இவர்களும் இந்தியர்களே
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கனவு காணுங்கள்' என்று நம் இளைஞர்களுக்குச் சொன்னதோடு தானே ஒரு கனவையும் முன்வைத்தார்.


முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கனவு காணுங்கள்' என்று நம் இளைஞர்களுக்குச் சொன்னதோடு தானே ஒரு கனவையும் முன்வைத்தார். 2020-இல் இந்தியா வல்லரசாக வளர்ந்து நிற்க வேண்டும் என்பது அவரது கனவு. அந்தக் கனவை நோக்கி எத்தனையோ இளைஞர் அமைப்புகளும், உழைக்கும் மகளிர் அமைப்புகளும், அரசின் திட்டங்களும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அரசின் பல்வேறு தொழில் முன்னேற்ற திட்டங்கள், அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்கள் என நாளுக்கு நாள் புதிது புதிதான அடிகளை எடுத்து வைத்து 2020 இல் இந்தியா' கனவை நோக்கிப் பயணிக்கிறது நம் நாடு.
பல்முனை வளர்ச்சி ஒருபுறமிருக்க, ஒருங்கிணைந்த முயற்சியாகவும், முன்னேற்றம் அனைவருக்குமானதாகவும் இருக்க வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. நான்குவழிச் சாலை, ஆறுவழிச் சாலை, எட்டுவழிச் சாலை என கட்டமைப்பில் முன்னேற்றம் காணப்பட்டாலும் சாலையோரங்களில் வாழும் மக்களின் வாழ்க்கையும் தொடர்கதையாகத்தான் இருக்கிறது. பெரியோர்கள், குடும்பத்தினர் என எவரும் இல்லாத, பாதுகாப்பற்று எந்த கவனிப்பும் இன்றி தெருவோரங்களில் அல்லது சாலையோரங்களில் வாழும் சிறுவர்கள் நம் தேசம் முழுவதும் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள்.
முழுவதும் இப்படியான குழந்தைகள் இருக்கிறார்கள் என்ற போதிலும் வளர்ந்த நாடுகளை விட இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தெருவோரங்களில் இவர்கள் வசிப்பதற்கான காரணம் என்ன? எங்கிருந்து இவர்கள் வந்தார்கள்? இந்த நாட்டில் இவர்களுக்கான அங்கீகாரம் என்ன? இந்தியர்கள் என்ற அடையாளம் இவர்களுக்கு இருக்கிறதா? இப்படி எத்தனையோ கேள்விகள் பதிலற்று இருக்கின்றன. இந்தியா முழுவதிலும் இத்தகைய ஆதரவும் பாதுகாப்பும் அற்று தெருவோரங்களில் வசிக்கும் சிறுவர்கள் லட்சக்கணக்கில் இருப்பதாகக் கூறுகிறது யுனிசெஃப்' நிறுவனம். இத்தகைய குழந்தைகள் பற்றிய தெளிவான கணக்கெடுப்பு, புள்ளி விபரம் கூட இல்லை என்கின்றன தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்.
சிறுவர்கள் தங்கள் அன்றாட உணவுக்காகவும் பாதுகாப்புக்காகவும் தங்களின் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே இருப்பதால்தான் இவர்கள் பற்றிய புள்ளிவிவரம் சாத்தியமில்லை என்று சொல்லப்படுகிறது. இவர்களுக்கு குடும்ப அட்டை, ஆதார் அட்டை போன்ற எந்த அடையாளமோ, சான்று ஆவணமோ இல்லாத நிலையில் இவர்களுக்கான கணக்கெடுப்பு நடத்துவது கூட சாத்தியமற்றதாக இருக்கிறது என்கின்றன தொண்டு நிறுவனங்கள். யுனிசெஃப்' அமைப்பும் இதை உறுதி செய்கிறது.
மும்பையிலும் கொல்கத்தாவிலும்தான் தெருவோரச் சிறுவர்கள் அதிகம் இருப்பதாக தெரிய வந்துள்ளது. பிற மாநிலங்களில் பெரும்பாலும் மாநகரங்களில் இத்தகைய குழந்தைகள் அதிகம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. சென்னையும் இதற்கு விதிவிலக்கல்ல. வீட்டை விட்டு வெளியேறும் குழந்தைகள், பெற்றோரின் மரணத்திற்குப் பின் ஆதரவற்றவர்களான குழந்தைகள், முறையற்ற வழியில் பிறந்ததால் பெற்றோரால் கைவிடப்பட்டு, தெருவோரங்களில் அடைக்கலமான குழந்தைகள் இவர்கள்தான் ஐக்கிய நாடுகள் குறிப்பிடும் தெருவோரக் குழந்தைகள்' பிரிவில் வருகிறார்கள்.
இவர்கள் அனைவருமே 6 முதல் 16 வயது வரை உடையவர்கள். இந்தியாவின் தெருவோரக் குழந்தைகளில் 13 சதவீதக் குழந்தைகள் 6 வயதுக்கும் குறைவானவர்கள் என்றது யுனிசெஃப்' நிறுவனத்தின் 1989-ஆம் ஆண்டு ஆய்வறிக்கை. இந்தக் குழந்தைகள், சிறு சிறு வேலைகள் செய்வதாலும், தண்ணீர் பாட்டில்கள், பழைய பேப்பர்களைக் குப்பையிலிருந்து எடுத்து விற்பதாலும் கிடைக்கும் பணத்தில் தங்களின் பசியை போக்கிக்கொள்கிறார்கள். இத்தகைய பணிகளை ஆறு முதல் பத்து பனிரெண்டு வயது வரையிலான சிறுவர்கள் செய்கின்றனர்.
பதினாறு வயது ஆன சிறுவர்கள் தங்களை அறியாமலே குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். உணவுக்காக ஆரம்பத்தில் சிறு சிறு திருட்டுகளில் ஈடுபடும் இவர்கள் பல நேரங்களில் சமூக விரோத சக்திகளால் பயன்படுத்தப்படுகின்றனர். இதனால் வழக்குகளிலும் இவர்கள் சிக்கிக் கொள்கின்றனர். அப்படிச் சிக்கிக் கொள்ளும் பொழுது இந்த குழந்தைகள் மீது குற்றவாளி' எனும் அடையாளம் விழுந்துவிடுகிறது.
அடிப்படைத் தேவைகள் கூட அற்ற நிலையில் இவர்கள் தங்கள் வயிற்றுப் பாட்டுக்காக எதையும் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறார்கள். ஆண் குழந்தைகள் உணவகம் போன்ற இடங்களில் பணியாற்றியோ சிறுசிறு வேலைகள் செய்தோ தங்கள் பிழைப்பைப் பார்த்துக் கொள்ளும் நிலையில் இருக்கிறார்கள். ஆனால் பெண் குழந்தைகளுக்கு இதுவும்கூட சாத்தியமற்றது. அவர்களின் பாதுகாப்பு இன்னும் கேள்விக்குரியது. சொல்லப்போனால் பாதுகாப்பு என்பதே இல்லாத நிலையில்தான் பாலியல் தொழிலில் இவர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். பல நேரங்களில் பாலியல் வன்முறைக்கும் ஆளாகிறார்கள்.
இத்தகைய பெண் குழந்தைகளின் அவல நிலைக்குத் தீர்வு என்ன என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. இவர்களைப் பற்றிய அரசின் நிலைப்பாடு என்ன? இவர்களுக்காக அரசு எடுக்கும் நடவடிக்கைகள் என்ன என்பதை நோக்கினால் சற்று ஏமாற்றமே மிஞ்சுகிறது. சில திட்டங்கள் இவர்களுக்காக இருக்கின்றன என்று சொல்லப்பட்டாலும் இந்த குழந்தைகளின் நிலையை காணும் பொழுது இந்த திட்டங்கள் செயலற்று இருக்கின்றன அல்லது தோல்வி அடைந்து விட்டன என்றுதான் கருதவேண்டியுள்ளது.
தற்சமயம் இந்தியாவில் உள்ள தெருவோர குழந்தைகளின் எண்ணிக்கை குறித்து அதிகாரபூர்வமான புள்ளிவிவரமும் எதுவும் இல்லை. இவர்களில் ஏறத்தாழ 50 சதவீதக் குழந்தைகள் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று மட்டுமே தெரிகிறது. ஏறத்தாழ 8 லட்சம் குழந்தைகள் இப்படி இருக்கக்கூடும் என்று 2010 -ஆம் ஆண்டில் கருதப்பட்டது. இப்போது அதன் எண்ணிக்கை இன்னும் அதிகரித்திருக்கலாம். ரயில் நிலையங்களே பெரும்பாலும் இவர்களின் வசிப்பிடமாக இருக்கிறது. ரயில்வே சில்ரன்' என்ற நூல் இந்த குழந்தைகளின் நிலை பற்றிப் பேசுகிறது.
இந்தியாவில் தெருவோர குழந்தைகளுக்கான கல்வி வாய்ப்பு இல்லாமலே போகிறது. இவர்கள் பெரும்பாலும் பள்ளிக்கூடமே போனதில்லை என்ற நிலைதான் காணப்படுகிறது. 2004 -ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின்படி, ஏறத்தாழ 66 சதவீதக் குழந்தைகள் பள்ளிக்கூடத்தையே கண்டதில்லை. இந்தக் குழந்தைகள் அடிப்படைக் கல்வி இல்லாமலும் ஆதரிப்பதற்கு எவரும் இல்லாமலும் மனமும் உடலும் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். வாழ்வில் சந்திக்கும் இன்னல்கள் அவர்களை முரட்டுத்தனமானர்களாகவும், கட்டற்ற சுதந்திரம் கொண்டவர்களாகவும் மாற்றுகிறது. சில குழந்தைகள் மது அருந்துதல், போதைப் பொருளுக்கு அடிமையாதல் போன்ற முறைகேடான செயல்களில் ஈடுபட்டுத் தங்களின் வாழ்வை சிக்கலாக்கிக் கொள்கின்றனர்.
பெரும்பாலும் பிற சிறுவர்களோடு சேர்ந்து குழுக்களாகவே இவர்கள் வாழ்வதும் பயணிப்பதும் தொடர்கிறது. இவர்களுக்கு சத்தான உணவு, சுகாதாரம், மருத்துவம் போன்றவை கிடைப்பதில்லை. குளியலறை, கழிப்பறை, குடிப்பதற்கான நல்ல தண்ணீர்கூட சாத்தியமற்றதாக இருக்கிறது. இந்தியாவின் பெரும்பாலான தெருவோரக் குழந்தைகள் சரியான ஊட்டச்சத்து உணவு கிடைக்காத காரணத்தால் சத்துக் குறைபாடு கொண்டவர்களாகவும் அதனால் வெகு எளிதில் நோய்த் தொற்றுக்கு ஆளாகும் அபாயமும் இருக்கிறது.
அரசு இக்குழந்தைகளின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் தெருவோர குழந்தைகளை இல்லாமல் செய்வதற்கும் சில கொள்கைகளை வகுத்துள்ளது. பெரும்பாலும் இவற்றில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ளன. தெருவோரக் குழந்தைகளுக்கான உதவித் திட்டம் ஒன்றை 1991-இல் அரசு உருவாக்கியது. ஆனாலும் இந்த முயற்சி பலனளிக்கவில்லை. இந்திய குழந்தை நலக் கழகம் தனது திட்டங்களில் தெருவோர குழந்தைகளையும் இணைத்தது. எட்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் மும்பை, கொல்கத்தா, தில்லி போன்ற நகரங்களில் வசிக்கும் இத்தகைய குழந்தைகள் இத்திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.
இந்திய தொழிலாளர் அமைச்சகம் வாழ்க்கைத் தொழிற்பயிற்சி நிகழ்ச்சிகளில் இவர்களையும் சேர்த்துக் கொள்வது என தீர்மானித்து முயற்சிகளையும் மேற்கொண்டது. அந்த முயற்சிகளும் பலனளிக்கவில்லை. இதற்கு முக்கியக் காரணம் அவர்களிடம் காணப்படும் கல்வி அறிவின்மை.
இந்தக் குழந்தைகளுக்கென யுனிசெஃப்' அமைப்பு சில பரிந்துரைகளைவழங்கியுள்ளது. அதன்படி, அரசு நேரடியாக குழந்தைகளின் நலனில் அக்கறை செலுத்துவதை விடவும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மிக எளிதாக இவர்களுக்கு உதவ முடியும் என்றும், அரசு சாரா அமைப்புகள் அவர்களின் பிரச்னைகளுக்கான அடிப்படை காரணங்களைக் கண்டறிந்து அதனைத் தீர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது சுலபமாக இருக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளது. இந்தியாவிலும் சில அரசு சாரா அமைப்புகள் இத்தகைய குழந்தைகளின் முன்னேற்றத்திற்குப் பல முயற்சிகளையும் எடுத்து வருகிறது என்றாலும் இந்த முயற்சிகள் போதுமானதாக இல்லை என்பதே உண்மை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...