அகற்றுங்கள் ஆக்கிரமிப்புகளை...!
அண்மையில் தமிழக அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ரூ.100 கோடி அபராதம் விதித்ததை எதிர்த்து தமிழக அரசு தாக்கல்


அண்மையில் தமிழக அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ரூ.100 கோடி அபராதம் விதித்ததை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. ஒரு மாநில அரசே சட்டத்தை மீறுமா அல்லது தனது தவறான நடவடிக்கையால் இப்படி அல்லல்படுமா என்பதுதான் பொது மக்களின் நியாயமான கவலைக்கு காரணம்.
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் சமூக ஆர்வலர் ஜவஹர்லால் சண்முகம் என்பவர், சென்னையில் உள்ள கூவம், அடையாறு, பக்கிங்காம் போன்றவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தமிழக அரசு முறையாகப் பராமரிக்கவில்லை. இதனால்தான் கடந்த 2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ள பாதிப்புகளால் சென்னை நகரமே கடுமையாகப் பாதிக்கப்பட்டது என்று கூறி வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடந்த பிப்ரவரி மாதம் பொதுப்பணித் துறைக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்தது. இந்த அபராதத் தொகையை தமிழக அரசு மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் ஒப்படைத்து இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, இந்த நீர்நிலைகளை முறையாகத் தூர்வாரி பராமரிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
பக்கிங்காம், கூவம், அடையாறு உள்ளிட்ட நீர் ஆதாரங்களை மறுசீரமைப்பு செய்ய கடந்த 2015-ஆம் ஆண்டு ரூ.1,616 கோடி மதிப்பில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அதில் முதல் கட்டமாக ரூ.604 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு சார்பில் தலைமை வழக்குரைஞர் விளக்கம் அளித்தார்.
உண்மையில் கடந்த ஜனவரியிலேயே இதே வழக்கில் தீர்ப்பாயம் ரூ.2 கோடி அபராதத்தை பொதுப்பணித் துறைக்கு விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது தீர்ப்பாயம் தனது குறிப்பில், சென்னை நகராட்சி எல்லைக்குட்பட்ட நீர்நிலைகளிலும், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்துக்குட்பட்ட நீர்நிலைகளிலும் உள்ள மொத்தம் 26,300 ஆக்கிரமிப்புகளில் வெறும் 408 ஆக்கிரமிப்புகள் மட்டுமே அகற்றப்பட்டிருக்கின்றன. ஜவாஹர்லால் நேரு தேசிய நகர புனரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.603.67 கோடி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், எந்தவிதமான உறுதியான நடவடிக்கைகளையும் தமிழக அரசு இதுவரை எடுக்கவில்லை என்பது எங்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என்று தெரிவித்தது.
பொதுப்பணித் துறை சார்பில் வழக்குரைஞர் ராகேஷ் சர்மா ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு செய்தியாக, முழுமையான விவரங்கள் அடங்கிய பதிலை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்வோம். அடையாறு, கூவம் ஆறுகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி முன்னேற்றம் கண்டு வருகிறது. அடையாறு ஆற்றின் கரையில் இருந்த 4,161 ஆக்கிரமிப்புகளும், கூவம் ஆற்றின் ஆக்கிரமிப்புகளில் 7,166 ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டு விட்டன. அடையாறு, கூவம் சீரமைப்புப் பணி முடிந்ததும் பக்கிங்காம் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கப்படும் என்றார்.
அரசின் இந்த நிலைப்பாடு சென்னை ஆறுகள் மீட்டெடுத்தல் அறக்கட்டளையின் (சிஆர்ஆர்டி) நோக்கத்துக்கு எதிராக உள்ளது. பக்கிங்காம் கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை முதலில் தொடங்க வேண்டும் என்று பசுமைத் தீர்ப்பாயத்தில் சமூக ஆர்வலர் மீண்டும் முறையிட்டார்.
கூவம் ஆற்றில் மட்டும் 16,000 ஆக்கிரமிப்புகள் இருக்கின்றன இதில் 7,166 மட்டுமே அகற்றப்பட்டிருக்கின்றன. அடையாறு கரையோரத்தில் மொத்தம் 12,000 ஆக்கிரமிப்புகள் இருக்கின்றன. இதில் 4,161 ஆக்கிரமிப்புகள் மட்டுமே அகற்றப்பட்டிருக்கின்றன. பக்கிங்காம் கால்வாயின் வடக்குப் பகுதியில் 9,000; தெற்குப் பகுதியில் 12,000; மத்தியப் பகுதியில் 5,300 ஆக்கிரமிப்புகள் என மொத்தம் 26,300 ஆக்கிரமிப்புகள் உள்ளன. இப்படி சென்னையின் முக்கிய நீர்வழித் தடங்கள் எல்லாம் ஆக்கிரமிப்புகளால் நிரம்பி வழியும்போது மொத்த நகரமே வெள்ளக் காலங்களில் மட்டுமல்லாது, இதர காலங்களிலும் சுகாதாரச் சீர்கேட்டால் அல்லல்படுகிறது.
நாட்டின் நான்காவது பெரிய நகரமான சென்னையில் உள்ள நீர்வழித்தடங்களை தூய்மை செய்து சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் படகு சவாரிகளை மேல் நாடுகளில் உள்ளதைப் போன்று செய்தால் நகரின் எழிலும், அரசின் கருவூலமும் உயரும். இதே கூவத்தில்தான் முந்தைய காலத்தில் வள்ளல் பச்சையப்பர் காலையில் நீராடி, கந்தக் கோட்டத்து முருகப் பெருமானை தரிசித்தார் என்பது உண்மை வரலாறு.
பக்கிங்காம் கால்வாயில் கடந்த நூற்றாண்டில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஏனைய கவிஞர்கள் புடைசூழ மாமல்லை வரை படகில் பயணித்தார் என்பது அனைவருக்குமே தெரிந்த செய்தி.
ஒரு சமயம் நாட்டில் ஏற்பட்ட பஞ்சத்தின் கொடுமையைக் குறைக்கும் வழியாக ஆங்கிலேய ஆளுநர் பக்கிங்காம் என்பவரால் காக்கி நாடா முதல் வேதாரண்யம் வரை கால்வாயை வெட்டுவித்து நதி நீர் போக்குவரத்து தொடங்கி வைக்கப்பட்டது. இதனால்தான் இந்தக் கால்வாய் பக்கிங்காம் என்று அவர் பெயரால் அழைக்கப்படுகிறது. வேதாரண்யம், நாகப்பட்டினம், காரைக்கால், கடலூர், புதுச்சேரி, மரக்காணம், மாமல்லபுரம், சென்னை என்று பக்கிங்காம் கால்வாய் வட திசையில் பயணிக்கிறது.
நெல், உப்பு மற்றும் இதர பொருள்கள் படகு மூலம் இங்கும் அங்கும் பயணித்தன. இன்றைக்கும் மயிலாப்பூரில் பக்கிங்காம் கால்வாய் ஓரம் உள்ள ஓர் இடத்துக்கு தண்ணித்துறை என்ற பெயர் உள்ளது. அங்கே காய்கறி அங்காடி செயல்படுகிறது. படகு மூலம் சென்னைக்கு காய்கறிகள் கொண்டுவரப்பட்டு இங்கே சந்தைப்படுத்தப்பட்டன.
இப்படி சென்னையின் நீர்வழித் தடங்கள் மக்களின் பயன்பாட்டுக்கு உகந்ததாக இருந்தது எப்படி, இப்படி நாம் நாசித் துவாரங்களை மூடிக்கொண்டு செல்லும் வகையில் மாறியது என்பதை ஆராய்ந்தால் ஓர் உண்மை புலப்படும். ஓர் இடத்தில் முதலில் தோன்றும் ஒரு சிறு ஆக்கிரமிப்பை, புல்லை நகத்தால் கிள்ளி எறிவதுபோல அகற்றி விடலாம். ஆனால், தீ பற்றாத கூரைகள் அமைத்து இலவச மின்சாரம் வழங்கி, உணவுப் பொருள்களைப் பெற குடும்ப அட்டைகள் விநியோகித்து, அடையாள அட்டை, வாக்குரிமை ஆவணம் போன்றவற்றை அரசு அளித்து விட்டு, ஆக்கிரமிப்புகள் ஆல் போல் தழைத்து, அருகு போல் வேரோடிய பிறகு படைகள் சூழ கோடாரி எடுத்துக் கொண்டு போருக்குச் செல்வதுபோல அதிகாரிகள் செல்வது வேடிக்கையாக இருக்கிறது. இந்த முயற்சி பயனளிக்காது என்பதும், ஆக்கிரமிப்பாளர்கள் நீதிமன்றத் தடை உத்தரவு பெற்றுத் தப்பித்து விடுவார்கள் என்பதும் அவர்களே சொல்லிக் கொடுக்கும் உபாயம் என்பதும் பொதுமக்களுக்கு தெரியும்.
ஆற்றோர ஆக்கிரமிப்பாளர்களுக்கு கழிவறைகள் கிடையாது. அவர்களின் வீட்டுக் கழிவு நீரை வெளியேற்ற இந்தப் புகழ் மிக்க ஆறுகளே துணை. கூவம் உற்பத்தியாகும் இடத்தில் இருந்து அந்த ஊர் கோயில் தெய்வத் திருமேனிகட்கு திருமஞ்சனம் செய்ய நீர் எடுக்கப்படுகிறது. கடலில் கலக்கும் கூவம், சென்னையில் சாக்கடையாய் பரிமளிக்கிறது. தற்போது அரசு சரியாகச் செயலாற்ற வேண்டும் என்று நீதிமன்றம் விரும்புகிறது.
பொதுவுடைமை பூத்துக் குலுங்கும் செஞ் சீனாவில் இதுபோன்ற ஆக்கிரமிப்பாளர்களுக்கு கிஞ்சித்தும் இடம் கொடுப்பதில்லை. நகரின் தூய்மை, அழகு, சுகாதாரம் ஆகியவற்றை மேம்படுத்துவதில் அங்கே சமரசம் இல்லை. யாரும் சிணுங்கவும் முடியாது; சிரிக்கவும் முடியாது. ஆனால், நம் நாட்டில், ஏழைகளின் வாழ்வாதாரங்களை அழிக்காதே - குடிசைகளை அகற்றாதே. அவர்களுக்கு மாற்று இடம் உடனே கொடு என்பது போன்ற கோரிக்கை பதாகைகள் ஏந்தியபடி தோழர்கள் பெருங்குரலெடுத்து முழங்குவார்கள்.
சட்டத்தை மீறுவதும் இயற்கையை அழிப்பதும் நமது அடிப்படை உரிமைகள் என்று வாழ்கிறோம். நமது அரசும் தன் பங்கிற்கு குட்டை, குளம், கால்வாய், ஊருணி, கண்மாய், ஆறு, ஏரி போன்ற இடங்களில் குடியிருப்புகள், பேருந்து நிலையங்கள், நினைவுக் கோட்டங்கள் கட்டி மகிழ்கிறது. நுங்கம்பாக்கம் ஏரி, பாடி ஏரி, கொடுங்கையூர் ஏரி போன்ற இடங்கள் நல்ல உதாரணங்கள்.
அணைகள், நீர்த் தேக்கங்கள், கட்டுமானங்கள் இவற்றால் நிலவியல் இயற்கையின் சுற்றுச்சூழல் எல்லாம் பாழ்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாரீஸ் நகர எம்.சி.கில் பல்கலைக்கழகம் செயற்கைக்கோள் உதவியோடு உலகின் நீண்ட ஆறுகள் குறித்த ஆய்வினைச் செய்தது. 1.2 கோடி கி.மீ. தொலைவுக்கு உலகில் உள்ள ஆறுகளை ஆய்வு செய்தார்கள். 1,000 கி.மீ. தொலைவு பயணிக்கக் கூடிய 91 ஆறுகளில் 21 ஆறுகள் மட்டுமே நேரடியாக கடலை அடைகின்றன. நீண்ட தொலைவு செல்லும் 242 ஆறுகளில் மூன்று பங்கிற்கும் மேலானவை தங்கு தடையின்றி செல்லும் வகையில் இருக்கின்றன.
உலக ஆறுகள் பூமியின் மேற்பரப்பு இணைப்பாக, நிலத்தடி நீர் இருப்பதாக இயற்கை சுற்றுச்சூழலின் காட்சியாக இருக்கிறது என்று எம்.சி.கில் பல்கலைக்கழகத்தின் நிலவியல் துறையின் தலைமைப் பேராசிரியர் சொல்லுகிறார். மீதம் உள்ள பெரும்பாலான ஆறுகள் ஆர்டிக், அமேசான், காங்கோ போன்ற இடங்களில் ஓடுகின்றன. உலகில் உள்ள மொத்தம் உள்ள 28 லட்சம் ஆறுகளில் 15 மீட்டர் உயரத்துக்கு 60,000 பெரிய அணைகள் இருக்கின்றன. இவை ஆறுகளில் வரும் ஊட்டச்சத்து நிரம்பிய தாதுக்களை தடுத்து நிறுத்தி விடுகின்றன. இப்படி அவர்களின் ஆய்வு நீண்டு செல்கிறது.
வள்ளுவர் கூறியதுபோல், உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தமாக இருக்கின்ற நீரை, மண்ணிற்கு வரும் விண் நீரை சரியாகப் பாதுகாக்காவிட்டால் வருங்காலச் சந்ததியினர் நம்மை மன்னிக்க மாட்டார்கள். ஆக்கிரமிப்புகளை கட்டாயமாக அகற்றியே ஆகவேண்டும். கிராமப்புறங்களில் பாட்டை, மயானம், கால்வாய், ஏரி, குளம், புறம்போக்குகளை யாரும் ஆக்கிரமிக்க அனுமதிக்கக் கூடாது. நகர்ப்புறங்களில் சரியாக கண்காணிக்க உடனுக்குடன் களைய போர்க்கால நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
கட்டுரையாளர்:
தலைவர்,
திருக்கோவலூர் பண்பாட்டுக் கழகம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...