வளர்ச்சி என்கிற பெயரில் காடுகள் அழிக்கப்படுவது உலகம் முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றாலும், பிரேசில் நாட்டில் அமேசான் மழைக் காடுகள் அழிக்கப்படும் வேகமானது உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
இத்தனைக்கும் அமேசான் மழைக் காடுகளைப் பாதுகாப்பது என்பது கடந்த 20 ஆண்டுகளாக பிரேசிலின் முக்கியமான சுற்றுச்சூழல் கொள்கையாகவே இருந்து வந்தது. மேலும், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான முன்னுதாரணமாகவும் பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த ஜனவரியில் அந்நாட்டின் புதிய அதிபராக வலதுசாரி தலைவரான போல்úஸானரோ பதவிக்கு வந்ததில் இருந்து எல்லாமே தலைகீழாக மாறியது.
"பூமியின் நுரையீரல்' என அழைக்கப்படும் அமேசான் மழைக் காடுகள் ஆண்டுக்கு 200 கோடி டன் கரியமில வாயுவை உறிஞ்சிக் கொண்டு, பூமியின் மொத்த ஆக்சிஜனில் 20 சதவீதத்தை வெளியிடுகின்றன. தென் அமெரிக்காவின் அமேசான் ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள அமேசான் மழைக் காடுகள், 70 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டவை.
பிரேசில், கொலம்பியா, பெரு, வெனிசூலா, ஈக்வடார், கயானா, பொலிவியா, சுரிநாம், பிரெஞ்ச் கயானா ஆகிய 9 நாடுகளில் பரவியிருந்தாலும் இதன் 60 சதவீத பரப்பளவு பிரேசில் நாட்டில்தான் உள்ளது. இந்நிலையில், பிரேசிலின் புதிய அதிபராகப் பதவியேற்ற போல்úஸானரோ, நாட்டின் முன்னேற்றத்துக்காக அமேசான் மழைக் காடுகளின் சில பகுதிகளை அழித்து வணிகப் பயன்பாட்டுக்கு விடப்படும் என அறிவித்தார். அதிலிருந்தே அமேசானின் அழிப்பு வேகமெடுக்கத் தொடங்கியது.
கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூலையுடன் ஒப்பிடும்போது 2019-ஆம் ஆண்டு ஜூலையில் காடுகள் அழிக்கப்படுவது 278 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. அதாவது, கடந்த ஜூலையில் மட்டும் 2,253 சதுர கி.மீ. காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. ஒரு நிமிஷத்துக்கு மூன்று கால்பந்து மைதானம் அளவுக்கு வனப் பரப்பு அழிக்கப்படுகிறது. பிரேசிலின் அரசு நிறுவனமான தேசிய வானிலை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட செயற்கைக்கோள் படங்கள் மூலம் இது தெரியவந்தது.
ஆனால், இதை மறுத்த அதிபர் போல்úஸானரோ, வானிலை ஆராய்ச்சி மையத் தலைவர் ரிகார்டோ கல்வாவோவை பதவியிலிருந்து நீக்கிவிட்டு, காடுகள் அழிப்பை கண்காணிப்பதற்கு தனியார் அமைப்பு ஒன்றை ஈடுபடுத்தப் போவதாகத் தெரிவித்தார். அரசு அமைப்பு ஆதாரப்பூர்வமாகத் தெரிவித்த தகவலையே பொய் என்றும், அரசு சாரா நிறுவனங்களுக்காக (என்ஜிஓ) வானிலை ஆராய்ச்சி மையம் இதைச் செய்துள்ளதாகவும் அதிபர் கூறுவதை உலகம் நம்பத் தயாராக இல்லை.
தேர்தலின்போதே அதிபர் போல்úஸானரோ வளர்ச்சியைச் சுட்டிக்காட்டி அமேசான் காடுகள் மீது "கைவைக்கப் போவதை' வாக்குறுதியாகவே அளித்தார். அதன்படி, அதிபராகப் பதவியேற்றதுமே நாட்டின் பிரதான சுற்றுச்சூழல் கண்காணிப்பு நிறுவனத்துக்கு அரசு ஒதுக்கீடு செய்யும் நிதியை 24 சதவீதம் குறைத்தார். அமேசான் மழைக் காடுகளில் அத்துமீறுபவர்களுக்கான அபராதம், எச்சரிக்கை, பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட கருவிகள் இருந்தால் பறிமுதல் செய்தல் ஆகிய நடவடிக்கைகளையும் அரசு திரும்பப் பெற்றது. இது வன ஆக்கிரமிப்பாளர்களுக்கும், கனிமவளக் கொள்ளையர்களுக்கும் ஊக்கம் அளிப்பதாக அமைந்துவிட்டது. போல்úஸானரோ இப்படியெல்லாம் செய்வார் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், இத்தனை வேகமாகச் செய்வார் என எதிர்பார்க்கவில்லை.
அமேசான் காடுகள் அழிக்கப்படுவது பற்றி பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானும், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலோ மெர்க்கலும் அண்மையில் நடைபெற்ற ஜி 20 நாடுகள் கூட்டத்தின்போது கவலை தெரிவித்தபோது அவர்களுக்கு எதிராகப் பாய்ந்தார் போல்úஸானரோ.
"பிரேசிலின் புதிய அரசியல் மாற்றம் பற்றி இந்தத் தலைவர்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை; இப்போது வலிமையான தலைவர் பிரேசிலுக்கு கிடைத்துள்ளார்' என போல்úஸானரோ தன்னைத் தானே பெருமையாகக் கூறிக் கொண்டதை உலகம் ரசிக்கவில்லை. "எங்கள் நாட்டின் பெரும் பகுதியை வெறுமனே பாதுகாக்கும்படி உலக நாடுகள் கூறுவது நாங்கள் முன்னேறிவிடுவோமோ என்கிற அச்சத்தால்தான். உலகம் எங்களுக்கு எதிராக செய்யும் சதியின் ஒரு பகுதியே இது' என அதிபர் கூறும் விளக்கமும் ஏற்புடையதாக இல்லை.
பருவநிலை மாற்றத்தின் விளைவுகளை உணர்ந்து, சுற்றுச்சூழலைக் காப்பதற்கான நடவடிக்கைகளை இப்போதுதான் உலக நாடுகள் வேகப்படுத்தி இருக்கின்றன.
இந்த வேளையில் உலகின் மிகப்பெரிய மழைக் காடுகளை அழிக்கும் பிரேசிலின் இந்த நடவடிக்கை வெறும் மரங்களை அழிப்பதோடு மட்டும் முடிந்துவிடாது. அரிய உயிரினங்கள், அமேசான் காடுகளில் வாழும் அபூர்வ பழங்குடி மக்களுக்கும் ஆபத்தாக மாறியிருக்கிறது.
அரசின் நடவடிக்கைகளால் ஊக்கம் பெற்றுள்ள கனிமவளக் கொள்ளைக் கும்பல் மற்றும் ஆக்கிரமிப்பாளர்களால் பழங்குடி மக்கள் கொல்லப்படுவதாக வெளியாகும் தகவலும் கவலை தருகிறது. பிரேசில் மீது ஐக்கிய நாடுகள் சபை மற்றும் வல்லரசு நாடுகளின் கவனம் திரும்ப வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகிறது. முன்னாள் ராணுவ அதிகாரியான போல்úஸானரோவுக்கு "புரியும் பாஷையில்' விளக்கிச் சொல்வதற்கும் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசுகள் தயங்கக் கூடாது என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
"அமேசான் காடுகள் உங்களுடையதல்ல, எங்களுடையது' - கடந்த சில நாள்களுக்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் பத்திரிகையாளர்களைச் சந்தித்த பிரேசில் அதிபர் போல்úஸானரோ இப்படிச் சொன்னார். அமேசான் உங்களுடையதுதான். அமேசான் அழிந்தால் உலகம் அழியும்; உலகம் அழிந்தால் பிரேசில் மட்டும் பிழைத்திருக்குமா என்ன?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐபிஎல், பிபிஎல், பிஎஸ்எல் டி20 தொடர்களில் சதம் அடித்த ஒரே வீரராக ஸ்டீவ் ஸ்மித் சாதனை!

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 89.93% வாக்குப்பதிவு- நேரலை

ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த 10 இந்திய கப்பல்கள்! - மத்திய அரசு அறிவிப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

