இந்து மகா கடலில் இந்தியா எதிர்கொள்ளும் அபாயங்கள்!
இந்து மகா கடலால் இந்தியாவிற்குக் கேடுகள் வரக்கூடிய அபாயங்கள் காணப்படுகின்றன. இத்தகைய ஆபத்துகள் ஏற்படாமல் தற்காத்துக் கொள்வது அவசரம், அவசியம்.


வழக்குரைஞர் கே. எஸ். இராதாகிருஷ்ணன்
இந்து மகா கடலால் இந்தியாவிற்குக் கேடுகள் வரக்கூடிய அபாயங்கள் காணப்படுகின்றன. இத்தகைய ஆபத்துகள் ஏற்படாமல் தற்காத்துக் கொள்வது அவசரம், அவசியம்.
இந்திய பெருங்கடலின் பெரும்பகுதியை சீனாவின் தூண்டுதலால் சிங்கள அரசு கைப்பற்றத் துடிக்கிறது. இதுகுறித்தான ஆவணங்கள் தற்போது வெளிவந்துள்ளன.
ஐ.நா.வில் சிங்கள அரசு, இந்து மகா சமுத்திரத்தின் பெரும்பகுதியை தன் நிலத்துக்குச் சொந்தமென உரிமை கோரி மனு அளித்துள்ளது. இந்திய பெருங்கடலில் இலங்கையின் ஆதிக்கம் தற்போது ஏறத்தாழ 200 மைல்கள் உள்ளதை 350 மைல்களாக அதிகரிக்க வேண்டி ஐ.நா.மன்றத்தில் முறையிட்டுள்ளது. இதை கடுமையாக எதிர்க்க வேண்டிய இந்தியாவோ வாய்மூடி மெüனியாகவே இருந்து வருகிறது.
ஏதாவதொரு போர் மூளும் அபாயம் ஏற்பட்டால் நேரடியாக கேரளம், தமிழகம், குறிப்பாக குமரி முனையிலிருந்து இராமேஸ்வரம் நாகப்பட்டினம் வரை உள்ள கடற்கரைப் பகுதிகளுக்கும், நாட்டின் பாதுகாப்பில் பாதகம் ஏற்படும். இது தமிழகத்தின் வாழ்வாதார, பாதுகாப்பு பிரச்னை.
இலங்கையின் இந்த கோரிக்கை விசாரிக்கப்பட்டு, இறுதித் தீர்ப்புக்காக அடுத்த அமர்விற்குத் தள்ளிப்போட்டிருக்கிறது ஐ.நா. சபை. இதே மாதிரியான மனுவை இந்திய அரசும் ஒருமுறை ஐ.நா.-வில் கொடுத்ததாகத் தகவல்கள் உள்ளன. சிங்கள தேசம் கைப்பற்றத் துடிப்பது குமரிக்கண்டத்தின் இந்திய பெருங்கடலின் பெரும் நீர்பரப்பை என்பதுதான் உண்மை.
ஏற்கெனவே கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டு, இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டும், கைது செய்யப்பட்டும் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்தார்கள். இப்போது இந்தியாவின் பாதுகாப்புக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் வகையில் சீனாவின் துணையுடன் இந்து மகா சமுத்திரத்தில் தனது ஆளுமையை ஏறத்தாழ 350 மைல்களுக்கு விரிவாக்க இலங்கை முறையிட்டுள்ளது.
வழக்கமாக சர்வதேசக் கடல் பகுதியில் ஒரு நாட்டின் ஆளுமையானது 200 மைல் தொலைவுக்குத்தான் இயங்க முடியும். 350 மைல்களுக்கு விரிவுபடுத்துவது என்பது சர்வதேசச் சட்டங்களுக்கு விரோதமானது. இந்தியப் பெருங்கடலில் இந்தியாவை அச்சுறுத்தவே சீனா இலங்கையைப் பகடைக் காயாகப் பயன்படுத்துகிறது.
அமைதி மண்டலமான இந்து மகா சமுத்திரத்தில் சீனாவின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கத்தில் செஷல்ஸ் டீகோகார்சியாவை பிரிட்டன் மூலமாக குத்தகைக்கு எடுத்து அமெரிக்கா ராணுவத் தளம் அமைக்க இருக்கிறது. பிரான்சும், ரஷியாவும் இந்தக் கடலில் தனது ஆதிக்கத்தைச் செலுத்தத் திட்டங்களைத் தீட்டியுள்ளன.
பெயருக்குத் தான் இந்தியப் பெருங்கடல். நம்முடைய கண்காணிப்பையும் மீறி இலங்கையின் உதவியுடன் சீனா தனது போர்க் கப்பல்களை எல்லாம் அங்கு நிறுத்துவது மட்டுமல்லாமல் கடற்படை பயிற்சிகள் நடத்துவதாகவும் செய்திகள் வருகின்றன.
தற்போதைய நிலையில் நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான், மியான்மர், நேபாளம், இலங்கை, வங்கதேசம் போன்றவற்றுடன் நல்ல ஒருங்கிணைப்பான உறவுகள் இந்தியாவிற்கு இல்லாமல் இருப்பது அனைவரும் அறிந்ததே. மாலத்தீவு மட்டும் இந்தியாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் சூழலுக்கேற்றவாறு நடந்து கொள்கிறது.
இந்தியப் பெருங்கடல் என்று பெயர் இருந்தாலும், நமது கட்டுப்பாட்டையும் மீறி நாளுக்கு நாள் அயலார்களுடைய அத்துமீறலும் வல்லரசுகளின் வல்லாதிக்கமும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
அமைதி மண்டலமாக இருந்த இந்த கடல் அயல்நாடுகளின் ஆதிக்கத்தால் எதிர்காலத்தில் புவி அரசியலில் பெரும் குழப்பங்களை உருவாக்கும் கடல் மண்டலமாக ஆகிவிடுமோ என்ற ஐயப்பாடு ஏற்படுகிறது.
நேரு காலத்தில் வடக்கேயும், வடகிழக்கிலும் சீனாவுடன் போர் நடந்தது. அவர் காலத்துக்குப் பின் வடமேற்கில் பாகிஸ்தானுடன் போர் நடந்தது. தெற்கே இந்து மகா சமுத்திரத்தில் இந்த மாதிரியான நெருக்கடியில் போர் மூளும் என்ற அச்சம் தற்போதுள்ள சூழலில் ஏற்பட்டுள்ளது.
அப்படி போர் மூண்டால் கூடங்குளம், மகேந்திரகிரி, தும்பா, ஐஎன்எஸ் கட்டபொம்மன், தூத்துக்குடி ஆலைகள், கல்பாக்கம் வரை தாக்குதல் நடத்தினால் பேரழிவுகள் ஏற்பட்டு விடலாம்.
எனவே, இதை முன்கூட்டியே தடுக்கக்கூடிய வகையில் இந்து மகா சமுத்திரத்தில் இந்தியாவின் இறையாண்மையை காக்கக் கூடிய நிலையில் அயல் நாடுகளின் அத்துமீறலைக் கண்காணித்து உரிய நடவடிக்கைள் எடுக்க வேண்டும். இல்லையென்றால் தென் மாநிலங்களுக்குப் பெரும் ஆபத்து எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சூழல் ஏற்படும்.
அமைதியான பகுதி என்று நினைத்துத்தான் இராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளைத் தென்மாநிலங்களில் பண்டித நேரு அமைத்தார். ஏனெனில், வடமாநிலங்களுக்கு பாகிஸ்தான், சீனா ஆகியவற்றால் போர் பிரச்சனை ஏற்படும் என்று எண்ணினார். ஆனால், இன்றைக்கு நிலைமைகள் மாறி இந்து மகா கடலால் இந்தியாவிற்குக் கேடுகள் வரக்கூடிய அபாயங்கள் காணப்படுகின்றன. இத்தகைய ஆபத்துகள் ஏற்படாமல் தற்காத்துக் கொள்வது அவசரம், அவசியம்.
டீகோகார்சியா தீவில் பிரிட்டனும் அமெரிக்காவும் ராணுவ தளங்களை அமைக்க 1969-இலிருந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. அன்றைய பிரதமர் இந்திரா காந்தி சோவியத் நாட்டின் ஆதரவுடன் கடுமையாக எதிர்த்ததால் இராணுவ தளங்களை அவை அமைக்க முடியவில்லை.
அப்போது, அமெரிக்கா, தனது ராணுவ தளத்தை அமைப்பதற்காக, டீகோகார்சியா தீவில் வசித்துக் கொண்டிருந்த 2,000-க்கும் மேற்பட்ட மோரீஷஸ் நாட்டினர் வெளியேற்றப்பட்டனர். அந்தத் தீவுக்கு மோரீஷஸ் உரிமை கொண்டாடி வரும் நிலையில், அமெரிக்காவுடனான குத்தகைக் காலம் சமீபத்தில் காலாவதியானது.
எனினும், அமெரிக்காவுடனான குத்தகையை வரும் 2036-ஆம் ஆண்டு வரை பிரிட்டன் புதுப்பித்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்துள்ள மோரீஷஸ் அரசு, இந்த விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்ல முடிவெடுத்துள்ளது.
இந்தியப் பெருங்கடல் பிரச்னையில் இயற்கை துறைமுகமான திரிகோணமலை துறைமுகச் சிக்கலையும் நாம் கவனித்தாக வேண்டும். திரிகோணமலை துறைமுகம் தென்கிழக்கு ஆசியாவின் ஒரு கேந்திர மையமாகும். ஆழ்கடல், வர்த்தகம், தொழில் போன்றவற்றுக்கு ஆஸ்திரேலியாவின் சிட்னி துறைமுகம் போன்று, இந்தத் திரிகோணமலை துறைமுகம் அமைந்துள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன், ரஷியா, சீனா போன்ற நாடுகள் திரிகோணமலை துறைமுகத்தில் இடம்பெறத் துடிக்கின்றன. ஏற்கெனவே 1970-களில் வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா, எண்ணெய்க் கிடங்குகள் அமைக்க அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு, துறைமுகத்தைக் கைப்பற்ற எத்தனித்தது. ஜப்பானும் இந்தத் துறைமுகத்தின் மேல் ஒரு கண் வைத்திருந்தது.
இதற்கான நிலஅமைப்பைக் கொண்ட திரிகோணமலை எதிர்காலத்தில் முக்கியத்துவம் பெறும். இந்திரா காந்தி காலத்திலிருந்து திரிகோணமலை துறைமுகத்தையும் நிலஅமைப்பு ரீதியாக இந்தியாவும் கவனித்து வருகிறது. இந்தத் துறைமுகம், இந்து மகா சமுத்திரத்தின் பாதுகாப்பையும் உள்ளடக்கியதாகும் என்பதையும் மறந்துவிடக் கூடாது.
இத்துடன் தென் இலங்கையில் உள்ள ஹம்பன்தோட்டா துறைமுக விவகாரத்தையும் இந்தியா கவனிக்க வேண்டிய கடமை உள்ளது. தென் இலங்கையின் ஹம்பன்தோட்டா துறைமுகப் பங்குகளைச் சீனாவிற்கு விற்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இலங்கை இறுதி யுத்தத்துக்குப் பிறகு தற்போது அங்கு செய்யப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளில் சீனாவின் முதலீடு அதிகளவில் உள்ளது.
ஹம்பன்தோட்டா துறைமுக கட்டுமானப் பணிகளுக்கு சீனாவின் முதலீடு தொடர்பாக இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தியதன் விளைவாக ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் சீன அரசின் துறைமுக வணிக குழுமத்திற்கு ஹம்பன்தோட்டா துறைமுகத்தின் 70 சதவீதப் பங்குகளை குத்தகை அடிப்படையில் 99 ஆண்டுகளுக்கு இலங்கை அரசு அளிக்கிறது.
இந்த ஒப்பந்தத்தின்படி ஹம்பன்தோட்டா துறைமுகம் சார்ந்த பணிகளில் 1.1 பில்லியன் டாலர்கள் (6,500 கோடிகளை) சீனா முதலீடு செய்கிறது. ஏற்கெனவே இந்தத் துறைமுகத்தில் சீனாவின் ஆதிக்கம் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுமென்ற இந்தியாவின் கவலையை மீறி, இலங்கை துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் இலங்கைக்கான சீன தூதர் ஆகியோர் முன்னிலையில் முறைப்படி கையெழுத்திடப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின்படி துறைமுகப் பாதுகாப்புக்கு இலங்கைக் கடற்படையே பொறுப்பு எனவும், அங்கு தளம் அமைக்க எந்த வெளிநாட்டு கடற்படைக்கும் அனுமதி இல்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால், சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்களும், போர்க் கப்பல்களும் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கின்றன. அதே போன்று மேலை நாட்டு போர்க் கப்பல்களின் நடமாட்டங்களும் இந்து மகா சமுத்திரத்தில் இருப்பதாகச் செய்தி வருகிறது.
ஹெச்.எஸ்.பி.சி. வங்கியின் சமீபத்திய ஆய்வுக் கணக்கின்படி, 2050-இல் ஆசியாவின் 19 நாடுகளே உலகின் பொருளாதாரத்தை ஆளுகை செய்ய இருக்கின்றன.
இந்தியா, சீனா, மலேசியா உள்ளிட்ட நாடுகளே இந்தியப் பெருங்கடலை நோக்கிய பொருளாதாரத்தில் ஆளுகை செலுத்தும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. எதிர்காலத்தில் இந்தியப் பெருங்கடல் பல்வேறு நாடுகளின் கேந்திரப் பகுதியாகும் பட்சத்தில் பெரும் அபாயங்கள் நேரலாம்.
இந்தியப் பெருங்கடலில் 13 முக்கிய கேந்திரத் துறைமுகங்கள் உள்ளன. கடல்சார் வணிகப் போக்குவரத்து, எண்ணெய் உற்பத்தி போன்ற பணிகளுக்கு உலக நாடுகளிடையே இந்தக் கடலில் போட்டிகள் உள்ளன. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த இந்தியப் பெருங்கடலை இந்தியா கவனிக்காமல் புறக்கணித்தால் அதன் விளைவு இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக முடியும்.
கட்டுரையாளர்:
செய்தித் தொடர்பாளர்,
திராவிட முன்னேற்றக் கழகம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...