது சவாலாக உள்ளது.

ஹூதி படையினரின் வசம் உள்ள ஹொதைதா துறைமுகம், ஒட்டுமொத்த யேமனுக்கும் நுழைவு வாயிலாக உள்ளது.  இந்தப் பகுதியில் சண்டைநிறுத்தம் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டால் யேமனில் அமைதி திரும்புவதற்கான வழிகள் ஏற்படும். அந்த முயற்சியைத்தான் ஐ.நா. மேற்கொண்டுள்ளது. 

ஹூதி படைகளின் ஏவுகணைகள் சவூதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்தி நிலையங்களைக் குறிவைக்கின்றன; சவூதியின் ஏவுகணைகள் ஹூதி படைகளின் நிலைகளைக் குறிவைக்கின்றன. ஆனால், இதன் மறைமுகமான இலக்குகள் யேமனின் சாமானிய மக்கள்தான் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.