ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

நீதியா, அநீதியா, யார் அறிவார்?

நீதிமன்றங்களில் மலையெனக் குவிந்திருக்கும் வழக்குகள் பற்றிய செய்தியை அண்மையில் ஆங்கில நாளேடு ஒன்று

News image
Updated On :31 ஜனவரி 2024, 6:51 am

டி.எஸ். தியாகராசன்


நீதிமன்றங்களில் மலையெனக் குவிந்திருக்கும் வழக்குகள் பற்றிய செய்தியை அண்மையில் ஆங்கில நாளேடு ஒன்று வெளியிட்டது. இதனைப் படித்தவர் எவரும் கவலை கொள்வர்.
பக்ஸர் என்ற ஊரைச் சார்ந்த ராகுல் பாடக் என்பவர் 5.5.1951-ல் டூமாரா நகரில் உள்ள சிவில் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். கடந்த நவம்பர் மாதம் 18-ஆம் நாள் வரை வாதி, பிரதிவாதி, வழக்குரைஞர்கள் வாதம் நடந்து கொண்டிருந்தது.
இந்த ஆண்டோடு இந்த வழக்குக்கு வயது 67. இப்படி நாட்டில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் மட்டும் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தேங்கி இருக்கும் வழக்குகள் 140. 58 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள வழக்குகள் 1,782. 48 ஆண்டுகளுக்கும் அதிகமாக உள்ளவை 12,927. 38 ஆண்டுகளாகியும் காத்துக் கிடப்பவை 50,846. மாவட்ட, கீழமை சார்பு நீதிமன்றங்களும் இதில் அடங்கும்.
கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக நீதி தேவதையின் கடைக்கண் பார்வைக்காக காத்திருப்பவை 60 லட்சம் வழக்குகள். இந்தப் புள்ளிவிவரங்கள் எல்லாம் கடந்த நவம்பர் மாதம் முடிய! இது குறித்து மிகுந்த கவலை தெரிவித்தது மட்டுமல்ல, இதே வேகத்தில் வழக்குகள் நடைபெற்றால், 324 ஆண்டுகள் ஆகலாம் என்று ஆரூடம் கணிக்கப்பட்டுள்ளது.
தற்போது நீதிமன்ற ஆவணங்கள் தகவல்படி முன் எப்போதும் இல்லாத உயர் அளவாக 2.93 கோடி வழக்குகள் தேங்கியுள்ளன. இதில் 71 சதவீதம் குற்றம் சார்ந்த வழக்குகள். கடந்த மாதம் மட்டும் 10.23 லட்சம் வழக்குகளில் 8 லட்சம் வழக்குகள் கீழமை நீதிமன்றங்களில் முடித்து வைக்கப்பட்டன என்றாலும், மாதந்தோறும் புதிதாக ஓரிரு லட்சம் வழக்குகள் அணிவகுக்குகின்றன. 
விசாரணை முடியாமலும், விவாதங்கள் நிறைவுறாமலும் பல்லாயிரம் பேர் சிறையில் வாடி வதங்குகின்றனர். மனம் உடைந்து, உடல் நலிந்து, விரக்தியின் விளிம்பில் வாழ்கிறார்கள்.
25.12.18 வரை உ.பி.-இல் மொத்தம் உள்ள வழக்குகளில் (70,17,676) 26,002, மகாராஷ்டிரத்தில் (35,62,783)-இல் 13,238, மேற்கு வங்கத்தில் (22,09,186) வழக்குகளில் 9,710, பிகாரில் (24,76,667) வழக்குகளில் 7,056 என 30 ஆண்டுகளாக தேங்கி இருக்கின்றன.
இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் பல ஆயிரம் வழக்கு கட்டுகள் அவிழ்க்கப்படாமல் வைத்திருக்கிற பட்டியல் நீளுகிறது. இப்படியெல்லாம் நீதிமன்றங்களில் சிவிலோ, கிரிமினலோ முடிய பலகாலம் ஆகும் என்பதை அப்போதே தேசத் தந்தை மகாத்மா தனது சுயசரிதையில் ஒரு சிவில் வழக்கு தொடர்பாகப் பதிவு செய்கிறார். இளம் பாரிஸ்டர் மோகன் தாஸ் கரம் சந்த் காந்தி, வாதி தாதா அப்துல்லாவின் வழக்குரைஞராக தென்னாப்பிரிக்கா சென்றார். பிரதிவாதியான சேத் தயேப் ஹாஜி கான் முகமது, வாதியின் உறவினர்தான். இவர்களுக்கிடையே வணிக உறவும் இருந்தது. இதில் ஏற்பட்ட கொடுக்கல், வாங்கல் பிரச்னையில் 40 ஆயிரம் பவுனுக்காக தாதா அப்துல்லா சேத் தயேப் பேரில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில்தான் பி கோட் பற்றி முதலில் காந்தியடிகள் அறிந்து கொள்கிறார். வழக்கு ஆவணங்களை முழுமையாக ஆராய்ந்து தேர்ச்சி பெற்றார். பின்னர் அவர், இதன் பயனாக வாதி, பிரதிவாதிக்குக்கூட நான் அறிந்திருந்த அளவு வழக்கைப் பற்றி தெரியாது என்று சொல்லி விடலாம். ஏனெனில், இரு கட்சியாரின் ஆவணங்கள் என்னிடமிருந்தன. அமரர் பிங்கட் கூறிய புத்திமதியை நினைவுகூர்ந்தேன். விவரங்கள்தான் சட்டத்தில் முக்கால் பகுதி. தென்னாப்பிரிக்காவின் பிரசித்தி பெற்ற பாரிஸ்டரான லெனார்டு இந்தக் கூற்றை உறுதிப்படுத்தினார். என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த வழக்கில் நியாயம் என் கட்சிக்காரர் பக்கமே இருந்தாலும், சட்டம் அவருக்கு விரோதமாகவே இருப்பதாக காணப்பட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் மஸ்டர் லெனார்ட்டிடம் போனேன்.
அவரும் வழக்கு என் கட்சிக்காரர்க்கு அனுகூலமாக இருப்பதாகக் கருதினார். வழக்கின் விவரங்களை நாம் கவனித்துக் கொண்டால் சட்டம் தன்னைத் தானே கவனித்துக் கொள்ளும் என்றார்.
வழக்கின் விவரங்களை மீண்டும் பரிசீலனை செய்தேன். என் கட்சிக்கு ஆதாரமாக காட்டக்கூடிய பழைய தீர்ப்பு ஒன்றைக் கண்டேன். இந்தத் தீர்ப்பைப் படித்து பார்த்த லெனார்டு, நாம் ஜெயித்து விடுவோம். ஆனால், எந்த நீதிபதி இதை விசாரிக்கிறார் என்பதை மட்டும் மனதில் கொள்ள வேண்டும் என்றார். 
இந்த வழக்கின் விவரங்கள் தாதா அப்துல்லாவின் கட்சிக்கு வலுசேர்ப்பதாக இருக்கிறது. எனினும், வழக்கை தொடர்ந்து நடத்திக் கொண்டே போனால் வாதி, பிரதிவாதி இருவரும் அழிந்து போவது நிச்சயமென்றும் கண்டேன். நீதிமன்றத்திலேயே முடிவு ஏற்படுவது என்றால், இந்த யுகத்தில் இல்லையென்றும் சொல்லும்படியாக இருந்தது. இதனால் யாருக்கு நன்மை? 
இருவரும் வழக்கை உடனே முடித்துவிட விரும்பினார்கள். தயேப் சேத்திடம் சென்று வழக்கை சமாதானமாக முடித்துக் கொள்ள வேண்டினேன். இரு தரப்பு வழக்குரைஞர்களும் புதிய சட்ட நுட்பங்களை கிளப்பிக் கொண்டிருப்பது நிற்காது. வெற்றி பெற்ற கட்சியினர் தாங்கள் செலவழித்த தொகை முழுவதையும் ஒரு நாளும் மீட்பதில்லை என்பதை முதன்முதலாகக் கண்டேன். மேலும், வழக்குரைஞர் தொழிலில் வெறுப்பும் கொண்டேன் என்கிறார் காந்தியடிகள். முடிவில் தான் ஏற்ற முதல் வழக்கை சமரசத்தின் மூலம் வெற்றி கண்டார்.
சிவில் வழக்குகள் இப்படி என்றால் கிரிமினல் வழக்கொன்று அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் நடந்து முடிந்தது. ரஷியாவின் விண்வெளி அமைப்பின் துணை நிறுவனமான கீனாங்கோஸ்மோஸில் (மோஸில்) 1972-ல் இந்தியப் பிரதிநிதியாக சேர்ந்தார் விஞ்ஞானி கே.சந்திரசேகர். இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) மூத்த விஞ்ஞானியாக எஸ்.நம்பி நாராயணன் பணியாற்றினார்.
1994-இல் இந்திய விண்வெளி திட்டம் தொடர்பான ரகசிய ஆவணங்களை ரஷியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு விற்றதாகவும், உளவு பார்த்ததாகவும் மாலத்தீவு பெண்கள் உள்பட 6 பேரை கேரள காவல் துறை கைது செய்து சிறையில் அடைத்தது. பின் வழக்கு விசாரணையை சி.பி.ஐ. தொடர்ந்தது. சில ஆண்டுகள் கழித்து இது ஒரு பொய்யான வழக்கு என்பதைக் கண்டுபிடித்தது.
இதனால் உச்ச நீதிமன்றம் 1998-இல் அனைவரையும் விடுதலை செய்தது. எஸ்.நம்பி நாராயணன் மீது பொய் வழக்கு தொடுத்து சிறையில் அடைத்ததற்காக கேரள காவல் துறை மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். தலைமை நீதிபதியாக அப்போது இருந்த தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, நம்பி நாராயணனுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.50 லட்சத்தை கேரள அரசு வழங்க வேண்டும் என்று கடந்த ஆண்டு நவம்பர் 14-ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.
இதற்கிடையில் பெங்களூரு கொலம்பியா ஆசியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மற்றொரு விஞ்ஞானி கே.சந்திரசேகர் நவம்பர் 14-ஆம் தேதி காலை 7.15 மணிக்கு சுய நினைவிழந்தார். மாலை தீர்ப்பு வந்தது.
அவரது மனைவி கே.ஜே. விஜயம்மா, என் கணவர் இன்று விடியற்காலைகூட இந்தத் தீர்ப்பு பற்றிப் பேசினார். தீர்ப்பு குறித்து தெரிந்து கொள்வதற்கு முன்பு அவர் கோமா நிலைக்குச் சென்று விட்டார். பிறகு நவம்பர் 18-ஆம் தேதி உயிர் பிரிந்தது என்று கண்ணீர் மல்கக் கூறினார்.
இன்று வரை ஏன் இப்படி பொய் வழக்கு தொடுத்து எங்கள் குடும்பத்தைச் சிதைத்தார்கள் என்பது புரியவில்லை என்கிறார். இந்த வழக்கு முடிய 20 ஆண்டுகள் ஆனது. இந்த 20 ஆண்டுகளில் இவர்கள் அனுபவித்த கொடுமைகளை யாரால் இனி துடைக்க முடியும். இது நீதியா? அநீதியா?
குற்றவாளிகள் தப்பித்துக் கொள்வதும், நிரபராதிகள் தண்டிக்கப்படுவதும் நடப்பதை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். நீதிபதி தனக்கு முன்னால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களையும் வாதி, பிரதிவாதி வழக்குரைஞர்கள் வாதிடும்போது எழுகின்ற உண்மை அதிர்வுகளையும், சாட்சிகளின் கூற்றுகளையும் ஆராய்ந்து மெய் உணர்வால் நீதி வழங்குகிறார்.
சில நேரங்களில் உண்மை போன்ற பொய் ஆவணங்களாலும், திறமையான புகழ் பெற்ற வழக்குரைஞர்களின் வாக்கு வன்மையாலும், பொய்யுடை ஒருவன் சொல் வன்மையினால் மெய் போலுமே மெய் போலுமே என்ற வெற்றி வேட்கை படியும், பிறழ் சாட்சிகளாலும் தீர்ப்பு தடம்புரள வாய்ப்பு ஏற்படுகிறது.
மறு விசாரணைக்கோ, மேல் முறையீட்டுக்கோ, சீராய்வுக்கோ செல்லும்போது முந்தைய தீர்ப்புகள் உறுதி பெறலாம் அல்லது தீர்ப்புகள் மாற்றி எழுதப்படலாம். வழக்குகளில் பன்முறை வாய்தா வழங்குவதும், பல காரணங்களால் ஒத்திவைப்பதும், தடை உத்தரவு வழங்குவதாலும்தான் வழக்கின் ஆயுள் நீள்கிறது.
நீதிமன்றங்களை கோயிலாகக் கருதியும் நீதிபதிகளை நடமாடும் தெய்வங்களாக எண்ணியும், வழக்குரைஞர்களை நம்பிக்கை உரியவராகக் கொள்வதும், பாமர மக்களின் நம்பிக்கை.
அதனால்தான் சொத்துகளை அடமானம் வைத்தும், நகைகளை விற்றும் வழக்கை தொடருகிறார்கள். ஆனால், வழக்குகள் நீடித்துக் கொண்டே போவதால் அவர்கள் குடும்பம் சிதைந்து போகிறது.
தேங்கிக் கிடக்கும் வழக்குகளை நீதிபதிகள் எவ்வளவுதான் முயன்று விரைந்து நடத்தினாலும்கூட, வழக்குகள் முற்றுப் பெறுவதில்லை. மேல் முறையீடுகளில் சிக்கி நீதிமன்றங்களை விட்டு அகல மறுக்கின்றன. 
வழக்குரைஞர்கள் சட்டப் புத்தகத்தின் அடிப்படையில் வழக்காடுவதற்கு முன்னால், சமரச முயற்சியை மேற்கொண்டால் ஒருவேளை குற்றப் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படலாம். அப்படிப்பட்ட பரந்த உள்ளம் கருப்பு அங்கிக்கும் இருந்தால்தான் அது சாத்தியம்!

கட்டுரையாளர்:
தலைவர்,
திருக்கோவலூர் பண்பாட்டுக் கழகம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.