காதோடுதான் நான் பேசுவேன்!
அண்மையில் என் உறவினர் வீட்டுக்குச் செல்ல நேர்ந்தது. நாற்காலியில் அமர்ந்து சுவையான தேநீர் அருந்தியபோதுதான் கவனித்தேன்,


அண்மையில் என் உறவினர் வீட்டுக்குச் செல்ல நேர்ந்தது. நாற்காலியில் அமர்ந்து சுவையான தேநீர் அருந்தியபோதுதான் கவனித்தேன், அந்தக் கூடத்தின் தென்கிழக்கு மூலையில் அழகான மர வேலைப்பாடுடன் கூடிய ஒரு சிறிய மாடம் இருந்தது. அது எந்தப் பொருளை தாங்க வேண்டி பாங்கான வேலைப்பாட்டுடன் செய்யப்பட்டிருந்ததோ, அந்தப் பொருள் அதன் மேல் இல்லை. வெறுமனே சில துண்டு காகிதங்களும், ஒரு பென்சில், இரண்டு பேனா வைக்கப்பட்டு தன் தனித்தன்மையை அது இழந்திருந்தது.
ஒரு காலத்தில் தொலைபேசியை தாங்க ஒவ்வொரு வீட்டிலும் இருந்ததுதான் அந்தச் சிறிய மாட அமைப்பு. பல வீடுகளில் இன்று அதன் இருப்பு காணாமல் போய்விட்டாலும், சில வீடுகளில் அது தற்போதைய திறன்பேசிகளை வைக்க உதவும் இடமாக உருவாக்கம் பெற்றுள்ளது.
தொலைபேசியில் தூசு படராமல் இருக்க சதுர வடிவம் கொண்ட சிறிய துணியை அதன் மீது போர்த்தியிருப்பர். லேண்ட்லைன் எனச் சொல்லப்படும் அந்தப் பழைய தொலைபேசி காலங்கள் நிழலாய் கண்முன் ஆடின. அப்போதெல்லாம் தொலைபேசி என்பது பேசுவதற்கு மட்டும்தான். இன்றுபோல தொல்லைபேசியாக இருந்ததில்லை. டெலிபோன் மணி போல் சிரிப்பவள் இவளா என்ற பாடல் எவ்வளவு பிடிக்குமோ, உண்மையில் டெலிபோன் மணியையும் அவ்வளவு பிடிக்கும். அந்த மணி ஏற்படுத்திய அதிர்வலைகள் காற்றினில் பறந்து வந்து பரவசத்தை பரப்பிச் செல்லும்.
இன்று ஒரு அழைப்பு துண்டானாலும் அழைத்தவர்கள் யார் என்பதை அறிந்துகொள்ள முடியும். பழைய தொலைபேசிகளில் அந்த அமைப்பு 99% இல்லை என்றே சொல்லலாம். அதனாலேயே வீட்டின் நடுநாயகமான இடத்தில் இருந்த தொலைபேசியை எடுக்க வேண்டி எந்த மூலையில் எவர் இருந்தாலும் எடுத்ததை எடுத்தபடி, போட்டதை போட்டபடி பறந்து வருவர். தொலைபேசி மணி அணையும் தருவாயில், அதை எடுக்க சண்டையிடுவதும்கூட சமயத்தில் நடக்கும்.
கிரிக்கெட்டில் மேலே பறந்து வந்த பந்தை இருவர் பிடிக்க முனைந்து, இறுதியில் இருவருமே கோட்டை விட்ட கணக்காய் இருவரும் ரிசீவரை எடுக்க, அது தடுமாறி கீழே விழுந்த நிகழ்வு எல்லாம் உண்டு. அப்படி, தொலைபேசி மணிக்கு மூளைக்குள் அத்தனை கிறுகிறுப்பு ஏறும்...கூடும்.
பேசுவதற்காக மட்டுமே இருந்த அன்றைய தொலைபேசிகளில் பேசுவதே பெரிய சுகானுபவம்தான். கைகள் அழுந்த பற்றிக் கொண்டு ஒரு குமிழை காதில் பொருத்தியும் மற்றொரு குமிழைப் பேசுவதற்கு லாவகமாய் வாய்க்கு அருகிலும் வைத்துக்கொண்டு பேசுவது சுகானுபவம்.
தொடக்கத்தில் வந்ததெல்லாம் டயலிங் முறை. ஆனால், அப்போதைய எண்கள் தொடக்கத்தில் அதிகபட்சம் 6 இலக்கங்களைக் கொண்டதாக இருந்தது. எஸ்டிடி என்றால் கோட் நம்பர்கள் உள்பட தண்ணிபட்ட பாடமாய் நினைவில் இருந்தன. அதிலும், எஸ்டிடி கால்கள் வந்துவிட்டால் போதும்; வீடே களேபரம் ஆகிவிடும். இன்னும் வெளிநாட்டு கால் என்றால் சொல்லவே வேண்டாம். குடும்பமே பரபரப்பாகி விடும்.
அப்போதெல்லாம் எஸ்டிடி, ஐஎஸ்டி, லோக்கல் கால்கள் கொண்ட தொலைபேசி பூத்துகள் தெருவுக்கு ஒன்று இருக்கும். தொலைபேசி பேசப்போவது என்பதே கடைத்தெரு போக காசு எடுத்துச் செல்வதுபோல. தம் வீட்டில் தொலைபேசி இல்லாத நிலையில், பிறருடன் பேச வேண்டும் எனில் கையில் காசுடன்தான் வெளியேற வேண்டும். பேசுவது என்பதே சமயத்தில் அத்தனை ஆடம்பரமான விஷயமாக இருந்தது. கடை உரிமையாளர்களுக்கு இது ஒரு தொழில். நல்ல காசும் பார்த்தார்கள். பாவம், அவர்களின் உலைகளில் எல்லாம் இன்று மண்.
எஸ்டிடி அழைப்புகளுக்கு நிமிஷத்துக்கு நிமிஷம் காசு ஏறும். ஒரு வீட்டில் 6 நபர்கள் இருந்தால் ஆறு நபர்களும் நீ நல்லாருக்கியா, நான் நல்லாருக்கேன் என மாற்றி மாற்றி பேசி முடிப்பதற்குள்ளே சில பல ரூபாய்கள் கரைந்து விடும். அதற்குள் சீக்கிரம் பேசி முடிங்கோ.. போட்டவளுக்குத்தான் காசு போகும். பாவம், எம் பொண்ணுக்குத்தான் அங்க காசு போகும் என சொல்லிக்கொண்டிருந்தவர்கள் எல்லாம் இப்போதைய மாற்றத்தை வாய் பிளந்துதான் பார்த்துக் கொண்டிருப்பர். அம்மாடி! தகவல் தொழில்நுட்பத்தில்தான் எத்தனை புரட்சி!
இப்படி ஏதோ ஒரு மூலையில் இருக்கும் ஒருவரை தொடர்புகொள்ள, பேச எத்தனை சிரத்தை எடுத்திருக்கிறார்கள்? இத்தனை சிரத்தை எடுத்து ஒருவரிடம் பேசி முடித்தோமானால், பேசிய விஷயங்களைத் தாண்டி அந்தக் குரலில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுகள் குறித்த சிந்தனைகள்கூட அகலாது நீடிக்கும். பேசிய வார்த்தைகளை நினைத்து நினைத்துச் சிலாகித்திருப்போம். குறைவாக இருந்ததினாலோ என்னவோ அத்தனை முக்கியத்துவத்தை நாம் கொடுத்திருந்தோம்.
1990-களின் இறுதியில் தெருவுக்கு நான்கு வீடுகளில் மட்டுமே தொலைபேசி இணைப்பு இருந்தது. அவர்களைச் சுற்றி இருந்த 10 வீட்டுவாசிகளும் தத்தம் உறவினர்களுக்கு அத்தகைய இணைப்பு வைத்திருந்த வீட்டு தொலைபேசி எண்ணையே கொடுத்திருப்பர். அன்றைய மனிதர்களுக்கு மனது சற்றே விசாலமாக இருந்தது.
ஆத்திர அவசரத்துக்கு அழைக்கும் உறவினர்களுக்காக தம் அக்கம் பக்கம் வீட்டாரை நினைத்த நேரத்துக்கு உள்ளே அனுமதித்து, அவர்கள் பேசிச் செல்லும் வரை சமயத்தில் பொறுமை காத்து சக மனிதர்களுக்கு சகாயம் செய்தனர்.
எங்கள் எதிர்வீட்டில் இருந்த முதிய தம்பதியருக்கு அவர்களின் வாரிசுகளிடமிருந்து அவ்வப்போது இப்படி அழைப்புகள் வரும். பேசி முடித்து விட்டுச் செல்லும்போது அவர்கள் நம்மிடம் நின்று சில நிமிஷ நேரங்கள் நெகிழ்ந்துபோய் நன்றியை மட்டுமே சொல்லி நிற்பார்கள். அட! இதற்கு ஏன் இப்படி கண் கலங்குகிறார்கள் என நினைப்பேன். இப்போது நினைத்தால் அது ஓர் அழகிய கனவுபோல் இருக்கிறது.
இதிலிருந்தெல்லாம் விலகி, தற்போது கற்பனை செய்ய இயலாத உயரத்தில் பறக்கிறோம். நினைத்தால் குறுஞ்செய்திகள் மூலம் தகவல் பரிமாறிக் கொள்கிறோம். தேவைப்பட்டால் பேச்சை பதிவு செய்தும் கடத்துகிறோம். சில விஷயங்களில் அன்றைய மகிழ்வு இருக்கிறதா எனக் கேட்டால் 75% இல்லை என்பதே கசப்பாய் வெளிப்படுகிறது.
காதலர்கள் இன்று எவ்வளவுக்கு எவ்வளவு பேசுகிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு சின்ன விஷயத்தில் சண்டை முற்றி பிரிந்தும் போகிறார்கள். ஒரு காதல் கடிதம் ஏற்படுத்திய தாக்கமும் கிளர்ச்சியும் நெருக்கமும் இன்றைய டெக்ஸ்ட் மெúஸஜுக்கு உள்ளதா என்பது விவாதிக்க வேண்டிய பொருள்தான். இதே காதல் கடிதமாயின் நம்பகத்தன்மையுடன் பத்திரப்படுத்தி நெஞ்சோடு இச்சென இதழ் பதிக்கலாம். என்னதான் காதல் சொட்ட சொட்ட வரிகள் குறுஞ்செய்தியில் பிணைந்திருந்தாலும் நட்ட நடு சாலையில் வைத்து நம்மை எண்ணற்றோர் வெறிப்பது போலவே ஒரு உணர்வு.
நாம் என்ன செய்கிறோம், எதைப் பார்க்கிறோம் என்பதை நம்மைக் காட்டிலும் கூகுளுக்கு அதிகமாகத் தெரிந்திருக்கிறது. நம்மைப் பற்றி தகவல் திரட்டினால் அது மலையைக் காட்டிலும் தகவல்களை கொட்டிக் கொடுக்கும். துரதிருஷ்டவசமாக பலருக்கு நம்மைக் காட்டியும் கொடுக்கும். தகவல் தொழில்நுட்பம் என்பது இருமுனை கொண்ட கத்தியாய் நின்று நம்மை பயமுறுத்துகிறது. சமயத்தில் குத்திக் கிழித்து நம்மை காணாமல் போகச் செய்துவிடும்.
இன்று, பேசுங்க பேசுங்க...பேசிக்கிட்டே இருங்க... என்று சொல்லும் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் விளம்பரங்களைக் கேட்கிறோம். எப்படி இருந்தாலும்
ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு
என்று சொன்ன திருவள்ளுவரின் வாக்குப்படி மேன்மையும் கெடுதியும் பேச்சினாலேயே வருவதனால் சொல்லிலே சோர்வு உண்டாகாதபடி எப்போதும் ஒருவர் தன்னைக் காத்துப் பேணி வருதல் வேண்டும். அதிலும் பேசும்போது வார்த்தைகளை கவனத்துடன் கையாளுதல் இன்றைய அவசியமாகிறது.
மற்றொரு நிகழ்வாக என் தோழியின் வீட்டுக்குச் சென்றிருந்தபோது அவர்களின் 4 வயது குழந்தை வீட்டுக்கு வந்த விருந்தினரான நம்மை தலை நிமிர்த்திக்கூட பார்க்கவில்லை. தலைகுனிந்தபடி திறன்பேசியைப் பார்த்தது பார்த்தது தான். அங்கே நாங்கள் இருந்த அரை மணி நேரமும் இப்படி-அப்படி திரும்பவில்லை. வைத்த கண் வாங்காமல் அதனுள்ளேயே குழந்தை அமுங்கிப் போய்க் கிடந்தது. ஓடி ஆடி விளையாடி அங்கும் இங்கும் துடிப்பாக இயங்க வேண்டிய குழந்தை, இடத்தை விட்டு நகராது அமர்ந்திருந்தது ஒரு மோசமான கோணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தைப் பார்ப்பதுபோல் மனதை நெருடியது.
அவளிடம் செல்லிடப்பேசியைக் கொடுத்துவிட்டால் என்னை எந்தத் தொந்தரவும் செய்யாது இருப்பாள் என்று சொன்ன தோழியை நான் மலைப்பாக பார்த்துக் கொண்டிருந்தேன்.
இளம் தலைமுறையை நினைத்துக் கவலை பொங்கியது. தொலைபேசி மட்டுமல்ல...வங்கிகளின் வாராக் கடன் பட்டியல்போல் நாம் இழந்தவைகளின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.
கட்டுரையாளர்:
எழுத்தாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...