பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்...
மகாபாரதத்தில் பாண்டவர்கள் வனவாசம் மேற்கொண்டபோது யக்ஷ பிரசன்னம் என்றொரு சுவாரசியமான சம்பவம்.


மகாபாரதத்தில் பாண்டவர்கள் வனவாசம் மேற்கொண்டபோது யக்ஷ பிரசன்னம் என்றொரு சுவாரசியமான சம்பவம். நீர்நிலையில் தண்ணீர் எடுக்கச் செல்லும் பாண்டவர்கள், ஒவ்வொருவராக அந்த நீர்நிலையின் கரையில் மடிந்து விழுந்து விடுவார்கள். இறுதியாக தர்மர்அங்கே வந்து நீர்எடுக்க முயற்சிக்கும்போது, அந்த நீர்நிலையில் வாழும் கந்தர்வன் 100 கேள்விகளை தர்மரிடம் முன் வைப்பான்.
அந்த நூறு கேள்விகளுக்கான விடைகள் தர்மத்தின் விளக்கமாக அமையும். இந்த விளக்கங்கள் மிகப் பிரசித்தமானவை. இப்படிநூறு கேள்விகளுக்கு விடை தந்த பிறகும் தர்மம் என்பதை அறுதியிட்டுச் சொல்லிவிடமுடியாது என்றும், எத்தனை ஆண்டுக்காலம் தர்மம் பற்றிய விளக்கம் அளிக்கப்பட்டாலும், அவை முழுமையானவிளக்கமாக அமைந்து விடாது என்றும் தர்மர் குறிப்பிட்டார்.
மேலும், ஒவ்வொரு தனி மனிதனும் தன் பிரத்யேக சூழ்நிலையில் மனசாட்சியின்படி நடந்து கொள்வதே முழுமையான தர்மம் என்பதாக அல்லது தர்மத்தின் முடிவாக இருக்க முடியும் என்று பதிலுரைப்பார். அதாவது, எவ்வளவு விளக்கங்கள் கொடுத்த போதிலும், தர்மம் என்பது அடிப்படையில் அவரவர் மனசாட்சிப்படி நடந்து கொள்வது. இதையேதான் மனித உரிமைகள் பிரகடனமும் நமக்கு உணர்த்துகிறது.
உலகில் எல்லா மனிதருக்கும் உரிமைகள் உண்டு. அடுத்தவர் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் உண்டு. சமூக வாழ்வுக்கு மனிதன் என்றைக்குப் பண்பட்டுப் போனானோ, அன்று முதல் மனித உரிமை பற்றிய சிந்தனை சமூகத்தில்
உள்ளது. அதே நேரத்தில், பல காரணங்களால் மனித உரிமை மீறல்களும் அவ்வப்போது நிகழ்ந்த வண்ணமே இருப்பதை வரலாறு சொல்லிக் கொண்டிருக்கிறது. மனித உரிமை என்னும் சொல் பயன்பாடு 50 ஆண்டுகளுக்குள் ஏற்பட்ட ஒன்றுதான் என்றாலும், அது பற்றிய கருத்தாக்கம் பல காலங்களாக நம்மிடம் இருக்கிறது.
மனசாட்சிப்படியான செயல்பாடு என்பதை அடிப்படையாகக் கொண்டதுதான் இந்த மனித உரிமை என்னும் சொல்லாடல். போர்கள் நிறைந்த வரலாற்றுக்கு முந்தைய புராண காலம் தொடங்கி எப்போதெல்லாம் மனித உரிமை காக்கப்படுகிறதோ, அப்போதெல்லாம் உலகம் அமைதியும் வளமும் வளர்ச்சியும் கண்டிருக்கிறது. அதே நேரத்தில் மனித உரிமை மீறல் காலங்களில் அழிவை நோக்கிய போர் பூமியாக உலகம் மாறி இருக்கிறது.
மனிதர்கள்அனைவரும் சமமானவர்களே. அனைவருக்கும் உலகத்தில் சமமானஉரிமையும் வாழ்வதற்கான தகுதியும் உண்டு. ஒவ்வொருவரும் தத்தமது வாழ்வை சுதந்திரமாக வாழ்வதற்கான நிலையை உருவாக்குவதற்கென்றே ஐநா மனித உரிமைகள்அமைப்பும் மனித உரிமைகள் பிரகடனமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் மட்டுமின்றி, இதற்கென ஐ.நா.அமைப்பு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை விருது வழங்கி ஊக்கம் தருகிறது. இந்தியாவும் இந்த அமைப்பின் உறுப்பு நாடாகத் திகழ்கிறது. அதோடு மட்டுமல்லாமல், தேசிய மனித உரிமை ஆணையம் என்ற அமைப்பையும் 1996-ஆம் ஆண்டு இந்திய அரசு உருவாக்கியுள்ளது. இந்திய மனித உரிமைகள்பாதுகாப்புச் சட்டத்தின்படி இந்த ஆணையம் செயல்படுகிறது.
ஒவ்வொரு மனிதனும் தனக்கான சுதந்திரம், பொறுப்பு, கடமை, உரிமை ஆகியவற்றை அறிந்து நடந்து கொள்வதே இந்தப் பிரகடனத்தின் அடிப்படை.
மனித உரிமை என்பது யாரும் யாருக்காகவும் உருவாக்கியது அல்ல. ஒருவர் மற்றொருவருக்குத் தருவதும் அல்ல. இது உலகில் மனிதன் வாழ்வதற்கானஅங்கீகாரம், உரிமை. எந்த ஒரு தனி மனிதனின் உரிமையையும் பறிக்கும் அதிகாரம் எந்த நாட்டுக்கும், எந்த அரசுக்கும், எந்த அமைப்புக்கும் இல்லை. இதனை வலியுறுத்துவதற்காகவே இந்தப் பிரகடனம். எழுத்துரிமை, பேச்சுரிமை அல்லது கருத்துரிமை, வாழ்வுரிமை போன்ற அடிப்படை உரிமைகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.
ஒவ்வொரு மனிதருக்கும் அவரவர்க்கான சுதந்திரம், கல்வி, மருத்துவம், குடிநீர், சுகாதாரம் போன்ற அடிப்படை அம்சங்கள் கிடைத்தாக வேண்டும். இவை அனைத்தும் ஒவ்வொரு தனி மனிதனின் அடிப்படை உரிமை. இதனையே மனித உரிமை என்று ஐ.நா. வரையறுத்திருக்கிறது.
பாலினம், நிறம், அரசியல், பிறப்பு, நாடு , மொழி, இனம், பொருளாதாரம் என்று எந்தக் காரணத்தையும் முன் வைத்து ஒருவருடைய உரிமைகள் பறிக்கப்படுவது அல்லது ஒருவருக்கு மட்டும் உயர்ந்த நிலை வழங்கப்பட்டு உயர்வோ, தாழ்வோ வந்துவிடக் கூடாது.
ஒரு நாட்டின்அல்லது சமூகத்தில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பது, மக்களின் நலனைஉயர்த்துவது, சமூக நீதியை நிலைநாட்டுவது-இவற்றுக்கெல்லாம் மனித உரிமை என்பது தவிர்க்க இயலாதது, அவசியமானது. மனித உரிமைகள் பிரகடனம் 30 பகுதிகளைக் கொண்டுள்ளது. உலகில் ஒவ்வொருவரும் இந்தப் பிரகடனத்தை கற்று அறிந்து கொள்வதோடு நமக்கான உரிமைகள், சுதந்திரம் மற்றும் அதற்கான மகத்துவத்தை உணர வேண்டும்.
மனித உரிமைகள் பிரகடனத்தின் முதல் செய்தியே, மனிதர்கள் சுதந்திரமாகவே பிறக்கின்றனர். அவர்கள் உரிமைகளிலும் மதிப்பிலும் சமமானவர்களே. நியாயத்தையும் மனசாட்சியையும் அவர்கள் இயல்பாகவே கொண்டிருக்கிறார்கள். ஒருவருக்கு ஒருவர் சகோதர வாஞ்சையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முதல் கருத்து ஒரு நாட்டில் பின்பற்றப்படுமாயின் எந்த விதத்திலும் ஏற்றத் தாழ்வுகளுக்கும் சண்டைச் சச்சரவுகளுக்கும் இடமில்லாமல் போகும்.
இத்தனை முயற்சிகளும் பிரகடனமும் ஐ.நா. சபையால் முன்வைக்கப்பட்டபோதும் மனித உரிமைகள் விஷயத்தில் உலகம் சற்றுஅசட்டையாகத்தான் நடந்துகொள்கிறது. அகதிகளாக தங்கள் சொந்த மண்ணை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகும் குடிமக்களும் பல நாடுகளில் நடக்கும் உள்நாட்டுப் போர்கள், கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுக்கும் இடையிலான மோதல்கள் ஏறத்தாழ உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்துகொண்டே இருக்கின்றன.
சிரியாவில் நடக்கும் உள்நாட்டு யுத்தம், கிளர்ச்சியாளர்களின் போராட்டம், வல்லரசு நாடுகளின் தாக்குதல்கள்-இவையெல்லாம் மனித உரிமை மீறல்களின் வடிவங்களே அன்றி வேறில்லை. உயிரற்றுக் கரையொதுங்கும் ஒரு சின்னஞ்சிறு குழந்தையை இந்த உலகம் காணவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது என்றால், நாம் இன்னும் மனித உரிமைகளின்முக்கியத்துவத்தையோ மகத்துவத்தையோ உணரவில்லை என்றே பொருள்.
உணவின்றி சோமாலியாவின் குழந்தைகள் மடிந்து போகும் அவலம் தொடர்ந்து கொண்டிருக்கும் வரை மனித உரிமைகள் சற்றும் இல்லை என்பதே நிஜம். அகதிகளாக எங்கே செல்வது என்று தெரியாமல் கடலில் தத்தளிக்கும் மனிதர்கள் இருக்கும்வரை நாம் மனித உரிமைகள் பற்றிப் பேசுவதற்கான தகுதி அற்றவர்கள். சுயநலம் காரணமாக அல்லதுஅகந்தை காரணமாக நானே இந்த உலகத்தின் உரிமையாளர் என்ற மோசமான சிந்தனையின் காரணமாக நிகழும் இத்தகைய கொடூரங்கள் நிறுத்தப்பட வேண்டும். அப்போதுதான் மனித உரிமைகள் பற்றிப் பேசுவதற்குப் பொருள் இருக்கும்.
குழந்தைகள் மீதான வன்முறை, பாலியல் துன்புறுத்தல்கள், பெண்களுக்கு எதிரானகுற்றங்கள், வன்புணர்வுகள், அடிமைத்தனம், இனவெறி, உணவுக்குப்
போராடும் அவலநிலை, உரிமைகளுக்காகப் போராடுவோர் கொல்லப்படுவது, பத்திரிகையாளர்களின் கொடூர மரணங்கள்-இவை அனைத்தும் களையப்பட்டால் மட்டுமே மனித உரிமைகள் துளிர்க்க வழி ஏற்படும். மரணங்கள் நிகழ்ந்த பின் மட்டுமே மனிதாபிமானம் பார்க்கும் நிலையிலிருந்து மாறுபட்டு மாற்றத்துக்கான வழியினைக் கண்டறிந்தால்தான் வருங்கால உலகம் அமைதி காணும்.
மனிதத் தேவைகளை, நலன்களை மையமாகக் கொண்ட மனிதநேய நெறிமுறைகள் வாழ்வியலாக வேண்டும். மனதிற்கு மனமே சான்று எனும் வழக்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
உலகம் எனக்கானது மட்டுமல்ல, மனிதர்களுக்கானது மட்டுமல்ல, கோடானுகோடி ஜீவராசிகளின் இருப்பிடம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். இந்த கோடானுகோடி உறுப்பினர்களில் நாமும் ஒருவர்; நம் அடுத்த தலைமுறை வாழ்வதற்கு அதனைத் தகுதியானதாக விட்டுச் செல்வது அவசியம்.
அறவழிப்பட்ட வாழ்க்கை முறையை உலகத்துக்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கற்றுத் தந்த புனித பூமியான இந்தியத் திருநாட்டிலும் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும் அவலம் நிலவுவது வேதனைக்குரியது.
இதனைத் தடுத்து சமூகத்தை சமதர்ம சமூகமாக மாற்றுவதற்கான ஒரேயொரு கருவி இருக்கிறது. அதுவும் இந்தியா உலகிற்குஅறிமுகம் செய்த அகிம்சை எனும் கருவிதான். மகாத்மா நமக்குக் கற்றுத் தந்த அகிம்சை மட்டுமே நமக்கான உரிமை மற்றும் பிறரின் உரிமைகளையும் மதித்தல் எனும் உயரிய மாண்புகளை நமக்குச்சொல்லித் தரும். இந்தப் பண்பு உலகம் முழுவதும் பரவ வேண்டும்.
காக்கை குருவி எங்கள் ஜாதி, நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் என்று பாடிய பாரதியும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்... என்று மனிதரை மட்டுமல்லாது, உலகின்அனைத்து ஜீவராசிகளும் ஒன்று என்னும் பொதுமையை உலகுக்கு உணர்த்திய வள்ளுவப் பேராசானும் வாழ்ந்து அறம் போதித்த தேசத்தின் வழித் தோன்றல்கள் இத்தகைய பெருங்குடியின் நீட்சி. நாம் என்னும் உணர்வோடு உலகுக்கு அந்தப் பொதுமையை வாழ்ந்து காட்டுவதற்கான பொறுப்பும் கடமையும் நமக்கு உண்டு. பூமி திறந்து கிடக்கிறது. அனைவருக்காகவும் நாமும் நம் மனதைத் திறந்து வைப்போம். வாழ்க்கை வசப்பட்டுவிடும். சமத்துவம் நிலை பெற்றுவிடும்.
கட்டுரையாளர்:
ஊடகவியலாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...