நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

இலங்கைப் பிரச்னை எழுப்பும் வினாக்கள்!

இலங்கையில் ராஜபட்சவை பிரதமராக மைத்ரிபால சிறீசேனா அறிவித்தது குறித்து இந்தியா இன்னும் மெளனம் சாதிக்கின்றது. அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும்

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:11 pm

வழக்குரைஞர் கே. எஸ். இராதாகிருஷ்ணன்

இலங்கையில் ராஜபட்சவை பிரதமராக மைத்ரிபால சிறீசேனா அறிவித்தது குறித்து இந்தியா இன்னும் மெளனம் சாதிக்கின்றது. அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. சீனா வரவேற்றுள்ளது. கீழே விடுக்கப்பட்ட வினாக்களை வைத்து இந்தியா உஷாராகுமா என்பதுதான் நமது எதிர்பார்ப்பு.
*  மைத்ரிபால சிறீசேனாவை இந்திய உளவுப் பிரிவு அமைப்பான ரா மூலம் கொலை செய்ய முயற்சிப்பதாக அபாண்டமான தகவல் கசிந்தது. ஆனால், அது சிறீசேனா சார்பில் மறுக்கவும் பட்டது. ஏன் இந்த குழப்பம் என்பதை அறிந்தும் இந்தியா எதிர்வினையாற்றாமல் இருந்தது ஏன்?
*  இலங்கைத் தலைநகர் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளை இலங்கை அரசு வெளியேற்றியது ஏன்? அப்போதும் இந்தியா அமைதி காத்தது. 
*  ராஜபட்சவையும் அவரது மகனையும் சுப்ரமணியம் சுவாமி தில்லிக்கு அழைத்து, கூட்டம் நடத்தி, இந்தியப் பிரதமரை சந்திக்க வைத்துள்ளார். இத்தனைக்கும் அவர் ஆளும் பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர். அண்டை நாடுகளின் நட்புறவில் குழப்பங்களை விளைவித்துக் கொண்டிருப்பது நாட்டுக்கு நல்லதா?
*  ஒரு அதிபரைப் போலவே பாவித்து ராஜபட்சவுடன் பேசி கெளரவப்படுத்தினாரே இந்தியப் பிரதமர், அந்தப் பேச்சு குறித்து எந்தவிதமான தகவலும் நாட்டு மக்களுக்கு இல்லையே ஏன்?
*  மைத்ரிபால சிறீசேனா, சீனாவுக்குச் சென்று வந்த பின், இலங்கையில் இந்த மாற்றங்கள் நடைபெற்றுள்ளதே. அதனை இந்திய அரசு கவனித்ததா? மைத்ரிபால சிறீசேனாவும், ராஜபட்சவும் மூன்று முறை ரகசியமாகச் சந்தித்துள்ளதாகச் செய்தி உள்ளதே? அந்த சந்திப்பின் நோக்கத்தை இந்திய அரசு அறிய முற்பட்டதா?
*  பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து சட்ட அமைச்சகத்தைத் திரும்பப் பெறவேண்டிய சூழலுக்கான காரணம், கண்டியில் நடந்த சிங்களவர் - இஸ்லாமியர்களின் கலவரம்தான் என்றார்கள். ஒரு பிரதமரிடமிருந்து அமைச்சகத்தை அதிபர் திரும்ப பெறுவது சரியான நாடாளுமன்ற ஜனநாயக மரபு இல்லை என்பது மைத்ரிபால சிறீசேனாவுக்குத் தெரியாதா?
*  சமீபத்தில் இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ரணில் வெற்றி பெற்றாரே, நாடாளுமன்ற ஜனநாயகத்தின்படி ஒருவர் வெற்றி பெற்றால் ஓர் ஆண்டிற்கு அவரை ஆட்சியிலிருந்து அப்புறப்படுத்த முடியாது. இது உலகறிந்த நாடாளுமன்ற ஜனநாயக மரபாகும். அந்த நெறிகளையெல்லாம் புறந்தள்ளி ரணிலைப் பிரதமர் பதவியிலிலிருந்து மைத்ரிபால சிறீசேனா நீக்கியது நியாயம்தானா? சீனாவுக்குக் கட்டுப்பட்டு சிறீசேனா ஏன் சீனாவின் உத்தரவுகளுக்கு அடிபணிய வேண்டும்?
*  யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை சீர்செய்ய இந்தியாவுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்ட பின் அதை நடைமுறைப்படுத்தாமல் போனதற்கு யார் காரணம்? மைத்ரிபால சிறீசேனாஅரசாங்கம் தானே?
*  மாத்தளை விமான நிலையத்தைச் சீர் செய்யும் ஒப்பந்தத்திலும் இந்தியாவை செயல்படுத்தவிடாமல் இலங்கை அரசு முட்டுக்கட்டை இட்டுள்ளதே, அது ஏன்?
*  சம்பூர் மின் உற்பத்தி நிலையங்களை செயல்படுத்தும் பணிகளையும் இந்தியாவை செயல்படுத்தவிடாமல் இலங்கை அரசு முடக்கியது ஏன்?
*  திரிகோணமலை துறைமுகம், ஆஸ்திரேலியாவின் சிட்னி துறைமுகம் போல அமைந்த இயற்கைத் துறைமுகம். அந்தத் துறைமுகத்தில் இந்தியாவிற்கு எண்ணெய் கிடங்குகள் அமைக்க ஒப்புக்கொண்ட பின்னர், சில பணிகள் செய்ய என்று அதை அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் சிறீசேனா தாரைவார்க்கக் காரணம் என்ன? இந்த பிரச்னை இந்திரா காந்தி காலத்திலிருந்தே 40 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. 
*  இலங்கை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 22,000 வீடுகளை இந்தியா கட்டிக் கொடுத்தது. மீதம் 44,000 வீடுகளையும் இந்திய அரசுதான் கட்டிக்கொடுத்திருக்க வேண்டும். அந்த திட்டப் பணிகளை சீனாவுக்கு ஏன் சிறீசேனா அரசு கொடுத்தது?
*  கொழும்புப் துறைமுகத்தின் கிழக்குப் பகுதி முற்றம் இந்தியாவிற்கு வழங்கப்பட்டு, பின்னர் ஏன் அது மறுக்கப்பட வேண்டும்? 
*  இந்தியத் தூதரகத்திற்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டு அந்த இடத்தை பின்னர் சீன நிறுவனத்திற்கு மாற்றிக் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?
*  இந்திய அரசு வழங்கிய பணத்தைக் கொண்டு ராஜபட்ச ஊருக்கு அருகேயுள்ள காலியில் ரயில்வே நிலையம் கட்டப்பட்டு, அது இந்திய முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவைக் கொண்டு திறந்து வைக்கப்பட்டது எந்த விதத்தில் நியாயம்?
*  இந்திய அரசு வழங்கிய நிதியிலிருந்து வடக்கு, கிழக்கு தமிழ் மாகாணங்களின் விவசாயிகளுக்கு டிராக்டர்களும், மாணவர்களுக்கு சைக்கிள்களும் வாங்கித் தருவதாக சொல்லிய திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. அது இந்திய அரசின் கவனத்திற்கு வந்ததா? 
*  கொழும்புத் துறைமுகத்தில் சீனாவின் போர்க்கப்பலும், நீர்மூழ்கிக் கப்பல்களும் நிற்பதாக செய்தி வந்ததே, அதற்கான அவசியம் என்ன? 
*  இந்தியப் பெருங்கடல் இந்தியாவின் ஆதிக்கத்திற்கு உட்பட்டது. தற்போது இலங்கையைப் பயன்படுத்திக் கொண்டு சீனா பட்டு வழி வியாபாரச் சாலை அமைத்து தன் வியாபாரத்தை ஆப்பிரிக்காவிற்கும், தென் அமெரிக்காவிற்கும் பெருக்கிக் கொண்டு வருகிறது. நாளுக்கு நாள் அதன் ஆதிக்கம் இந்தியப் பெருங்கடலில் அதிகரித்து வருகிறது. டீகோகார்சியா தீவுகளில், அமெரிக்காவும், ஃபிரெஞ்சும் வேகமான இராணுவத் தளங்கள் அமைப்பதாகச் செய்திகள் வருகின்றன. இது குறித்து எதுவும் பேசாமல் தில்லியில் உள்ள ஆட்சியாளர்கள் ஏன் அமைதி காக்கிறார்கள்?
*  சமீபத்தில் கொழும்பில் இலங்கைப் பிரதமர் ரணில் தலைமையில் நடந்த இந்தியப் பெருங்கடல் நாடுகளின் உச்சி மாநாட்டில், இந்தியா, சீனா, ஜப்பான், கொரியா மற்றும் சில ஆப்பிரிக்க நாடுகளும் கலந்து கொண்டன. அந்தக் கூட்டத்தில் பிரதமர் ரணிலும், அதிபர் மைத்ரிபால சிறீசேனாவும் மறைமுகமாக தங்களுடைய கோபங்களை காட்டிக் கொண்டனர். சிறீசேனா அந்த மாநாட்டில் உரையாற்றாமலேயே வெளியேறினார். இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் ஆளுமை குறித்து எந்த கருத்தையும் இந்திய அரசு தெளிவாக, ஆணித்தரமாக வைக்கவில்லை. 
*  வடக்கு, கிழக்கில் உள்ள சுமார் 300 கோயில்கள் அழிக்கப்பட்டு, புத்த விகாரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதையும் இந்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
*  அம்பாறையிலும், கண்டியிலும் பல்வேறு மத அடையாளங்கள் மறைக்கப்பட்டு வருகின்றன. இஸ்லாமியத் தொன்மங்களும் அழிக்கப்பட்டுள்ளன. அதுகுறித்து வளைகுடா நாடுகளும் எதையும் பேசுவதில்லை.
*  இந்தியாவைச் சுற்றியுள்ள பாகிஸ்தான், சீனா, மியான்மர், வங்கதேசம் என எந்த நாட்டுடனும் சரியான நட்புறவு இல்லை. ஏற்கனவே மாலத்தீவும், நேபாளமும் சரியான நட்பில் இல்லாமல் நமக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இலங்கையும், சீனாவுடன் கைகோத்துக்கொண்டு நமக்கு எதிராக களமிறங்குவது பெரும் ஆபத்தாக உள்ளது. 
சீனா, பாகிஸ்தானோடு இதுவரை இந்தியா போருக்கு உள்ளாக வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டோம். இனிவரும் காலங்களில் இலங்கையை வைத்துக் கொண்டு இந்தியப் பெருங்கடலில் சீனாவால் இந்தியா போரை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. 
இதனால் தமிழகமும், கேரளமும், அந்தமான் தீவுகளும் மற்றும் இலங்கையில் ஈழத் தமிழர் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணப் பகுதிகளும் எதிர்காலத்தில் பெரிதும் பாதிக்கப்படுமோ என்ற பதற்றம் ஏற்பட்டுள்ளது. 
இப்படி ஏராளமான கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இன அழிப்பு செய்த ராஜபட்ச மீது சர்வதேச அளவில் சுதந்திரமான நம்பகமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை, கடந்த ஏழு ஆண்டுகளுக்கு மேல் சர்வதேச ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் விசாரணையில் இருக்கும்போது எப்படி மைத்ரிபால சிறீசேனா, ராஜபட்சவைப் பிரதமராக்க முடியும் என்ற சாதாரண விஷயத்தைக்கூட இந்திய அரசு கவனிக்காமல் இருந்தால் எப்படி?
மைத்ரிபால சிறீசேனா, வடக்கு, கிழக்கு மாநிலத் தமிழர்களை இனஅழிப்பு செய்த ராஜபட்ச ஆட்சிக்கு வரக்கூடாது என்ற வாக்குறுதி அளித்தே அதிபரானார். அப்படி இருக்கையில் யார் வரக்கூடாது என்று தமிழர்கள் வாக்களித்தார்களோ, அவரையே அழைத்துப் பிரதமராக்குவதுதான் பெளத்தம் காட்டும் மார்க்கமா? 
160 உறுப்பினர்களின் ஆதரவு பெற்ற ரணிலை ஒதுக்கிவிட்டு 95 உறுப்பினர்களைக் கொண்ட ராஜபட்சவை நன்றிகெட்டத்தனமாக முடிசூட்டியது நியாயம் தானா? குதிரை பேரத்தை நடத்த ஒரு நாட்டின் அதிபரே அச்சாரம் போடலாமா? இது தான் இலங்கையில் இன்று நடக்கிறது. இதை அண்டை நாடான இந்தியா அமைதியாக பார்த்துக் கொண்டிருப்பதில் என்ன அர்த்தமிருக்கிறது?
தென்கிழக்கு ஆசிய புவியரசியலில் உறுப்பினரான இந்தியாவிற்கு ஆபத்து எட்டுதிக்கிலும் இருக்கிறது. குறிப்பாக, இனி வரப்போகும் ஆபத்துகளை எதிர்கொள்ளாமல் இந்தியா இருக்கிறது. இன்றைக்குப் பிரதமராக மோடி இருக்கலாம். 
நாளை இன்னொரு பிரதமர் வரலாம். ஆனால், நாடும் மக்களும் அமைப்பு ரீதியான செயல்பாடுகளும் நிரந்தரமானவை. இன்றைக்கு இதை கவனிக்காமல் விட்டால் நாளைய இந்தியா என்னவாகும் என்று மத்திய ஆட்சியாளர்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.

கட்டுரையாளர்:
செய்தித் தொடர்பாளர், 
திராவிட முன்னேற்றக் கழகம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.