திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

பத்திரிகை சுதந்திரம் படும் பாடு

உலக பத்திரிகை சுதந்திர தினம் மே 3-ஆம் நாள் உலகெங்கும் கொண்டாடப்பட்டது. இந்தியாவிலும் ஆங்காங்கு பத்திரிகையாளர்

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:59 pm

உதயை மு. வீரையன்

உலக பத்திரிகை சுதந்திர தினம் மே 3-ஆம் நாள் உலகெங்கும் கொண்டாடப்பட்டது. இந்தியாவிலும் ஆங்காங்கு பத்திரிகையாளர் அமைப்புகள் கூடி தங்கள் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தன. ஆட்சியாளர்கள் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
 மக்களாட்சியைத் தாங்கும் நான்கு தூண்களாக விளங்குவன, நாடாளுமன்றம், நீதித்துறை, நிர்வாகம், பத்திரிகைத் துறை. இதில் பத்திரிகைத் துறையே பல காலமாக அடக்குமுறைகளைச் சந்தித்து வந்துள்ளது; அதிகாரங்களை எதிர்த்தே வளர்ந்துள்ளது.
 அடிக்க அடிக்க பந்து துள்ளி எழுவதுபோல இந்த அடக்குமுறைகளைச் சந்தித்து பத்திரிகைத் துறை எழுச்சி பெற்றதே தவிர சோர்ந்து போய்விடவில்லை. பத்திரிகையாளர்கள் புதிய வீச்சோடு தங்கள் கடமையைச் செய்து வருகின்றனர்.
 துப்பாக்கி முனையைவிடவும் பேனா முனையே வலிமையானது என்பது நிரூபிக்கப்பட்ட வரலாறு. அந்த வரலாற்று நாயகர்களை நாம் வரவேற்க வேண்டாமா? அவர்கள் தங்கள் கடமையைச் செய்ய அனுமதிக்க வேண்டாமா?
 "பத்திரிகை சுதந்திரமே ஜனநாயகத்தை வலுப்படுத்தும்' என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். "உலக பத்திரிகை சுதந்திர நாளில் பத்திரிகை சுதந்திரத்துக்கு ஆதரவளிப்போம் என்று நாம் உறுதி ஏற்றுக் கொள்வோம். மனிதர்களின் உணர்வுகளையும், சிந்தனைகளையும் பன்மடங்காகப் பெருக்குவதன் மூலம் துடிப்பு மிக்க சமூகமாக நாம் உருவாகிறோம். எண்ணிலடங்கா மனிதர்களின் அயராத உழைப்பால் பத்திரிகை சுதந்திரம் குறிப்பிடத்தக்க வகையில் முன்னேறியிருக்கிறது. பத்திரிகை சுதந்திரத்தையும், கருத்துரிமையையும் ஆதரித்து சமூக வலைதளங்களில் எழுதிவரும் ஒவ்வொருவரின் செயல்பாடுகளையும் நாம் பாராட்ட வேண்டும்' என அவர் கூறியுள்ளார்.
 பத்திரிகையாளர்கள் எப்போதும் எல்லா நாடுகளிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத மக்கள் பிரதிநிதிகளாகவே செயல்பட்டு வருகின்றனர். மக்களுக்கு எதிராகச் செயல்படும் அரசுகள் பத்திரிகையாளர்களையே எதிரிகளாக நினைத்து அவர்கள் மீது அடக்குமுறைகளை ஏவுகின்றன.
 கடந்த ஐந்து ஆண்டுகளில் சர்வதேச அளவில் பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்படுவது அதிகரித்துள்ளது என்று யுனெஸ்கோ அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 கடந்த 2012 முதல் 2016-ஆம் ஆண்டு வரை உலகம் முழுவதும் 530 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதில் இந்தியாவில் மட்டும் 18 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
 சிரியாவில் அதிகபடியாக 86 பத்திரிகையாளர்கள், இராக்கில் 46 பேர், மெக்சிகோவில் 37 பேர், சோமாலியாவில் 36 பேர், பாகிஸ்தானில் 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
 இதற்கு அடுத்தபடியாக, பிரேசிலில் 29 பேர், பிலிப்பின்ஸ், யேமனில் தலா 21 பேர், ஆப்கனில் 20 பேர், ஹோண்டுரசில் 19 பேர், லிபியாவில் 17 பேர், கெüதமாலாவில் 14 பேர், வங்கதேசம், உக்ரைனில் தலா 10 பேர், பிரான்ஸில் 8 பேர், பராகுவே மற்றும் துருக்கியில் தலா 6 பத்திரிகையாளர்கள் இந்தக் காலகட்டத்தில் கொலை செய்யப்பட்டனர்.
 பத்திரிகையாளர் படுகொலை என்பது அடுத்தடுத்த ஆண்டுகளில் குறைந்து வந்தது. ஆயினும் அரபு நாடுகளில் பத்திரிகையாளர் படுகொலை தொடர்பான வழக்குகள் 36 விழுக்காடு பதிவாகியுள்ளன. லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவு நாடுகளில் இந்தக் காலகட்டத்தில் மொத்தம் 107 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டனர்.
 ஆப்பிரிக்காவில் 2012-ஆம் ஆண்டு 26 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் அந்த எண்ணிக்கை குறைந்தது. 2016-ஆம் ஆண்டு கொல்லப்பட்ட பத்திரிகையாளர் எண்ணிக்கை 7 ஆனது. மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் இந்தக் கால கட்டத்தில் 17 பத்திரிகையாளர் கொல்லப்பட்டனர்.
 பன்னாட்டு அளவில் படுகொலை செய்யப்பட்ட 530 பத்திரிகையாளர்களில் தொலைக்காட்சி நிருபர்கள் 166 பேர், நாளிதழ்களில் பணிபுரிந்த நிருபர்கள் 142 பேர், வானொலியில் பணிபுரிந்தவர்கள் 118 பேர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 பத்திரிகை தருமத்தைப் பேணி வளர்க்க வேண்டும் என்று ஐ.நா. மன்றம் உலக நாடுகளுக்கு அறிவுறுத்தியபோதிலும், எந்த நாட்டு அரசும் பத்திரிகையாளர் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தரத் தயாராக இல்லை. அரசு செய்யும் தவறுகளை வெளிப்படுத்தும் பத்திரிகைகளைப் பழிவாங்கவே துடிக்கின்றன.
 பத்திரிகை அலுவலகங்களை குண்டர்களை ஏவித் தாக்குவதும், பத்திரிகையாளர்களை இடைமறித்துக் கொலை செய்வதும் அநியாயத்தின் எல்லையாகும். இது மக்களாட்சிக்கு விடுக்கும் அறைகூவலாகும்.
 மக்களின் கல்வியறிவு வளர்ச்சி பெற்றதன் அடையாளமாகவே பத்திரிகைகள் பிறப்பெடுத்தன. உலகின் எந்தத் திசையில் என்ன நிகழ்கிறது என்பதை அறியவும், அரசுகள் செய்யும் அநியாயங்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கவும் இந்தப் பத்திரிகைகள் உதவுகின்றன.
 நியூஸ் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நான்கு திசைகளின் முதல் எழுத்துகளே வரி வடிவங்களாக அமைக்கப்பட்டுள்ளன. உலகின் நான்கு திசைகளிலும் நடப்பவற்றைக் கொண்டு வந்து தரும் பத்திரிகைகளே செய்தித்தாள் என்று அழைக்கப்படுகிறது.
 இந்தியாவில் முதல் பத்திரிகை 1780 ஜனவரி 29 அன்று உதயமானது. "பெங்கால் கெஜட்' என்னும் அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் ஜேம்ஸ் அகஸ்தஸ் ஹிக்கி. இவரே முதல் பத்திரிகையாளர்.
 முதல் இதழிலேயே அதன் கொள்கைப் பிரகடனம் முதல் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்தது: "அனைவருக்கும் பொதுவானது. ஆனால் நிர்பந்தங்களுக்குப் பணியாது' என்ற தாரக மந்திரத்துடன் பிறப்பெடுத்தது. இது நீண்ட காலம் வாழ முடியவில்லை.
 அப்போது ஆங்கில ஆட்சிக் காலம். கவர்னர் ஜெனரலாக இருந்து ஆட்சிபுரிந்தவர் வாரன் ஹேஸ்டிங்ஸ். அந்த சர்வாதிகார ஆட்சியில்தான் அந்தப் பத்திரிகையும் நடுநிலையோடு நடந்து கொண்டிருந்தது.
 ஒரு சமயம் ஆளுநரைப் பற்றிய செய்தி வந்ததும் அவர் கோபம் கொண்டார். தன்னுடைய ஆட்சியில் தன்னையே சீண்டிப் பார்ப்பதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பத்திரிகையின் அஞ்சல் சலுகை நிறுத்தப்பட்டது. பத்திரிகையும் தானாக நின்றது. அந்த ஆணை வெளியிடப்பட்ட நாள் 1780 நவம்பர் 4. பத்து மாத காலம் மட்டுமே அந்த இதழ் கொடி கட்டிப் பறந்தது என்று சொல்லலாம்.
 பத்திரிகையாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் இலங்கை போன்ற சில நாடுகளில் வெளி உலகத்துக்குத் தெரியாமல் மறைக்கப்படுகின்றன. இலங்கையில் கடந்த காலம் முதல் அண்மைக் காலம் வரை எண்ணிக்கையில் அடங்காத பத்திரிகையாளர்கள் சித்திரவதைக்கு ஆளாகியுள்ளனர். சிலர் காணாமலேயே போய்விட்டனர். பல பத்திரிகை அலுவலகங்கள் எரிக்கப்பட்டன.
 இலங்கையில் தமிழ்ப் பத்திரிகையாளர் ஜே.எஸ்.திசைநாயகத்துக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து கொழும்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
 "சண்டே டைம்ஸ்' பத்திரிகையில் கட்டுரைகள் எழுதியவரும், தனி இணையதளத்தை நடத்தியவருமான இவர் தீவிரவாதத்தை ஆதரித்தது உறுதி செய்யப்பட்டதால் இந்தத் தண்டனை வழங்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார்.
 அரசுக்கு எதிராகத் தொடர்ந்து எழுதிவந்த லசந்தா விக்ரமதுங்க அவரது பத்திரிகை அலுவலகத்துக்கு முன் சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த 3 ஆண்டுகளில் இலங்கையில் 9 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். 27 பேர் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.
 "இலங்கையில் திசைநாயகம் போன்றவர்கள் கைது செய்யப்பட்டது பத்திரிகை சுதந்திரத்தின் மீதான அச்சுறுத்தலுக்கு உதாரணம்' என்று அமெரிக்க அதிபர் ஒபாமா உலகப் பத்திரிகை சுதந்திர நாளை முன்னிட்டு நிகழ்த்திய உரையில் குறிப்பிட்டுள்ளார்.
 இந்தியாவில் பத்திரிகைகள் சுதந்திரமாக இயங்குகிறதா என்று கேட்டால் இல்லை என்று கண்ணை மூடிக் கொண்டு சொல்லிவிடலாம். பல மாநிலங்களில் பத்திரிகையாளர்கள் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். இதில் தப்பித்தவர்களும் உண்டு. படுகொலைக்கு ஆளானவர்களும் உண்டு.
 கர்நாடக மாநிலத்தில் அடுத்தடுத்து படுகொலைக்கு ஆளான பத்திரிகையாளர்களையும், பகுத்தறிவாளர்களையும் நாடறியும். பகுத்தறிவாளர் கல்புர்கி கொலையைத் தொடர்ந்து கெüரி லங்கேஷ் என்ற பெண் பத்திரிகையாளரின் மரணம் நாட்டையே உலுக்கியது.
 பெங்களூரைச் சேர்ந்த கன்னட பத்திரிகையாளர் லங்கேஷின் மூத்த மகள்தான் கெüரி லங்கேஷ். தந்தை இறந்த பிறகு அவர் நடத்திவந்த பத்திரிகையை கெüரியே நடத்தி வந்தார். அநியாயங்களுக்கு எதிராகவும், அடக்குமுறைக்கு எதிராகவும் அஞ்சாமல் எழுதி வந்தார்.
 கடந்த ஆண்டு செப்டம்பர் 5-ஆம் நாள் மாலையில் பத்திரிகை அலுவலகத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பிய கெüரி லங்கேஷை இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்கள்.
 அவரது இறுதி ஊர்வலத்துக்கு வந்த கூட்டத்தைப் பார்த்து நாடே வியந்தது. கர்நாடக முதலமைச்சர் முன்னிலையில் முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் எரியூட்டப்பட்டது.
 மக்களுக்காகத் தொண்டு செய்பவர்களுக்கு மரணம் என்பது எப்போதும் இல்லை; அவர்கள் பூமியில் புதைக்கப்படுவதில்லை. விதைக்கப்படுகிறார்கள்.
 அதிலிருந்து அவர்கள் ஆயிரம் ஆயிரமாய் முளைத்தெழுவார்கள் என்பது நம்பிக்கை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.