ஏன் கையை ஏந்த வேண்டும்?
காவிரியில் இருந்து மட்டும் கடந்த இரு மாதங்களில் 150 டி.எம்.சி.க்கும் அதிகமான நீர் கடலில் சென்று கலந்து விட்டதாகக் கூறப்படுகிறது.


காவிரியில் இருந்து மட்டும் கடந்த இரு மாதங்களில் 150 டி.எம்.சி.க்கும் அதிகமான நீர் கடலில் சென்று கலந்து விட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், கடைமடைப் பகுதிகளுக்கு இன்னும் தண்ணீர் வரவில்லை என விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர். பவானி, தாமிரவருணி உள்ளிட்ட ஆற்றுப் பாசனப் பகுதிகளிலும் இதுதான் நிலை. இந்தப் பகுதிகளில் உள்ள ஏராளமான ஏரிகளும், குளங்களும் நீண்ட நாள்களாக தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கின்றன. கால்வாய்கள் மற்றும் குளங்கள் முறையாக தூர்வாரப்படாததே இதற்கு காரணம்.
தமிழக அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏரி, குளங்களைத் தூர்வாரும் குடிமராமத்து பணிக்கு சுமார் ரூ. 600 கோடி வரை நிதி ஒதுக்கியுள்ளதாக கூறுகிறது. அந்த நிதி எங்கே சென்றது எனத் தெரியவில்லை. அரசியல்வாதிகள் தலையீடு மற்றும் முறைகேடுகளால் குடிமராமத்து பணிகள் சரிவர மேற்கொள்ளப்படவில்லை என்பதுதான் குற்றச்சாட்டு. அரசையும், அரசியல்வாதிகளையும் நம்பிக் காத்திருந்தால் உபரிநீர் கடலுக்குதான் செல்லுமே தவிர விவசாயத்துக்கு வந்து சேராது என்பதற்கு இந்த ஆண்டின் பருவ மழை ஒரு பாடம்.
நீர்வரத்துக் கால்வாய்கள் மற்றும் குளங்களை மராமத்து செய்யும் பணிகளை அரசுதான் மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். அதில் தவறு இல்லை. ஆனால், அரசு தனது கடமையில் தவறாது இருக்க வேண்டும் என விரும்பும் விவசாயிகள், தங்களது கடமையில் இருந்து தவறலாமா?
முற்காலத்தில், உள்ளூரில் உள்ள நீர்நிலைகளில் அவ்வூர் மக்களும், விவசாயிகளும் சேர்ந்து குடிமராமத்துப் பணிகளை செய்தனர். குறிப்பிட்ட கால இடைவெளியில் நீர்நிலைகளை ஆழப்படுத்துதல், நீர் தேங்கும் பகுதியை சமப்படுத்துதல், வண்டல் மண்ணை அகற்றுதல், கரைகளைப் பலப்படுத்துதல், புல், பூண்டுகளை அகற்றுதல், மடைகளை சீரமைத்தல் போன்ற பணிகளை செய்தனர். பாசனக் கால்வாய்களையும் ஆண்டுதோறும் அவர்களே சீரமைத்துக் கொள்வர். இதற்காக, வீட்டுக்கு ஒருவர் வீதம் செல்வர். செல்ல முடியாதவர்கள் தங்களுக்குப் பதிலாக வேறு ஆள்களை அனுப்பி வைப்பர். வேறு சிலர் பணமாகவும் கொடுப்பார்கள்.
குளங்களில் தண்ணீர் இருந்தாலும், இல்லாவிட்டாலும் 15 நாள்களுக்கு ஒரு முறை மதகுகளுக்கு எண்ணெய் இட்டு ஏற்றி இறக்கி சோதித்து பார்த்துக் கொள்வார்கள். இது மழைக் காலங்களில் மதகுகளை எளிதாக ஏற்றி இறக்க உதவும். தண்ணீர் விரயமாவது தடுக்கப்படும். அப்போது நீர்நிலைகள் செம்மையாக இருந்தன. இதனால், பருவ மழைக் காலங்களில் தண்ணீரை வீணாக்காமல் நீர்நிலைகளில் சேமித்து வைத்து வேளாண்மைக்கு பயன்படுத்தி வந்தனர்.
அணைகள் கட்டப்பட்ட பின்னர் ஆறுகளும், ஏரிகளும், குளங்களும் அரசியல் மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தவையாக மாறின. எனவே, அரசு அவற்றை தன்வசப்படுத்தி பொதுப்பணித் துறை மூலம் நிர்வகிக்கத் தொடங்கியது. நீர்நிலைகள் அரசின் கட்டுப்பாட்டுக்குள் சென்ற பிறகு அவற்றை பராமரிக்கும் குடிமராமத்து பணியிலிருந்து விவசாயிகள் படிப்படியாக விலகிக் கொண்டனர்.
இப்போது நீர்நிலைகளை விவசாயிகள் கண்டு கொள்வதில்லை என்பது மட்டுமல்ல, சில இடங்களில் அவற்றின் சீரழிவுக்கு விவசாயிகளே காரணமாகவும் இருப்பது வேதனை அளிக்கிறது. தண்ணீர் பற்றாக்குறைக் காலங்களில் முறைப்பாசன விதிமுறைகளை மீறி கால்வாய்களையும், மடைகளையும் உடைத்து தண்ணீரை தம் பகுதிக்கு திருப்பி விடுதல், மீன் பிடித்தல் போன்ற வணிக நோக்கங்களுக்காக மடைகளை சேதப்படுத்தி தண்ணீரை வெளியேற்றுதல் போன்ற முறைதவறிய செயல்களிலும் சிலர் ஈடுபடுவதுண்டு.
இவ்வாறு தாங்கள் சேதப்படுத்திவிட்டு அவற்றை அரசு உடனடியாக சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். அதில் காலதாமதம் ஏற்படும்போது அடுத்த பருவ மழைக் காலத்தில் அங்கு தண்ணீரை திறந்துவிடவோ, சேமிக்கவோ முடியாத நிலை ஏற்படுகிறது. இதற்காக அரசை குறை கூறும் விவசாயிகள் தங்களை தவறை உணர்வதில்லை.
இதுமட்டுமின்றி, ஏரி, குளங்கள் மற்றும் கால்வாய்களில் ஆக்கிரமிப்பு, பாசனக் கால்வாய்களில் வீட்டுக் கழிவுகளை வீசுதல், கழிவுநீரை கால்வாய்களில் திறந்து விடுதல், கட்டுமான இடிபாடுகளை கால்வாய் ஓரங்களில் கொட்டுதல் போன்றவற்றாலும் நீரோட்டம் தடைபடுகிறது. நகர்ப்புறங்கள் மட்டுமின்றி நகரை ஒட்டியுள்ள விவசாய கிராமங்களிலேயே இந்த அவலம் நிகழ்கிறது. நமது வாழ்வாதாரத்தை நாமே சீரழித்துவிட்டு அதையும் அரசுதான் சீரமைக்க வேண்டும் என எதிர்பார்ப்பது நியாயமா?
திருநெல்வேலி மாவட்டம் ஆம்பூர் விவசாயிகள் ஒரு காரியம் செய்கின்றனர். அங்குள்ள சுமார் 1,200 ஏக்கர் நஞ்சை நிலத்தில் விளையும் நெல்லை கொள்முதல் செய்ய குறிப்பிட்ட ஒரு வியாபாரிக்கு குத்தகை விடுகின்றனர். அவர் மட்டும்தான் அந்தப் பகுதியில் நெல் கொள்முதல் செய்வார். அதற்காக அவரிடம் ஒரு குறிப்பிட்ட தொகையைப் பெற்றுக் கொள்கின்றனர். வயல்காட்டில் வாத்து மேய்ப்புக்கு குத்தகைவிட்டு பணம் பெறுகின்றனர். உள்ளூர் கோயிலுக்கு சொந்தமான குளத்தின் மீன்பாசி (மீன் பிடிக்கும் உரிமை) குத்தகையை பெற்று அதை வியாபாரிகளுக்கு மறு குத்தகைக்கு கொடுத்து அதிலும் லாபம் பார்க்கின்றனர். இவற்றையெல்லாம் ஊர் பொதுப் பணமாக சேமித்து அந்த நிதியைக் கொண்டு ஆண்டுதோறும் நீர்நிலைகளின் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் விவசாயம் சிக்கல் இல்லாமல் நடைபெறுகிறது. இதேபோல், தமிழ்நாட்டில் வேறு சில ஊர்களிலும் இருக்கலாம். ஆனாலும் எல்லாப் பகுதிகளிலும் விவசாயிகள் இவ்வாறு தற்சார்பு நிலையுடன் செயல்பட்டு நீர்நிலைகளைப் பராமரித்தால் அரசாங்கத்தை எதிர்பார்க்கவோ குறைகூறவே தேவையிருக்காது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...