/

மோகம் என்றொரு பூநாகம்

நள்ளிரவு. ஒரு பாலத்தின் அடியில் இருட்புதரில் இரண்டு பாம்புகள்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:11 pm

கிருங்கை சேதுபதி

நள்ளிரவு. ஒரு பாலத்தின் அடியில் இருட்புதரில் இரண்டு பாம்புகள்.
ஆணும் பெண்ணுமாகிய அப்பாம்புகள் முழுநிலவு ஒளிரும் கடற்கரையின் மணல்மீது ஊர்ந்து வருகின்றன.
ஆண் பாம்பு பெண் பாம்பிடம் கூறுகிறது: உன்னுடன் கூடிவாழ்வதில் எனக்கின்பமில்லை. உன்னால் எனது வாழ்நாள் விஷ மயமாகிறது. உன்னாலேதான் என் மனம் எப்போதும் அனலில் இட்ட புழுவைப் போலே துடித்துக்கொண்டிருக்கிறது.
உடனே பெண்பாம்பும், உன்னுடன் கூடிவாழ்வதில் எனக்கின்பமில்லை. உன்னால் எனது வாழ்நாள் நரகமாகிறது என்கிறது.
தொடர்ந்தும் இரண்டும் பேசிக்கொள்கின்றன:
ஆண் பாம்பு: நான் உன்னைப் பகைக்கிறேன்
பெண் பாம்பு: நான் உன்னை விரோதிக்கிறேன்
ஆண் பாம்பு: நான் உன்னைக் கொல்லப்போகிறேன்
பெண் பாம்பு: நான் உன்னைக் கொல்லப்போகிறேன்
கடைசியில் ஒன்றையொன்று கடித்து இரண்டு பாம்புகளும் மடிகின்றன.
இது பாரதியார் எழுதிய ஜகத்சித்திரம் வசன கவிதை நாடகத்தின் ஒரு காட்சி.
இவை உண்மையில் பாம்புகள் அல்ல; மனித மனங்களின் விகார உருவகங்கள்.
இதனைப் படிக்கிறபோது நம் மனத்திரையில் இன்னொரு காட்சியும் விரிகிறது. அது, திருக்கோயில்களில் சிற்பங்களாகவும் ஓவியங்களாகவும் காணக்கிடைக்கும் இருநாகங்கள் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த நிலையில் இருக்கும் தெய்வீகக்காட்சி.
இப்படித்தானே நம்முன்னோர், ஆணும் பெண்ணுமாய் இணைந்து இல்லறம் நடத்தி நன்மக்கட்பேறாக நம்மை ஈன்று இவ்வுலகிற்குத் தந்தார்கள். சான்றோர்களாக வாழ்ந்துகாட்ட வேண்டிய மனிதர்கள் சரிந்தது எதனால்?
கலையில், குறியீடாக, ஈருயிர் ஓருடல் போல் இணைந்து தோற்றமளிக்கும் நாகங்கள், இக்கவிதை நாடகத்தில், ஒன்றையொன்று பகைத்துக்கொண்டும் கொத்திக்கொண்டும் இறப்பதற்கு யாது காரணம்?
இந்நாடகத்தின் இன்னொரு காட்சியில் பறவைகள் கூடிப் பேசும் இடத்தில் இதற்கான பதில் கிடைக்கிறது. 
மனந்தான் பகை. அதைக் கொத்துவோம் வாருங்கள்.அதைக் கிழிப்போம் வாருங்கள். அதை வேட்டையாடுவோம் வாருங்கள்.என்றென்றும் வாழையடி வாழையென இனிது வாழவேண்டிய மனிதகுலத்தின் துணையாக வேண்டிய மனம் பகையாக மாறியது எதனால்?
தலைமறைவாய் உள்ளுறைந்துகிடந்த காம குரோத விகாரங்கள் தலைநிமிர்த்தி வெறிகொண்டாடுவதால்; அத்தகு நிகழ்வுகளே அடுத்தடுத்துக் காட்சிக்கும் கவனத்திற்கும் வந்து வந்து தூண்டுவதால்; தீண்டுவதால்!
அதனால் பாலியல் வன்கொடுமைகள் பல்கிப் பெருகி மனிதகுலத்தைக் காவுகொண்டு வருவது தொடர்கதையாகிறது.
இந்நிலையில், தொடர்புடையோர் படும் அவலங்களைவிடவும், தொடர்ந்து வரும் தலைமுறைகள் என்ன ஆகுமோ? என்று தாய்மை நிலையில் நின்று தூய்மை பேணத் துடிக்கும் நல்லிதயங்களுக்கு நம்பிக்கை தருகிற செய்திகளும் அறநெறிகளும்தான் மிகவும் தேவை.
அதற்கென யாரும் புதிதாகப் பிறந்துவரவேண்டியதில்லை; என்றென்றும் நிரந்தரமான தீர்வுகளை உள்ளடக்கி வைத்திருக்கும் திருக்குறள் ஒன்றுபோதும்.
அதன் தோற்றக்காரணமே இத்தகு துயரநிகழ்வுகள்தான் என்பதை, முப்பாலின் வகைப்பாடு முழுதுணர்த்தும்.
அறம் சிதைந்து வாழ்வின் பொருள் குலைந்து இன்பம் துன்பமாகிய மாறிய அவலம் மனித குலத்திற்கு ஏன் நேர்ந்தது என்பதைத் திருவள்ளுவர் எண்ணிப்பார்க்கிறார்; முப்பால் சமைக்கிறார். அதில் காமத்துப்பாலை, நாடகம்போல் வடித்துக் கொடுக்கிறார்.
இயல்பில் இருபால் உயிரினம் துய்க்கவேண்டிய காமநுகர்வானது, மலரில் தேன் எடுக்கும் வண்டுபோல் அமையவேண்டியது. நன்முறையில் அமைகிற அறம் அது என்பதால் நல்லறமாகிய இல்லறம் எனப் பெயர் கொண்டது. அதனை வன்முறையாக்கியது வரம்பு கடந்த மோகம். பொருட்பெண்டிரின் பொய்ம்மை முயக்கம், அருட்பண்பை மனிதகுலத்திற்கு இல்லாததாக ஆக்கிவிட்டது. பரத்தைமை என்பது பண்பாடு அல்ல என்று இடித்துரைக்கிறாள், காமத்துப்பாலில் வருகிற தலைவி. 
பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுவுண்பார்
நண்ணேன் பரத்த நின்மார்பு
என்று பெண்டிர் பலர்காணத் திறந்த மார்போடு திரியும் தலைமகனைப் பரத்தன் என்று சுட்டுகிறாள் அவள்.
அதற்கு முன் தோன்றிய சங்க இலக்கியங்களில் பரத்தையர் பிரிவு ஓர் ஒழுக்கமாகவே இருந்து வந்தது. அதனை முற்றிலும் மறுதலித்துப் புதிய அறம் பாடுகிறார் திருவள்ளுவர். 
காமம் உயிரின் இயல்பு. அது மறைக்கப்படவேண்டியதோ, ஒடுக்கப்படவேண்டியதோ இல்லை; பலரும் போற்ற ஆணும்பெண்ணும் இணைந்து துய்க்கப்பெற வேண்டிய இன்பம். பிறவிப்பெருங்கடல் நீந்த இறைவனின் திருவடியைத் துணையாக்கிக் கொள்வதுபோல், காமக்கடும்புனலைக் கடக்க ஆணைப் பெண்ணும், பெண்ணை ஆணும் துணைகொள்ள வேண்டும். 
தானும் மூழ்கிப் பிறரையும் மூழ்குவிக்கும் ஆணோ, பெண்ணோ அறநெறிக்குப் புறம்பானவர்கள். பிறனில் விழையாமைதான் பேராண்மை. கற்பென்னும் திண்மை பெண்ணுக்கும், சால்பு என்னும் திண்மை ஆணுக்கும் வேண்டும் என்று வலியுறுத்துகிறது வள்ளுவம். 
அதேபோல, அறமற்ற நிலையில், பொருட்பெண்டிரோடு கொள்கிற பொய்ம்மை முயக்கமானது, இருட்டறையில் பிணத்தைத் தழுவிக்கிடப்பதைப்போல என்று சொல்கிற அளவிற்கு, அவரைத் தூண்டியது இத்தகு காமக்களியாட்டப்பெருவெறிதானே!
பெரியாரைப் பிழையாமை தவறியதால் வருவது பெண்வழிச்சேறல்; அதனை அடுத்து வரைவின் மகளிர், கள்ளுண்ணாமை, சூது என அதிகாரங்களைத் திருவள்ளுவர் அடுக்கி விரிப்பது இவையெல்லாம் தொடர்ந்து வந்து அறவாழ்வைக் கவ்வும் என்று எச்சரிப்பதற்காகத்தான்.
களிப்புக்காகத்தான் கள் உட்கொள்ளப்பட்டது என்றாலும், அது சான்றோராலும், ஈன்றோளாலும் ஏற்புடையது இல்லை என்கிறபோது இல்லாளுக்கு மட்டும் எப்படி ஏற்புடையதாகும்? நாணம் என்கிற நல்லாள் கள்ளுண்டவனைக் கண்டு முகந்திருப்பிக் கொள்வாள் என்று எவ்வளவு நாகரிகமாகச் சொல்கிறார் திருவள்ளுவர். பின்னர் நாணமற்ற செயல்கள் எல்லாமும் அரங்கேறுதல் இயல்பாகிவிடுமே!
கள் இல்லாமலும் களித்திருக்க முடியும் என்று, கள்ளுண்ணாமையைக் கட்டாயமாக வலியுறுத்திய திருவள்ளுவர். காதலியோடு துய்க்கும் காமத்தையே இன்பம் என்று வலியுறுத்துகிறார்.
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்குஇல் காமத்திற்கு உண்டு
கள் தரும் இன்பத்தைக் காட்டிலும், தன் மனையாளோடு துய்த்துப் பெறும் காமத்தின் இன்பமே பெரிது, இனிது என்று கல்வியியல்போல் கலவியியலையும் கவித்துவமாகச் சொல்லிக்கொடுக்கிறது இக்குறள்.
மேலும், ஒரு பெண்ணோடு கூடிப்பெறும் சுகம் எத்தகையது என்பதற்குக் கள்ளத்தனமான காட்சிகளைத் தேடாமல் நேருக்கு நேர் நின்று சொல்லித் தருவதாகவும் ஒரு திருக்குறள் இருக்கிறது.
தம்இல் இருந்து தமதுபாத்(து) உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு
அரிவை என்பதற்குப் பருவப்பெண் என்று பொருள். அம்மா எனும் சொல்லுக்கு, அழகிய மாமை நிறமுடைய என்று விளக்கம் தருகிறார் பரிமேலழகர்.
இத்தகு அழகிய பருவப்பெண்ணோடு முயங்கி - கூடிப் பெறுகிற சுகம் எப்படிப்பட்டது என்றால், தம் இல்லத்தில் இருந்து, தமது உழைப்பால் வந்த பொருளைக் கொண்டு வாழ்கிற இன்பத்தைப் போன்றது. இதில் களவுக்குற்றத்திற்கு ஏது இடம்?
அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன் பழிப்பது இல்லாயின் நன்று
என்று அறுதியிட்டுச் சொல்கிறார் அவர்.
அதனால்தான், சிலப்பதிகாரத்தில், கோவலனைப் பார்த்து, போற்றா ஒழுக்கம் புரிந்தீர் என்று கண்ணகி கடிகிறாள். அமுதாக வேண்டிய காமத்தை நஞ்சாக்கி உண்டழிந்த இராவணனின் சடலம் நோக்கி, 
எண்ணில் ஆற்றல் உடைய அண்ணாவோ, அண்ணாவோ 
என்று அழுது அரற்றி, அவன் உடன்பிறப்பாகிய வீடணன், 
உண்ணாதே உயிர் உண்ணாது ஒரு நஞ்சு, சனகி என்னும் பெருநஞ்சு கண்ணாலே நோக்கவே, போக்கியதே உயிர், நீயும் களப்பட்டாயே என்று கதறுகிறான்.
 பொதுவாக, உண்டவரைத்தான் நஞ்சு தனக்கு உணவாக்கி உட்கொள்ளும்; அதாவது கொல்லும். ஆனால், உண்ணாமலேயே நீ பிறன்மனையைக் கண்ணால் நோக்கியதாலேயே களத்தில் இறந்து பட்டாயே என்று சொன்னது இறந்து கிடந்த இராவணனுக்கா? இனி எப்போதும் இறவாது வாழ வேண்டிய எல்லாக் கலையுள்ளங்களுக்கும் அல்லவா?
கலையும் இலக்கியமும் காமத்தை விட்டொழிக்கச் சொல்லவில்லை; கட்டுப்படுத்தவும் கட்டாயப்படுத்தவில்லை; அறநெறிநின்று அனுபவிக்கச் சொல்லிக் கொடுக்கிறது. அறத்தை விட்டுவிலகினால் பாம்பைப்போல் கொத்திக்கொண்டு சாகவேண்டியதுதான் என்று குறியீடாக, பாரதி நாடகம் எழுதிக்காட்டுகிறார். மலரினும் மெல்லிது காமம் என்ற திருவள்ளுவர், சிலர் அதன் செவ்வி தலைப்படுவார் என்று சொல்லிக் காட்டுகிறார். 
இந்தச் சிலர் பலராகிவிட்டால், இந்த வன்கொடுமை தானே ஒழிந்துபோகும். 
காமம் பூ. கரைகடந்த மோகம், பூநாகம். இந்த நாகம் நம் வாழ்வை நரகமாக்கி விடாமல் காப்பதற்குத்தான் கலையும் இலக்கியமும்.
மோகத்தைக் கொன்றுவிடு, அல்லால் என்றன்
மூச்சை நிறுத்திவிடு!
என்கிற மகாகவி பாரதியின் கூற்றுதான் எத்துணை பொருள் பொதிந்தது?

கட்டுரையாளர்:
துணைப் பேராசிரியர்,
பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி,
புதுச்சேரி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.