இவர்களும் வாழட்டும்
"தாயின் அன்பு மகத்தானது, அது அச்சமற்றது, எல்லைகளற்றது, அது தியாகத்தின் உண்மையின் உரு' என்று போற்றுகிறார் வீரத்துறவி விவேகானந்தர்.


"தாயின் அன்பு மகத்தானது, அது அச்சமற்றது, எல்லைகளற்றது, அது தியாகத்தின் உண்மையின் உரு' என்று போற்றுகிறார் வீரத்துறவி விவேகானந்தர். இதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் நம் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் சொல்லப்பட்டு வருகிறது.
வீர சிவாஜியின் ராய்காட் கிழக்குப் பகுதி கோபுரத்திற்கு ஹீரா கோபுரம் என்று பெயர். ஹீரா என்ற பால்காரப் பெண் பக்கத்து மலையடிவார கிராமத்தில் இருந்து அன்றாடம் ராய்காட் கோட்டைக்குப் பால் விற்க வருகிறாள். அவள் பால் விற்றுத் திரும்பும் முன் ஒருநாள் கோட்டைக் கதவுகள் மூடப்பட்டுவிடுகின்றன. கிராமத்தில் இருக்கும் தன் குழந்தையை எப்படியும் சென்றடைய வேண்டும் எனும் வேகத்தில் கோட்டையின் கிழக்குப் பகுதியில் மதில் சுவர் ஏறிச் செங்குத்தான- அபாயகரமான மலையை இருள் நேரத்தில் கடந்து செல்கின்றாள்.
மறுநாள், பால் விற்கக் கோட்டைக்குள் வருபவள் தடுத்து நிறுத்தப்படுகிறாள். அவள் எப்படி அங்கிருந்து வெளியேறினாள் என்பதை விசாரிக்க வீரசிவாஜியின் ஆட்சி மன்றத்திலே நிறுத்தப்படுகிறாள். அவள் கூறுவதையெல்லாம் கேட்ட வீரசிவாஜியோ, மீண்டும் அப்படிக் கோட்டையில் ஏறி மலையில் இறங்கிக் காட்ட முடியுமா என்று கேட்க, கோட்டையில் ஏறிய பெண், மலையைக் கண்டு மலைத்து, இப்போது சாத்தியமில்லை- ஆனால், நேற்று இந்த வழியில்தான் மகனைக் காணும் ஆவலில் இறங்கிச் சென்றேன் என்கிறாள். வீரசிவாஜி அந்தப் பெண் தன் குழந்தைக்காக இறங்கிச் சென்றதை நம்புகிறார். அங்கே ஒரு கோபுரம் அமைக்கப்பட வேண்டும் என்பதை உணரும் அவர், காவல் கோபுரத்தை அமைத்து, அதற்கு ஹீரா கோபுரம் என்றுபெயரிட்டு அந்தத் தாயின் அன்பை, தியாகத்தை, மன உறுதியை கெளரவிக்கிறார். இன்றளவும் ஹீரா கோபுரம் உயர்ந்து நிற்கிறது.
இத்தகைய அன்பும் அச்சமின்மையும் அன்னைக்கு இயல்பானது. எந்தத் தாயும் தன் குழந்தைக்கு என்ற எண்ணம் தோன்றும்பொழுது அளவற்ற சக்தி கொண்டவளாக இருக்கிறாள். சாத்தியமற்றது எனும் சொல்லுக்குத் தாயின் மனதிலும் செயலிலும் இடமில்லை.
பல நேரங்களில் தகப்பன் மறைவுக்குப் பின் தாய் பொறுப்பேற்கும் குடும்பங்களில் இத்தகைய மனோதிடம் வாய்ந்த தாய்மார்களைப் பார்த்திருக்கிறோம்.
தற்காலத்தில் இன்னும் சில அம்சங்களால் தனித்து வாழும் தாய்மார்கள்அதிகரித்து வருவதையும் காண்கிறோம். மணமுறிவு வேண்டுமென நீதிமன்றத்தில் வந்து விவாகரத்து செய்துகொள்ளும் தாய்மார்களும், பெரும்பாலும் அவர்களே குழந்தையைக் கோரிப் பெற்றுக் கொள்கிறார்கள். இவர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கின்றனர். இதனை இரட்டைப் பொறுப்பு என்று சொல்லலாம். சுலபமாக நிறைவேற்றக் கூடியது அல்ல என்றாலும், அதனை ஏற்பதில் எந்தப் பெண்ணுக்கும், தாய்க்கும் தயக்கம் இருப்பதாகத் தெரியவில்லை.
அதேபோல, கணவன் இல்லாத அல்லது திருமணம் செய்துகொள்ளாத பெண்களும் குழந்தையை தத்து எடுத்துக் கொண்டு, தன்னை அன்னையாய் உயர்த்திக் கொள்வதோடு குழந்தையின் வாழ்வையும் மேம்படுத்துவதைக் காண்கிறோம்.
இத்தகைய முடிவுகளை மிகச் சிலரே மேற்கொள்கின்றனர் என்றபோதும், அவர்களையும் ஒற்றைப் பெற்றோருக்கான பார்வையோடுதான் அணுக வேண்டும். பெருகும் குடும்ப நல நீதிமன்றங்களும் மணமுறிவு வழக்குகளும் ஏற்புடையவை அல்ல என்றபோதிலும், மறுப்பதற்கும் இல்லை. மணமுறிவு செய்துகொள்வதற்கான உரிமை தேவையில்லை என ஒதுக்கிவிட முடியாது. குழந்தைகளின் உளவியல் தேவைகளின் மீது கவனம் செலுத்த வேண்டியதுதான் இந்நிலையில் அவசியமானதாகிறது.
ஒற்றைப் பெற்றோர்அதிகரித்து வருவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், அன்றாட வாழ்க்கையின் பொறுப்புகள் மற்றும் சவால்கள் என்று வரும்பொழுது, ஒற்றை பெற்றோர்களுக்குச் சில பிரச்னைகளும் இருக்கத்தான் செய்கின்றன. அவர்கள் தங்கள் பொறுப்புக்களை நிறைவேற்ற என்னவெல்லாம் இடர்களைச் சந்திக்கிறார்கள்?
குடும்பம் என்பது ஓர் அடிப்படையான கட்டமைப்பு. பிறந்தது முதல் இறுதி மூச்சு வரை உளவியல், வாழ்வியல் சார்ந்த தொடர்புகளை நமக்கு ஏற்படுத்தித் தருவது குடும்பம் எனும் கட்டமைப்பே. சமூகத்தில் குழந்தையுடன் தனியாக வாழும் பெண்களுக்குப் பல தொந்தரவுகள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றனஎன்றாலும், அவற்றை அவர்கள் ஒருவாறு சமாளிக்கும் திறன் கொண்டவர்களாக இயல்பிலேயே இருக்கிறார்கள். ஆனால் உளவியல் மற்றும் பொருளியல்சிக்கல்கள் ஏற்படும்பொழுதுதான் இத்தகைய தாய்மார்கள் மிகுந்த வேதனையை சந்திக்கிறார்கள். துணை இல்லாமல் குழந்தைகளைக் காப்பதும் வளர்ப்பதும் முன்னேற்றுவதும் மிகப் பெரிய சவால். அப்படியான சவால்களை அன்றாடம் இவர்கள் சந்தித்தாக வேண்டும்.
தாய் மற்றும் தந்தை இருவரின் பொறுப்புகளையும் வகிக்கும் அன்னை பொருளாதாரத் தேவைகளை நிறைவு செய்துகொள்ள வெளியில் சென்று சம்பாதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இந்நிலையில், வீட்டுப் பொறுப்புகள், அலுவலக வேலைகள், குழந்தைக்கான அன்றாடக் கடமைகள் என அவர்கள் அனைத்து நிலைகளிலும் அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இதனையும் தாண்டி குழந்தையின் தனிமையைப் போக்க அதிக நேரம் அவர்களோடு செலவிட வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது.
ஒருவிதமான அச்ச உணர்வோடு இவர்கள் தங்கள் ஒவ்வொரு நாளையும் நகர்த்துகிறார்கள். யாரை நம்புவது யாரைத் தவிர்ப்பது என்பதில் மிகுந்த கவனமும் இவர்களுக்குத் தேவையாய் இருக்கின்றது. ஒரு வீட்டை வாடகைக்கு எனஏற்பாடு செய்து கொள்வதில் கூட சிக்கல் நீடிக்கும் நிலையில்தான் நம் சமூக அமைப்பும் இருக்கிறது. தங்கள் பிள்ளைகளோடு தனித்து வாழும் தாய்மார்கள் மீது நம்பிக்கை கொண்டு அவர்களை யாரும்அணுகுவதோ உதவ முன்வருவதோ இன்றளவும்கூட சமூகத்தில் அரிதாகவே காணப்படுகிறது. பணியிடங்களிலும் இவர்கள் மீதான புரிதல் இன்னும் நாகரிகமாக இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
நல்ல பொருளாதார நிலையில் உள்ள பெண்கள் எதிர்கொள்ளும் சமூகப் பிரச்னைகளைவிட நடுத்தர வர்க்கப் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் சற்று அதிகம். மேல்தட்டுப் பெண்களுக்குள்ள சுதந்திரமும் துணிவும் இவர்களுக்கு இன்னும் சாத்தியப்படவில்லை. ஆனாலும், குழந்தைகளின் வாழ்வை மேம்படுத்துவதில் இவர்களுக்குள்ள மன உறுதி சற்றும் குறைத்து மதிப்பிடத் தகுந்ததல்ல.
இந்தக் குடும்பங்களில் குழந்தைகளும் மிகுந்த பொறுப்போடு வளர்கின்றனர் என்றே சொல்லலாம். தாய் தனித்து நின்று, அனைத்து நிலைகளிலும் ஏற்படும் அழுத்தத்தை சமாளிப்பதை உடனிருந்து காணும் குழந்தைகள்அதிக அன்பும், மரியாதையும் கொண்டே வளர்கின்றனர். முன்னேறுவதற்கான துடிப்பு இவர்கள் மனதில் மிக அழுத்தமாக உள்ளதென்பதும் மறுக்க முடியாத உண்மை. அதேநேரத்தில், உளவியல் சிக்கல்களும் இவர்களுக்குப் பல நேரங்களில் தவிர்க்க முடியாததாகிறது.
சமூக அமைப்பிலும், தனிமனித அளவிலும் இப்படி தாயின்அரவணைப்பில் மட்டும் வளரும் குழந்தைகள் மீதான புரிதல் அதிகரிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அந்தக் குழந்தைகளின் மனஅழுத்தம், தனிமை எண்ணம் போன்றவற்றைப் புரிந்து கொள்ளும்பட்சத்தில் மட்டுமே அவர்களுக்கு சமூகத்தின் மீது மரியாதை தோன்றும். இந்தத் தலைமுறை தாய்மார்களின் கல்வி இத்தகு பிள்ளைகள் எதிர்கொள்ளும் உளவியல் பிரச்னைகளைப் புரிந்துகொள்வதை சாத்தியமாகியுள்ளது என்பதும் உண்மை. கல்வி அறிவு கொண்ட பெண் ஒரு குடும்பத்தையே கல்வியில் மேம்படச் செய்கின்றாள் என்னும் உண்மையையும் இத்தகைய பெண்கள் நிரூபிக்கின்றனர்.
அரசும் பல விதங்களில் இத்தகைய ஒற்றைப் பெற்றோரின் நிலையைப் புரிந்து கொண்டு அவர்களின் வாழ்வை எளிமையாக்க முயல்கிறது. பள்ளிக்கூடங்களில் குழந்தைகளைச் சேர்ப்பதற்குத் தந்தையின் எந்தத் தகவலும் அவசியம் இல்லை என்பதில் தொடங்கி, உதவித் தொகை வரை, பல நிலைகளில் அரசு உதவித் திட்டங்களை ஏற்படுத்தியுள்ளது. தாயின் பெயரைக் கொண்டு முதல் எழுத்து அமைத்துக் கொள்வதை சட்டமாக்கி இருக்கிறது. ஒற்றைப் பெற்றோருக்கு அவர்களின் பொருளாதாரத் தேவைகளை மனதில் கொண்டு வரிச்சலுகைகளும் அளிக்கப்படுகின்றன.
இதுகுறித்த தகவல்களை www.naari.in என்ற வலைதளத்திலும், பெண்கள் தங்களுக்கான மற்றும் தங்கள் குழந்தைகளுக்கான நலத்திட்டங்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள www.wcd nic.in > schemes - listing பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் வலைதளத்திலும் காணலாம். தனித்து வாழும் பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை மகளிர் ஆணையத்தில் புகாராகவும் பதிவு செய்யலாம். மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கும் உதவுவதற்கென இத்தகைய பல திட்டங்களை வகுத்துச் செயல்படுகின்றது என்றாலும், அவை போதுமானதாக இல்லை என்பதும், தேவையானவர்களை முழுமையாகச் சென்றடையவில்லை என்பதும் வருத்தத்திற்குரியது. இந்தத் தகவல்கள் எல்லா தரப்புப் பெண்களையும் சென்றடைவதற்கான வழிகளைக் கண்டறிந்து, அரசு செயல்படுத்த வேண்டியது அவசியம்.
ஒற்றையாய் நின்று குடும்பம் பேணிய பெண்கள் சில காலங்களுக்கு முன்பு வரை நிராகரிக்கப்பட்டனர், சமூகத்தால் தூற்றப்பட்டனர். காலத்தின் வேகமான ஓட்டத்தில் இப்போது அந்த நிலை சற்றே மாறி வருகிறது.
இந்தப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அங்கீகாரம் கிடைப்பதற்கான சூழ்நிலைகளும் ஆரோக்கியமான அணுகுமுறைகளும் மெல்ல உருவாகத் தொடங்கியுள்ளன. மேல்தட்டு மக்களிடையே உருவாகியிருக்கும் இந்த மாற்றம், நேர்மறையானஅணுகுமுறை சமூகத்தின் எல்லா நிலைகளிலும் ஏற்பட வேண்டும். நடுத்தர வர்க்கப் பெண்களும் சுதந்திரமாகவும் அச்சமின்றியும் இயல்பாகவும் வாழ்வதற்கான சூழலை உருவாக்கித் தருவது அறிவுடைச் சமுதாயத்தில் ஒவ்வொரு தனி மனிதருக்குமான கடமையே.
கட்டுரையாளர்: ஊடகவியலாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...