/

அறிவு பெறும் வாயில்கள்

அறிவு மிக ஆபத்தான கருவி. அதனால்தான் அது அற்றம் காக்கும் கருவியாகவும் இருக்கிறது. அநேகமாக, நாம் பாதுகாப்புக்குப் பயன்படுத்தும் எந்தக் கருவியும்

News image
Updated On :31 ஜனவரி 2024, 6:50 am

கிருங்கை சேதுபதி


அறிவு மிக ஆபத்தான கருவி. அதனால்தான் அது அற்றம் காக்கும் கருவியாகவும் இருக்கிறது. அநேகமாக, நாம் பாதுகாப்புக்குப் பயன்படுத்தும் எந்தக் கருவியும் இன்னொரு வகையில் ஆபத்தைத் தரக்கூடியதுதான். அதனை எப்படிப் பயன்படுத்துகிறோமோ அப்படித்தான் அதன் பயனைத் துய்க்க முடியும்.
இயன்றவரையிலும் எந்த ஆபத்தும் இல்லாமல் அதனைப் பயன்படுத்திக் கொள்வதில்தான் நம் சாமர்த்தியம் இருக்கிறது. அதற்கான சந்தர்ப்பத்தை நமக்கு வாழ்க்கை வழங்கிக் கொண்டே இருக்கிறது. ஆபத்து வராமல் பாதுகாத்துக் கொண்டு வைத்திருக்கும் ஆயுதத்தைவிட, ஆக்கபூர்வமான பயன்பாட்டுக்கு அந்த ஆயுதத்தைப் பயன்படுத்திக் கொள்வது எப்படி என்பதில்தான் மனிதகுல வளர்ச்சி இருக்கிறது.
இன்றைக்கும் இயற்கை நியதிப்படி எல்லா உயிர்களும் கண்டு அஞ்சுகிற இயற்கைப் பொருள் தீ. இது தீய பயத்தலால்தான் இப்பெயர் பெறுகிறது. எறும்பு முதலாக யானை ஈறாக உள்ள எல்லா உயிர்களும் கண்டு அஞ்சுவது தீக்கு மட்டும்தான். அவ்வளவு ஆபத்தான அதனை முற்றமுழுக்கத் தனக்குச் சாதகமாக ஆக்கிக்கொண்ட வல்லமையை உருவாக்கிக்கொண்டது மனிதம்.
அன்றாட வாழ்வில் நாம் எத்தனை வகைகளில் தீயைப் பயன்படுத்துகிறோம் என்பதை எண்ணிப்பார்த்தால் அறிவின் வல்லமை நமக்குப் புரியும். அதனை இன்னமும் தீமைக்குப் பயன்படுத்த நினைக்கிறோம் என்றால் நமது அறிவு இன்னும் விசாலப்படவில்லை என்றே பொருள். இங்கே தீ என்பது தீயை மட்டும் குறிக்காமல் தீமையைக் குறிக்கும் சொல்லாக மாறிவிடுகிறது.
இது மார்கழி மாதம் ஆலகால விஷத்தைவிடவும் ஆபத்தான பனிக்கொடுமையில் இருந்து தப்பிப்பது எப்படி? வேண்டாதவற்றைப் போட்டுக் கொளுத்தி வேண்டிய அளவிற்குத் தீ மூட்டிக் குளிர் காய்வதுதான் வழி. போகிப்பண்டிகை இப்படித்தான் புகையாக வந்து நம்மைச் சூழ்ந்து கொள்கிறது. தீயைவிடவும் தீமை தருகிற தீயவற்றைப் போட்டுக்கொளுத்தி அதில் இருந்து வெம்மையாகிய சுகத்தைப் பெற்றுக் கொள்ள எளிய வழி இது. 
பனிப்பதத்தில் கிடக்கும் ஓலையையோ, இன்னபிற குப்பைப் பொருளையோ, தீ மூட்டிப் பார்ப்பது ஒரு விளையாட்டு. இந்தத் தீ அளவோடு எரிகிற வரை, இன்பம். அளவுக்கு மீறிப் பற்றிவிட்டால் ஆபத்து. அதற்கு ஓர் எல்லை உண்டு.
இந்தத் தீயில் இருக்கும் தீதை எடுத்துக் கொண்டு சொல்விளையாட்டு ஆடிக்காட்டுகிறார் திருவள்ளுவர். தீயவை தீய பயத்தலால் தீயவை/ தீயினும் அஞ்சப் படும். எனவே, தீயைக் கண்டு அஞ்சாதே. தீமைக்கு அஞ்சு என்று அறிவுரை சொல்வதோடு நிறுத்திக் கொள்ளவில்லை அவர். இதற்கு அடுத்தபடியாக மேலே சொல்கிறார்.
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க - இது அரசு அதிகார வர்க்கத்திடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்காகச் சொல்லப்பட்டாலும், மாறுபாடு உடையவர்களிடத்திலும் மனக்கசப்பு வாராமல் நடந்து கொள்வதற்கு சொல்லப்பட்ட வழி. இது எல்லா உயிர்களிடத்திலும் உறவுகளிடத்திலும் பேணப்பட வேண்டிய ஒழுக்கம்.
இந்தத் தீயினுக்கெல்லாம் தாய் என விளங்குவது சூரியன். அதனைப் பரிதி என்றும் சொல்வோம். பரிதிமுன் பனியே போலப் பண்ணிய தீமை, அன்னை முன் அகலும் என்று பக்திபூர்வமாகச் சொல்கிறார் பாரதியார். அது சரி, பனிக்கு நிகராகச் சொல்லப்படும் ஆலகால விஷம் பற்றியும் நமக்கு ஒரு கதை உண்டு. அசுரர்களும் தேவர்களும் கூடி, அமுது பெறுவதற்காகப் பாற்கடலைக் கடைந்த கதை. இது கதையோ, கற்பனையோ? இதன்வழி ஓர் உண்மையை உணர்த்துகிறது தமிழ்.
உணர்ச்சியும் அறிவும் இருபுறத்து இருந்து இயக்குகிறபோது, இந்த உயிர் உடலின் துணைகொண்டு செயல்படத் தொடங்குகிறது. தேடுவது நல்லது என்றாலும், அதனால் கெடுதியும் நேரும். இயற்கையில் நன்றும் தீதும் ஒன்றுபட்டுத்தான் இருக்கும். அதில் தீமையைப் புறந்தள்ளி, நல்லதைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதில்தான் வெற்றி இருக்கிறது. இன்பம் தேடவேண்டுமெனில் கூடவே துன்பமும் இருக்கும். அதனை விலக்குவதற்குத்தான் அறிவு கருவியாகிறது. அறிவின் துணைகொண்டு அனுபவத்தின் வழிநின்று செயல்படும் வாழ்க்கையில் முதலில் வருவது இடர்தான். அது கண்டு அஞ்சாமல் தொடர்ந்து முயன்றால் அடுத்து வருவது இன்பம். இந்த இயற்கை மர்மத்தை எடுத்து விளக்குவதற்குத்தான் இந்தக் கதை.
மனம் ஒரு பாற்கடல் அசுரத்தனமான முயற்சியாலும், அறிவார்ந்த நிதானத்துடனான செயல்பாட்டாலும் கடையத் தொடங்குவது இன்பமாகிய அமுதுபெறத்தான். ஆனால், துன்பம்தான் முதலில் வரும். துன்பத்தைப் போக்குவதில்தான் இன்பத்தின் தொடக்கமே இருக்கிறது. துன்பத்தைப் பிறர்பால் தள்ளிவிட்டு, இன்பத்தை மட்டும் தான் அனுபவிக்க நினைப்பது அதனினும் இடர்தரும் என்பதை விளக்க எத்தனையோ வரலாறுகள், கதைகள் நம்மிடம் உண்டு. ஆனால், பிறர் துன்பத்தைத் தன் துன்பமாக ஏற்றுக் கொண்டு செயல்படுகிற உன்னத அருள் இருக்கும் உள்ளமே ஆண்டவன் இருக்கும்இடம். அவன் இறைவனுக்கு நிகராக என்றும் வாழும் மக்களால் போற்றப்பெறுவான். என்றும் இறவாத ஆற்றல் பெற்றவன் ஆகிவிடுகிறான்.
இருப்பதிலே பெருந்துயரங்களாகிய இறப்பும் பிறப்பும் அவனுக்கு இல்லை. அவனே சிவன். அவன் எங்கிருக்கிறான் என்று தேடுவோர்க்குச் சங்க இலக்கியம் இங்கிருக்கிறான் என்று காட்டுகிறது. ஒளவையார் காட்டுகிறார். அரிய நெல்லிக்கனியைத் தன்னிடம் தமிழ் வாழ்வதற்காகத் தந்த அதியமானை நோக்கி, அவனைச் சிவன் ஒத்தவன் என்று அடையாளம் காட்டுகிறார். அந்த இடத்தில்தான் இந்த நீலகண்டத்திற்கான விளக்கம் கிடைக்கிறது.
நீலமணிமிடற்று ஒருவன் போல மன்னுக பெரும நீயே இது ஒளவையின் அமுத வாக்கு. அரிய நெல்லிக்கனியைப் பெருந்துன்பங்களுக்கிடையில் தேடிப் பெற்றுத் தான் உண்ணாமல் தமிழ் வாழவேண்டும் என்பதற்காக, நான் உண்ணத்தந்த உன் நிலை, அந்தச் சிவன் நிலை. எனவே, நீலகண்டனாகிய சிவனைப்போல நீயும் நிரந்தரமாக வாழ்க என்று விளக்கமுறுகிறது இந்தத் தொடர் துன்பத்தைத் தனதாக்கிக் கொண்டு இன்பத்தைப் பிறர்க்கு அளிப்பவனுக்குக் கிடைக்கிற இன்பம் பேரின்பம் என்பது இதன் உள்பொருள்.
இன்றைக்கு ஒளவையும், அதியமானும் இல்லை; நெல்லிக்கனியும் இல்லை. ஆனால், இந்தத் தமிழ்க்கவிதை இருக்கிறது. இதுவே, ஒளவையையும் அதியமானையும் இறப்பின்றிக் காக்கிறது. இங்கே தமிழ் அமுதமாகிவிடுகிறது. இந்த அமுதம் எவ்வுயிர்க்கும் இன்பம் தருகிறது. அதுவே இலக்கியம் ஆகிறது. வாழ்வுக்கு இலக்கணமும் ஆகிறது.
ஏன் இவ்வளவு புத்தகங்களை வாங்கிக் குவித்துப் படிக்க வேண்டியிருக்கிறது? அடுத்தவர் பெற்ற அனுபவங்களை அவர்கள் பெற்ற துன்பப்பாடுகளை, கதை, கவிதை, கட்டுரைகளால் படித்து, அதன்வழி தானும் அனுபவித்து, அந்தத் துயரங்களில் சிக்கிக்கொள்ளாமல் தற்காத்துக் கொள்வதற்கு, இது முதலில் துணை செய்யும். அதற்கும் அடுத்த கட்டத்திற்குப் போக, அந்தப் புத்தகம்தான் போதிக்கிறது. 
வெறும் பார்வையாளனாக இவ்வுலகில் வந்துவிட்டுப் போவதற்கல்ல இந்தப் பிறப்பு, பிறருக்குப் பயன்படுமாறு வாழ்வதற்குத்தான். இந்த வரலாற்று வரிசையில் உன் வரவைப் பதிவு செய் என்று சொல்வதற்கு வழங்கப்பட்டதுதான் இந்த மனிதப்பிறவி. அதன்வழி பிறர் துன்பங்களைப் போக்க முயல்க என்று அறிவுறுத்துவதே புத்தகத்தின் வழிபெறுகிற அறிவு.
உணர்ச்சியும் அறிவும் பொருந்திக் கொள்கிறபோது, எவ்வழிச் செல்வது என்று தெரியாமல் அல்லலுறும் மனதுக்கு உற்ற துணையாவது நல்லோர் மொழிகள்தான். இந்த அறிவினால் ஆகக் கூடிய பயன் யாது? இன்பமா? துன்பமா? ஆராய்ச்சிக்கெல்லாம் போகாமல் எதார்த்தமாகச் சொல்கிறது திருக்குறள். பிறிதின் நோய் தன் நோய்போல் போற்றுவதுதான் என்று.
பிறரின் நோய் மட்டும் அல்ல. பிறிதின் நோயையும். தன்னொத்த மனிதர்களாகிய பிறரின் நோயை மட்டும் அன்றி, தன்னொத்த உயிராகிய அனைத்தின் நோய்களையும் தனதாகக் கருதிப் போற்றுவது அறிவின் பயன் என்கிறார்.
இதில் போற்றுதல் என்ற சொல்லுக்குக் கூடுதல் அழுத்தம் கொடுத்துப் புரிந்து கொள்ள வேண்டும். ஒன்று, நோயினால் துன்பம் வாராமல் போற்றுதல், மற்றொன்று அந்த நோயே வரவிடாமல் போற்றுதல். உடல்நோய் வாராமல் போற்றுதற்கு மருந்துகள் இருப்பதுபோல், உளநோய் தாக்காமல் போற்றிக் கொள்வதற்குப் புத்தகங்கள் துணையாகின்றன என்பது ஒருபுறம் இருக்க, இத்தகு நோய்களைத் தமதெனக் கருதித் தாங்கிக் கொள்கிறபோது வருகிற தைரியம் இருக்கிறது பாருங்கள், அந்தத் தைரியத்தைத் தருவது எது தெரியுமா?
தீமையின் பக்கம் சாராமல் தூய்மைமிகு தாய்மை நிலையில் நம்மைக் கொண்டு போய் உய்ப்பது இந்த அறிவு. அது, அடுத்த உயிரின் துன்பத்தைத் தானும் தாங்கி அனுபவிப்பதோடு அதனை அகற்ற முயன்றால் தனக்கு வருகிற துன்பத்தையும் தாங்கிக் கொள்ள முடியும் என்பதை அனுபவபூர்வமாக உணர்த்திவிடுகிறது. அத்தோடு, தான் துன்பப்படும் நேரத்தில் தன்னால் போற்றப்பட்ட உயிர்களும் தனக்குத் துணையாக வந்து தாங்கிக் கொள்ளும் என்பதையும் காட்டிவிடுகிறது. 
அதற்குத்தான் இந்த அறிவு துணையாக வேண்டும். அது அற்றம் காக்கும் கருவி அல்லவா? இந்த அறிவு பெறும் வாயில்தான் புத்தகம். மேல் விளக்கம் பெறத் திருக்குறளை எடுத்துக் கொள்வோம். அது பின்னர் நம்மையே எடுத்துக் கொள்ளும். நமது துயர்களைக் கொல்லும்; பேரின்பம் நல்கும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.